"தானே" புயல் தானே என்று சாதரணமாய் இருந்து விட முடியவில்லை. தமிழகத்தை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு போயிருக்கிறது. அதன் After Effects இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த வாரத்தில் சென்னையில் மொட்டை மாடியில் நின்றால் மேகம் தலைக்கு மிக அருகில் கடந்து சென்றது. "சூரியனே தேவை இல்லை வித்துடலாமா" என்ற சமீபத்திய ஹிட் பாடல் ஞாபகம் வந்தது. ஒரே கொடைக்கானல் எஃபக்ட். கிட்டத்தட்ட நாற்பது பேரை இது வரை தானே புயல் காவு வாங்கி இருக்கிறது. டீ கடைகளில் வால் பேப்பர் படித்தேன். "தானே புயலால் இத்தனை பேர் இறந்தார்கள், முழுப் பக்க படங்கள்" [கவனிக்க: முழுப் பக்க படங்கள்!] என்று சர்வ சாதரணமாய் போட்டு சூடாய் வியாபாரம் செய்கிறார்கள். இத்தனை காலங்கள் நாட்டில் வாழ்ந்தாலும் மனிதனுக்குள் இருக்கும் அந்த காட்டுமிராண்டித்தனம் குறையவில்லை என்று புரிந்தது. இந்தப் புயலை வைத்து டிவியினர் அடித்த கூத்து சொல்லி முடியாது. தானே புயல் கரையை கடக்கும் வரை அதோடு சேர்ந்தே இவர்களும் கடந்து கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே செய்தியாளர்களை நிறுத்தி வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு வீடு இடிந்து விழாதா? ஒரு மரம் வேரோடு சாயாதா? யாரையாவது கடல் கொண்டு போக்காதா? அதை நாம் அப்படியே படம் பிடித்து விட மாட்டோமா என்று அகோர பசியுடன் அலைந்தார்கள் என்றே நினைக்கிறேன். அங்கிருக்கும் மக்களிடம் மைக்கை கொடுத்து அரசாங்கத்தை திட்டச் சொல்கிறார்கள். அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் புயலை விட பயங்கரமான அவர்களின் கிராபிக்ஸ் படங்கள் சிலிர்க்க வைத்தது.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற சம்பிரதாயத்தின் பேரில் வீட்டிலேயே இருந்தாலும் பனிரெண்டு மணிக்கு மேல் தான் நேற்று தூங்கினேன். ஜப்பானில் பூகம்பமாம் என்ற ஒரு அதிர்ச்சி செய்தியுடன் என் மனைவி என்னை துயில் எழுப்பினாள். இன்னும் உலகத்தில் உள்ளவருக்கு வாழ்த்து சொல்லி முடியவில்லை, அதற்குள் ஒரு அழிவு! ஒரு பக்கம் இயற்கை வாரி வழங்குகிறது. மறுபக்கம் இரக்கமே இல்லாமல், நாள், நேரம் பார்க்காமல் வாரி எறிகிறது! சிறு பிள்ளைகள் அழுதால், பெரியவர்கள் கையில் பொம்மையை கொடுத்தும், வேறு திசையில் எதையோ காட்டியும் கவனத்தை கவர்வதை போல் நமக்கு நாமே புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. இயற்கை இதோடு தன் அழிவுகளை நிறுத்துமா என்று தெரியாது, அப்படி மேலும் ஏதாவது அழிவு ஏற்பட்டால் அதை பத்திரிகைகளில் கலர் படங்களாய் போடாமல், டிவியில் விளம்பர இடைவேளைக்கு இடையில் அந்த அழிவுகளை படம் பிடித்துக் கொண்டும் இராமல், நம்மை காத்துக் கொள்ளவும், பிறருக்கு உதவி செய்யவும் சக்தி வேண்டும் என்று வாழ்த்திக் கொள்ளலாம்!

நல்ல பதிவாய் இருக்கிறது[?], இன்னும் நிறைய வரும் என்று நினைக்காதீர்கள். இதோ முடித்து விடுவேன்.

முடித்து விட்டேன்!
6 Responses
 1. உலகம் இப்படித்தான் இருக்கிறது. ஆண்டவன் திருவிளையாடல் என்றுதான் கொள்ளவேண்டும்.


 2. sasikala Says:

  நம்மை காத்துக் கொள்ளவும், பிறருக்கு உதவி செய்யவும் சக்தி வேண்டும் என்று வாழ்த்திக் கொள்ளலாம்!


 3. sasikala Says:

  மிகவும் அருமை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


 4. அதுவும் சரி தான் அய்யா! அப்படித் தான் நினைத்துக் கொள்ள வேண்டும் :-)

  நன்றி சசிகலா.


 5. rishvan Says:

  மிகவும் அருமை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

  என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...


 6. Nandri Rishvan. Kandipaaga...