வழக்கமான க்ளிஷேவுக்கு உட்பட்டு நானும் உங்களுக்கு "ஹேப்பி மாட்டு பொங்கல்" தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் விடுமுறையின் பெயரால் சென்னை, ஜனத்தொகையில் ஒரு ஐம்பது வருடத்திற்கு முன் சென்று விட்டதாக படுகிறது! விசாலமான சாலைகள், குறைவான வாகனங்கள். கொட்டும் பனி என்று இன்று வழக்கத்திற்கு மாறாக ஒரு மிக இனிமையான ஒரு அனுபவம். இரவு எட்டு மணிக்கு ஜெமினி பாலத்தின் அடியில் சிக்னல் இல்லை என்றால் நம்புவீர்களா? இரு பக்கமும் பார்த்து மெதுவாய் செல்லுங்கள் என்று மஞ்சள் விளக்கு மட்டும் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது. அண்ணா சாலை ஹோவென இருந்தது. ஆனால், நம் மக்களுக்குத் தான் இதை அனுபவிக்கத் தெரியவில்லை. சாலை காலியாய் இருந்தால் ஏன் அப்படி பறக்கிறார்கள் என்று புரியவில்லை. என்னை போல், இந்த தருணத்தை அனுபவிக்க நினைப்பவர்களையும் பயமுறுத்தி விடுகிறார்கள். சில டாட்டா சுமோக்களும், டொயோட்டா இன்னோவாக்களும் ஏன் ஆம்புலன்ஸ் ரேஞ்சுக்கு போகிறது என்று புரியவில்லை. தண்ணி லாரிக்கு பிறகு எமன் இதில் தான் அதிகம் சவாரி செய்வதாய் படுகிறது. சென்னையில் என்னை போல் விதிமுறைக்கு உட்பட்டு இரு சக்கர வாகனம் ஓட்டுபவன் மகா பரிதாபி! [பரிதாபத்துக்குரியவன்] அதிலும் சிக்னல், பச்சையிலிருந்து மஞ்சளுக்கு மாறும்போது கடந்தால் அதோ கதி தான். சிவப்பு வந்து விடுமே என்று வேகத்தை குறைத்தால், பின்னால் வேகமாய் வருபவன் இடிப்பான், சரி வேகமாய் கடந்து விடலாம் என்று நினைத்தால் இந்தப் புறம் வருபவர்கள் இடித்து விட்டு, "ஏன்டா, சிக்னல் கண்ணுக்குத் தெரியலையா?" என்று ரூல்ஸ் ராமானுஜம் மாதிரி பேசுவார்கள். எனக்கு முன்னதில் அனுபவம் உண்டு! இப்போது சொல்லுங்கள், நான் பரிதாபி தானே?
இன்று மாட்டுப் பொங்கல். நீங்கள் எத்தனை பேர் அலங்காரம் செய்யப்பட ஒரு மாட்டை இன்று பார்த்தீர்கள்? எனக்கு அந்த பாக்கியம் கை கூடியது. மடிப்பாக்கத்தில் அல்ல; சைதாப்பட்டையில்! மடிப்பாக்கத்தில் வழக்கமாய் வழி மறிக்கும் மாடுகள் இன்று கண்களுக்கே படவில்லை. அந்த சைதாபேட்டை பசு மாட்டுக்கு நல்ல அலங்காரம் செய்திருந்தார்கள். கொம்பில் வர்ணம் எல்லாம் பூசவில்லை. பொட்டிட்டு, கண்ணில் மையிட்டு, அந்த பசுவை சுற்றி கலர் ஜிகினா பேப்பரை சுற்றி இருந்தார்கள். அடடா..நாகரிக வளர்ச்சி! அது சிக்னல் விழுந்து கடக்கும் போது, அந்த டாட்டா சுமோ கிரீச்சிட்டு நின்றது!
இன்றும் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். இன்று திங்கள் கிழமை, மூன்று மணிக்கு திறப்பார்கள் என்று நினைத்து போனேன். இன்று விடுமுறை நாள் என்பதை மறந்து விட்டேன். நாலு மணிக்கு நுழைவு வாயில் கதவை சாத்திக் கொண்டு, ஏதோ சூப்பர் ஸ்டார் படத்திற்கு டிக்கட் வாங்க உள்ளே விடாதது போல் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். மக்களுக்கு புத்தகங்கள் மீது ஒரேடியாய் தான் நம்பிக்கை வந்து விட்டது போலும். உள்ளே சென்றால் கூட்டம் ஜே ஜே [ஜே ஜே க்கு பதில் வேறு ஏதாவது எழுதலாம் என்று நினைத்தேன், எதற்கு வம்பு அதிமுக ஆட்சி வேறு நடக்கிறது!] என்று இருந்தது. அமெரிக்காவிலிருந்து ஒரு நண்பர் வந்திருதார். புத்தக கண்காட்சி நடக்கும்போது யார் என்னை சந்திக்க விரும்பினாலும் நான் அவர்களை அங்கு வர சொல்லி விடுகிறேன்! இது எப்படி? அவரின் தலையில் ஒரு மூவாயிரத்துக்கு புத்தகங்களை கட்டி விட்டேன். கண்காட்சி முடிந்ததும், அந்த சில பதிப்பகங்களில் இதை சொல்லி கொஞ்சம் கமிஷன் வாங்க வேண்டும்! இத்தகைய ஒரு கண்காட்சியில் மக்கள் கூட்டத்தை பார்த்தால் நன்றாய் இருக்கிறது, ஆனால் ஆண்கள் கழிப்பறை என்று போர்டை பார்த்துக் கொண்டே அங்கு இருக்கும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது!? என்னால் அடக்க முடியாமல் [சிறுநீரை அல்ல!] அந்த திறந்த வெளிக்கு முன் நின்று கொண்டேன். ஒருவர் வந்தார்!
இன்றும் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். இன்று திங்கள் கிழமை, மூன்று மணிக்கு திறப்பார்கள் என்று நினைத்து போனேன். இன்று விடுமுறை நாள் என்பதை மறந்து விட்டேன். நாலு மணிக்கு நுழைவு வாயில் கதவை சாத்திக் கொண்டு, ஏதோ சூப்பர் ஸ்டார் படத்திற்கு டிக்கட் வாங்க உள்ளே விடாதது போல் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். மக்களுக்கு புத்தகங்கள் மீது ஒரேடியாய் தான் நம்பிக்கை வந்து விட்டது போலும். உள்ளே சென்றால் கூட்டம் ஜே ஜே [ஜே ஜே க்கு பதில் வேறு ஏதாவது எழுதலாம் என்று நினைத்தேன், எதற்கு வம்பு அதிமுக ஆட்சி வேறு நடக்கிறது!] என்று இருந்தது. அமெரிக்காவிலிருந்து ஒரு நண்பர் வந்திருதார். புத்தக கண்காட்சி நடக்கும்போது யார் என்னை சந்திக்க விரும்பினாலும் நான் அவர்களை அங்கு வர சொல்லி விடுகிறேன்! இது எப்படி? அவரின் தலையில் ஒரு மூவாயிரத்துக்கு புத்தகங்களை கட்டி விட்டேன். கண்காட்சி முடிந்ததும், அந்த சில பதிப்பகங்களில் இதை சொல்லி கொஞ்சம் கமிஷன் வாங்க வேண்டும்! இத்தகைய ஒரு கண்காட்சியில் மக்கள் கூட்டத்தை பார்த்தால் நன்றாய் இருக்கிறது, ஆனால் ஆண்கள் கழிப்பறை என்று போர்டை பார்த்துக் கொண்டே அங்கு இருக்கும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது!? என்னால் அடக்க முடியாமல் [சிறுநீரை அல்ல!] அந்த திறந்த வெளிக்கு முன் நின்று கொண்டேன். ஒருவர் வந்தார்!
சார், பிஸ் அடிக்கனுமா?
[நான் ஏதோ அவரிடம் வழி கேட்கிறேன் என்று நினைத்துக் கொண்டு] அடிங்க, அதோ அங்கே இருக்கே டாய்லெட், இல்லேன்னா இங்கே கூட அடிங்க...
எனக்கு இல்லை சார், உங்களுக்கு அடிக்கனும்னா அதான் அங்கே இருக்கே, அங்கே போங்களேன். 2 அடியில தான் இருக்கு. ஏன் இங்கே அடிக்கிறீங்க?
எனக்கு சொல்லாதீங்க சார். இது தான் நல்லா இருக்கு. அங்கே சுத்தமா இல்லை!
அடப்பாவிகளா...நான் சொல்லச் சொல்ல இன்னும் இரண்டு பேர் என்னை தாண்டி போய் சுகமாய் வெட்டவெளியில் நின்று கொண்டு பிஸ் அடித்தார்கள். என்னை ஏதோ சட்டையை கிழித்துக் கொண்டு நிற்கும் பைத்தியம் போல் பார்த்தார்கள். இத்தனைக்கும் முக்கால்வாசி பேர் பதிப்பகங்களை சேர்ந்தவர்கள்! இவர்களிடம் அந்த புத்தகங்கள் என்ன செய்யும்?
நேற்று ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் நிகழ்ந்த ஒரு சம்பாஷனை:
அது பறவை இல்லப்பா, வவ்வால் டா..அது!
ஏன் அது தலை கீழ தொங்குது?
அது அப்படி தான் தொங்கும். அதோட அமைப்பு அப்படி!
அப்படி தொங்கினா அதோட கொடல் வெளிய வந்திராதா?
சரியாய் தான் சொல்லி இருக்கிறார்கள்
"புத்தகங்களே, குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்!"
ரோட்டில் போகும் முன் பின் தெரியாத ஒரு பெண்ணின் அருகில் பைக்கை நிறுத்தினான்.
எக்ஸ்க்யுஸ்மி, இஃப் யு டோன்ட் மைன்ட், நீங்க எங்க போறீங்கன்னு சொல்லுங்க நான் உங்களை டிராப்
பண்றேன்?
நோ தேங்க்ஸ். நடந்தாள்.
ஒரு நிமிஷம், நீங்க என்னை நம்பலாம்.
உங்களுக்கு என்னை முன்ன பின்ன தெரியுமா?
இல்லை.
அப்புறம் எப்படி மிஸ்டர் நான் உங்களை நம்புறது?
உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணுது. நீங்க நம்பினா வாங்க.
அவனை தீர்க்கமாய் பார்த்தாள். ஒரு வித குழப்பத்துடன் ஓகே என்றாள்!
அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பைக்கில் கொஞ்சம் முன் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவளுக்கு இடம் கொடுத்தான். அவள் ஜாக்கிரதையாக ஏறி உட்கார்ந்தாள். போக வேண்டிய இடத்தை சொன்னாள்.
அவன் ஒன்றும் பேசாமல் வந்தான். மிகவும் ஜாக்கிரதையாக வண்டியை ஓட்டினான். அவளுக்கு சிரிப்பு வந்தது.
சிறிது தூரம் சென்றவுடன், வண்டி அவளின் வீடு நோக்கி செல்லவில்லை என்று தெரிந்து கொண்டாள்.
மிஸ்டர், நான் எங்க போக சொன்னா, நீங்க எங்க போறீங்க?
எல்லாம் போக வேண்டிய இடத்துக்கு தான் போறேன்.
அவனை பின்னால் அடித்து, வண்டியை அசைத்தாள். பாலன்ஸ் தவறி ஸ்கிட் ஆகி பைக் வழுக்கி விழுந்தது. அவன் மெதுவாய் போய் கொண்டிருந்ததால் இருவருக்கும் அதிகம் அடிபடவில்லை. உடலை தட்டிக் கொண்டே எழுந்தார்கள்.
இதுக்கு தான் நான் உங்க கூட வர மாட்டேன்னு சொன்னேன். இது தான் நான் சொன்ன இடத்துக்கு போற வழியா?
இது வேணா சரியான வழியா இல்லாம இருக்கலாம், ஆனா இது நீ போக வேண்டிய சரியான இடம் தான்.
புரியாமால்...நான் யார்னு உங்களுக்கு தெரியுமா?
ரொம்ப நடிக்காதே! நீ ஒரு பிராத்தல் கேஸ்னு எனக்கு தெரியும். ஆமா, நான் யார்னு உனக்கு தெரியுமா?
[அதிர்ச்சியுடன்] அலட்சியமாய்...தெரியாது!
இந்த ஏரியாவுக்கு புதுசா வந்துருக்குற இன்ஸ்பெக்டர்!
அலட்சியம்++, கொஞ்சம் நல்ல பொண்ணா நடிச்சு பாப்போமேன்னு நெனச்சேன். அதான் உங்களுக்கே தெரியுமே, அப்புறம் என்ன? உங்களுக்கு வேண்டியதை இங்கேயே முடிச்சுக்கலாமே, எங்க கூட்டிட்டு போறீங்க? சார், இதுக்காகவே ஸ்பெஷலா பண்ணை வீடு வச்சுருகீங்களோ?
நீ நெனைக்கிற மாதிரி ஆள் இல்லை நான். ஒழுங்க ஸ்டேஷனுக்கு வா..
கோவுசுக்காதீங்க சார்.... உன்னை மாதிரி நான் எத்தனை பேரை பாத்திருப்பேன் என்று அவனின் சட்டையை அவிழ்க்க முற்படுகிறாள்!
அவன் பளீரென்று அவள் கன்னத்தில் ஒரு அரை விட்டான். அவள் எட்டிப் போய் விழுவதற்கும் அங்கு ஒரு கார் வந்து நிற்பதற்கும் சரியாய் இருந்தது. அந்த காரின் ஹெட் லைட் அவளின் கண்களில் பட்டு அவள் கண்கள் கூசியது. காரிலிருந்து ஒரு கரை வேட்டி இறங்கியது!
இன்ஸ்பெக்டர் சல்யுட் அடித்தான்.
இங்கே பாரு, ரோட்லே ஆரம்பிச்சுடீங்களா? [அவனை பார்த்து] என்னய்யா பிரச்சனை?
சார், ரவுண்ட்ஸ் வந்தேன் சார். இவ இங்கே பிராத்தல் பண்றான்னு நியுஸ் வந்தது, ஃபாலோ பண்ணி மடக்கிட்டேன் சார். ஸ்டேஷன் கூப்பிட்டா முரண்டு பண்றா சார்.
அவள் மெல்ல எழுந்து அவரை பார்த்து புன்னகைத்தாள்.
அது சரி, ஒண்ணு பண்ணு, நீ வண்டிய எடுத்துட்டு கெளம்பு. நான் இவளை ஸ்டேஷனுக்கு அனுப்புறேன்!
இல்லை சார், நானே கூட்டிட்டு போயிடறேன் சார்.
யோவ், சொன்னா புரிஞ்சுக்க மட்டீறு! நாளைக்கு மெதுவா ஸ்டேஷனுக்கு வரட்டும்! என்ன அவசரம்? என்ன கண்ணு? கார்ல ஏறு!
அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் அவளை காரில் ஏற்றி, கார் நகர்ந்தது. அவள் காரின் கண்ணாடியின் வழியே அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்! அவன் தரையில் ஓங்கி ஒரு உதை விட்டான்.
அடுத்த வாரம் ஸ்டேஷனுக்கு அவனின் பெயருக்கு ஒரு கவர்ன்மென்ட் ஆர்டரும், ஒரு லெட்டரும் வந்தது.
அந்த ஆர்டர் அவனின் ப்ரமோஷன் ஆர்டர்!
லெட்டரில்...
ஆர்டர் கைல வாங்கி இருப்பேன்னு நெனைக்கிறேன். ஆச்சர்யமா இருக்கா? இருக்கும். அன்னைக்கு நீ என்னை வண்டியில கூப்டப்ப நான் யாருன்னு தெரியாம தான் கூப்பிடறே, சரி இவனுக்கு ஏதோ சபலம், வண்டியில கூட்டிட்டு போற சாக்கில இவனும் கொஞ்சம் வாழ்ந்துட்டு போறான்னு நெனச்சி தான் ஏறினேன். நீ போலீஸ்னு எனக்கு தெரியாது. என்னை பத்தியும் உனக்குத் தெரியாதுன்னு நெனைச்சேன். ஆனா, லைஃப் ல எப்படியெல்லாம் ட்விஸ்ட் பாத்தியா? நெனச்ச சிரிப்பா வருது! ஆனா, நீ ரொம்ப நல்லவன்யா. அன்னைக்கு நடந்ததை நெனைச்சி எனக்கு என்னமோ உன் மேல பாவமா இருந்தச்சி. என்னை அனுபவிக்கவும் முடியல, உன் கடமை தவறாம என்னை ஸ்டேஷன் கொண்டு போய் தண்டனை வாங்கி கொடுக்கவும் முடியலை. உனக்கு ஏதாவது பண்ணனும்னு தோணுச்சி! அதான் இந்த ஆர்டர். சொன்னா நம்பமாட்டே, உங்க டிபார்ட்மென்ட்ல எனக்கு நெறைய்ய ஃபிரண்ட்ஸ் இருக்காங்கப்பா...ஏதாவது வேலைன்னா சொல்லு...
இப்படிக்கு
இப்போதைக்கு "மைனா"
பல வித எதிர்பார்த்த/எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த குட்டிக் கதையை எழுதி விட்டேன். இது ஒரு வழக்கமான சுஜாதா ஸ்டைல் கதை. இதற்கு மேல் கதையை எப்படி கொண்டு போகலாம் என்று சொல்லுங்கள்..ஒரு கண்டிஷன், கதையின் ட்விஸ்ட் வித்தியாசமாய், எதிர்பாராததாய் இருக்க வேண்டும்! இதுவும் சுஜாதா ஸ்டைல் தான்!
அலுவலகத்தில் ப்ராஜக்டிலிருந்து விடுவித்து விட்டார்கள். புதிதாய் ஒரு ப்ராஜக்ட் தேட வேண்டும். அது வரை பெஞ்சு தேய்க்கலாம். ஐ. டியில் இருப்பது போல் மற்ற நிறுவனங்களில் இந்த பெஞ்சு தேய்க்கும் பழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐ டியில் பெஞ்சு தேய்ப்பது பிரசித்தி பெற்ற செயல்! பெஞ்சு தேய்ப்பது ஆரம்பத்தில் சுவாரஸ்யமாய் இருந்தாலும், போகப் போக போரடித்து விடும். எல்லோரும் ஏதோ ஒரு வேளையில் மும்முரமாய் இருக்க, நீங்கள் மட்டும் தனியாய் விடப்பட்ட தீவில் அலைவதை போல் அலைய வேண்டியது தான். சிறிது நாட்களுக்குப் பிறகு நமக்கே ஒரு பயம் வந்து விடும். அடித்துப் பிடித்து ஏதோ ஒரு மொக்கை ப்ராஜக்ட்டில் சேர்ந்து விடுவோம். படாத பாடு படுத்துவார்கள், என்னை விடுவித்து விடுங்கள் என்று சண்டை போட வேண்டியது [நான் அப்படி சண்டையிட்டு விடுவித்துக் கொள்ளவில்லை!], மறுபடியும் பெஞ்சு, மறுபடியும் இன்னொரு மொக்கை ப்ராஜக்ட்!
இதுவரை பெஞ்சு தேய்த்ததில் எனக்குப் புரிந்தது என்னவென்றால், மிக நல்ல ப்ராஜக்ட் என்று ஒன்று இல்லை. நீங்கள் செய்வதை உங்களுக்குப் பிடித்து செய்தால், அது நல்ல ப்ராஜக்ட்; இல்லையென்றால் எல்லாமே கெட்ட ப்ராஜக்ட் தான்!!
தீபாவளி என்றால் எப்படி தீபாவளி மலர் வருகிறதோ [நன்றி சுஜாதா], அதை போல் ஜனவரி வந்தால் புத்தகக் கண்காட்சி வரும்! இந்த முறை, 0.0000000000000000001% மட்டுமே படிக்கும் நான் 0.00000000000000000001% மட்டுமே படிக்கும் சில பேர்வழிகளை கூட்டி போய் இப்படி எல்லாம் சென்னையில் ஒரு கண்காட்சி நடக்கிறது என்று காட்ட சந்தர்ப்பம் கிடைத்தது மகிழ்ச்சி. சும்மா போய் பார்க்கலாம், ஒன்றும் வாங்க வேண்டாம் என்று வழக்கம் போலவே நினைத்துக் கொண்டு போய், கண்காட்சியில் நான் வாங்கிய, இல்லை... என்னை வாங்கிய புத்தகங்கள்.
கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா - உயிர்மை
தமிழ்செல்வன் சிறுகதைகள் - தமிழ் செல்வன் - பாரதி புத்தகாலயம்
ஆயிஷா - இரா. நடராஜன் - பாரதி புத்தகாலயம்
அறிவியல் களஞ்சியம் - ஆத்மா. கே. ரவி - பாரதி புத்தகாலயம்
ஓவியம் - கூறுகளும் கொள்கைகளும் - புகழேந்தி - அருவி
இவன் தான் பாலா - ரா. கண்ணன் - விகடன்
ஜென் கதைகள் - தமிழில்: சேஷையா ரவி - அகல்
கார்டூன் வரையலாம் - யு. மா. வாசுகி - யுரேகா புக்ஸ்
காவல் கோட்டம் - சு. வெங்கடேசன் - தமிழினி
அன்டன் செகோவ் சிறுகதைகள் - எம். எஸ். - பாதரசம்
கணையாழியின் கடைசி பக்கங்களில் வாத்தியார் மிளிர்கிறார். இரண்டு வரிகளில் இருநூறு விஷயங்களை போகிற போக்கில் தெளித்து விட்டுச் செல்கிறார். இதை வைத்து தான் மழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் என்று ஒரு வகைப்படுத்தலை நான் என் வலைப்பதிவில் ஆரம்பித்தேன்! ஆரம்பித்ததோடு சரி!..
சரி, சித்திரம் வரையத் தெரியாதவர்களுக்காக...ஒரு கருப்பு கட்டம் போட்டு அதை ஒரு ஹாஸ்ய படமாக எப்படி மாற்றுவது என்று கடைசி பக்கங்களில் வாத்தியார் சொல்கிறார். அவர் சொன்னதை போலவே நான் முயற்சித்த போது...
சரி, சித்திரம் வரையத் தெரியாதவர்களுக்காக...ஒரு கருப்பு கட்டம் போட்டு அதை ஒரு ஹாஸ்ய படமாக எப்படி மாற்றுவது என்று கடைசி பக்கங்களில் வாத்தியார் சொல்கிறார். அவர் சொன்னதை போலவே நான் முயற்சித்த போது...
"ஏன்டா, இதுக்குல்லையா அல்வா விக்கிறாங்க?"
"இது தான் நீ சொன்ன ஈ பி ஆபிசா?"
"என்ன தேடுறீங்க?
சுவிட்சை தான்!
ச்சி..."
திருடன்
விட்டுச் சென்று விட்டான்
ஜன்னலில் நிலவை
எஸ். ராமகிருஷ்ணன் ரஷ்ய கலாச்சார மையத்தில் மேற் சொன்ன கவிதையை மிகவும் சிலாகித்து கேட்டேன். அதே கவிதையை பற்றி 1966 ல் எழுதியிருக்கிறார் சுஜாதா. தமிழ் சினிமாவை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்கிறார், இன்னும் அறுபதுகளில் தான் இருக்கிறேன், 98 வரியின் தொகுப்பு இது! Long way to go...
அன்டன் செகோவ் என்று அடிக்கடி படித்திருக்கிறேன். பார்த்தவுடன் வாங்கிவிட்டேன். முதல் கதையே [பந்தயம்] பிரமாதம்.
"இவன் தான் பாலா" படித்தேன் மறுபடியும்! அவருடைய படங்களின் தன்மையின் காரணங்கள் புரிகிறது. பாலாவும் ரஜினியும் சினிமாவில் வராமல் இருந்திருந்தால், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு இன்று ஜெயிலில் தான் இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.
காதலே நமக்கு வராது என்று நம்பிக்கையாய் இருந்த என் நண்பர் ஒருவருக்கு காதல் வந்து விட்டது! அவர் சொன்னதும் நான் சிந்திய பொன்மொழி கீழே!
காதலை நாம் தேர்ந்தெடுப்பதில்லை...
அது நம்மை தேர்ந்தெடுக்கிறது!
என்ன சரி தானே?
"தானே" புயல் தானே என்று சாதரணமாய் இருந்து விட முடியவில்லை. தமிழகத்தை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு போயிருக்கிறது. அதன் After Effects இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த வாரத்தில் சென்னையில் மொட்டை மாடியில் நின்றால் மேகம் தலைக்கு மிக அருகில் கடந்து சென்றது. "சூரியனே தேவை இல்லை வித்துடலாமா" என்ற சமீபத்திய ஹிட் பாடல் ஞாபகம் வந்தது. ஒரே கொடைக்கானல் எஃபக்ட். கிட்டத்தட்ட நாற்பது பேரை இது வரை தானே புயல் காவு வாங்கி இருக்கிறது. டீ கடைகளில் வால் பேப்பர் படித்தேன். "தானே புயலால் இத்தனை பேர் இறந்தார்கள், முழுப் பக்க படங்கள்" [கவனிக்க: முழுப் பக்க படங்கள்!] என்று சர்வ சாதரணமாய் போட்டு சூடாய் வியாபாரம் செய்கிறார்கள். இத்தனை காலங்கள் நாட்டில் வாழ்ந்தாலும் மனிதனுக்குள் இருக்கும் அந்த காட்டுமிராண்டித்தனம் குறையவில்லை என்று புரிந்தது. இந்தப் புயலை வைத்து டிவியினர் அடித்த கூத்து சொல்லி முடியாது. தானே புயல் கரையை கடக்கும் வரை அதோடு சேர்ந்தே இவர்களும் கடந்து கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே செய்தியாளர்களை நிறுத்தி வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு வீடு இடிந்து விழாதா? ஒரு மரம் வேரோடு சாயாதா? யாரையாவது கடல் கொண்டு போக்காதா? அதை நாம் அப்படியே படம் பிடித்து விட மாட்டோமா என்று அகோர பசியுடன் அலைந்தார்கள் என்றே நினைக்கிறேன். அங்கிருக்கும் மக்களிடம் மைக்கை கொடுத்து அரசாங்கத்தை திட்டச் சொல்கிறார்கள். அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் புயலை விட பயங்கரமான அவர்களின் கிராபிக்ஸ் படங்கள் சிலிர்க்க வைத்தது.
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற சம்பிரதாயத்தின் பேரில் வீட்டிலேயே இருந்தாலும் பனிரெண்டு மணிக்கு மேல் தான் நேற்று தூங்கினேன். ஜப்பானில் பூகம்பமாம் என்ற ஒரு அதிர்ச்சி செய்தியுடன் என் மனைவி என்னை துயில் எழுப்பினாள். இன்னும் உலகத்தில் உள்ளவருக்கு வாழ்த்து சொல்லி முடியவில்லை, அதற்குள் ஒரு அழிவு! ஒரு பக்கம் இயற்கை வாரி வழங்குகிறது. மறுபக்கம் இரக்கமே இல்லாமல், நாள், நேரம் பார்க்காமல் வாரி எறிகிறது! சிறு பிள்ளைகள் அழுதால், பெரியவர்கள் கையில் பொம்மையை கொடுத்தும், வேறு திசையில் எதையோ காட்டியும் கவனத்தை கவர்வதை போல் நமக்கு நாமே புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. இயற்கை இதோடு தன் அழிவுகளை நிறுத்துமா என்று தெரியாது, அப்படி மேலும் ஏதாவது அழிவு ஏற்பட்டால் அதை பத்திரிகைகளில் கலர் படங்களாய் போடாமல், டிவியில் விளம்பர இடைவேளைக்கு இடையில் அந்த அழிவுகளை படம் பிடித்துக் கொண்டும் இராமல், நம்மை காத்துக் கொள்ளவும், பிறருக்கு உதவி செய்யவும் சக்தி வேண்டும் என்று வாழ்த்திக் கொள்ளலாம்!
நல்ல பதிவாய் இருக்கிறது[?], இன்னும் நிறைய வரும் என்று நினைக்காதீர்கள். இதோ முடித்து விடுவேன்.
முடித்து விட்டேன்!