"நீங்க எப்படி சார்? அவருக்கு லெட்டர் எல்லாம் எழுதி இருக்கீங்களா? பதில் எதுனா வந்துருக்கா?" என்று அந்த நண்பர் கேட்டதும் தான் எனக்கே அது உரைத்தது. அட, இத்தனை ஆண்டுகளாய் அவரின் தீவிர ரசிகனாய் இருந்து விட்டு அவருக்கு ஒரு லெட்டர் கூட எழுதவில்லையே என்று! ரூமுக்குள் வந்த பிறகும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். ஒன்றா, இரண்டா, முப்பத்தேழு வருட காலமாய் அவரின் ரசிகனாய் வாழ்கிறேன். அவரின் முதல் படம் வந்த போது எனக்கு பதினைந்து வயது. அன்றிலிருந்து இன்று வரை, ஒருவரை விடாமல் நேசிக்கிறேன் என்றால் அது தலைவர் தான். "ரஜினி" என்ற ஒரே ஒரு மந்திரம் என்னை இன்று வரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. தலைவர் சொல்வதெல்லாம் எனக்கு வேதவாக்கு. அவரின் ரசிகனாய் இருந்த போதும், மன்றம், அபிஷேகம் என்றெல்லாம் நேரத்தை பாழக்கியதில்லை. அவருக்கும் அது பிடிக்காது என்று தெரியும். அவரின் படங்களுடனே வளர்ந்து நானும் இன்று ஒரு மெடிக்கல் ரெப் ஆகி விட்டேன். அடுத்த முறை நீங்கள் திருவல்லிக்கேணி வந்தால் ராமா மேன்ஷன் முன் ஒருவன் ரஜினியை பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தால், நீங்கள் நேராய் என்னிடம் வந்து கை கொடுத்து, எப்படி இருக்கீங்க ஆர். ஆர்  [அதாவது "ரஜினி" ராஜசேகர் என்பதன் சுருக்கம்] என்று கேட்கலாம். அந்த ஏரியாவில் நான் அத்தனை பிரபலம். தலைவரை போற்றும் எனக்கே இப்படி என்றால், தலைவருக்கு?

அப்படிப்பட்டவன் தலைவருக்கு இது வரை ஒரு லெட்டர் கூட எழுதவில்லை என்று உணரும்போது எப்படி இருக்கும்? எனக்கு தூக்கமே வரவில்லை. எப்படி இப்படி இருந்து விட்டேன்? ஏன் இதை நான் யோசிக்கவே இல்லை. எனக்கு படிப்பு கம்மி தான் என்றாலும், இதை நான் எப்படி மிஸ் செய்தேன் என்று பல கேள்விகள். எதற்கும் பதில் தான் கிடைக்கவில்லை. ஆயிரம் கேள்விகளை என் மனத்திடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அது திரும்ப என்னை ஒரே கேள்வி கேட்டது. "ஏன் இப்போது எழுதக் கூடாது?". அவ்வளவு தான், நாளெல்லாம் வெயிலில் சுற்றி அலைந்த களைப்பு எங்கே போனது என்று தெரியவில்லை. துள்ளி எழுந்து, கையில் பேப்பர், பேனா சகிதம் எழுத உட்கார்ந்தேன். ரூம் மேட் என்ன சார் இந்த நேரத்துல லைட்டை போட்டுக்கிட்டு என்று புலம்பினார். நான் கண்டு கொண்டால் தானே? இப்போது எழுதுவதும் ஒரு வகையில் நல்லது தான். எண்பதுகளில், அவருக்கு எங்கே படிக்க நேரமிருந்தது. இப்போது வரும் கடிதங்களை தான் அவருக்கு படிக்க நேரமிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அவர் படிப்பாரா என்று கூடவே ஒரு சந்தேகம் வந்தது. நம் லெட்டர் அப்படி இருக்க வேண்டும், அவர் உதவியாளரே படித்தாலும் நேரே தலைவரிடம் கொண்டு போய் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

"அன்புள்ள தலைவருக்கு" என்று ஆரம்பித்து எனது முப்பத்தேழு வருட விசுவாசத்தை எழுதி முடிப்பதற்குள் விடிந்தே விட்டது. அவரை நான் எப்போது முதலில் பார்த்தேன், அவரின் மேல் எனக்கு எப்படி பிரியம் உண்டானது, எந்தப் படத்தை நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன், தலைவர் படத்தில் போட்ட சட்டைகளை போலவே என்னிடம் இருந்த சட்டைகள், அவரின் ரசிகன் என்பதால் எனக்கு நேர்ந்த சங்கடங்கள், அதை நான் எதிர் கொண்ட விதங்கள், கமல் ரசிகரை எல்லாம் ரஜினி ரசிகன் ஆக்கிய பங்கு, அவரின் அத்தனை படங்களையும் முதல் நாள், முதல் ஷோவில் பார்த்தது, அப்போது நடந்த கலாட்டா ஒன்றில், ஒரு நாள் இரவு முழுதும் லாக்கப்பில் இருந்தது என்று எழுதித் தள்ளி விட்டேன். படித்து பார்க்க சுவாரஸ்யமாகவே இருந்தது. தலைவர் இதை படித்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்று எண்ணி எண்ணி பூரித்தேன். அவரே படித்து சிரிப்பது போல கற்பனை செய்யச் செய்ய இன்னும் எழுத வேண்டும் போல் இருந்தது. இந்தக் கடிதம் பிடித்துப் போய், ஒருவேளை என்னை அவர் கூப்பிட்டு அனுப்பினால் என்ன செய்வது என்ற எண்ணமே எனக்கு மிகுந்த கிளர்ச்சியை தந்தது. ஒரு வழியாய் கடிதத்தை முடித்து, கவரில் போட்டுக் கொண்டேன். காலையில் முதல் வேலையை அதை போஸ்ட் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

எனக்கு இருப்பு கொள்ளவில்லை. அன்று சீக்கிரமே குளித்து முடித்து விட்டு, என் பிரியமான வெள்ளைச் சட்டை, ரெட் டை, க்ரீம் பேன்ட் அணிந்து கொண்டேன். என் மருந்து சாம்பிள் பையுடன், ஒன்பது மணிக்கே போஸ்ட் ஆபிஸ் வாசலில் இருந்தேன். அவர்கள் சாவகாசமாய் பத்து, பத்தரைக்கு ஆபிசை திறந்தார்கள். ஒரு வழுக்கை, கவுண்டரில், இன்னொருவர் சற்று ஓடிசலானவர்.

என்ன சார், என்று என்னை கேட்டார்,
இதை போஸ்ட் செய்யணும், ஸ்டாம்பு, எடை? என்றேன்...

அவர் கவரை வாங்கி பார்த்து விட்டு,

லோக்கலா, வெளியூரா என்றார்.
சென்னை தான் என்றேன்.

அவர் கவரை ஆராய்ந்து

முதல்ல கவரை ஓட்டுங்க, கவர்ல அட்ரஸ் எழுதுங்க, அப்போ தான் எடை போட முடியும் என்றார்.
நான், ஒட்டிட்டேன் சார் என்றேன்.

அவர் அதை பிரித்துக் காட்டி,
இங்கே பாருங்க [திறந்தே கிடந்தது]
சரியா ஓட்டுங்க சார். அட்ரஸ் எழுதுங்க மொதல்ல என்றார்.

எனக்கு எரிச்சலாய் வந்தது. எடை போட அட்ரஸ் எதுக்கு? என்று நினைத்துக் கொண்டேன்.

உண்மையில் கவரில், திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு என்று எழுதி, இவரிடம் எடை போடக் கொடுக்க எனக்கு கூச்சமாய் இருந்தது. இந்த வயதில் ரஜினிகாந்துக்கு இவர் லெட்டர் எழுதுறாரா, என்று எண்ணி சிரிப்பாரோ என்று ஒரு சந்தேகம். அதற்குள் அங்கு கூட்டம் வேறு சேர்ந்து விட்டது. இதென்னடா வம்பு, சூப்பர் ஸ்டாருக்கு எப்படி தான் லெட்டர் எழுதுவது என்று யோசித்தேன். இத்தனை வருடம், இத்தனை பேர் எப்படி லெட்டர் எழுதுகிறார்கள்? அவர்கள் எல்லாம் எப்படி எழுதுகிறார்கள்? எனக்குத் தோன்றுவது போல் தான் எல்லோருக்கும் தோன்றுமா? ஒரே குழப்பமாய் இருந்தது. நான் அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டே முழிப்பதை பார்த்த அவர்,

என்ன சார், அட்ரஸ் எழுதிட்டீங்களா என்றார். அங்கு இருந்த மொத்த பேரும் என்னையே பார்த்தார்கள்.
இல்லை சார், அட்ரஸ் தெரியாது, என் பிரண்ட் ஃ போன் பண்ணி அட்ரஸ் சொல்றேன்னு சொல்லி இருக்கான், நீங்க சொன்ன மாதிரி ஒட்டிட்டேன், எடை போட்டு கொடுத்துருங்க, நான் ஸ்டாம்ப் ஒட்டி, போஸ்ட் பண்ணும்போது அட்ரஸ் எழுதிக்கிறேன் என்றேன்.

அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தார். நம்பவில்லை என்று தெரிந்தது. கையில் கவரை வாங்கி எடை போட்டு சொன்னார். திடீரென்று என்ன நினைத்தாரோ,

ரொம்ப முக்கியமான கவரா? ரெஜிஸ்டர் போஸ்ட் பண்ணுங்களேன், சாதாரண போஸ்டுக்கும், அதுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. ரெஜிஸ்டர் போஸ்ட்டுன்னா நாளைக்கே போயிடும், நீங்க சரியா போயி சேர்ந்துதான்னு ட்ராக் கூட பண்ணிக்கலாம், சாதாரண போஸ்ட்ல அது முடியாது என்றார்.

இல்லை அவ்வளவு அவசரம் இல்லை என்றேன்.
இல்லை உங்க நல்லதுக்கு சொல்றேன். ரெஜிஸ்டர் போஸ்டுன்னா இந்த சாக்குல போட்ருங்க, நீங்களும் ஷுயரா இருக்கலாம் இல்லை, அதனால சொன்னேன்! அப்புறம் உங்க இஷ்டம் என்று கை கழுவினார்.

அங்கு இருந்த அத்தனை பேருக்கும், நான் ஏதோ இத்தனை நாள் உள்ளே இருந்து விட்டு, வாழ்வில் முதன் முதலில் போஸ்ட் ஆபிஸ் வந்தவன் மாதிரி தெரிந்தேன். எனக்கு அங்கிருந்து ஓடிடணும் என்று தோன்றியது. தலையாட்டிக் கொண்டே,அவர் சொன்ன விலைக்கு ஸ்டாம்ப் வாங்கிக் ஒட்டிக் கொண்டேன். அவர் என்னையே பார்த்தார், நான் என் மொபைலையே பார்த்தேன்.

ஒரு வழியாய் அவர் பார்வையிலிருந்து தப்பி வெளியே வந்து போஸ்ட் பாக்ஸை தேடி ஓடினேன். என் மொபைலில் நான் சேமித்து வைத்திருந்த அட்ரசை எழுதினேன். ரஜினிகாந்துக்கே அட்ரஸ் தேவையா, "ரஜினிகாந்த், சென்னை" போட்டால் போதாதா, அவருக்கு என்ன விலாசம் வேண்டி இருக்கு என்று பட்டது. அட்ரசை எழுதி, அந்த பெரிய கவரை மடக்கி, தலைவரை நினைத்துக் கொண்டு அந்த சிவப்பு டப்பாவில் கருப்பு காந்தத்துக்கு ஒரு லெட்டரை போஸ்ட் செய்தேன். லெட்டரை கலெக்ட் செய்யும்போது அவர் என் கவரை எடுத்து அட்ரசை பார்த்து விடுவாரோ என்று ஒரு கணம் தோன்றியது. பார்த்தால் பார்க்கட்டும் என்று எரிச்சலில் நானே என்னை சமாதான படுத்திக் கொண்டேன். நாம் ஜெனுய்னாய் ஒரு உதவி கேட்கும்போது ஒருத்தனும் வர மாட்டான் தலைவருக்கு லெட்டர் எழுதும்போது எல்லா அட்வைசும் கொடுப்பார்கள். இந்தக் காலத்தில் மனிதர்கள் நல்ல விதமாய் நடந்து கொண்டாலே சந்தேகமாய் தான் இருக்கிறது. 

லெட்டர் போட்டு ஒரு வாரம் ஆன போதும் ஒரு பதிலும் இல்லை. தலைவரிடமிருந்து ஃபோனும் இல்லை! இரண்டு நாள் முன்பு, அந்த போஸ்ட் ஆபிஸ் பிரகஸ்பதி என்னை கடந்து சென்றான். அப்போது அவன் முகத்தில் லேசான குறுகுறுப்பு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது போல எனக்குப் பட்டது. என் கவரை எடுத்து பார்த்திருப்பானோ?
2 Responses
  1. Anonymous Says:

    hahaha ennavellam avasthai oru "thalivarukku"letter elutharthukkula. pradeep aduthu oru post podunga badil vantha maadhiri appa than enakku nimmathiya irukkum.


  2. intha mathiri 1000 letter varum thalaivarukku, ithukellam avar badil ezhutittu irukka mudiyuma uma :-)