இன்று மதியம் வைகையில் அம்மா அப்பாவை மதுரைக்கு ரயில் ஏற்றி விட தாம்பரம் சென்றிருந்தேன். காரை [நான் கார் வாங்கி விட்டேன் என்று அறிக!] நிறுத்தி விட்டு, சக்கரம் வைத்த பெட்டியை இழுத்துக் கொண்டு ரயில் நிலையத்தில் நுழைந்தேன். படி ஒரு பக்கம், சறுக்கல் ஒரு பக்கம் இருந்தது. பெட்டி கனமாக இருந்ததால், படி பக்கம் செல்லாமல் சறுக்கல் வழியாய் இழுத்துக் கொண்டு சென்று விடலாம் என்று நினைத்தேன். அருகில் சென்றவுடன் அந்த சறுக்கல் எச்சி துப்பவும், சிறுநீர் கழிக்கவும் அமைக்கப்பட்டது என்று அறிந்தேன். பெட்டியை தூக்கிக் கொண்டு படியில் ஏறினேன்.

ஊருக்குச் செல்லும் ரயில்கள் என்ன என்ன? எந்த இடத்தில் வந்து நிற்கும்? எந்த வித அறிவிப்பு பலகையும் என் கண்ணில் படவில்லை. சரி, எட்டு அல்லது ஒன்பதாவது நடைமேடையில் தானே வரும், தெரிந்தது தானே என்று படியில் ஏறினேன். மடியில் இல்லை என்றாலும், கையில் கணம் வேறு! ஏறி முடிந்ததும் ஒரு குன்றின் மீதே ஏறிவிட்ட அனுபவம்ரயில் நிலையங்களில் உள்ள படிகளுக்கு பயந்தே பலர் ரயிலில் பிரயாணிப்பதில்லை. நம் கனத்தை தூக்கிக் கொண்டு ஏறுவதே கொடுமை, இதில் பெட்டி படுக்கை வேறு!! என்னை போன்ற டி யில் வேலை செய்பவர்களும், வயதானவர்களும் பாவம் தானே? மாற்றுத் திறனாளிகள் எப்படி ரயில் பிரயாணம் செய்வார்கள் என்றே தெரியவில்லை. அதற்கு ஒரு ஏற்பாடும் ரயில் நிலையத்தில் நான் பார்க்கவில்லை. [என் கண்ணில் தான் கோளாறா?] மாடியில் ஏறி பார்த்தால் ஒரு நீண்ட நடைபாதை. நாங்கள் ஒன்னாவது நடைமேடைக்கு அருகில் நிற்கிறோம், எங்கள் வண்டி ஒன்பதாவது நடை மேடைக்கு வரும். சரி இனி கவலையில்லை, பெட்டியை தள்ளிக் கொண்டே செல்லலாம் என்று நினைத்து இழுத்தேன். கர கரவென்று ஒரு சத்தம். என்னடா என்று பார்த்தால், அந்த நடைபாதைக்கு இடைவெளியுடன் கூடிய அழகான தரை அமைத்திருக்கிறார்கள். அதன் அமைப்பு ஒரே சீராய் இல்லாததால் அப்படி ஒரு சத்தம். கடந்து செல்பவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே போனார்கள். என் நேரம், அந்த நேரத்தில் வேறு எவனும் அப்படி ஒரு பெட்டியுடன் தள்ளிக் கொண்டு வரவில்லை. இல்லையென்றால் எல்லோருக்கும் கரகர ஒழி பழகி இருக்கும். கூட்டத்தோடு கூட்டமாய் நானும் சென்றிருப்பேன். மூணாவது நடைமேடை அருகில் வந்ததும், என்னாலேயே அந்த சத்தத்தை தாங்க முடியவில்லை. கையில் தூக்கிக் கொண்டேன்.

வெயில் அதிகம் என்றாலும், அந்த உயரத்தில் நல்ல காற்று வந்தது. இதமாய் இருந்தது. ஒரு பரதேசி மாதிரி ஒரு நாள் இந்த நடைபாதையில் துண்டு விரித்து படுத்தால் என்ன என்று கூட தோன்றியது. என்ன ஒரு கூட்டம், என்ன ஒரு அவசரம். எத்தனை முகங்கள், எத்தனை வாழ்க்கை. எழுத்தாளனாய் [யாரு, நீயா?] இருப்பது இந்த மாதிரி சமயத்தில் உதவும். எல்லோரையும் ஆராய்ந்து கொண்டு, எதையாவது கற்பனை செய்து கொண்டே நடந்தால், பாதையின் தூரமும், கையில் பாரமும் தெரியாது.

அறிவிப்பாளர் விடாமல் "இரண்டாம் நடைமேடையில் உள்ள வண்டி ஷெட்டுக்கு செல்லும் என்று கூவிக் கொண்டிருந்தார்" வண்டியில் அமர்ந்த எத்தனை பேர் திட்டிக் கொண்டே இறங்கினார்களோ! ஒரு வழியாய் ஒன்பதாவது நடை மேடைக்கு அருகில் வந்தேன். நடைமேடைக்குச் செல்ல படியில் இறங்கலாம் என்று பார்த்தால் நந்தி மாதிரி சில பயணிகள் அமர்ந்து ஊர் கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அது எப்படி சரியாய் படியின் நடுவில் இடம் பிடிக்கிறார்கள் என்று புரியவில்லை. "வாழு, வாழவிடு" என்ற பழமொழி நம் மக்களின் மனநிலையை வைத்து தான் எழுதி இருப்பார்கள் போலிருக்கிறது.

ஒரு வழியாய் படியில் இறங்கி நடைமேடையில் கால் வைத்ததும் ஒரு பலகையில் "நடைமேடை சீட்டை வாங்கி வாருங்கள்" என்று ஒரு அறிவிப்பு. நான் ரயில் நிலையத்தில் உள்ளே நுழைந்து ஒரு பலகை தேடினேனே, அங்கு இருக்க்க வேண்டிய பலகை இது! ஒன்றரை கிலோ மீட்டர் நடந்த பிறகு வைத்திருக்கிறார்கள். சரி இங்காவது வைத்திருக்கிறார்களே என்று என்னை நானே நொந்து கொண்டு எங்கள் [ரயில்] பெட்டி எங்கு வரும் என்ற பலகையை நோக்கினேன். இது கண்டிப்பாய் முற்ஃபி விதி தான். முற்ஃபி விதி தெரியாதவர்கள இங்கு பார்க்கவும்

"நம்முடையது எந்த பெட்டியை இருந்தாலும், அது நடைமேடையின் கடைசியில் தான் வரும்!" எங்கள் பெட்டி "D2 ", அது பதினேழாம் என் பலகைக்கு அருகில் வரும் என்று போட்டிருந்தார்கள். நாங்கள் ஒன்றாம் எண் பலகையின் அருகில் கூட இல்லை! நான் என் பெற்றோர்களை அதை நோக்கி நடக்கச் சொல்லி விட்டு, நடைமேடை சீட்டு வாங்கி வரக் கிளம்பினேன். இங்கு இன்னொரு முற்ஃபி விதி இருக்கிறது.

"நாம் என்று நடைமேடை சீட்டு வாங்கவில்லையோ, அன்று பரிசோதகர் கண்டிப்பாய் வருவார்!"

புத்திசாலித்தனமாய் முன் பக்க நுழைவாயில் கவுண்டருக்கு செல்லாமல் பின் பக்க நுழைவாயில் கவுண்டருக்கு சென்றேன். கவுண்டருக்கு வெளியே இரண்டு வரிசை நின்றிருந்தது. வெள்ளிக் கிழமை முற்பகல், ஒரு மணிக்கு இத்தனை கூட்டம்! நம் நாட்டில் மக்கள் எங்கேயாவது போய் கொண்டே இருக்கிறார்களா? வேலை வெட்டியே இல்லையா என்று தோன்றியது. எத்தனையோ முறை ரயில் நிலையம் சென்றிருந்தாலும், நடைமேடை சீட்டு எடுத்திருந்தாலும், வரிசையில் முன்னாள் இருப்பவரிடம் ஒரு கேள்வியாவது கேட்க வேண்டி இருக்கிறது! கேட்டேன், சார், பிளாட்பாரம் டிக்கட்டுக்கு எந்த க்யு? அவர் அதாரட்டி மாதிரி பலருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாத்துக்கும் ஒரே க்யு தான் என்றார் என்னிடம். அமைதியாய் நின்றேன். இருந்தும், ஒரு சந்தேகம். ஏனென்றால் அரை மணிநேரம் க்யூவில் நின்று விட்டு கவுண்டரில் பணம் கொடுத்தால் அது பக்கத்து கவுண்டர் என்று இரக்கமே இல்லாமல் திருப்பி அனுப்பி விடுவதில் நம் ஆட்கள் வல்லவர்கள். சுற்றி முற்றி பார்த்ததில் "Any Ticket Any Counter" என்று ஒரு வாசகம் கண்ணில் பட்டது. அப்பாடா, இவர் சொன்னது சரி தான்! ஆனால் "Any Ticket Any Counter" என்னும் அந்த முறை எத்தனை சரி என்று தெரியவில்லை. ஊருக்கு போக டிக்கெட் எடுப்பவன், எலெக்ட்ரிக் ட்ரெயினில்பயணம் செய்ய டிக்கட் எடுப்பவன், நடைமேடை டிக்கட் எடுப்பவன் என்று எல்லோருக்கும் ஒரே வரிசை என்பது சரியான முறை அல்ல என்றே பட்டது. நடைமேடை சீட்டு வாங்க எனக்கு ஒரு நிமிடம் ஆகாது, ஊருக்கு போக டிக்கட் எடுப்பவனுக்கு அப்படியா? இதற்காக ஒரு தனி வரிசை இருந்தால் தானே சுலபம் என்று தோன்றியது

நடைமேடை சீட்டுக்கென்று மெஷின் வைத்து பார்த்தார்கள், ஒன்றும் சரிப்படவில்லை. நானும் பொறுமையாய் காத்திருக்க ஆரம்பித்தேன். பெண்களுக்கு தனி வரிசை இல்லை என்று கண்டிப்பாய் சொல்லி இருந்தார்கள். ஏன் என்று தெரியவில்லை. எப்போதும் நடப்பது போல, வெளியே வருபவர்கள், வரிசையில் சரியாய் என் அருகில் வந்து நுழைந்து அந்தப் பக்கம் சென்றார்கள். இது ஏன் என்றே எனக்கு இன்று வரை புரியவில்லை. வழக்கம் போல, "நீங்கள் எந்த வரிசையில் இருக்கிறீர்களோ, அதற்கு அடுத்த வரிசை தான் வேகமாய் நகரும்!" என்ற முற்ஃபி விதி இன்று வேலை செய்யவில்லை. என் வரிசை சற்று வேகமாகவே நகர்ந்தது. ஆச்சர்யமாக இருந்தது! பக்கத்து வரிசையில் ஒருவர் "அந்த ஒரே ஆளு, அரைமணி நேரமா நிக்கிறான்யா" என்று பொறுமை இழந்து கொண்டிருந்தார். இது வரை என் வாழ்க்கையில், வரிசையில் நிற்கும் ஒருவர் எந்த வித சலிப்பும், புலம்பலும் இல்லாமல் நான் பயணச் சீட்டு வாங்கியதாய் எனக்கு நினைவே இல்லை. குறிப்பாக தாம்பரத்தில்!

வழக்கம் போல ஒரு பிரகஸ்பதி கூட்டம் எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதை போல மெல்ல வரிசையில் தன்னை சொருகிக் கொண்டான். சரியாய் என் பின்னால் வந்து தன்னை வரிசையுடன் இணைத்துக் கொண்டான், என் பின்னால் இருந்த மார்வாடி ஒன்றும் சொல்லவில்லை. என் முன்னால் அவன் வந்திருக்க வேண்டும்! நாக்கு என்ன, கண்ணு, காத்து, மூக்கு புடுங்குற கேட்டுருப்பேன். தப்பிச்சிட்டான். நம் மக்களின் மனநிலையே அப்படித் தான் இருக்கிறது. எப்படியாவது அவர்களுக்கு குறுக்கு வழி ஒன்று வேண்டும். அங்கு நிற்கும் நேரத்தை மிச்சம் பிடித்தால் அவன் எதோ, நோபல் பரிசு வாங்கி விடுவது மாதிரி!

என் முறை வந்தது. எவ்வளவு என்று தெரியாமல் என் பையில் உள்ள அத்தனை சில்லறையையும் கையில் வைத்திருந்தேன். ஐந்து ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கிக் கொண்டு நடந்தேன். படியில் இறங்கி நடைமேடையில் பதினேழாம் என்னை தேடினால் கண்ணிலேயே படவில்லை. ரயிலுக்காக காத்திருக்கும் எல்லோரையும் தாண்டி சென்று கொண்டே இருந்தேன். இதையே நான் ஜி எஸ் டி சாலையில் நடந்திருந்தால் தாம்பரம் சானிட்டோரியம் வந்திருக்குமோ என்று தோன்றியது! பதினேழு தான் கடைசியோ என்று நினைத்தால் அதற்கு மேல் பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அடக் கடவுளே!  

என் அப்பா, வீட்டில் "D2" கோச் பார்த்ததும் எஞ்சின் அருகில் வரும் என்று சொன்னார். அவருக்குத் தான் முற்ஃபி விதி தெரியாதே!

2 Responses
  1. Anonymous Says:

    Enna kodumai oru comment kooda ellai....


  2. Tamil naattil ithu thaan ezhuththaalarkal nilai :-)