இந்த மாதம், தி. நகரில் உள்ள சர். பி. டி. தியாகராய ஹாலில் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் வெவ்வேறு உலக சினிமா ஆளுமைகள் பற்றி ஒரு வாரத்துக்கு பேருரை ஆற்றுகிறார். இந்த நிகழ்வை உயிர்மை பதிப்பகம் நடத்துகிறது. சென்ற வருடம் ரஷ்ய கலாச்சார மையத்துடன் சேர்ந்து ஏழு இலக்கிய பேருரைகள் இவர்கள் நிகழ்த்தினார்கள். இந்த வருடம் உலக சினிமா ஆளுமைகள். இராமகிருஷ்ணனின் வலைப்பக்கத்தில் இதை பற்றிய அறிவிப்பை பார்த்தவுடன், என் கால/நேரத்தில் ஒரு கைக்குட்டையை போட்டு வைத்து விட்டேன்! கடந்த செவ்வாய் கிழமை அகிரா குரோசவாவுடன் இந்த நிகழ்வை தொடங்கினார்கள்.

அலுவலக வேலை காரணமாக ஏழு நாளும் போக முடியாது என்றாலும், கூடிய மட்டும் போய் விடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். சென்ற முறை இலக்கியத்திற்கே வந்த கூட்டத்தை பார்த்ததும், சரி, இந்த முறை சினிமா வேறு, கேட்கா வேண்டும், அதனால் பெரிய ஹாலாய் புக் செய்திருப்பார்கள் என்று நினைத்தேன். ரஷ்ய கலாச்சார அரங்கை காட்டிலும் சிறிதாய் இருந்தது ஏமாற்றம் அளித்தது. நிகழ்ச்சியின் முதல் நாள் என்பதால் வழக்கமான தொடக்க உரைகள் இருந்தன. முதலில் மனுஷ்ய புத்திரன் பேசினார். மழை நாளில் இத்தனை பேர் வந்தது மகிழ்ச்சி என்றார். பிறகு இயக்குனர் பாலுமகேந்திரா பேசினார். வயதாகிவிட்டது. சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். உலக சினிமா என்பது இப்போது தூரமில்லை. நமக்கு மிக அருகில் இருக்கிறது, எந்தப் படம் வேண்டுமென்றாலும் டீவிடி கிடைக்கிறது. இப்படித் தான் நான் காய் கரி வாங்கச் சென்று, அரைக்கிலோ தக்காளியும், நூறு கிராம் பச்சை மிளகாயுடன், சிட்டிசன் கேனும் வாங்கி வந்தேன் என்றார். ஒரு சாதாரண விஷயம், ஒரு கலைஞனின் பார்வையில் எத்தனை சுவாரஸ்யமாய் மாறி விடுகிறது என்று தோன்றியது. நல்ல சினிமாவை பற்றி பேசும் அதே தருணத்தில், நல்ல ரசனை கொண்ட பார்வையாளர்களையும் உருவாக வேண்டியது நம் கடமை, அதனால் Film Appreciation என்ற ஒரு பாடத்திட்டத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இதை இவர் எல்லா மேடைகளிலும் வைப்பதாகவும், யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் ஆதங்கப்பட்டார். அத்தியாவசிய தேவைகளையே அரசு பூர்த்தி செய்ய முடியாமல் முழிக்கிறது, இதை எல்லாம் எப்படி செய்யும் என்று எனக்குத் தோன்றியது. பாலுவை பார்த்து பரிதாபமாய் இருந்தது. சரி, அப்படியே வைத்துக் கொள்வதாய் இருந்தாலும், அப்படி என்ன மாற்றம் வந்து விடப் போகிறது, உலக சினிமாக்கள் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தி விடப் போகிறது என்று நினைத்தேன். அதற்கு இராமகிருஷ்ணன் அவர்கள் அவரின் உரையில் மிக அழகாய் பதில் சொன்னார். அவர் அகிராவின், ஒவ்வொரு படத்தை விளக்கும் போதும், ஒரு நல்ல சினிமா என்பது என்னவெல்லாம் சொல்ல முடியும், செய்ய முடியும், அகிராவின் படங்கள், ஏன் இன்றளவும் உலக சினிமாக்களில் முதன்மையாய் இருக்கிறது என்பதற்கு உதாரணமாய், ரஷோமொன் திரைப்படத்தில் "உண்மை என்பது ஒன்றில்லை, அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உண்மை என்ற ஒன்றை நேருக்கு நேராய் யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது. அதோடு, மனிதன் எப்போதுமே சுயநலம் உள்ளவன் தான். அவனால் அந்த இயல்பை மாற்றிக் கொள்ளவே முடியாது. வேண்டுமென்றால் அதை குறைத்துக் கொண்டு வாழ முயற்சிக்கலாம்" என்றும், டெர்சு உசாளவில் "மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழப் பழக வேண்டும், அவன் இயற்கையை வணங்க வேண்டும், அவன் பின் வரும் சந்ததியினருக்கு நல்ல உணவு, குடிதண்ணீர் இவைகளை விட்டுச் செல்ல வேண்டும். போன்ற செய்திகள் பொதிந்து இருப்பதையும் விளக்கிச் சொன்னார். இந்த இரு உதாரணங்கள் என் ஞாபக அடுக்குகளிலிருந்து தான் சொல்கிறேன், இதற்கு மேலும் நிறைய விஷயங்களை அந்த இரு மணி நேர உரையில் அவர் பகிர்ந்து கொண்டார். அவர் இத்தனை நுணுக்கங்களையும் சொன்ன பிறகு தான், இத்தகைய சினிமாக்கள் பார்வையாளனின் ரசனையை உயர்த்த மட்டும் அல்ல, அவனுடைய வாழ்வையே மேம்படுத்தவும், அதனால் ஒரு நல்ல சமுதாயம் அமையவும் இவைகள் உதவும் என்று புரிந்தது.

மன்னிக்கவும், பாலுவிலிருந்து ராமகிருஷ்ணனுக்கு தாவி விட்டேன். பாலுவிற்குப் பிறகு, முருகதாஸ் பேசினார். அவர் நெடுங்குருதி படித்திருப்பது அறிந்து மகிழ்ச்சியை இருந்தது. அத்தகைய நாவல்களை படித்த பிறகும், எப்படி துப்பாக்கி எடுக்கிறார்? என்று தான் புரியவில்லை.

பிறகு வந்த வசந்த பாலன் எது நல்ல சினிமா? ஏன் "நல்லவனுக்கு நல்லவன்" நல்ல சினிமா இல்லை [அதானே, ரஜினி வேறு இருக்கிறார்!], என்று தெரிந்து கொள்வதற்காகவே உங்களை போல நானும் வந்திருக்கிறேன் என்றார். என் அருகில் இருந்த நண்பன், ரஜினி எல்லாம் வர மாட்டாரா என்று கேட்டார். அதற்கு நான், ரஜினியே ஒரு உலக சினிமா, அவர் எதற்கு இதற்கெல்லாம் வர போகிறார் என்று பதில் சொன்னேன்.

அதன் பிறகு இறையன்பு [ஐ.ஏ.எஸ் போடாமல் இருந்தால் இவரை தெரியாதா?] பேசினார். ரத்தினச் சுருக்கமாக, சொல்ல வந்ததை மிக அருமையாய் சொன்னார். மனுஷ்ய புத்திரன் மழையில் இத்தனை பேர் வந்தது சந்தோசம் என்றதை சுட்டிக் காட்டி, இவர்கள் மழைக்கு ஒதுங்கியவர்கள் அல்ல, இங்கு பெய்யவிருக்கும் உலக சினிமா என்னும் மழையில் நனைய வந்தவர்கள் என்று டைமிங் பஞ்ச் வைத்தார். சிறந்த பேச்சாளர்!

பிறகு எஸ். இராமகிருஷ்ணன் தன உரையை ஆரம்பித்தார். எத்தனையோ தலை சிறந்த இயக்குனர்கள் இருந்தும், இந்த ஏழு பேரை தான் தேர்ந்தெடுத்ததற்கு காரணாம், இவர்கள் அனைவரும் உலக இலக்கியங்களை படங்கள் ஆக்கியவர்கள் என்றும், இந்த விஷயத்தில் நானும் கொஞ்சம் சுயநலம் உள்ளவனாய் இருக்கிறேன், அதனால் தான் இலக்கியம் சார்ந்த படங்களை எடுத்தவர்களை தேர்ந்தெடுத்தேன் என்றார். உரையின் பிற்பகுதியில் "சுயநலம் இல்லாமல் மனிதன் வாழ முடியாது, அதை குறைத்துக் கொண்டு வாழப் பழகலாம்" என்று அகிராவின் ரஷோமான் செய்தியை அவரே அழுத்திச் சொன்னது அருமையான முரண்! அடுத்த முறையாவது, இலக்கியம் சாராத இயக்குனர்களை அவர் அறிமுகப்படுத்த வேண்டும். அதே போல, பைரசி சீடிக்களை இத்தகைய நிகழ்ச்சியில் விற்கக் கூடாது என்ற யு. டீ.வி தனஞ்செயனுக்கு மனுஷ்யபுத்திரனும், இராமகிருஷ்ணனின் பதிலும் உண்மை என்பது ஒன்றில்லை, அது அவரவர்க்கு மாறுபடும் என்பதை விளக்கியது :-)

இராமகிருஷ்ணன் இந்தியாவில் கலை அரங்ககளே இல்லை, ஒரு உலக சினிமாவை பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் ஏதாவது ஒரு சங்கத்தில் உறுப்பினராய் இருக்க வேண்டும். வருடத்து ஒரு முறை அவர்கள் போடும் படங்களை தான் பார்க்க வேண்டும், ஐரோப்பாவில் அப்படி இல்லை, எப்போதுமே அங்கு உலக சினிமாக்கள் ஓடிக் கொண்டே இருக்கும், நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் பார்க்கலாம் என்றார். நினைக்கும்போதே அருமையாய் இருந்தது. சென்னையில் ஒரு அரங்கத்தில் வெவ்வேறு உலக சினிமாக்கள் மட்டுமே வருடம் முழுவதும் ஓடும் என்றால் எப்படி இருக்கும். சென்னையில் கூட இதை செய்யவில்லை என்றால் வேறு எங்கும் செய்ய முடியாது!!

உரையை தொடர்ந்த அவர், அகிராவின் குழந்தைப் பருவம், அவர் எப்படி இயக்குனர் ஆனால், அவருக்கு ஆசான்கள் யார், அவர் எப்படி ஒரு படத்தை உருவாக்கினார், சினிமாவின் மீது எத்தகைய மோகம் அவருக்கு இருந்தது என்று இரண்டு மணி நேரம் தண்ணீர்க் கூட குடிக்காமல் பேசினார். அகிராவை வியப்பதா, அவரை இத்தனை நுணுக்கமாய் ஆராய்ந்து, தேடித் தேடித் படித்து, படங்கள் அத்தனையும் பார்த்து, அத்தனை படங்களையும் உணர்ந்து இந்த இரண்டு மணி நேரத்தில் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் இவர் ஆற்றிய உரையை வியப்பதா என்று புரியவில்லை. இறையன்பு சொன்னது போல், இவர் 45 வயதுக்குள், 450 வருடம் வாழ்ந்து விட்டவர். இவரை போல ஒரு ஆசிரியர் இருந்தால், மணாவர்களுக்கு இலக்கியம் ஏன் கசக்கப் போகிறது? இவரை நம் கல்லூரிகள், பல்கலைகழகங்கள் நல்ல முறையில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஒரு கெளரவப் பேராசிரியராக வைத்துக் கொள்ளலாம். ஏதோ, அவர் சொன்னதில் இருந்து, எனக்கு நினைவில் உள்ளதை இங்கே தூவப் பார்க்கிறேன். பெரும்பாலும் விட்டுப் போயிருக்கும் என்று தான் நம்புகிறேன்.

அகிரா தன் குழந்தை பருவத்தில் ஓவியம், வாழ் சண்டை தவிர வேறு எதிலும் நாட்டம் கொள்ளவில்லை. எல்லோரும் அவரை உதாசீனப்படுத்திய போதும், அவரை மீட்டெடுத்தது ஒரு ஆசிரியர்.

இவரின் கதையை அடிப்படையாய் வைத்துத் தான் "தாரே ஜாமீன் பர்" என்ற ஹிந்தி படம் தொடங்கியது.

இவர் எமொசனிடம் 17 படங்கள் உதவி இயக்குனராய் இருந்தார். அத்தனை படங்களில் வேலை செய்தால் தான் படத்தை இயக்கம் கலை உங்களுக்குப் பிடிபடும் என்பது அகிராவின் கருத்து.

முதல் படத்தில் எமோசன் அகிராவை எடுபிடியாய் வைத்திருந்தார், இரண்டாவது படத்தில் அரங்கை கவனிக்கச் சொல்வார். மூன்றாவது படத்தில் அரங்கை இவர் தான் தீர்மானித்தார். நான்காவது படத்தில் அந்த அரங்கில் நடிகர்களுக்கு இவர் தான் நடிப்பு சொல்லிக் கொடுப்பார். ஐந்தாவது படத்தில் எமொசான் இடத்தில் இவர் தான் இருப்பார்!
அகிரா படப்பிடிப்புத் தளத்தில் ஒரு பைத்தியக்காரனை போல் திரிவார். காலையிலேயே உதவி இயக்குனர்களை கூப்பிட்டு இன்று என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு திட்டுவேன், பொறுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார்.

அகிராவின் பார்வை கூர்மையானது. எவ்வளவு சிறப்பாய் அந்தக் காட்சியை/அரங்கை வடிவமைத்திருந்தாலும், ஒரு சிறு குறை அவருக்குத் தெரிந்து விடும். அதை சரி செய்யச் சொல்வார். சீன மொழியே தெரியாமல், காட்சிக்காக வைக்கப்பட்ட சீன மொழியில் எழுதப்பட்ட ஒரு பலகையில் தவறிருப்பதை சரியாகச் சுட்டிக் காட்டினார்.

நல்ல சினிமா என்பது திரைக்கதை மேஜையிலும், படத்தொகுப்பு மேஜையிலும் தான் உருவாகிறது என்பார்.

ஒரு மோசமான திரைக்கதையை வைத்துக் கொண்டு எவ்வளவு நல்ல இயக்குநராலும், நல்ல படத்தை அளிக்க முடியாது. அதே சமயம், ஒரு நல்ல திரைக்கதையை வைத்துக் கொண்டு ஒரு மோசமான இயக்குநராலும் நல்ல படத்தை அளிக்க முடியும் என்பார்.

பிற்கால வயதில் அகிரா, தான் நினைத்த படி படத்தை எடுக்க விட மாட்டேன் என்கிறார்கள், நான் இருந்து என்ன பயன் என்று வருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார்.

ஒளிப்பதிவாளரையும், இசையமைப்பாளரையும் அகிரா அடிக்கடி மாறுவதில்லை. நாங்கள் மணம் புரிந்தவர்கள், எங்களுக்குள் சண்டை வரலாம், ஆனால் சேர்ந்து தான் வாழ்வோம் என்பார்.

அகிராவின் எல்லா படங்களிலும் ஒரு ஆசான், மாணவன் உருவகம் இருந்து கொண்டே இருக்கும்.

அகிரா ஒரு படம் தொடங்கும்போது, தன் திரைக்கதை ஆசிரியர்களுடன் சுடு நீர் இருக்கும் ரிசார்ட்டுக்கு சென்று விடுவார். அங்கு அனைவரும் வட்டமாய் அமர்ந்து கொண்டு, ஒரே சீனை எல்லோரும் தனித் தனியே எழுதுவார்கள். பிறகு ஒரு மணி நேரம் அதை வைத்துக் கொண்டு எது செறிந்த சீன் என்று சண்டை போடுவார்கள். இறுதியாக ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள். அப்படி இவர்கள் சண்டை போட்டு தேர்ந்தெடுக்கும் சீன்களை அகிரா தான் ரெப்ரீ என்று அழைக்கும் ஒகுனியிடம் காட்டுவார். அவர் சுத்த நான்சென்ஸ் என்று கிழித்துப் போட்டு விடுவார். பிறகு மறுபடியும் ஒரு அமர்வு, மறுபடியும் ஒரு விவாதம். இப்படி தான் அகிராவின் படத்துக்கு திரைக்கதை உருவாகும்.

அகிராவின் படங்கள் உலகப் படங்களாய் இருப்பதன் காரணாம், அது வாழ்க்கையை பிரதிபலிக்கிறது, மனிதனின் குணாதிசியங்களை கேள்வி கேட்கிறது, ஆய்வு செய்கிறது.

அவர் தூவியதிலிருந்து, நானும் என்னால் முடிந்ததை தூவி இருக்கிறேன். மொத்தத்தில் நல்ல ஒரு அனுபவம்.
1 Response
  1. ஐயா, திரு.இராமகிருஷ்ணண் அவர்களதுபேருரையை கேட்க,நேரில் காண இயலாத ஏன் போன்றோருக்கு தங்கள்து பதிவு "மினி வீடியோ". நன்றி வாழ்த்துக்கள்.