உலக சினிமா பேருரைகளில் நேற்று திரு. இராமகிருஷ்ணன், சத்யஜித் ரேயின் ஆளுமையை கொண்டு சொற்பொழிவாற்றினார். நான் சற்று தாமதாமாகத் தான் சென்றேன். நான் போன போது, 'ரே'வின் ஜல் சாகர் படத்தை பற்றி விளக்க ஆரம்பித்தார்.

காலம் காலமாய் ஜமிந்தாராய் இருந்து, இன்று நொடித்துப் போய், கடனாளி ஆன பிறகும், அதே கெளரவத்தை காப்பாற்ற பாடு படும் ஒரு ஜமிந்தார் பற்றிய கதை. இது தான் ரே எடுத்த படங்களிலேயே ஆகச் சிறந்தது என்றார் இராமகிருஷ்ணன். காரணம், இந்த ஒரு படத்தை உலகில் உள்ள யாருக்கு போட்டு காட்டினாலும், இந்திய இசை பற்றியும் அதன் உன்னதத்தை பற்றியும் எளிதாக உணரலாம். அதோடு, இந்தியா என்றவுடன், மாட மாளிகை, வண்ணக் கோலங்கள், மிராசுதார்கள், நிலச் சுவான்தார்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு வெள்ளைக்காரன் வந்து கொள்ளையடித்துப் போன ஒரு உண்மையான இந்தியாவை அறிமுகப்படுத்த சரியான படமாய் இது இருக்கும் என்றார். அதோடு மட்டுமில்லாமல், இந்தப் படத்தின் திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது. இந்தப் படத்தை பார்த்த மறுநாள், குருதத்தின் "சாப், பீபி அவ்ர் குலாம்" படத்தையும் பார்க்கச் சொன்னார். காரணம், அது ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப் பட்ட இதே கதை என்றார்.

ரே வின் ஒவ்வொரு கதையும் ஒரு வாழ்க்கையின் திரையிடல். அவர் போல வங்காளத்தின் நடுத்தர வர்க்க மக்களை யாரும் இந்தியா சினிமாவில் காட்டவில்லை. ஒவ்வொரு கதைக் கருவையும் பார்த்தாலே, ரே வை ஏன் இவ்வளவு தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்று புரிகிறது. இந்தியாவின் வறுமையை காட்டி காசு சம்பாதித்தவர் ரே என்று ஒரு பெரிய குற்றச்சாட்டு அவர் மேல் உண்டு என்றும், அதை மறுத்த இராமகிருஷ்ணன் ரே வை போல இந்தியாவை காட்டியவர்கள் யாரும் இல்லை. வங்காளிகள் ரே வின் படத்தை மட்டும் பார்த்தால் போதும், வங்காளத்தை பற்றி அவர்கள் அத்தனையும் அறிந்து கொள்ளலாம் என்றார். சாதிக் கொடுமைகளை, மத மூட நம்பிக்கைகளை ரே வை போல சாடியவர் யாரும் இல்லை என்பதை அழுத்தமாய் பதிவு செய்தார்.

இராமகிருஷ்ணன் ஒரு தேர்ந்த கதை சொல்லி. தான் பார்த்த படத்தை அடுத்தவர்களுக்கு அப்படியே சொல்வது ஒரு கலை. [நான் இதை நன்றாய் செய்வேன், அது தான், கொஞ்சம் தூக்கி வைத்து பேசுகிறேன்!] அவர் ஒரு படத்தின் கதையை சொன்ன பிறகு [எந்த வித தங்கு தடையுமில்லாமல்] நாம் அந்தப் படத்தை பார்க்கவே வேண்டியதில்லை. அவர் சொல்வதிலேயே நமக்கு அந்த படம் பார்த்த உணர்வு வந்து விடுகிறது. எனக்கு நினைவில் தெரிந்து, நேற்று மட்டும் அவர் ரே யின் ஜல்சாகர், நாயக், பதேர் பாஞ்சாலி, அபு டிரயாலஜி, மகாநகர், ஆரண்யத்தின் ராத்திரி, சாருலதா, தேவி, சத்கதி ஒன்பது படங்களை கண் முன் காட்டினார். அதன் சாரம் இங்கே...

நாயக் - விமானத்தில் சீட்டு கிடைக்காத காரணத்தால், இரயிலில் பயணம் செய்யும் ஒரு நடிகன். ஒரு நடினை பொது இடத்தில் பார்த்தால் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்.

மகாநகர் - ஒரே நகரத்தில் அப்பா மாமா வேலை செய்கிறார், மகள் வேசியாகிறாள். நகரம் ஒரு எளிமையான குடும்பத்தை எப்படி சீர் குழைக்கிறது.

சாருலதா - தன் தனிமையை, வெறுமையை போக்க ஒரு அறிவுத் துணையை தேடும் ஒரு குடும்பப் பெண், அந்தத் துணியை தன கொழுந்தனிடம் காண்கிறாள்.

தேவி - ஒரு சாதாரண பெண்ணை தேவியாக்கி மக்கள் பூஜிக்கிறார்கள். அவளின் உளவியல் கூப்பாடுகள்.

ஆரண்யத்தின் ராத்திரி - நகர வாழ்வை வெறுத்து ஆரண்யம் புகும் நான்கு இளைஞர்கள். சத்கதி - நல்ல நாள் குறிக்க பிராமணர் வீட்டுக்கு வந்த சூத்திரன் ஒருவன் இறந்து போவது. அதை அந்த பிராமணன் எப்படி எதிர் கொள்கிறான்.

எத்தனை விதமான கதைக் கருக்கள். எத்தனை விதமான வாழ்க்கை.  என்ன ஒரு தரிசனம். ரே வின் படங்களை காட்சி வாரியாக இராமகிருஷ்ணன் சொல்லும்போது, அவரையும் அறியாமல் அவரிடம் இருக்கும் எழுத்தாளனும் விழித்துக் கொள்கிறான் என்று தோன்றுகிறது. அவ்வப்போது அவர் அவரின் சொந்த அனுபவங்களை இணைத்து கதை சொல்லும் பாங்கு மிக அருமை. ஜல் சாகர் கதையை கேட்டதும், போலி கெளரவத்துக்காக இப்படியுமா இருப்பார்கள் என்று நினைத்தேன். இன்றும் அப்படி இருக்கிறார்கள் என்று தான் பார்க்கப் போன ஒரு நொடித்துப் போன ஜமின்தாரை பற்றி இராமகிருஷ்ணன் சொன்னார். ஒன்றுமே இல்லையென்றாலும், அது தர்பார், இன்றும் அவரை வேலையாட்கள் மகாராஜா என்று தான் அழைக்கிறார்கள். மேலே சட்டை கூட இல்லாதவன் அங்கு திவான். ராஜா இன்றும் தன வீட்டில் குளிக்கப் போகும்போது அவர் முன் ஒருவர் வாளோடு நடந்து செல்வது, வந்தவருக்கு விருந்து உபச்சாரம் என்றால், பக்கத்து பெட்டி கடையில் அக்கவுண்ட் என்று அவர் சொன்ன நிஜ வாழ்வு வியப்படையச் செய்தது. உண்மை சில சமயங்களில் கற்பனையை விட புதிராய் இருக்கிறது!

இராமகிருஷ்ணன் தான் ஒரு பெரிய ஊர் சுற்றி என்றார், அதோடு இந்தியா முழுவதும் நான் அலைந்து திரிந்திருக்கிறேன். நாம் இப்போது நடப்பதே இல்லை, அப்படியே நடந்தாலும் ஒரு இருக்கையிலிருந்து இன்னொரு இருக்கை. அவ்வளவு தான் நம் நடை. உலகத்திலேயே அபத்தமான நகைச்சுவை "நான் இப்போ வாக்கிங் போறேன் சார்" என்பது தான்! நடக்கத் தானே கால்கள் இருக்கின்றன. நடக்கவே முடியாதவன் நடந்தால் தான் அவன் அப்படிச் சொல்லலாம், உனக்கு கை கால்கள் நல்லா தானே இருக்கு. நான் ரயிலில் நிறைய சுற்றி இருக்கிறேன். ரயிலின் வெளியே தெரியும் உலகத்தை விட, உள்ளே இருக்கும் உலகம் விநோதமானது. உடனே சிநேகம் பிடித்துக் கொள்கிறார்கள், காதலிக்க தொடங்கி விடுகிறார்கள். அதை பார்ப்பதே அலாதி அனுபவம். நானும் ரயில் பயணத்தின் பொது அதை கவனிப்பதுண்டு. ஒவ்வொருவரும் எப்படி உணவு எடுத்து வருகிறார்கள், அவர்களின் பொருள்கள் எப்படி பேக் செய்திருக்கிறார்கள் என்பதை கவனிப்பது ஒரு சுவாரஸ்யம்.

இராமகிருஷ்ணன், பதேர் பாஞ்சாலியின் மிட்டாய்காரன் காட்சியை விவரிக்கும்போது, தன்னுடைய கிராமத்தில் வரும் மிட்டாய்காரனை பற்றி சொன்னார். அப்போது கையில் காசு இருக்காது, கண்ணாடி வழியே லட்டு, மிக்சர் எல்லாம் தெரியும். சும்மாவேனும், அந்த கண்ணாடியில் கை வைத்து லட்டு எடுத்து சாப்பிடுவது போல் பாவனை செய்வோம். நான் நாலு லட்டு சாப்ட்டேன்டா என்பான் ஒருவன், அவனை வெல்ல இன்னும் வேக வேகமாய் லட்டு எடுத்து சாப்பிடுவது போல் பாவனை செய்வோம் என்றார். இதை இந்தியாவில் உள்ள அத்தனை குழந்தைகளும் செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மனிதர் கொஞ்ச நஞ்சமா பேசுகிறார்!! இத்தனை திரைப்படங்கள், இத்தனை கதைகள், இத்தனை சுவையான தகவல்கள்..கேட்க கேட்க பரவசமாய் இருந்தது. என்ன தான் நான் நினைவில் உள்ளதை எழுதினாலும், நேரில் எனக்கு உண்டான அனுபவம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. எப்படியும் இதையும் டீவிடியாய் போடுவார்கள். பார்க்க முடியாதவர்கள் அதையாவது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்படியாவது சினிமாவை கொஞ்சம் கற்றுக் கொள்ளுவோம்!

0 Responses