தொடரின் முதல் பகுதி இங்கே

பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை பதித்த அனைவருக்கும் நன்றி! நான் சொல்லியது போல் வீட்டில் சொன்னால் நிச்சயமாக அம்மா அப்பா திட்டத் தான் செய்வார்கள்! நூற்றில் பத்து பேர் கூட இப்படி பெற்றவர்களிடம் பேசுவது அறிதாக இருக்கும் பட்சத்தில் [இதற்கும் அத்தனையும் படித்து கிழித்ததுகள்!] அந்தப் பத்து பேருக்கும் பெற்றோர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

1. நீ இப்படி எல்லாம் பெண் வீட்டுக்காரங்களுக்கு பரிஞ்சி பேசினா நாளைக்கு எல்லாத்துக்கும் உன் தலையில மெளகா அரைச்சிருவாங்க...

2. உன் பேச்சை கேட்டுட்டு நாங்களும் எதுவுமே வேணாம்னு சொன்னா நம்ம சாதி சனம் நம்ம பையனுக்கு என்ன குறைச்ச நீங்க ஏன் இவ்வளவு இறங்கி போறீங்க என்று நம்மை கேட்பார்கள்!

3. சரி எப்படி இருந்தாலும் நீ சொல்வது நியாயம் என்றே வைத்துக் கொண்டு, அப்படியே செய்தாலும் "என்ன பையன் எதுவுமே வேணாங்குறான் ஏதாவது குறை இருக்குமோ என்று பெண் வீட்டுக்காரர்கள் நினைத்து விடுவார்கள்.

எப்படி இருக்கு கதை? பெருந்தன்மையாய் ஒருவன் நடந்து கொண்டால் அவன் தலையில் மிளகாய் அரைப்பதா? எதுவுமே வேண்டாம் என்று சொல்பவனுக்கு ஏதாவது இருக்குமோ என்று தப்பு கணக்கு போடுவதா? அத்தனை சந்தேகம் இருந்தால் பையனுக்கும் பெண்ணுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட்டு இருவரின் உடலையும் பரிசோதித்து மருத்துவ சான்றிதழ் கொண்டு முடிவு செய்யலாமே...

இந்த திருமண வைபவத்தில் நடக்கும் இன்னொரு பெரிய கூத்து ஜாதகம் பார்ப்பது! இத்தனை காலமாக ஜாதகம் பார்த்து செய்து வைத்த கல்யாணங்கள் யாவும் நிலைத்து நிற்கிறதா? எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா? யாரிடமும் பதில் இல்லை. இதில் ஜாதகம் கணிப்பதை ஒரு அறிவியல் என்று சொல்லிக் கொள்வது கொடுமையிலும் கொடுமை! சரி பெற்றோர்களின் திருப்திக்காக அது ஒரு அறிவியல் என்றே வைத்துக் கொள்வோம். அறிவியலில் ஒரே விஷயத்தை எத்தனை பேர் பரிசோதனை செய்தாலும் ஒத்த பதிலே வரும்! அப்போது தான் அதை அறிவியல் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இங்கோ, ஒரு பையனின் ஜாதகத்தையும், ஒரு பெண்ணின் ஜாதகத்தையும் இரண்டு வெவ்வேறு ஜாதகம் கணிப்பவர்களிடம் காட்டினால், ஒருவர் அற்புதமாய் பொருந்துகிறது என்றும் மற்றவர் முற்றிலும் பொருந்த வில்லை என்றும் கூறி ஒரேடியாய் குட்டையை குழப்பி விடுகிறார்கள்!! இதனால் இன்னொரு ஜாதகம் கணிப்பவரிடம் சென்று மூனுக்கு முக்காவாசியாக மெஜாரட்டி தீர்ப்பை எடுத்து முடிவெடுக்கிறார்கள்! !

சில சமயங்களில் மிக அற்புதமாக பொருந்தி இருக்கிறது என்று சொல்லி திருமணம் நடந்து மணமகனோ மணமகளோ வாழக் கொடுத்து வைக்காமல் அல்பாய்சில் போய் சேர்ந்து விட்டால், ஏன் இப்படி நடந்தது என்று ஜாதகப் பொருத்தம் பார்த்தவரை உலுக்கினால், அது தான் விதி, தெய்வ சங்கல்பங்கள் அற்ப மனிதனின் கண்ணுக்குத் தென்படாது...சில சமயங்களில் ஜாதகத்தில் அத்தகைய விஷயங்கள் இருந்தாலும் எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்து கொள்ளும் என்கிறார்கள்! அதாவது இதற்கு மேல் நீ கேள்வி கேட்கக்கூடாது என்று அர்த்தம்!

இதில் செளராஷ்ட்ரியர்களுக்கு கோத்திரம் என்ற ஒரு விஷயம் வேறு இருக்கிறது. அதாவது பையனுடைய குடும்பப் பெயரும் [ராமியா, தொப்பே, கொண்டா] பெண்ணுடைய குடும்பப் பெயரும் ஒரே கோத்திரத்தில் இருக்கக் கூடாது, அப்படி என்றால் அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று ஒரு கணக்கு! அடடா...ஒரு நல்ல காரியம் நடப்பதற்கு எப்படி எப்படியெல்லாம் தடைகள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்! பள்ளியில் உறுதிமொழி எடுக்கும் போது "ஆல் இன்டியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் என்பதோடு நிறுத்திக் கொண்டு அடுத்த வரியான "அன்ட் சிஸ்டர்ஸ்" என்ற வாசகத்தை பள்ளியிலேயே சொல்லாதவன் நான்! எனக்கு ரத்தம் கொதிக்குமா கொதிக்காதா? சரி, அப்படியே ஒரே கோத்திரத்தில் உள்ள ஒரு பையனும் பெண்ணும் இதெல்லாம் தெரியாமல் காதலித்து விட்டனர்? கல்யாணம் பண்ணித் தொலைக்க வேண்டியிருக்கிறது! அப்போது என்ன செய்வார்கள்? இருக்கவே இருக்கிறது பரிகாரங்கள்! பையனையோ பெண்ணையோ தாய் வழி உறவில் தத்து கொடுத்தது போல் ஒரு சடங்கு நடத்தி இருவருக்கும் ஹோமமும் வயிரும் எறிய திருமணம் நடத்துகிறார்கள்! என்னுடைய கேள்வியெல்லாம் இவை தான்...

1. சின்ன வயதிலிருந்தே பார்த்து பழக்கப்பட்ட ஒரு நல்ல குடும்பத்து பெண்ணை ஜாதகம் சேரவில்லை என்ற ஒரே காரணத்தால் அவளை விட்டு முன் பின் தெரியாத பெண்ணை திருமணம் செய்து வைத்து, அவர்கள் சந்தோஷமாய் இருந்தால் நல்ல விஷயம்! அந்தப் பெண்ணே மாமனாருக்கும், மாமியாருக்கும் எமனாகி விடும் நிலையில் என்ன செய்வது? இப்போது உங்கள் ஜாதகம் என்ன செய்தது?

2. எதற்காக நமக்கு நாமே தேவையில்லாத நம்பிக்கைகளை வைத்துக் கொண்டும், அது மீறும் போது தேவையில்லாத பரிகாரங்களையும் செய்ய வேண்டும்?

3. நீங்கள் ஓடி ஓடி பொருத்தம் பார்த்து சேர்த்து வைத்த அனைவரும் சந்தோஷமாக உள்ளார்களா?

(சீறும்)
4 Responses
  1. Excellent flow Pradeep!
    //பள்ளியில் உறுதிமொழி எடுக்கும் போது "ஆல் இன்டியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் என்பதோடு நிறுத்திக் கொண்டு அடுத்த வரியான "அன்ட் சிஸ்டர்ஸ்" என்ற வாசகத்தை பள்ளியிலேயே சொல்லாதவன் நான்!// I laughed out aloud!


  2. பிரதீப்,

    ஜாதகப் பொருத்தங்களைப் பற்றிய உங்கள் கேள்விகள் நல்ல கேள்விகள். ஜாதகப் பொருத்தத்தை விட மனப்பொருத்தம் தான் மிக முக்கியம். எனக்குத் தெரிந்து பலருக்கும் ஜாதகம் பொருந்தாவிட்டாலும் பெண், பையன், இருவீட்டார் என்று எல்லோருக்கும் பிடித்துவிட்டது என்று திருமணம் நடந்திருக்கிறது. அவர்களும் நன்கு வாழ்ந்து வருகிறார்கள். ஜாதகம் பார்த்து பொருத்தம் சொல்லும் அய்யான் (புரோகிதர்கள்) கூட மனப்பொருத்தம் தான் முக்கியம் என்று இப்போது சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

    கோத்திரம் ஒன்றாக இருந்தாலும் திருமணம் நடக்கிறதா? ஆச்சரியம் தான். ஒரே கோத்திரத்தில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொள்வதற்கும் மாமன்,அத்தை மக்களைத் திருமணம் செய்து கொள்வதற்கும் அதிக வேறுபாடு இல்லை. ஆனால் நடைமுறையில் பங்காளிகள் என்று மற்ற சில சமுகத்தில் சொல்லிக் கொள்வார்களே அவர்களிடையே திருமணம் நடப்பதில்லை. அது போல் தான் ஒரே கோத்திரம் என்பதும். பாட்டி வீட்டிற்குத் தத்து போய் கோத்திரத்தை மாற்றிக் கொண்டு அப்புறம் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் பாராட்ட வேண்டியது தான். எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கண்டுபிடிக்கும் திறமையைத் தான் மெச்சுகிறேன். :-)


  3. Anonymous Says:

    //ஒரே கோத்திரத்தில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொள்வதற்கும் மாமன்,அத்தை மக்களைத் திருமணம் செய்து கொள்வதற்கும் அதிக வேறுபாடு இல்லை// - Theoretically. கோத்திர முறைகள் have outlasted their reasons. மாமன் அத்தை மகள் திருமணத்துக்கு என் எதிர்ப்பு கட்டாயம் உண்டு - மருத்துவ அடிப்படையில். கண்கூடாக இதன் பின்விளைவுகளப் பார்த்திருக்கிறேன், அவர்களின் சந்ததியினரில்.


  4. Anonymous Says:

    //சில சமயங்களில் மிக அற்புதமாக பொருந்தி இருக்கிறது என்று சொல்லி திருமணம் நடந்து மணமகனோ மணமகளோ வாழக் கொடுத்து வைக்காமல் அல்பாய்சில் போய் சேர்ந்து விட்டால், ஏன் இப்படி நடந்தது என்று ஜாதகப் பொருத்தம் பார்த்தவரை உலுக்கினால், அது தான் விதி, தெய்வ சங்கல்பங்கள் அற்ப மனிதனின் கண்ணுக்குத் தென்படாது...சில சமயங்களில் ஜாதகத்தில் அத்தகைய விஷயங்கள் இருந்தாலும் எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்து கொள்ளும் என்கிறார்கள்! அதாவது இதற்கு மேல் நீ கேள்வி கேட்கக்கூடாது என்று அர்த்தம்!//

    நான் ஜோதிடக் கலையை அறிந்த வரையில், அது கணிதத்தை அதிகம் பயன்படுத்துகிறது. மேலும், நல்ல நினைவுத்திறனும் வேண்டும். ஏனென்றால், அது ஒரு multi-dimensional decision-tree மாதிரி போகுது. மேலும் அங்கங்கு exception handling வேறு வைத்திருக்கிறார்கள். இன்று எத்தனை ஜோதிடர்கள் இவ்விரு திறமையும் கொண்டுள்ளார்கள் என்பது கேள்விக்குறி. வாத்தியார் சுப்பையா அவர்களின் வலைப்பதிவுகளைப் பாருங்கள். நான் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரின் பாடத்தைத் கவனித்து புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே, என்னுடைய அனுமானம், முக்கால்வாசி ஜோதிடர்கள் அறைகுறை அறிவோடோ, இல்லை ஒன்றுமே இல்லாமலோ வண்டியோட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    Then why this crazy on astrology and how astrologers thrive?

    1. யாரோ ஒருவருக்கு எப்போதோ சொன்ன ஒன்று பலித்துவிட்டால், அவரைப் பொருத்த வரையில் இவர் சிறந்த ஜோதிடர். பிறகு இந்த ஜோதிடரின் ஆஸ்தான கட்டணமில்லா மார்க்கட்டிங் மேனேஜர் ஆகிவிடுவார். தெரிந்தவர், தெரியாதவர் எல்லோரிடமும் இந்த ஜோதிடரைப் பற்றி புகழுரைக்க ஆரம்பித்துவிடுவார். பிறகென்ன ஜோதிடருக்கு ராஜயோகந்தான்.

    2. முதலில் சொன்ன வாடிக்கையாளாரும் 'ஏன்யா, நீ சொன்னதுல 99 பலன் பலிக்கவில்லையே' என்று ஒரு நாளும் கேட்க மாட்டார், பின் சென்று திருப்தி அளிக்காத வாடிக்கையாளரும், 'ஏதோ சுமாராச் சொல்றார்' என்ற அளவிலே நின்றுவிடுவார்.

    இது போதாதா?

    அம்புட்டுதேன்.