செளராஷ்ட்ரியர் குலத்தில் நடக்கும் திருமணங்களைப் பற்றிய பதிவு இது. எல்லா சாதி, மதங்களில் உள்ள சாஸ்திரிய சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் எங்களிடமும் கொட்டிக் கிடக்கின்றன. பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி என்றே நம்பிக் கொண்டு வந்தவர்கள். பெருமாளா? அவரென்ன சொன்னார்? எப்போ சொன்னார் என்று கேள்வி கேட்காதவர்கள். ஊரைக் கூட்டி அருசுவை விருந்திட்டு தம் புத்திரன்/புத்திரியின் திருமண வைபவத்தை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் சுற்றமும் நட்பும் சூழ பெற்றோர்கள் நடத்துகிறார்கள்! ஆனால் அது இறுதியில் எத்தனை பேருக்கு உண்மையில் சந்தோஷம் அளிக்கிறது என்பது மாபெரும் கேள்வி!

பொதுவாக எங்கள் சமூகத்தில் பையனுக்கு 26, 27லும் பெண்ணுக்கு 21, 22லும் வரன் தேடத் தொடங்குகிறார்கள்! [அதுவரை ஓடிப் போகாமல் இருந்தால் :-) ]சமீப காலமாக பெண்களும் கனினித் துறையில் நுழைந்து கொஞ்சம் அல்ல நிறையவே சம்பாதிக்க தொடங்கிவிட்டதைத் தொடர்ந்து அவர்களின் வரன் தேடும் படலம் 24, 25க்குத் தள்ளப்பட்டிருக்கிறது! வரன் தேடத் தொடங்கியதும் பையனின் ஜாதகத்தை உற்றார் உறவினரிடமும், கல்யாண புரோக்கர்களிடமும் கொடுத்து வைத்து பையனைப் பெற்றோர் தம் தேவைகள் அனைத்தையும் ஒப்பித்து விடுகின்றனர்! அதாவது,

1. பெண் நல்ல குடும்பத்தை சேர்ந்தவளாக இருக்க வேண்டும்.
2. என் மகனுக்கு இணையாக படித்திருக்க வேண்டும். அவளும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது என் மகனின் விருப்பம்.
3. வைரத்தோடு சேர்த்தோ (அல்லது) சேர்க்காமலோ [it depends on the demand]ஒரு நாற்பது பவுன் பெண்ணுக்குப் போட வேண்டும்! அதை தவிர்த்து, மாப்பிள்ளைக்கும் ஐந்தோ பத்தோ போட வேண்டும்! [மற்ற சமூகங்களை ஒப்பிட்டால் இது கால் தூசுக்குச் சமம் என்று நினைக்கிறேன்]

எனக்கு ஒன்று புரியவில்லை! ஒரு அம்மா, அப்பா பாசமோடு ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரே பையன்! அதே போல் ஒரு அம்மா, அப்பா அதை விட பாசத்தோடு ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு பெண்! திருமணம் என்று சொல்லி அவள் கழுத்தில் ஒரு தாலி விழுந்ததும் அவள் அப்பா, அம்மா, உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, நாய்க்குட்டி வரை அனைத்தையும் அம்போவென்று விட்டு விட்டு அவன் நல்லவனா, கெட்டவனா, குடிகாரனா, பெண்லோலனா இப்படி ஒன்றும் தெரியாமல் அவன் பின்னால் செல்ல வேண்டும்! அப்படி முன் பின் தெரியாத ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒருவள் அன்றிலிருந்து அந்தக் குடும்பத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து அந்தக் குடும்பத்தில் சம்பளம் வாங்காத ஒரு வேலைக்காரியாய் வாழ்வதற்கு தன் வீட்டிலிருந்து பணத்தையும், நகையையும் சீர் செனத்தி என்ற பெயரில் அள்ளிக் கொண்டு வர வேண்டும். இது என்ன பழக்கம்? பெரியவர்கள் செய்தால் ஏதாவது நியாயம் இல்லாமல் செய்ய மாட்டார்கள் என்றால் இது என்ன நியாயம்? தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்!

சரி, தன் செல்ல மகளுக்கு பெருமையோடு பல சவுரன்களைப் பூட்டி அந்தப் பெண்ணின் பெற்றோர் அழகு பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள்..அவர்களால் முடிகிறது அவர்கள் செய்கிறார்கள் அதைத் தடுக்க உனக்கு என்ன உரிமை என்று கேட்பீர்கள்! அவர்களால் முடிந்து செய்கிறார்கள் என்றால் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை, ஆனால், எங்கே இதனால் தன் மகளின் திருமணம் தள்ளிப்போய் விடுமோ என்று கேட்டதற்கெல்லாம் தலையாட்டி கடன் பட்டு, மரியாதை செய்து, கடைசியில் அவமானப்பட்டு, வாழும் வழியற்று திக்கற்றுத் திரியும் அந்தப் பெண்ணைப் பெற்ற பெற்றோர்களை என்ன செய்வது?

பாசத்தைக் கொட்டி எங்கள் பிள்ளையை வளர்க்கிறோம், என் மகன் கை நிறைய சம்பாதிக்கிறான் கொடுப்பதிற்கு என்ன கசக்குதா என்று மார் தட்டும் பிள்ளையைப் பெற்ற பெற்றோரை பார்த்து எனக்கு ஆச்சரியம்! பையனைப் பெற்றால் ஒரு மாதிரியும், பெண்ணைப் பெற்றால் ஒரு மாதிரியும் பெற்றோர்களால் எப்படி நடந்து கொள்ள முடிகிறது? அப்படியென்றால் பாசத்தைக் காட்டிலும் பணம் தானே முன்னிற்கிறது? அதே இவர்களும் ஒரு பெண்ணைப் பெற்றிருந்தால் தெரியும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அது தவறு! நாங்கள் எங்கள் பெண்ணுக்கு இத்தனை செய்தோம், எங்களுக்கு வருகிற மருமகள் அதே அளவுக்கு கொண்டு வரத்தானே செய்யனும் என்று பேரம் பேசுவார்கள்! ஏன் இவர்களுக்கு பெண்ணைப் பெற்றவர் படும் அவஸ்தை கண்ணுக்குத் தெரிவதில்லை? அதிலும் பெண்ணைப் பெற்றவர் ஒரு பெண்ணை பெற்றிருந்தால் பரவாயில்லை, அடுத்ததும் பெண்ணாய் இருந்தால் இந்தப் பெண்ணுக்கு என்ன செய்தாரோ அதே மாதிரி தானே அவளுக்கும் செய்ய வேண்டும்? அதை யார் நினைத்துப் பார்க்கிறார்கள்? [சும்மாவா கள்ளிப்பால் உபயோகப்படுத்தப்படுகிறது!]

என்னைப் பொறுத்தவரை பிள்ளையைப் பெற்ற பெற்றோர்களை குறை சொல்லிப் பயனில்லை! அவர்கள் இன்றைய உலகம் அறியாதவர்கள்! இன்னும் பழைய மூட பழக்க வழக்கங்களையும், முகம் தெரியாத அந்த நாலு பேர் என்ன சொல்வார்கள் என்றும் வாழ்ந்து பழகிவிட்டவர்கள்! அவர்கள் ஐந்தில் வளைந்து பழகாதவர்கள்! ஐம்பதில் வளைந்தால் ஒடிந்து விடுவார்கள்! நான் சாடுவது பிள்ளைகளைத் தான்! வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும், தம் பெற்றோர் செய்யும் தவறை ஏன் சுட்டிக் காட்ட மறுக்கிறார்கள்! "என் கல்யாணத்திற்கு நீ பெண் வீட்டில் இத்தனை பவுன் போட்டால் தான் ஆச்சு என்றெல்லாம் கேட்கக்கூடாது, எனக்குப் பெண்ணை பிடிப்பது தான் முக்கியம்! அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடட்டும். என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரியும்" என்று எத்தனை பிள்ளைகள் தன் தாய் தந்தையிடம் சொல்கிறார்கள்? அப்படிச் சொல்லாத பிள்ளைகள் என்ன படித்து என்ன சம்பாதித்து என்ன பயன்?

இந்தக் கேள்விகள் செளராஷ்ட்ரிய மாப்பிள்ளைகளுக்கு மட்டுமல்ல...

(சீறும்)
26 Responses
  1. Divya Says:

    \\என் கல்யாணத்திற்கு நீ பெண் வீட்டில் இத்தனை பவுன் போட்டால் தான் ஆச்சு என்றெல்லாம் கேட்கக்கூடாது, எனக்குப் பெண்ணை பிடிப்பது தான் முக்கியம்! அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடட்டும். என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரியும்" என்று எத்தனை பிள்ளைகள் தன் தாய் தந்தையிடம் சொல்கிறார்கள்? அப்படிச் சொல்லாத பிள்ளைகள் என்ன படித்து என்ன சம்பாதித்து என்ன பயன்?\\

    நச்சுன்னு ஒரு கேள்வி!!

    சிந்திப்பார்களா இக்காலத்து இளைஞர்கள்!!!


  2. Anonymous Says:

    சவுராஸ்டிர ஜாதியில் பிறந்துவிட்டு மாட்டுக்கறி திங்கும் கனடா கால்கரி சிவா அவர்களும் ஆன்மீகத்தோடு அடிவருடும் வேலையும் செய்யும் குமரன் அவர்களும் இதுபற்றி நன்கு விளக்குவார்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எழுதியது எல்லாம் பொய் என்று சொல்லமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.


  3. Bala Says:

    bride price / groom price concept நீங்க் ஒத்துக்கற மாதிரித் தான் இருக்கு ("அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடட்டும்"). இங்க தான் பிரச்சனையோட ஆணி வேறே - சீர் என்ற கான்செப்டே உங்களுக்கு தப்பா படலைன்னா டவுரி எப்படி தப்பாகும் (only difference is demanding it)


  4. //நச்சுன்னு ஒரு கேள்வி!!

    சிந்திப்பார்களா இக்காலத்து இளைஞர்கள்!!!
    //

    இளைஞர்கள் சிந்திக்கறது இருக்கட்டும். திருமணப் பேச்சில் கலந்து கொள்ளும் பையனின் தாயார், தமக்கையார், தங்கயார், சித்தி, மாமி, அத்தை போன்ற பெண்கள் சிந்திக்கலாமில்லையா?

    எனது சொந்த அனுபவம்... பையன் மற்றும் பெண்ணின் விருப்பத்தை விட அவர்களை வைத்து மற்றவர்கள் பண்ணும் அடாவடிதான் அதிகம்.

    பொதுவாக திருமணமான பெண்கள் தங்கள் சொந்தக்கார பையன்கள் திருமணத்தில் ஏகப்பட்ட டிமாண்ட்களை ஏற்றி விடுகிற மாதிரிதான் எனக்கு படுகிறது. :-))))


  5. Anonymous Says:

    //எனது சொந்த அனுபவம்... பையன் மற்றும் பெண்ணின் விருப்பத்தை விட அவர்களை வைத்து மற்றவர்கள் பண்ணும் அடாவடிதான் அதிகம்.

    பொதுவாக திருமணமான பெண்கள் தங்கள் சொந்தக்கார பையன்கள் திருமணத்தில் ஏகப்பட்ட டிமாண்ட்களை ஏற்றி விடுகிற மாதிரிதான் எனக்கு படுகிறது. :-))))
    //

    பொதுவாகவே பெண் வீடு என்பதாலும், பெண் சமாச்சாரம் என்பதாலும் பெண்கள் முன்னிருத்தப்படுகிறார்களே தவிர, டிமாண்ட்களை அவர்கள் வடிவமைப்பதில்லை.

    என் குடும்பத்தில் எக்கச்சக்க திறமையான பெண்கள் உண்டு ஏன் டாக்டிஸ்ஸானவர்களும் கூட, ஆனால் எங்கள் பக்கத்து ஆண்கள் திருமணம் செய்த போது ஒரு ரூபாயும் வாங்கவில்லை, சிலர் அவர்களே கூட திருமணத்தையும் நடத்தினர்,ஏனென்றால் திருமணம் ஆன போது அவர்களுக்கு வீடு, கார் மற்றும் எல்லா வீட்டு உபயோக சாதனங்களும் இருந்தன. அதுமட்டுமல்ல, பெண் வீட்டில் எதையும் கேட்கும் நிலை என்று அவர்களுக்கு வரவில்லை என்று தான் தோன்றுகின்றது.

    அது முற்றிலுமாக திருமணம் செய்யும் ஆணின் தகுதியை மாத்திரமே பொருத்தது என்று தான் கூறுவேன்.


  6. Anonymous Says:

    "என் கல்யாணத்திற்கு நீ பெண் வீட்டில் இத்தனை பவுன் போட்டால் தான் ஆச்சு என்றெல்லாம் கேட்கக்கூடாது, எனக்குப் பெண்ணை பிடிப்பது தான் முக்கியம்! அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடட்டும். என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரியும்"

    nambinaal nambungal en kalyanathirku mel sonna varigalai oru vaarthai kooda maaramal naan solli irunthen... athu mattumalla engal valakkapadi... marriage expense pen veetilirunthuthan seiya vendum, athilum 50%i tharuvathaga oppukonden.(athukkaga kalyanathirku kadaisiyaga ROJA paaku vangiyathu Rs.7. So Rs. 3.50 neengal tharavendum endru solli irunthathu veru visayam...:) hahahahah...

    what abt u? Mr. Pradeep.
    i hope, innum ungalukku marriage aagalainu ninaikiren...
    Madurai thane... kandippa marriagekku vanthu VISARICHURUVOMLA....... :)

    Elango.S


  7. Anonymous Says:

    ///"என் கல்யாணத்திற்கு நீ பெண் வீட்டில் இத்தனை பவுன் போட்டால் தான் ஆச்சு என்றெல்லாம் கேட்கக்கூடாது, எனக்குப் பெண்ணை பிடிப்பது தான் முக்கியம்! அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடட்டும். என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரியும்" ///

    என் கதையே வேற. இதையேதான் நான் எங்க அப்பா, அம்மா கிட்ட சொன்னேன். உனக்கெல்லாம் விவரம் பத்தாதுனு திட்டுறாய்ங்க. எனக்கு பொண்ணு பாத்த இடத்துல, பொண்ணோட அப்பா கிட்டயே இதத்தான் சொன்னேன். எதோ லூசுப் பையன பாக்கற மாதிரி பாத்துட்டு, பொண்ண வேற இடத்துல குடுத்துட்டாய்ங்க. என்ன பண்ண சொல்றீங்க பிரதீப்?


  8. //அப்படிச் சொல்லாத பிள்ளைகள் என்ன படித்து என்ன சம்பாதித்து என்ன பயன்?//

    நன்றாகச் சொன்னீர்கள்..காலங்கள் மாறிக்கொண்டுதான் வருகின்றன..எங்கள் வீட்டுத் திருமணங்களிலும் கடந்த் 15 வருட காலமாக நடந்த் காதல் மற்றும் பெரியோர் முடித்து வைத்த திருமணங்கள் கொடுக்கல் வாங்கல் என்ற பிடுங்கல் இல்லாமல்தான் நடந்தேறியுள்ளன...

    முழுமையாக இந்த நிலை மாறுவது மாப்பிள்ளை மட்டுமல்ல பெண்ணின் மன உறுதியிலும் உள்ளது


  9. Anonymous Says:

    My opinion about dowri. Just inform to the parents of Bride that "We are not interested to talk about Jewells, dowri, etc. You can ask your Daugher and do as per her desire". This word will hot hurt anybody in any situation.


  10. இதில் ஒரு தரப்பாக பேசுவதில் நியாம் இல்லை. பெண்ணை பெற்ற வீட்டில் கஞ்சிக்கெ வழியில்லை என்றாலும் காதல் திருமணத்தை எதிர்க்கிறார்கள். அடுத்து ஒரு பெண் ஒரு ஆணின் உழைப்பையும் அவனுடைய வீட்டையும் நம்பி இருப்பதால்தான். தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் ஆண் வரதட்ச்சினை கேட்கிறான் என்றால் தன்னை விட குறைவாக சம்பாதிக்கும் ஆணை திருமணம் செய்து கொள். ஏன் தன்னைவிட வயது அதிகம் உள்ள ஆணை திருமணம் செய்து கொல்கிறாய் தணகு இணையாக வயது உள்ளவனை திருமணம் செய்து கொள். ஏன் புருஷன்வீட்டுக்கு போகிறாய் புருஷனை உன் வீட்டுக்கு கூட்டிவந்து குடும்பம் நடத்து. தன் வீட்டில் உள்ள சொத்துக்களை தன் சகோதரர்களுக்கு இனையாக நீயும் பங்கெடுத்துக்கொள். இப்படி எல்லாம் செய்தால் எந்த பிரச்சினையும் வராதே. மேலும் குறிப்பாக மாமியார் சண்டை வராதே கேஸ் அடுப்பும் வெடிக்காது.


  11. ஒரு ஆண் வீடுகட்டிவிட்டுதான் திருமணம் செய்யவேண்டும் என்று நினைக்கிறான். எந்த பெண்ணாவது நாம் முதலில் வீடுகட்டிவைத்துக்கொண்டு மாப்பிள்ளை பார்ப்போம் என்று நினைக்கிறார்களா. எல்லாரும் பொதுவா சொல்கிற வழக்கு கட்டின பொண்டாட்டிய வச்சி சோறுபோடமுடியல அப்படினு. யாராவது கட்டின புருஷன வச்சி சோறுபோடமுடியல் நீங்கலாம் ஒரு பொம்பலையானு கேப்பாங்களா.
    சமூகம் சுத்தமாக மாறவேண்டும்


  12. இதுக்காக நான் வரதட்ச்சினை வாங்குகிறவங்க கட்ச்சினு நெனச்சிடாதிங்க. மக்களோட மனனிலை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்துகிட்டு இருக்கேன் அதுதான். ஆண் பென் என்று பேதம் பார்ப்பதில் தான் இந்த பிரச்சினையே. அம்மா, அப்பா, மனைவி என்று எல்லாரும் வேலைக்கு போங்க ஏன் இந்த பிரச்சினை எல்லாம் வரப்போறது எப்போதும் டிவி சீரியல பார்த்து அழவேண்டியது மத்த நேரத்துல மாமியாரும் மருமகளும் சீரியல சண்டபோட்டு டிரையல் பாக்கவேண்டியது


  13. துளசி டீச்சர்!,

    என்ன ஸ்டார் போடாம, + போட்ருக்கீங்க? :)

    திவ்யா,

    அதெல்லாம் கஷ்டம்! இளைஞர்களிடம் நம்பிக்கை இழந்து தான் அப்துல் கலாம் குழந்தைகளையாவது திருத்துவோம் என்று அந்தப் பக்கம் போய் விட்டார் :(

    பாலா,

    அப்படியில்லை, சீரோ, வரதட்சணையோ எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. முடியாதவர்களாய் இருந்தாலும் பெண்ணை பெற்றவர்கள் வளைந்து கொடுக்க வேண்டித் தான் இருக்கிறது!. அது தான் சோகம். அன்பைத் தவிர எதைக் கேட்டாலும் தப்பு தான் :)

    சிரிதர்,

    //இளைஞர்கள் சிந்திக்கறது இருக்கட்டும். திருமணப் பேச்சில் கலந்து கொள்ளும் பையனின் தாயார், தமக்கையார், தங்கயார், சித்தி, மாமி, அத்தை போன்ற பெண்கள் சிந்திக்கலாமில்லையா?//

    சரியாய் சொன்னீர்கள், இந்த விஷயத்தில் பெண்களும் பெண்களுக்கு எதிரியாய் இருக்கிறார்கள்

    //எனது சொந்த அனுபவம்... பையன் மற்றும் பெண்ணின் விருப்பத்தை விட அவர்களை வைத்து மற்றவர்கள் பண்ணும் அடாவடிதான் அதிகம்.//

    100% அக்ரீட்!

    இ.கா.வள்ளி,

    பையன் வீட்டில் எதுவுமே இல்லையென்றாலும், கேட்கக்கூடாது என்பது தான் என் வாதம்.

    இளங்கோ,

    தாரளமா வந்து விசாரிங்க! நல்லவர்களுக்கு உங்களுக்கு நேர்ந்த கதி தான்! தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்!

    அனானி,

    ஆமோதிக்கிறேன்!

    புரட்சித் தமிழரே,

    இன்னும் நான் மெயின் பிக்சருக்கே வரலியே[காதல்!]


  14. என்ன பிரதீப் நடுவுல வெங்காயத்தை மட்டும் கண்டுக்காம விட்டுட்டீங்க? ரொம்ப வருத்தப்படப் போறாருங்க. எம்புட்டு அடைமொழி எல்லாம் போட்டு எழுதியிருக்காரு. கொஞ்சம் கண்டுக்குங்க். :-)


  15. பிரதீப்,

    சௌராஷ்ட்ர திருமணத்தைப் பத்திப் பேசப்போறீங்கன்னவுடனே சௌராஷ்ட்ர திருமண முறைகளில் இருக்கும் தனித்தன்மையைப் பேசப் போறீங்கன்னு நினைச்சேன். ஆனால் மொத்தமா நம்ம இந்திய சமூகத்திலேயே இருக்கும் ஒரு பெரும் குறையைப் பற்றி பேசியிருக்கீங்க. :-)

    //[அதுவரை ஓடிப் போகாமல் இருந்தால் :-) //

    என்னங்க இது? எம்புட்டு பேரு ஓடிப் போயிட்டாங்க? ஒரு 0.5% இருக்குமா? அதுக்கும் குறைச்சல்ன்னு தான் நினைக்கிறேன். ஓடிப் போறது தப்புன்னு சொல்லலை. ஆனா அது எல்லா சமூகத்திலயும் இருக்குற மாதிரி தான் இருக்குன்னு சொல்ல வர்றேன். நீங்க சொன்னதைப் படிச்சுப் போட்டு > 50% ஓடிப் போயிடறாங்கன்னு யாராவது நினைச்சுக்கப் போறாங்க. அப்புறம் மாட்டுக்கறி, அடிவருடின்னு ஓயாம புலம்புற மாதிரி ஓடுகாலின்னு சேத்துக்குவாங்க.

    //ஒரு நாற்பது பவுன் பெண்ணுக்குப் போட வேண்டும்! அதை தவிர்த்து, மாப்பிள்ளைக்கும் ஐந்தோ பத்தோ போட வேண்டும்! //

    ஆகா. இப்படி ஒன்னு இருக்கா? எனக்குத் தெரியாமப் போச்சே. வீட்டுக்குப் போனவுடனே கேக்கணும். அவங்க அம்மா வூட்டுல இருந்து அவங்களுக்கு எம்புட்டு நகை போட்டாங்கன்னு. எனக்கு ஒரு பவுன்ல கூட போடாம விட்டுட்டாங்களே. ஏமாத்திப்புட்டாங்களா? (ச்ச்சும்ம்மா. நானும் தமாசுக்கு...) :-) மத்தபடி நீங்க சொன்ன கண்டிசன் எல்லாம் இருக்கத் தான் செய்யுது. வைரம் முக்கியமான தேவை. ஆனா நீங்களே சொன்ன மாதிரி இது மத்த சமூகங்களைப் பாக்குறப்ப கொஞ்சம் சாதாரணம் தான். கெட்டதுல கொறைஞ்ச கெட்டது செய்யுறோம்ன்னு வேணும்னா சொல்லிக்கலாம். :-)

    //என் கல்யாணத்திற்கு நீ பெண் வீட்டில் இத்தனை பவுன் போட்டால் தான் ஆச்சு என்றெல்லாம் கேட்கக்கூடாது, எனக்குப் பெண்ணை பிடிப்பது தான் முக்கியம்! அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடட்டும். என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரியும்" என்று எத்தனை பிள்ளைகள் தன் தாய் தந்தையிடம் சொல்கிறார்கள்? அப்படிச் சொல்லாத பிள்ளைகள் என்ன படித்து என்ன சம்பாதித்து என்ன பயன்?
    //

    நானெல்லாம் இதை சொல்லலைங்க. அதனால் கல்யாணத்துக்கப்புறம் நெறைய தடவை தங்கமணிக்கிட்ட நீங்க கடைசியில கேட்டீங்களே அதை கேட்டுக்கிட்டு இருக்கேனுங்க. நீங்களாவது கறாரா சொல்லிடுங்க. உங்க நண்பர்கள் கிட்டயும் கஸின்ககிட்டயும் சொல்லி வைங்க. மாறட்டும் எல்லாரும்.

    அடுத்து மெயின் பிக்சருக்கு வர்றீங்களா இல்லை நாளாகுமா? வாரக்கடைசி ஆயிடுச்சே அதான் கேக்குறேன்.


  16. குமரன்

    ஏன் நான் நல்லா இருக்குறது உங்களுக்குப் பிடிக்கலையா? இந்த வம்பு தும்புகெல்லாம் போகாததால் தானே நான் நிம்மதியா இருக்கேன் சாமி. அது உங்களுக்குப் பொறுக்கலையா?

    நீங்கள் சொல்வது உண்மை தான்! நம் சமூக வழக்கங்களின் மூலம் எல்லா சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை தான் சாடுகிறேன்! நீங்கள் சொல்வது போல் ஓடிப் போவது குறைவாகவே இருந்தாலும் அது வேகமாக பெருகி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அது எல்லா சமூகத்தினரும் எதிர்கொள்வது தான். கெட்டது கொஞ்சமா இருந்தாலும் அதையும் ஏன் செய்யனும்னு கேக்குறேன்! நானும் எத்தனையோ பேர் கிட்ட சொல்லிட்டு தான் இருக்கேன்! பாக்கலாம்! இதோ அடுத்து மெயின் பிக்சர் தான்....


  17. நல்ல பதிவு.
    இதே கேள்வி என் மனதில் சிறு வயது முதல் இருந்ததால்.. என் திருமணத்திற்கு முன்பு இதே வரிகளை பெற்றோரிடம் சொல்லி.,., (சிறிதும் மாறாமால்) பெரிய விவாதத்திற்க்கு பிறகு பெற்றோர் சரி சொன்ன பிறகே, கல்யாணத்திற்கு ஓகே சொன்னேன்.


  18. மிக்க நன்றூ! அப்படித் தான் இருக்கனும். அதானே நல்ல பிள்ளைக்கு அழகு :)


  19. வெகு நியாயமான கேள்விகள். ஹாட்ஸ் ஆஃப்


  20. உங்களோட வருத்தம் மிகுந்த பதிவு படித்தேன். உங்கவீட்ல பொண்ணு இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும்!(I think you are 2 bros.)

    நியாயமான கேள்விகளா இருந்தாலும் ஒரு சாரர் சொல்றத வச்சு ஒரு மொத்த சமூகத்த குறைசொல்லக்கூடாதுங்கறது என்னோட கருத்து.

    //அதுவரை ஓடிப் போகாமல் இருந்தால் :-)//

    என்ன அப்படி சொல்லீட்டீங்க. எத்தனை வேற்று ஜாதி பெண்ணுங்கள திருமணம் நடந்து நம்ம குடும்பங்கள்ல "பௌண்டின்களா" (மருமகள்களா) இருக்காங்க! எனக்கு தெரிந்தே 4-5 பெண்கள் உண்டு. இன்னும் எத்தனை எத்தனையோ?

    அப்பறம் அந்த பவுண் சமாசாரம்!

    இது பெரியவங்க சமாசாரம்! இதே காரணத்தால் எத்தனை ஆண்கள் முதிர் இளைஞர்களா இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா அதுவும் நம்ம சமூகத்தில்?

    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்! (அப்படி இல்லையே!)

    ஒருவேளை உங்களுக்கு ஏற்ற ஒரு குணவதி எங்கோ காத்துக்கொண்டிருக்கிறாள்! நீங்களும் சற்று பொருத்துதான் பாருங்களேன்.

    எத்தனையோ பரிகாரங்கள்! தலங்கள் க்ஷேத்திரங்கள் உள்ளன!

    நம்ம மீனாக்ஷீ அம்மன் கோவில்ல இருக்கும் கல்யாண சுந்தரர் சன்னிதியில ஒரு அர்ச்சனை+தரிசனம் பண்ணி பாருங்க எல்லாம் சுபமஸ்த்துவா முடியும்!

    அவனோட திருக்கல்யானத்துக்கு முன்னாடி உங்களோட கல்யாணம் நிச்சயமாகும். இது என்னோட வாக்கு அல்ல அவள் வாக்கு.

    ஆஸ்தான கமண்டர்.


  21. sivamurugan,

    ennai mathiri murpokku ennangal udayavargal kooda thangai irunthaal ippadi bakirangamaaga pes mudiyathu thaan! neenga solvathu unmai thaan.

    aiyyayo, enna siva ennai ellam ithula iluthu vidreenga...kadavul ethanai perai thaan kaapaathuvaar! naan avarai thontharavu seiyya virumbalai...


  22. ஐயா சாமி, கொஞ்சம் பின்னூட்ட மட்டுறுத்தல் பண்ணுங்க. தெரியாத்தனமா மறுமொழி follow - up போட்டுட்டேன்.மண்ணிச்சிருங்க சாமி.


  23. வரதட்சினை என்பது ஒரு பெரிய பொதுப் பிரச்னை. இது காலாகாலமாக இருந்து வரும் பிரசனை. அவ்வளவு எளிதில் தீராது. யார் கேட்கிறார்கள் வரதட்சினை. ஒவ்வொருவரும் அடுத்தவரைக் கை காட்டுகிறார்கள். இளைஞர்கள் என்ன செய்ய முடியும். திருமணம் என்பது அவர்கள் கையில் இல்லைஇ. பெற்றோர்கள் கையில் இருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் இன்றிருக்கும் நடைமுறைப்படி வரதட்சனை கொடுக்கிறார்கள். சமூகத்தில் அந்தஸ்து என்று ஒன்றிருக்கிறது. விட்டுக் கொடுக்க இயலாது. பலப்பல காரணங்கள். எல்லொருமே புரட்சி செய்ய முடியாது. காலம் தான் தீர்த்து வைக்க வேண்டும் இப்பிரச்னையை


  24. சீனா,

    //இளைஞர்கள் என்ன செய்ய முடியும். திருமணம் என்பது அவர்கள் கையில் இல்லைஇ. பெற்றோர்கள் கையில் இருக்கிறது.//

    சும்மா விடாதீங்க சார்! அப்படியே அம்மா அப்பா பேச்சை தட்றதே இல்ல மாதிரி தான்...

    என்ன சார் இப்படி பொறுப்பே இல்லாம பேசுறீங்க? புரட்சிங்கிறது எங்கேயோ வெளியே இல்லை சார், நம்மகிட்ட தான் இருக்கு! எல்லாரும் உண்மையா நடந்துகிட்டா எல்லாம் சரியா நடக்கப் போகுது! ஏன் தப்பு பண்ணனும்? அப்புறம் ஏன் அடுத்தவங்களைக் கை காட்டனும்?


  25. சரவண குமார் Says:

    வரதட்சணையில் இரு பக்கமும் தவறு உண்டு.. ஆனாலும் எல்லோரும் ஆணை மற்றும் திட்டுகிறார்கள். ஏன், அத்தனை பெண்களும் இனிமேல் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று முடிவெடுத்து அவ்வாறு கேட்கும் ஆண்களை ஒதுக்கி விட்டால்? பெண்களுக்கு தங்கள் பெற்றோரை எதிர்த்து அவ்வாறு சொல்ல முடியாது. அதே போல்தான் ஆண்களுக்கும்..


  26. Saravana,

    Thanks for ur comments. i can't agree with ur point. Pasanga thaan amma appakitta pesanum!