நான் வலையுலகில் என் வலது கையை எடுத்து எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் அகி விட்டன! எதுவுமே வெகு சீக்கிரத்தில் சலித்து விடும் எனக்கு இது ஒரு ஆனந்தம் கலந்த ஆச்சர்யத்தை தருகிறது! ஏனென்றால் எத்தனையோ உருப்படியான காரியங்களை [அவரவர் மனதிற்கு எது சந்தோஷத்தையும் ஆத்ம திருப்தியையும் அளிக்கிறதோ!] எனக்குள் நானே சலித்துக் கொண்டு பல முறை கை விட்டிருக்கிறேன்! அத்தகைய ஒரு உருப்படியான காரியத்தை இவ்வளவு நாட்கள் என்னால் தொடர்ந்து செய்ய முடிந்ததை நினைத்து மிக்க மகிழ்ச்சி!

வலையுலகிற்கும் எனக்குமான உறவு ஒரு தாமரை இலை நீர் போல் ஆரம்பத்திலிருந்தே ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது! நான் வலையுலகில் இருக்கிறேனே தவிர இங்கு நடக்கும் எந்த விதமான விவாதங்களிலும், சம்பவங்களிலும், சம்பிரதாய பேச்சுக்களிலும், ஏச்சுக்களிலும் கலந்து கொள்வதில்லை! என் மனதை மிகவும் பாதித்தாலன்றி எந்த வலைப்பதிவுக்கும் சென்று பின்னூட்ட முதலீடு இடுவதில்லை! [முதல் போட்டால் தானே லாபம் கிடைக்கும்!] அதனால் தான் "இன்று நான் பல் விளக்கவில்லை" என்பது மாதிரியான பதிவிற்கு 105 பின்னூட்டங்கள் வருவதைப் போல் என் பதிவுகளுக்கு அத்தனை பின்னூட்டங்கள் வருவதில்லை! அதைப் பற்றி நான் கவலைப்படுவதுமில்லை! [டோனைப் பார்த்தா கவலைப்படாத மாதிரி தெரியலையே!]

நிறைய வலைபதிவுகளில் பார்த்திருக்கிறேன்! முதல் பின்னூட்டம் "இன்று நான் தான் ஃபஸ்ட்", "நான் வந்துட்டேன்", "அப்பாடா மொதோ கமெண்ட் போட்டாச்சு" என்று நிறைய பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன். அது என்ன விளையாட்டு என்று எனக்கு இன்றும் விளங்கவில்லை! அப்படி என்ன சொல்லி வைத்துக் கொண்டு பின்னூட்டமிடுவது என்று எனக்கு புரியவில்லை! அதே போல் போலி டோண்டு யாரை திட்டினார், அனானி கமெண்ட் போடுவது யார்? இட்லி வடை ஆணா பெண்ணா என்பது போன்ற வலையுலக சரித்திர நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டதே இல்லை! யார் வம்பு தும்புக்கும் போகாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் ரொம்பவே சமத்து பையனாக நானுன்டு என் வலைப்பூ உண்டு என்று இருந்திருக்கிறேன்! ஒருவேளை அதனால் தான் என்னால் இவ்வளவு நாட்கள் இங்கு தாக்கு பிடிக்க முடிந்ததோ என்னவோ என்றும் தோன்றுகிறது!

இந்த மூன்றரை வருடங்களில் நான் பதித்த வலைகளின் எண்ணிக்கை வெறும் 132 மட்டுமே! இதில் பாதியாவது தேர்ந்த பதிவாய் இருந்தால் சந்தோஷம். சில வலையுலக நண்பர்கள் என் பதிவுகள் படித்து ரசித்து பல சங்கிலிப் பதிவிற்கு என்னை கோர்த்து விட்டிருக்கிறார்கள்! அது பெரும்பாலும் சுயத்தைப் பற்றிய பதிவாகவே இருக்கும். அது எழுத அமரும் போதெல்லாம் மனதுக்குள் கவுண்டமணியின் குரல் "நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவைதானா" என்று ஒலிக்கும். என் வலைப்பதிவு என்பதால் எனக்கு இது பிடிக்கும், அது பிடிக்காது என்று எழுதுவதால் யாருக்கு என்ன லாபம் என்று ஒரு கேள்வி மனதுக்குள் எழும். அத்தோடு அந்தப் பதிவின் கதை முடிந்து போகும். என்னைப் பொறுத்த வரை ஊர் உலகத்திலுள்ள எதைப் பற்றி வேண்டுமென்றாலும் வெகு சுலபமாய் ஒரு மொக்கை பதிவை எழுதிவிடலாம். ஆனால் உன்னை பற்றி நான்கு வரி சொல் என்றால் போதும்....ஐய்யோ சாமி, மண்டை காய்ந்து விடுகிறது....அதனால் தான் கூடியமட்டும் என் சுய புராணங்களை விட்டு என் மனதை பாதித்த விஷயங்களில் என் பார்வையை செலுத்தி ஒரு நல்ல வலைபதிவராய் என்னை முன்னிருத்த ஆசைப்படுகிறேன்! [என்ன மெசேஜா?]

யாழ்.நெட் காலத்திலிருந்து நட்சத்திர வாரத்தை அறிந்திருந்தாலும், இப்பொது தான் எனக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலஹாசன், "என்னை எல்லோரும் சகலகலா வல்லவனாக சொல்கிறார்கள், பரவாயில்லை சொல்லிவிட்டு போகட்டும், மார்க்கெட்டுக்கு உதவும்...நான் சகலகலா மாணவன் என்பது தான் உண்மை!" என்று சொன்னதைப் போல் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த அந்தஸ்து கிடைத்தாலும் சரி இப்போதாவது கிடைத்ததே, மார்க்கெட்டுக்கு உதவும் என்று நினைத்து, சகலகலா மாணவனாக முன்னேறுகிறேன்....வழக்கம்போல் உங்களின் ஆசிர்வாதங்களுடன்!
12 Responses
  1. வாழ்த்துக்கள் பிரதீப்.. ( இது முதலீடு அல்ல அவ்வப்போது உங்கள் பதிவுகளைப்படிப்பதும் பின்னூட்டமிடுவதும் வழக்க்ம்தான்) :))


  2. நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துகள்..


  3. அப்பாடா. கொஞ்சம் நேரம் தாழ்த்தியாவது விண்மீன் வார முதல் இடுகையைப் போட்டீர்களே?! காலையில நட்சத்திரம்ன்னு காட்டுற இடம் காலியாயிருக்கேன்னு வந்து பாத்து அட நம்ம ப்ரதீப் தான் நட்சத்திரமான்னு உள்ளே வந்து பாத்தா இன்னும் இந்த வார இடுகையைப் போடலை. :-)

    நீங்க பின்னூட்ட முதலீடு பண்ணாமலேயே உங்க பதிவை என் கூகுள் ரீடர்ல வச்சிருக்கேனே. எப்பவாவது வந்து பின்னூட்டமும் போட்டிருக்கேன். நினைவிருக்கா? :-)

    உங்க 'நான் தமிழன் இல்லை' இடுகை தான் நான் முதன்முதலில் படித்தது.


  4. நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.

    வெர்டு வெரிஃபிகேஷனைத் தூக்குனா நல்லது.

    குறைஞ்சபட்சம் இந்த வாரத்துக்குமட்டுமாவது.

    சொல்றதைச் சொல்லிட்டேன்:-))))


  5. நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள், பிரதீப்!

    //யார் வம்பு தும்புக்கும் போகாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் ரொம்பவே சமத்து பையனாக நானுன்டு என் வலைப்பூ உண்டு என்று இருந்திருக்கிறேன்! ஒருவேளை அதனால் தான் என்னால் இவ்வளவு நாட்கள் இங்கு தாக்கு பிடிக்க முடிந்ததோ என்னவோ என்றும் தோன்றுகிறது!
    //

    :)


  6. நட்சத்திர வாழ்த்துக்கள் ப்ரதீப்!

    //வெர்டு வெரிஃபிகேஷனைத் தூக்குனா நல்லது.
    //

    டீச்சரே சொல்லிப்பிட்டாங்க! தூக்கிடுங்க தல! :-)


  7. ஆஹா,

    ஒன்னு கூடிட்டாய்ங்கய்யா ஒன்னு கூடிட்டாய்ங்கய்யா...

    குமரன்,

    சரியான நேரத்துக்குத் தான் பதிவை போட்டேன்! ஆனால் அதை தமிழ்மணத்தில் கொடுக்க மறந்து விட்டேன். எனக்கு எதாவது குளறுபடி நடந்தாதானே சரியா நடக்குதுன்னு அர்த்தம் :)

    டீச்சர் சொல்லி கேக்காம இருக்க முடியுங்களா? தூக்கியாச்சு! தூக்கியாச்சு!!

    அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி!


  8. வாழ்த்துக்கள்.


  9. நட்சத்திர வாழ்த்துக்கள். பருத்தி வீரன் விமர்சனத்தில் அசல் மதுரைக்காரனைப் பார்த்தேன். பட்டாசு கிளப்ப வாழ்த்துக்கள்


  10. உன்னுடைய இந்த பதிவில் மிகுந்த தேர்ச்சி தெரிகிறது. வாழ்த்துக்கள்.


  11. தருமி,

    வாழ்த்துக்கு நன்றி!

    முத்துக்குமரன்,

    வாழ்த்துக்கு நன்றி! ஏதோ உங்க ஆசிர்வாதம்!

    வெங்கடேஷ்,

    அப்படியா சொல்ற? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! [ம்ம்ம்...விஜயகாந்த் மாதிரி படிக்கவும்!]


  12. கிரி Says:

    //நான் வலையுலகில் இருக்கிறேனே தவிர இங்கு நடக்கும் எந்த விதமான விவாதங்களிலும், சம்பவங்களிலும், சம்பிரதாய பேச்சுக்களிலும், ஏச்சுக்களிலும் கலந்து கொள்வதில்லை//

    ஆமாம் ..நான் உங்க பதிவுகளை படிக்கும் போதே தெரிந்து கொண்டேன் :-)

    //அதனால் தான் "இன்று நான் பல் விளக்கவில்லை" என்பது மாதிரியான பதிவிற்கு 105 பின்னூட்டங்கள் வருவதைப் போல் என் பதிவுகளுக்கு அத்தனை பின்னூட்டங்கள் வருவதில்லை!//

    அசத்திட்டீங்க.. :-))))

    பாருங்க நீங்க எனக்கு பின்னூட்டம் எதுவும் இடாமையே எத்தனை பின்னூட்டம் இட்டு இருக்கிறேன் ;-) (இது முதலீடு அல்ல)

    //டோனைப் பார்த்தா கவலைப்படாத மாதிரி தெரியலையே//

    ஹா ஹா ஹா

    ஆனா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப தாமதமான பின்னூட்டம் ..என்ன பண்ணுறது இப்ப தான் பார்த்தேன் :-)))