நடப்பவை எல்லாம் நல்லவைக்கே என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. ஒரு பதிவைப் போட்டதும் அதை தமிழ்மணத்திற்கு அளித்தால் தான் நட்சத்திரப் பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பதிவு வரும் என்பதை மறந்து விட்டேன். இரண்டு பதிவை போட்டும், ஒன்றுமே இல்லாமல் நட்சத்திரமே வெறிச்சோடி இருந்தது. அதற்குள் இருவர் எங்கேப்பா இந்த வார நட்சத்திரத்தை காணோம் என்று குழம்பி அதையே ஒரு பதிவாய் போட்டு விட்டனர்! ஒரு வழியாய் தமிழ்மணத்திலிருந்து எனக்கு மடல் வந்த பிறகு தான் நாக்கை கடித்துக் கொண்டு, விஷயத்தை உணர்ந்து பதிவுகளின் இணைப்பை தமிழ்மணத்திற்கு அளித்தேன்! அதற்குள் நான் நட்சத்திரத்திற்கு முன் எழுதிய சில பல பதிவுகள் நட்சத்திரப் பக்கத்தில் தெரிந்தது! அடேடே..என்னது நம்ம இப்போ எழுதின பதிவெல்லாம் கடைசியா போய், முன்னே எழுதின பதிவெல்லாம் முன்னாடி வந்துருச்சே என்று ஒன்றும் புரியாமல் குழம்பி, ஏதோ என் எல்லா பதிவுகளை படித்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன்!
தமிழ்மணத்திற்கு ஒரு சின்ன வேண்டுகோள்! ஒரு பதிவரை நட்சத்திர வாரத்திற்கு அழைப்பு விடும் போது அவர் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை இன்னும் சற்று விளக்கமாக சொன்னால் இன்னும் செளகரியமாய் இருக்கும்! என்னை மாதிரி மறதிக்காரர்களுக்கும் அது உதவியாய் இருக்கும்.
யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று வெகு சுலபமாய் சவால் விடலாம்! அவர்களிடம் சரி எப்போது செய்வாய்? தேதியும், நேரத்தையும் சொல்லு என்று சொல்லிப் பாருங்கள்! அடுத்த நிமிடம் அவன் அந்த இடத்திலிருந்து அப்பீட் ஆயிருப்பான்! அது தான் டெட்லைன் என்பது! இப்போது தான் அதன் மகத்துவம் புரிகிறது! இந்த மாதிரி எந்த கூட்டுக்குள் அடைபடாமல் தான் நானும் இருந்தேன்! எழுதியே ஆகனும் என்று ஒரு கட்டாயம் இருந்தால் அது என்னவோ புரியல, என்ன மாயமோ தெரியல ஒரு மண்ணும் வராது! இதனால் தான் வலையுலக நண்பர்கள் அழைக்கும் சன்கிலிப் பதிவிலும் நான் கலந்து கொள்வதில்லை! :)சென்னையில் தேசிகன் தயவில் எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்த போது "டெட்லைன் இல்லையென்றால் எழுத முடியாது!" என்று அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று எனக்கு இன்று புரிகிறது. நான் மட்டும் இந்த வாரத்தின் நட்சத்திரமாக இல்லையென்றால் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பதிவை போட்டிருந்தால் அதிகம்! கிட்டத்தட்ட ஒரு பத்து பதிவுகளை போட்டது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது! டெட்லைன் வேலை செய்யத் தான் செய்கிறது!
நான் இந்த வார நட்சத்திரத்தில் போட்ட அத்தனைப் பதிவுகளும் மிக நல்ல தேர்ந்த பதிவுகள் என்று சொல்ல முடியாது! டெட்லைன் இல்லையென்றால் இன்னும் சிறப்பாய் எழுதியிருப்பேனோ என்று தோன்றினாலும் அதே சமயம், டெட்லைன் இல்லையென்றால் எழுதியிருப்பேனா என்ற சந்தேகம் தான் அதிகம் உள்ளது! ஆனால் வெகு நாட்களாய் சமுதாயத்தில் திருமணத்தையும் அதில் சூழ்ந்துள்ள குழப்பங்களையும் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! நட்சத்திர வாரத்தின் மூலம் அது வெகு ஆர்ப்பாட்டமாய் நிறைவேறியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
இந்த நட்சத்திர வாரத்தில் நான் பங்கெடுத்துக் கொண்டதே ஒரு அற்புதமான அனுபவம்! ஒரு சிறுவனை மேடையில் ஏற்றி விட்டு அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்களே என்று பயந்தாலும், ராஜாதி ராஜன் வந்தேனே என்ற பதிவின் மூலம் ஒரு சிருங்கார அறிமுகம் செய்து கொண்டு குறையொன்றுமில்லை என்ற பதிவின் மூலம் வலையுலகில் நான் இருந்து வரும் நிலையை விளக்கி என்னுடைய சாந்தத்தை பதிவு செய்தேன்! சமுதாயத்தில் நடக்கும் சிறுமைகளைக் கண்டு இப்படியும் மனிதர்களா என்ற என் அருவருப்பை திருமணமாம் திருமணமாம் பதிவில் ஆரம்பித்து மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்ற பதிவு வரை சிறுமை கண்டு பொங்கும் என் ரெளத்திரத்தை பதிவு செய்தேன்! என்னுடைய இத்தகைய வீரத்தை பாராட்டி நீங்கள் அளித்த பின்னூட்டத்தில் என் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. கடைசியாக, என்னையும் ஒரு நல்ல எழுத்தாளன் [அப்படி தானே நினச்சுருக்கீங்க?] என்று நம்பிய உங்கள் அன்புக்கும்/கருணைக்கு என் நன்றிகள் பல உரித்தாகுக!! [நவராத்திரி திரைப்படத்திற்கு நன்றி]
என்ன ஒரு மண்ணும் புரியலையா? அதாவது, அற்புதம், சிருங்காரம், சாந்தம், பயம், கருணை, அருவருப்பு, கோபம், வீரம் மற்றும் ஆனந்தம் என்ற நவரசங்களையும் அப்படியே கரைச்சி இந்த நட்சத்திர வாரத்தில கலங்கடிச்சுருக்காராமா...நவராத்திரி படத்திலே ஆரம்பிச்சி நவராத்திரி படத்துலையே முடிச்சி வாழ்க்க ஒரு வட்டம்டான்னு புரிய வைக்கிறாராமா.. இந்தப் பக்கியயெல்லாம் ஏத்தி விடாதீங்கன்னா கேக்குறாய்ங்களா? அந்த ஏ.பி. நாகராசனை சொல்லனும்!
மங்களம் சுப மங்களம்!!