எனக்கு 58 வயது ஆகிறது. நான் என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம், என் பால்யத்தில் இதே வயதில் இருந்த என் அப்பாவை பார்த்த நினைவு வருகிறது. என் அப்பாவின் வயதை ஒத்த நண்பர்கள், அண்டை வீட்டார்கள், "அப்படியே, உன் அப்பனை உரிச்சி வச்சுருக்கே!" என்று சொல்லாத நாளில்லை.  அது பெரிய பெருமை இல்லை தான். கரிய நிறம், குழி விழுந்த கண்கள், ஒடுங்கிப் போன கன்னமுமாய்த் தான் என் அப்பா இருந்தார். இப்போது நான் இருக்கிறேன்.

என்னோடு சேர்த்து அவரின் ஐந்து வாரிசுகளை பார்த்தால், அவரின் ஆண்மையை நினைத்து அவர் பூரிப்பு கொண்டிருக்க முடியுமே தவிற, வேறு ஒன்றும் பெரிதாய் அவரால் செய்ய முடியவில்லை. அவரும் என்ன செய்வார்? படிப்பு வாசனை கிடையாது. ஒரு பொரிகடலை கடையில் தான் வேலை பார்த்தார். அம்மா, வீட்டு வேலைக்குப் போவாள். அவர்களின் வருமானத்தில் ஏழு பேர் வாழ்வதே கஷ்டம். எங்கிருந்து படிப்பது. அவரால் படிக்க வைக்க முடியவில்லை என்றோ, எனக்கு படிப்பு வரவில்லை என்றோ ஏதோ ஒரு காரணத்துக்காக நானும் அதிகம் படிக்கவில்லை. பள்ளி என்றாலே பனிமூட்டமாய் தூரத்தில் ஒரு கனவு மாதிரி ஒரு நினைவு வருகிறது. எது வரை படித்தேன் என்று கூட நினைவில்லை.

படித்தவனுக்கு சில வேலை, படிக்காதவனுக்கு பல வேலை என்று சொல்வது போல், இங்கு தொட்டு, அங்கு தொட்டு, இதைச் செய்து, அதைச் செய்து, இதோ வாழ்க்கை, அதோ சந்தோஷம் என்று இல்லாத ஒன்றை தேடி எட்டி எட்டி ஓடி இன்று இந்த யுனிஃவார்ம் சட்டைக்குள் என் உடல் தேடும்படியான தோற்றத்துடன் ஒரு செக்யுரிட்டியாய் ஒரு அபார்ட்மென்ட்டில் உட்கார்ந்திருக்கிறேன்.

நான் அந்த அபார்ட்மென்டில் செக்யுரிட்டியாக வேலைக்குச் சேர்ந்து இன்றோடு ஆறு மாதமாகிறது. வேலை ஒன்றும் பெரிதாய் இல்லை. அபார்ட்மென்டின் இறுதியில் திருப்பத்தில் ஒரு ஸ்டூலைப் போட்டுக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வண்டிகளை எதிர்நோக்கி உட்கார்ந்திருக்க வேண்டியது. டெலிவரி செய்ய வரும் பசங்களிடம் எந்த ப்ளாக் எங்கே இருக்கிறது என்று சொல்ல வேண்டியது. மெயின் செக்யுரிட்டியில் இருந்து மோட்டார் போடச் சொன்னால் போட வேண்டியது. குழந்தைகள் தாறுமாறாய் ஓடும் போது பணிவாய் "வண்டி வரும், வீட்டுக்கு ஒடுங்க" என்று விரட்ட வேண்டியது. வாரத்துக்கு ஏழு நாள் தான் வேலை. சம்பளம் பிடித்தம் போக ஏழாயிரத்து அறுநூறு. எங்களை பாதுகாப்பதாகச் சொல்லி, நீ உன்னை பாதுகாத்துக்கொள் என்று ஒரு வேலை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

வேலைக்குச் சேரும்போது மெயின் எண்ட்ரன்ஸில் தான் போடுவார்கள் என்று நினைத்தேன். அங்கு இருந்தால் வருவோர் போவோரிடம் விசாரிப்பது, கூட இருக்கும் செக்யூரிட்டியிடம் பேசுவது என்று நேரம் போவது தெரியாமல் இருந்திருக்கும். இப்படி அபார்ட்மென்டின் ஒரு ஓரத்தில் ஒரு திருப்பத்தில் உட்கார வைத்து விடுவார்கள் என்று நினைக்கவில்லை. எப்போதோ வரப் போகும் வண்டிகளுக்காக, பெரிதும் விபத்து என்று ஒன்று நேர்ந்திட சாத்தியமில்லாத ஒரு இடத்தில், ஒரு மனிதனை நாள் முச்சூடும் ஒரே இடத்தில் சும்மாவே உட்கார வைக்க இந்த மனிதர்களை எது தூண்டுகிறது? பணமா? பதவியா? அதிகாரமா? புரியவில்லை. நான் இப்படி யோசிப்பது பாவம் தான், இவர்கள் இப்படி செய்தால் தான் என்னைப் போல ஒரு மனிதனுக்கு கால் வயிறு கஞ்சியாவது கிடைக்கிறது. இருந்தாலும், சும்மாவே எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்திருப்பது. அதுவும் அந்த மொட்டை வெயிலில். உச்சி பொழுதுக்கு கார் பார்க்கிங்கில் ஸ்டூலைப் போட்டுக் கொள்வேன். ஒருமுறை, அப்படி தள்ளி உட்கார்ந்து இருந்ததால், நான் ட்யுட்டியில் இல்லை என்று அந்த ப்ளாக்கை சேர்ந்த யாரோ கம்ப்ளைன்ட் செய்து விட்டார்கள். ஃபோனில் மெதுவாய் பாட்டு கேட்டேன், அதற்கும் கம்ப்ளைன்ட். எதற்கு வம்பு என்று அவர்கள் சொன்ன இடத்தில் பேசாமல், அமைதியாய் உட்கார்ந்து கொள்வேன்.

காலை, மாலை அந்த அபார்ட்மென்டை சுற்றி பலர் வாக்கிங், ஜாகிங் போவதுண்டு. அப்போது தான் எனக்கு கொஞ்சம் நிம்மதி. சில முகங்களைப் பார்க்கலாம், சில பேச்சுக்களைக் கேட்கலாம். சில பேரை பார்த்து புன்னகைக்கலாம். வாக்கிங் வரும் பெரிய மனிதர்களை பார்த்து நான் சல்யுட் வைக்க மறப்பதில்லை. யார் பெரிய மனிதர்கள் என்று கேட்டால், என்னைப் பொறுத்தவரை, அங்கு இருக்கும் எல்லோருமே பெரிய மனிதர்கள் தான். அப்படி நான் சல்யுட் செய்யும் போது, பெரும்பாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. வெகு சிலர் மட்டும் மெலிதாய் ஒரு புன்முருவல் பூப்பார்கள். சிலர் கொஞ்சமாய் தலையை ஆட்டி ஆமோதிப்பார்கள், சிலர் என் பார்வையில் படாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.

யாரும் இல்லாத பகல் பொழுதுகளில் அவர்களைப் பற்றி நான் அசைபோட்டபடி யோசித்துக் கொண்டிருப்பேன். வேடிக்கையாக இருக்கும், இந்தக் கடவுள், ஒருவனை நல்ல குடும்பத்தில் பிறக்கச் செய்து, நல்ல படிப்பு கிடைக்க வழி செய்து, நன்றாகச் சம்பாதிக்க அருள் தந்து, இப்படி ஒரு அபார்ட்மென்டில் ஒரு வீட்டை வாங்கச் செய்கிறார். அதே கடவுள், என்னைப் போன்றவனையும் படைத்து, பணமில்லாமல், படிப்பில்லாமல், அறிவில்லாமல், கிடைத்த வேலைகளை செய்து, கை பிடித்து, கால் பிடித்து, தலையைச் சொறிந்து, அதே அபார்ட்மென்டில் ஒரு செக்யுரிட்டி ஆக்கி அவர்களுக்கு சல்யுட் அடிக்கச் செய்கிறார். ஒரே இனத்தைச் சேர்ந்த இருவர், ஒருவன் கும்பிடும் இடத்தில் இருக்கிறான், இன்னொருவன் அதை உதறித் தள்ளும் இடத்தில் இருக்கிறான். மேலும் மேலும் இதைப் பற்றி யோசிக்க யோசிக்க எனக்கு சிரிப்பு தான் வரும். இப்படியாக யாருமற்ற என் பகல் பொழுதுகளில் அந்த அபார்ட்மென்டின் அத்தனை மனிதர்களும் இருந்தார்கள்.

இத்தனை வகையான மனிதர்களில், ஒருவர், நான் அடிக்கும் சல்யுட்டுக்கு என்னையும் மதித்து, ஒரு புன்னகை புரிந்து பதில் சல்யுட் அடிப்பார். அவர் பெயர் தெரியாது. அவர் ஐந்தாவது ப்ளாக்கில் வசிக்கிறார். நரைத்த வழுக்கைத் தலை, நல்ல நிறம், நல்ல உயரம், எப்போதும் ஒரு டீஷர்ட், ஒரு வேஷ்டி. தினமும் மாலை வாக்கிங் வருவார். ஆழ்ந்த யோசனையுடன் நிதானமாய் நடப்பார். அவ்வப்போது என்னிடம் நின்று பொதுவாய் பேசிப் போவதும் உண்டு. என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி, என் வேலையைப் பற்றி எல்லாவற்றையும் கேட்டறிவார். பேரனுக்கு கை வைத்தியம் செய்ய வேப்பங்கொழுந்து வேண்டும் என என்னை விட்டு பறிக்கச் சொல்வார். சில சமயங்களில் சாவியை மறந்து வந்து விட்டதாகவும், மூட்டு வலி இருப்பதால் திரும்பிச் செல்ல முடியாது என்றும் என்னை போய் சாவி எடுத்து வரச் சொல்வார். அவரைப் பற்றி எதுவும் அவர் என்னிடம் சொன்னதில்லை. நானாகக் கேட்டால் தப்பாக எண்ணி விடுவாரோ என்று நானும் கேட்டதில்லை.

அன்று வழக்கம் போல் மாலை வாக்கிங் வந்தவரை நான் பார்க்கவில்லை. வேறு ஏதோ சிந்தனையில் இருந்தேனா தெரியவில்லை. நான் தலையை நிமிர்த்தி பார்க்கும்போது அவர் என்னைத் தாண்டி சென்று கொண்டிருந்தார். "என்ன நினைத்துக் கொண்டாரோ, தெரியவில்லையே! என்னிடம் பேசுபவர் தானே, நான் பார்க்கவில்லை என்றால் என்ன, என்னை அழைத்திருக்கலாமே?" என்று எண்ணினேன். எப்போதையும் விட, வெகு நிதானமாய், கிட்டத்தட்ட நின்று நின்று நடந்து கொண்டிருந்தார். ஏதோ நினைத்தவர் போல் திரும்பி, என்னைப் பார்த்தார். நான் சல்யூட் வைப்பதற்கு முன் அவரே சல்யுட் வைத்தார். நான் பதறிப் போய் எழுந்து சல்யுட் வைத்தேன். திரும்பி என் அருகே வந்தவர், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "கந்தசாமி, உங்கிட்ட ஒரு அம்பது ரூபா இருக்குமா? பசிக்குது" என்றார்.

இன்று மாலை நடைபயிற்சியின் போது தான் அவளைப் பார்த்தேன். இதுவரை அவளை அங்கே பார்த்ததில்லை. எங்கள் அப்பார்ட்மென்டின் வெளியே உள்ள 30 அடி சாலைக்கு அந்தப் பக்கம் நின்றிருந்தாள். அந்த சாலை முட்டுச் சாலை என்பதால் அதிக வாகனங்கள் வருவதில்லை. அவ்வப்போது அருகில் இருக்கும் சந்திலிருந்து பைக்குகள் போகும் வரும். நான் அவளை எங்கள் அப்பார்ட்மென்ட் க்ரில் காம்பவுண்ட் வழியாய் பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் நான் கவனிக்காமல் நடந்து கொண்டு தான் இருந்தேன். திடீரென்று "போதை ஏறிப் போச்சு, புத்தி மாறிப் போச்சு" என்று யாரோ பெண் பாட்டுப் பாடும் சத்தம் கேட்டது. ரோட்டில் நின்று கொண்டு எந்தப் பெண் இந்தப் பாடலைப் பாடுகிறாள் என்று தான் பார்த்தேன்.

அவள் கத்தரிப்புக் கலரில் நேர்த்தியாய் புடவை கட்டி இருந்தாள். கருப்பான, ஒல்லியான உருவம். முன் தலையில் நரையின் ஆரம்பம். ஒரு நாற்பது வயது இருக்கலாம். தலையில் கொஞ்சம் பூவை பிய்த்து வைத்திருந்தாள். இடது கையில் சமீபத்தில் வளைகாப்பு முடிந்ததைப் போல் நிறைய வளையல்கள். அது மட்டும் கொஞ்சம் உறுத்தலாய் இருந்தது. "இவளா அந்தப் பாட்டைப் பாடினாள்!?" என்று பார்த்துக் கொண்டிருந்தேன். "சே, சே, இருக்காது!" கார்ப்பரேஷனில் இருந்து கணக்கெடுக்க வரும் பெண்களைப் போல் டீசன்டாக இருந்தாள். ரோட்டில் நின்று கொண்டு அப்படி ஒரு பாட்டு ஏன் பாட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவள் லேசாய் சிரித்து, ஒரு நிலையில்லா பார்வையுடன், "நான் ஒரு மானங்கெட்டவ!" என்றாள். இவள் தான் பாடி இருக்கிறாள்.

நான் நடையை விட்டுவிட்டு சுவரோரமாய் நின்று அவளை கவனிக்க ஆரம்பித்தேன். மனநிலை பிறழ்ந்தவர்களை கவனிப்பது யாரையும் கண்டுகொள்ளாமல் விளையாடும் குழந்தை ஒன்றை கவனிப்பதைப் போல. ஒரே வித்தியாசம், குழந்தையின் செய்கைகள் ஆனந்தத்தைத் தரும். இவர்களின் செய்கைகள் வருத்தத்தைத் தரும். அப்படி மேலோட்டமாய், அழகாய் சொன்னாலும், மனதின் ஆழத்தில் அது ஒரு வகை குரூரம் தான். அப்படி ஒரு மனிதனைப் பார்க்கும்போது, அவன் என்ன செய்வான், எப்படிச் சிரிப்பான், என்ன பேசுவான், யார் மீது மண்ணைத் தூற்றுவான், யார் மீது கல்லெறிவான் என்று காண மனம் ஆசைப்படுகிறது. பெண் என்றால் இன்னும் அசிங்கமாய்.

"ஹே செக்குரிட்டி, செக்குரிட்டி" என்று எங்கோ பார்த்துக் கொண்டு சில முறை சொன்னாள். அவள் எங்கள் அப்பார்ட்மென்ட் செக்யுரிட்டியைப் பார்த்து பேசவில்லை. அதே நிலை கொள்ளாத பார்வையுடன், ஆனால் ஒரு வித உரிமையுடன், வாஞ்சையுடன் செக்குரிட்டி செக்குரிட்டி என்று பேசினாள். அவள் இப்படி அலைவதால், அவர்கள் இவளிடமோ, இவள் அவர்களிடமோ அதிகம் பேசி இருக்கக் கூடும். இவளைப் பார்த்துப் பரிதாப்பட்டு அவர்களின் சாப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கக் கூடும். அவள் சற்று ஓய்ந்து விட்டு, திடீரென்று "கட்டிக் கொடுக்குறது அப்பன் கடமை தானே!" என்றாள். திடீரென்று சிரித்தாள். மனநிலை சரியில்லாதவளா இவ்வளவு சுத்தமாக இருக்கிறாள், இத்தனை நேர்த்தியாக புடவை கட்டி இருக்கிறாள்.

"மயிலாப்புரா?, மைசூரா?...அங்கே தான்!". எந்தக் கோர்வையும் இல்லாமல் பேசினாள். ரொம்ப கொஞ்சமாய் தான் பேசினாள். அடிக்கடி சிரித்தாள். அவளை ஒரு பைக் கடந்து போக அவர்களுக்கு கையசைத்து சிரித்த முகத்துடன் டாட்டா காட்டினாள். பிறகு ஏதோ வாய்க்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.  பிறகு குனிந்து அருகில் இருந்த இரண்டு கட்டைப் பைகளில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். அப்போது தான் அந்தப் பைகளைப் பார்த்தேன். பைகள் இரண்டும் நிரம்பி இருந்தும் பொருட்கள் மிகச் சரியாய் அடுக்கப்பட்டிருந்தன. சற்று நேரம் துலாவிவிட்டு ஒரு சிறிய நோட்டு புத்தகத்தையும், ஒரு பேனாவையும் கையில் எடுத்துக் கொண்டாள். நான் கற்பனை செய்த மாதிரி, கார்ப்பரேஷன் பெண்கள் வீட்டுக்கு வீடு வந்து கணக்கெடுப்பு செய்வதைப் போல் கொஞ்ச நேரம் எழுதினாள். அவள் அப்படி என்ன எழுதி இருப்பாள் என்று பார்க்க எனக்கு ஆசை. அத்தனை பொருமையாய், பொறுப்பாய் அவள் அதைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது, இந்தப் பக்கம் சென்ற வண்டியில் இரண்டு பெண்கள் செல்ல, "அம்மா, துப்பட்டா கீழே போகுது பாரும்மா, பாத்து போங்க" என்று சிரித்து வழியனுப்பினாள். அந்தப் பெண்களும் அவளை என்னைப் போலத் தான் எண்ணி இருப்பார்கள். அவள் மனநிலை சரியில்லாதவள் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யோசித்துப் பார்த்தால், ஒரு வளர்ந்த மனிதன், மனநிலை சரி இல்லாத போது தான் அடுத்தவர்க்கு நன்மை மட்டுமே செய்யும் எண்ணம் கொண்டிருப்பான் போலும். கல்லெறிவதும், தூற்றுவதும் இதில் சேராது. அந்தப் பெண்கள் எத்தனை முறை துப்பட்டாவை அப்படி விட்டுக் கொண்டு அவளை கடந்து போயிருந்தாலும் அவள் ஒவ்வொருமுறையும் அந்த சிரிப்பு குறையாமல் அவள் அதைச் சொல்லி இருப்பாள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. வஞ்சகமில்லா மனதை அடைய மனம் பிறழ வேண்டி இருக்கிறது என்பது எத்தனை பெரிய நகைமுரண்.

அவள் பார்த்த கணக்கை எல்லாம் எழுதி முடித்தது போல், அந்த நோட்டுப் புத்தகத்தை பையில் வைத்து விட்டு, பேனாவை ப்ளவுசில் சொருகிக் கொண்டாள். பிறகு அருகில் இருந்த கல் ஒன்றில் அமர்ந்து கொண்டு மறுபடியும் அந்தப் பையைத் துலாவி ஒரு வட்டமான வெள்ளை டப்பா ஒன்றை எடுத்தாள். ஹோட்டல்களில் பார்சலுக்கு கொடுக்கும் ப்ளாஸ்டிக் டப்பா அது. ஆனால் அதில் எந்த ஹோட்டல் பெயரும் பொறிக்கப்படவில்லை. அது கழுவித் துடைத்து சுத்தமாய் இருந்தது. சாலையின் ஓரத்தில் கிடந்த ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டு அந்த டப்பாவைத் திறந்தாள்.

அவள் சாப்பிடப் போகிறாள் என்று நினைத்தேன். ஆனால், அந்த பெரிய வட்ட டப்பாவில் இருந்து சிறிதாய் இன்னொரு வட்டமான வெள்ளை டப்பாவை எடுத்து அதைத் திறந்து பொட்டு மாதிரி ஒன்றை வைத்துக் கொண்டாள். திரும்பத் திரும்ப அதைச் செய்தபடி இருந்தாள். பையிலிருந்து மறுபடியும் துலாவி ஒரு சுத்தமான மஞ்சள் சீப்பை எடுத்து அவள் இடுப்பில் சொருகிக் கொண்டாள். தலையில் பின்னியிருந்த band ஐ அவிழ்த்து ப்ளவுசில் போட்டுக் கொண்டாள். தலைவாரிப் பின்ன ஆயுத்தம் செய்து கொண்டிருந்தாள் போலும்.

எனக்கு அப்போது தான் ஒரு பெண்ணை அப்படி ஒரு இடத்தில் நின்று பார்ப்பது சரியல்ல என்று பிரக்ஞையே வந்தது. அதனால் சற்று நடந்தபடியே அவளை கவனித்தேன்.
அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கு அதிசயமாய் இருந்தது. இத்தனை சுத்த பத்தமாய் ஒரு மனநிலை தவறிய ஆணையோ, பெண்ணையோ நான் பார்த்ததே இல்லை. உண்மையில் இவள் மனநிலை தவறியவள் தானா? அல்லது இப்படி ஒரு மாலைப் பொழுதில் யாருக்கும் தன்னைத் தெரியாத ஒரு இடத்தில் வந்து இப்படி நடந்து கொண்டு பார்க்கலாம் என்று முடிவெடுத்தாளா? எதனால் இவளுக்கு இந்த நிலை? வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நாம் அனைவரும் வாழும் வாழ்வில் இவள் வேறு ஒரு தனி வாழ்க்கையை வாழ்கிறாளே? இது எதனால்? வாழ்வின் புதிர்களை நாம் விடுவிக்க விடுவிக்க, வாழ்க்கை மேலும் மேலும் நம் முன் பல புதிர்களைப் போட்டபடியே இருக்கிறது.

நான் இப்படி பலவித யோசனைகளுடனும், அவ்வப்போது அவளைப் பார்த்துக் கொண்டும் நடந்து கொண்டிருந்தேன். ஒரு கணத்தில் அவளின் பார்வை என் பார்வையை சந்தித்து. இத்தனை நேரம் நான் "இவள் யாரைப் பார்த்து சிரிப்பாள், யாரைப் பார்த்து கல்லெறிவாள்?" என்று பார்த்துக் கொண்டிருந்தேனோ, அந்த "யாராய்" நான் மாறக் கூடிய தருணம் அது. அந்த ஒரு கணம், கூசும் பல்லில் ஊசியால் கீறியது போல் ஒரு வலி மிகுந்தது. நான் உடனே, அவளைத் திரும்பிப் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்தேன். ஒருவேளை, அவள் அதே சிரிப்புடன், "பாவம் பைத்தியம்" என்று என்னை  நினைத்திருக்கலாம்.

என் டூ வீலரை ப்ளு மெளன்டைன் முன் நிறுத்தினேன். பட்ஜெட் ஹோட்டல் மாதிரி தான் இருந்தது. ரிஸெப்ஷனில் ஒரு தடியான ஆள் வரவேற்றான்.

நவீன்னு ஒரு ரைட்டர், அவர் ரூம் எது?

103 மேடம், ஸ்டேர்ஸ் அங்கே என்று கை காண்பித்தான்.

என் முதுகில் அவன் பார்வை உறுத்தியது. ஹோட்டலில் தனியாய் இருக்கும் ஒருவனை சந்திக்க வரும் பெண், அவள் அக்கா தங்கையாகவே இருந்தாலும் சமூகத்தின் பார்வை அவளைத் துகிலுரியத்தான் செய்கிறது.

103, கதவைத் தட்டினேன்.

உள்ளே வாங்க என்று அவன் குரல்.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். அவன் ஜன்னல் பக்கமாய் திரும்பி அமர்ந்து கொண்டு மேஜையில் வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். திரும்பி என்னைப்
பார்த்தவன் மெலிதாய் அதிர்ந்தான்.

கவி, சாரி கவிதா..வா, வாங்க.. உள்ளே வாங்க.

என்ன மரியாதை எல்லாம் பலமா இருக்கு? என்று சொல்லிக் கொண்டே அங்கு இருந்த
சோஃபாவில் அமர்ந்தேன். அவன் சிரித்துக் கொண்டே சேரை என் பக்கம் திருப்பி அமர்ந்து கொண்டான்.

என்ன சாப்பிட்றீங்க? காபி, டீ?

எதுவும் வேண்டாம் என்று தலையசைத்து விட்டு, அவனிடம்,

என்னை நீ, சாரி நீங்க இங்கே எதிர்பார்க்கலைல்ல?

எதிர்பார்த்திருக்கணுமோ?

கேள்விக்கு கேள்வி பதில் ஆகுமா?

பதிலைத் தெரிஞ்சுகிட்டே கேள்வி கேக்கலாமா?

எனக்குத் தெரிஞ்ச பதில் சரியா தப்பான்னு தான் கேக்குறேன்.

அவன் ஏதோ புரிந்தவன் போல், மெல்ல சிரித்துக் கொண்டே, இந்த, இந்த நிமிஷம், இந்த சூழல், "சரி", "தப்பு"க்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு இடமா தான் நான் பாக்குறேன்.

கதவு சாத்தாமல் தான் நான் உள்ளே வந்தேன். நம் மக்களுக்குத் தான் திறந்து கிடக்கும் அறைகளைப் பார்ப்பதில் என்ன ஒரு ஆர்வம், ஆனந்தம். நான் நினைப்பதை அவன் உணர்ந்து, If you don't mind, may i? என்று கதவைக் காட்டினான்.

Sure என்றேன்.

அவன் கதவை சாத்திவிட்டு, அவன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான். நான் அவனைப் பார்த்து,

சாரி, நீங்க எழுத்து வேலையில பிசியா இருப்பீங்க. I don't want to disturb. நேத்து பாத்ததுல இருந்து ஒரு கேள்வி மனசுல, அதைக் கேட்டுட்டுப் போலாம்னு தான் வந்தேன்.
கேளுங்க என்றான்.

இந்த "ங்க" அவசியம் தானா நவீன்?

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. நான் தொடர்ந்தேன்.

ஒகே. என் மேல கோவமா?

எதுக்கு?

கமான் நவீன்! கொஞ்சம் வெளிப்படையா பேசுவோமா?

உங்களை உயிருக்கு உயிரா காதலிச்சிட்டு, வாழ்க்கைன்னு வரும்போது சேஃபா இன்னொருதரை கல்யாணம் பண்ணிட்டேன்னு என் மேல கோவமா?

சே, சே, கண்டிப்பா இல்லை கவி..

Thanks...for calling me KAVI, அப்புறம் ஏன் இத்தனை வருஷம் கழிச்சி நேத்து என்னைப் பார்த்தப்போ, உன் முகத்துல ஒரு சின்ன சந்தோஷம் கூட இல்ல?

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.

உன் முகத்தை இப்பத்தான் எனக்கு நீ புதுசா அறிமுகம் செய்யப் போறியா நவீன்? உன்னை எனக்குத் தெரியாதா?

அவன் என்னையே பார்த்தான். நான் தீர்க்கமாய் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.

கல்யாணத்துக்கு முன்னாடி நான் இருந்த மாதிரி இப்போ அழகா இல்லைன்னு நீ நினைச்சிருப்பே, அதான் நீ ரொம்ப இன்ட்ரஸ்ட் எடுத்துக்கலைன்னு என் ஹஸ்பண்ட் சொல்றார்.

மெல்ல அதிர்ந்து, நம்ம பார்த்ததை அவர்கிட்ட சொன்னியா?

அவருக்கு உன்னைப் பத்தி தெரியும், நம்மைப் பத்தி தெரியும்.

ஓ!

சொல்லு நவீன்! என் ஹஸ்பண்ட் சொன்ன மாதிரி இப்போ என் அழகு போயிடுச்சு, இனிமே என்கிட்ட பேசி என்ன யூஸ் னு நினைக்கிறியா?

சே சே, அப்படி எல்லாம் இல்ல.

வேற எப்படி?

தெரியல..

இது என்ன பதில்?

(அமைதி)

சொல்லு நவீன்...நேத்துல இருந்து தொண்டையில முள் சிக்கின மாதிரி இருக்கு எனக்கு. ஏன் பெண்ணை அழகை வச்சி மட்டும் பார்க்குறீங்க? அன்னைக்கி நான் உன்கூட வர்றேன்னு தானே சொன்னேன். நீ தானே பயந்த. சரி, உன்னைக் கட்டி இருந்தாலும் இன்னைக்கி நான் இப்படித் தானே இருந்திருப்பேன்? அப்போ என்ன பண்ணி இருப்பே? அப்போ உன் காதல் குறைஞ்சுருக்குமா?

அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நிராயுதபாணியாய் நிற்கும் ஒருவனிடம் போர் புரிவதைப் போல் நான் பேசிக் கொண்டிருந்தேன்.

இல்லை எனக்குப் புரியல, அப்போ நமக்கு இருந்த சூழ்நிலையை வச்சித் தானே ரெண்டு பேரும் அப்படி ஒரு முடிவு எடுத்தோம். நம்ம சுமூகமா தானே பிரிஞ்சோம். அப்புறம் ஏன் இத்தனை வருஷம் கழிச்சி பார்த்தும் உன்னால நட்பா கூட சிரிக்க முடியல?

நட்பா சிரிக்கிறதா? ம்ம்....கவி, லைஃபே ஒரு progressive compromises இல்லையா? நம்ம பிரிஞ்ச அந்த நாள்ல இருந்து நீ ரொம்ப தூரம் போயிட்ட. காதல்ல இருந்து நீ நட்புக்கு வந்துட்ட, நான் இன்னும் அந்தக் காதல்லயே தான் நின்னுட்டு இருக்கேன்.
அவன் இப்படி ஒரு பதிலைச் சொல்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவன் மேலும் தொடர்ந்தான்.

ஆமா கவி, ஒருவிதத்துல நீ சொல்ற அந்த அழகான கவியா, இளமை மாறாம நீ இருந்திருந்தா, என் முன்னாடி அப்படி வந்து நீ நின்னுருந்தா நான் உன்கிட்ட நல்லா பேசி இருப்பேனோ என்னமோ. இல்லை என்னை சீப்பா நினைக்காதே. ஏன் அப்படி சொல்றேன் தெரியுமா? ஏன்னா, இன்னைக்கும் கற்பனைல நான் அந்தக் கவி கூடத் தான் வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு அந்தக் கவியைத் தான் தெரியும். இந்தக் கவியைத் தெரியாது. முன்னபின்ன தெரியாதவங்ககிட்ட நட்பா எப்படி சிரிக்கிறது?

உண்மையை சொல்லப் போனா நம்மோட சந்திப்பையே நான் விரும்பல. திடீர்னு நீ என் முன்னாடி வந்து நின்னதும், என் கற்பனைகள் எல்லாம் கனவு போல கலைய ஆரம்பிச்சிருச்சு. நீ ரொம்ப சாதரணமா என்னை ஒரு நட்பா கருதி உன் வீட்டுக்குக் கூப்பிட்ற? உன்னை மாதிரி காதலை நட்பா சட்டுன்னு எனக்கு மாத்தத் தெரியல. இத்தனை வருஷங்கள் ஆயிடுச்சு, நீ இப்போ வேறு ஒருத்தரோட வாழ்றன்ற இந்த உண்மையே எனக்குப் பிடிக்கல. உன் வீட்டுக்கு வந்து நான் உன் குடும்பத்தையும், உன் வாழ்க்கையையும் எப்படி எதிர் கொள்றது? அது எப்படி என்னால முடியும்?... இல்லை கவி, எனக்கு என்னோட எளிமையான, யாருக்கும் தீங்கிழைக்காத கற்பனை போதும். அது பொய்யா இருந்தாலும் அழகா இருக்கு. நீ இருக்கே, நான் இருக்கேன். நம்ம காதல் இருக்கு. அங்கே காலம் உறைஞ்சு இருக்கு. எனக்கு அது போதும்.

நீ கேட்ட கேள்விக்கு உனக்கு பதில் கிடைச்சுதா, உன் தொண்டையில சிக்கின முள் கீழே இறங்கிச்சான்னு எனக்குத் தெரியல...இதையெல்லாம் நீ தெரிஞ்சுக்கணும்னும் நான் நினைக்கல. ஒரு ரிக்வஸ்ட். எனக்காக என் மிச்சக் கற்பனைகளை அப்படியே விட்டுட்டு நீ உன் வாழ்க்கைக்குத் திரும்பிப் போ கவி..சாரி, திரும்பிப் போங்க கவிதா என்றான்.

நான் ஒன்றும் சொல்லாமல், சட்டென்று எழுந்து, Thanks Navin. That helps! என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

-

என்னுடன் தலையணைக்கு உறை போட்டிருந்த அவர் நான் சொன்னதை எல்லாம் உறைந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தார்.

சொல்லி முடித்துவிட்டு தலையணையை ரெண்டு தட்டு தட்டி அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து,

சே, என்ன மனுஷன்பா, சூப்பர் ல என்றார்.

ஆமா, சரியான லூசு என்றேன்.

லூசா? என்ன நீ? உனக்காக இப்படி உருகுறான் அந்த மனுஷன்? நீ இப்படி சொல்ற? என்றார்.

லவ் பண்ணா தைரியம் இருக்கணும், வாழ்க்கையில எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு கதை, கற்பனை, கனவுன்னு இப்படி பேசிட்டு இருந்தா யாருக்கு என்ன லாபம்? இந்த எழுத்தாளனுங்க எல்லாம்  சரியான மென்டல் கேஸுங்க தான் போல! நல்லவேளை நான் தப்பிச்சேன், படுங்க என்று லைட் ஆஃப் செய்தேன்.
இன்னைக்கி நவீனைப் பார்த்தேன். என்றேன்.

யாரு என்பது போல் பார்த்தார்.

என்னோட x பாய் ஃப்ரென்ட்ங்க. சொல்லி இருக்கேன்ல...

ஓ! ம்ம், லக்கி மேன், என்ன பண்றானாம்.

உங்களுக்கு இருக்கே கொழுப்பு. என்ன பண்ணுவான், அவன் ரைட்டர் தானே.

ம்ம், ஊட்டில எப்படி?

ஏதோ புதுசா நாவல் எழுத வந்திருக்கானாம். ப்ளூ மெளன்டைன் ல இருக்கானாம்.

நீ வீட்டுக்கு இன்வைட் பண்ணலையா?

பண்ணேன், ஆனா அவன் ஒன்னும் பெருசா இன்ட்ரெஸ்ட் காட்டல.

ஏன்? உன்னைப் பார்த்து அவனுக்கு சந்தோஷமா இல்லையா?

தெரியலை. ரைட்டர்களுக்கு எழுத்துல தான் எல்லா உணர்ச்சியும் வரும். மூஞ்சில ஒன்னும் காணோம்.

ம்ம்ம்..உனக்கு?

எனக்கு ரொம்ப சந்தோஷம். எவ்வளவு நாள் ஆச்சு அவனைப் பார்த்து.

எதனால பிரிஞ்சீங்கன்னு சொன்ன?

வீட்ல எல்லாம் வந்து பேசினான். ஆனா, ரைட்டரா தான் ஆவேன்னு சொன்னான். எங்க அப்பா வேணாம்னுட்டாரு.

நீ ஒன்னும் சொல்லலையா?

அப்பாகிட்ட என்ன சொல்றது? ஒரு வேலை பார்த்துட்டே எழுதுன்னு அவன்கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அவன் முடியாதுன்னுட்டான். சரி, அப்பா ஒத்துக்க மாட்டார், நான் உன்கூட வந்துர்றேன்னு சொன்னேன். இல்லை, உங்க அப்பா சொல்றது சரி தானே, எனக்கே என் ப்யுச்சர் தெரியலை, உன்னைக் கூட்டிப் போய் என்ன பண்றதுன்னு தயங்கினான். நான் என்ன பண்ண முடியும்?

ம்ம்ம்..அவன்கூட வாழ்ந்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பேன்னு தோணுதா?

ஏங்க அப்படி கேக்குறீங்க? இப்போ எனக்கு என்ன குறை? என்னை ராணி மாதிரி தானே வச்சுருக்கீங்க.

சும்மா விடாத, உண்மையை சொல்லு, அவன் கூட இருந்தா நல்லா இருந்துருக்கும்னு மனசுல ஓரத்துல தோணல?

கல்யாணம் ஆன புதுசுல அவனைப் பிரிஞ்சது, முன்ன பின்ன தெரியாத உங்களைக் கட்டினது எல்லாம் கலக்கமா தான் இருந்துச்சு. அப்புறம் உங்க நல்ல மனசு என்னை அப்படி யோசிக்க விடல. என் காயத்துக்கெல்லாம் மருந்தா நீங்க இருந்தீங்க! அப்புறம் எனக்கு என்ன கவலை?

ம்ம்ம்ம்...

என்ன ம்ம்ம்...ஆமா, இத்தனை வருஷம் கழிச்சி என்னைப் பார்க்குறான், என்னைப் பார்த்த சந்தோஷமே அவன் முகத்துல இல்லைங்க. ஏன் அப்படி?

என்னைக் கேட்டா? நான் என்ன சொல்றது?

நான் வேற யார்கிட்ட கேக்குறது?

மேடம், எந்தப் புருஷனாவது தன்னோட வொய்ஃபோட x பாய் ஃப்ரெண்ட் பத்தி இவ்வளவு நேரம் பேசுவானா? இதுக்கே நீ எனக்கு கோவில் கட்டணும்!

சார், எந்த வொய்ஃபாவது தன்னோட x பாய் ஃப்ரெண்ட பார்த்துட்டு டைரக்டா ஹஸ்பண்ட்கிட்ட வந்து சொல்லுவாளா? இதுக்கு நீங்க எனக்கு என்ன கட்டணும்?
ஹஹஹ..அப்போ ரெண்டு கோவிலாக் கட்டி உண்டியல் பக்கத்துல ரெண்டு பேரும் உக்காந்துருலாம்.

ஐய்யே...பதில் சொல்லுங்க..

எனக்கு என்ன தெரியும்! ஒருவேளை, அப்போ நீ ரொம்ப அழகா இருந்த, இப்போ கல்யாணம் ஆகி, புள்ளை பெத்து அழகெல்லாம் வடிஞ்சிருச்சுன்னு நினைச்சானோ என்னமோ?

அப்போ நான் இப்போ அழகா இல்லையா?

எனக்கு நீ என்னைக்கும் அழகு தானே ராஜாத்தி என்று சொல்லி, என்னை அள்ளி அணைத்தார். நான் அவரின் கழுத்தைக் கடித்தேன்.

-

மறுநாள் விடிந்ததும், நான் என் பழக்கப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பி இருந்தேன். எழுந்ததிலிருந்து சுழன்று சுழன்று பிள்ளைகளையும், அவரையும் அவரவர் இடத்துக்கு அனுப்பி விட்டு ஒரு காபியுடன் உட்கார்ந்த்து டீவியில் "அழகிய அசுரா" பாட்டைப் பார்க்கும்போது சட்டென்று எனக்கு பத்து வயது குறைந்தது. பாடல்கள் மாயக்கம்பளங்கள், எத்தனை சுலபமாய் நம்மை நம் இளமைக் காலங்களுக்கு இட்டுச் செல்கின்றன. அவனுடைய பிறந்த நாள் பரிசாய் ஒரு கேசட் முழுவதும் இந்தப் பாட்டை நான் பதிந்து கொடுத்திருந்தேன். எங்கள் வழக்கமான இடத்தில் அமர்ந்து வாக்மேனில் இந்தப் பாட்டை எத்தனை முறை கேட்டிருப்போம். நான் கண்களை மூடி அந்த நிமிடம் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று எழுந்து காபி டம்ளரை வைத்து விட்டு, கண்ணாடி முன் நின்றேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் எப்படி இருக்கிறேன்? இவர் சொன்ன மாதிரி கல்யாணம் செய்து, புள்ளை குட்டி பெற்று நிஜமாகவே என் அழகு வற்றி விட்டதா? அப்படி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. மூக்கில் கொஞ்சம் சதை பிடிக்க ஆரம்பித்திருந்தது. வயதாவதற்கான ஒரு அறிகுறி. கண்கள் துடிப்பாகவே இருந்தது. பிள்ளை பெற்றும், வயிறு தொங்கவில்லை, அதோடு நான் பெரிதாய் வெயிட் போடவும் இல்லை. சில சமயங்களில் எனக்கே அப்படித் தோன்றி இவரிடம் சொன்னாலும் இவர் ஒத்துக் கொள்ள மாட்டார். மார்பு கொஞ்சம் சரிந்திருந்தது. அது இயற்கை தான்.

பிறகு ஏன்? இத்தனை ஆண்டுகள் கழித்து எனக்கு அவனைப் பார்த்து ஏற்பட்ட இன்பம், சந்தோஷம், அவனுக்கு ஏற்படவில்லை? நான் அவனை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறானா? அவனை நம்பி நான் அவனுடன் சென்றிருக்க வேண்டுமா? அவன் தானே வேண்டாம் என்றான். இவர் சொன்ன மாதிரி, என் அழகு குறைந்தது தான் காரணமா? என் அழகு மட்டும் தான் நானா? அவன் வாழ்க்கையில் எனக்கு அவ்வளவு தான் இடமா?
யோசிக்க யோசிக்க எனக்குத் தலை சுற்றியது. இந்த விஷயத்தை மறந்து வீட்டு வேலைகளில் மூழ்கினேன். ஆனாலும் திரும்பத் திரும்ப அதே கேள்வி மனதில் எழுந்து கொண்டே இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தேன்.

(தொடரலாமா?!)

சோஃபாவில் சாய்ந்தபடி, இன்ஸ்டாவில் "யோகாபவானி" (தேடாதீர்கள்) யின் ஆசனங்களை வழக்கம் போல் பார்க்க மட்டும் செய்தேன்.

அப்பா, குழந்தை எல்லாம் எப்படிப்பா பொறக்குது? என்றான் encyclopedia புத்தக சகிதம் கீழே உட்கார்ந்திருந்த ஐந்து வயது ரிஷி.

தூக்கி வாரிப் போட்டது.

சூரியன் பீச்சுக்குள்ல மறைஞ்சி போச்சே, அது நனஞ்சிடாது?

நீங்க, அம்மா எல்லாம் ஏன்பா சீக்கிரமே ஸ்கூல் படிச்சி முடிச்சிட்டீங்க? நான் மட்டும் ஏன் இப்போ படிக்கிறேன்?

என் க்ளாஸ் இஷான் செவப்பா இருக்கான்பா, ஆனா, அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் கருப்பா இருக்காங்க! அது எப்படிப்பா?

கீழே நிக்கிறத விட, மலை மேல போனா சூரியன் நம்ம கிட்ட தானேப்பா இருக்கும்? அப்புறம் எப்படி அங்கெ சில்லுன்னு இருக்கு?

இப்படி தினம் தினம், பல விதங்களில், பல கோணங்களில், கேள்விகள் கேட்டு ரிஷி என்னையும், அவன் அம்மாவையும் டார்ச்சர் செய்வது வழக்கம். என்ன சார், டார்ச்சர் னு சொல்றீங்க? புள்ள எவ்வளவு அறிவா இருக்கான்? இந்த வயசுல நல்லா ட்ரையின் பண்ணிடுங்க என்று சொல்பவர்களிடம், இந்தாங்க, புடிங்க, நீங்களே ட்ரயின் பண்ணுங்க, நான் ஒரு இருபது வருஷம் கழிச்சி வந்து வாங்கிக்கிறேன் என்று சொல்லத் தோன்றும்.
அங்கே தொட்டு, இங்கே தொட்டு இன்று அடிமடியில் கை வைப்பது மாதிரி இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு விட்டான்.

சொல்லுப்பா, என்றான்.

என்னடா?

பேபி எல்லாம் எப்படி பொறக்குது?

சாமி குடுக்குது என்று மீண்டும் பவானியைப் பார்த்தேன்.

என்னையும் சாமி தான் குடுத்துச்சா?

ஆமா..(பவானி)

அது எப்படி? சாமி மேலே...க்ளவுட்ஸ் மேல இருக்காரு, அங்கே இருந்து எப்படி கரெக்டா இந்த வீடுன்னு அவருக்குத் தெரியும்.

அவர் சாமில்ல, எல்லாம் தெரியும்.

சாமிகிட்ட யார் கேட்டாலும்  baby தருவாரா?

(ஃபோனை லாக் செய்தேன்) பக்தியோட, நம்பிக்கையோட கேட்டா கண்டிப்பாத் தருவாரு.

நீ பொய் சொல்றப்பா..

ஏன்டா, இப்படி சொல்ற?

நான் பல தடவை pray பண்ணி இருக்கேன். எனக்கு சாமி பேபி தரலியே!

உனக்கு கல்யாணம் ஆனாத் தருவாருடா, இப்போ நீயே பேபி ஆச்சே. பேபி வேணும்னா அப்பாகிட்ட, அம்மாகிட்ட கேளு.

நீங்க எப்படி தருவீங்க?

நானும் அம்மாவும் சேர்ந்து உனக்கு ஒரு பேபி தருவோம்.

அப்போ சாமி?

நாங்க சேர்ந்தா சாமி தருவாருடா.

குழப்புறீங்கப்பா! யாரு பேபி குடுப்பா? நீங்களா? சாமியா?

கொதித்து விட்டான். உண்மையை சொல்ல வேண்டியது தான்.

நாங்க தான்டா..நானும் அம்மாவும் சேரணும், god ஒட blessing யும் வேணும். அதுக்காக சொன்னேன். நீ போ, போயி home work பண்ணு.

எனக்கு ஒரு டவுட்டு. சாமிக்கு தான் எல்லாம் தெரியுமே. அவர் blessing இருந்தா போதாதா? நீங்க ஏன் சேரணும்?

ரிஷி, நீ அடி வாங்கப் போற. போயி படி.

சொல்லுப்பா..

எனக்குத் தெரியலடா, சாமி தான் கனவுல வந்து அப்பாவையும்,அம்மாவையும் சேர்ந்து இருங்க, நான் உங்களுக்கு பேபி தர்றேன்னு சொன்னாரு.

அப்போ நானும் ரஷ்மியும் சேர்ந்து இருந்தா சாமி எங்களுக்கும் பேபி தருவாரா?

அடேய்..நீ பெரிய பையன் ஆனதும் தான் பேபி எல்லாம் பொறக்கும் உனக்கு. இப்போ இல்லை. ரஷ்மிகூட எல்லாம் சேரக் கூடாது.

அது ஏன்? இப்போ பொறந்தா என்ன?

பேபிய எப்படிடா வளர்ப்ப? உன்கிட்ட பணம் இல்லையே...

அதான் உன்கிட்ட இருக்கே.

கடவுளே..படுத்துற ரிஷி.

போப்பா, உனக்கு ஒன்னுமே தெரியல..! எனக்கு இந்த birthday க்கு என் பேபி வேணும்.

அடம் பிடித்தான்.

சரி சரி, நானும் அம்மாவும் ட்ரை பண்றோம்டா..அடம் பிடிக்கக் கூடாது.

எனக்கு உங்க பேபி வேணாம், என் பேபி தான் வேணும்.

முருகா, படுத்துறானே..

ஏங்க கொஞ்ச நேரம் விட்டுட்டுக் கடைக்குப் போனா, என்னங்க இது? ஏன் அவனை அழ விட்றீங்க? கையில் பையுடன் என் மனைவி உள்ளே நுழைந்தாள்.

யாருடி அவனை அழ விட்றா? அவன் தான்டி என்னை அழ விட்றான். நீயே கேளு.

என்ன ரிஷி, என் பேபி சமத்துல்ல, ஏன் அழற?

பாரும்மா, அப்பாகிட்ட இந்த பெர்த்டேக்கு ஒரு பேபி கேட்டேன்மா..முடியாதுன்னு சொல்றாரு...

எல்லாம் என் வேலை தான் என்பது போல் என்னைப் பார்த்தாள்.

பேபின்னா? பேபி டாயா மா?

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, நான் அவளின் ரியாக்‌ஷனை கவனித்துக் கொண்டே இருந்தேன்.

இல்லம்மா, நிஜ பேபி. நிவி வீட்ல இருக்கே, அந்த மாதிரி...

என் மனைவி பொய்யாய் என்னை முறைத்தாள்.

இல்லம்மா, உனக்கு பெர்த்டேக்கு ரெண்டு மாசம் தானே இருக்கு? அதுக்குள்ள எப்படி பேபி பொறக்கும். பேபி பொறக்க பத்து மாசம் வேணுமே..அம்மா வேற வீக்கா இருக்கேன்ல.
இப்போ பேபி பொறந்தா அம்மா இன்னும் வீக் ஆயிடுவேன்ல.

ஐய்யோ...உன் பேபி இல்ல, ரஷ்மியும் நானும் சேர்ந்து, சாமி blessing ல பேபி பொறக்கப் போறோம்.

இப்போது என் மனைவி என்னை நிஜமாய் முறைத்தாள்.

என்னை ஏன்டி முறைக்கிற? ரஷ்மிகூட சேர்ந்து அவனுக்கு உடனே பேபி வேணுமாம்.

அதான் ஒரே அடம்.

நீங்க ஏதாவது உளறி இருப்பீங்க!

ஆமா, என்னையே சொல்லு. எங்கே நீ சமாளி பார்ப்போம்.

ரஷ்மி கூடயா? அவ தான் உன்கூட சண்டை போட்டுட்டே இருப்பாளேடா?

நீயும் அப்பாவும் தான் சண்டை போட்டுக்குறீங்க.

இருவரும் Mission Failed என்கிற range ல் பார்த்துக் கொண்டோம். தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல, என் மனைவி...

சரி, ரிஷி கண்ணாக்கு என்ன பேபி வேணும்? பாயா? கேர்ளா?

பாய்.

அச்சோ, ரஷ்மி கூட நீ சேர்ந்தா கேர்ள் பேபி தான் பொறக்கும். ரிஷிக்கு கேர்ள் பேபி பிடிக்காதுல்ல?

ம்ம்ம் என்று ஏமாற்றமாய் தலையசைத்தான்.

அப்போ நீ கொஞ்சம் வெயிட் பண்ணனும், இப்போ உனக்கு பேபி வேணுமா? சாக்லேட் வேணுமா? என்று பையிலிருந்து டைரி மில்க் எடுத்துக் காட்டினாள்.

அவன் குதூகலத்துடன் சாக்லேட் என்று சொல்லிப் பறித்துக் கொண்டு ஓடினான்.

என் மனைவி பெருமையாய் என்னைப் பார்த்தாள்.

அம்மான்னா அம்மா தான் என்று கன்னத்தைக் கிள்ளி, சரி, பையன்கிட்ட வெயிட் பண்ண சொல்லிட்ட, இன்னொரு பையனுக்கு ரெடி பண்ணுவோமா? என்றதும், என்னை அவள் பொய்யாய்த் தள்ளி விட,

ரிஷி திரும்பி வந்து..

அம்மா, நான் ரஷ்மி கூட சேர்ந்தா தானே கேர்ள் பேபி பொறக்கும். நான் வேணா ரியான் கூட சேர்ந்துடவா? என்றான்.

தற்கொலை எண்ணம் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. எப்படிச் சாகலாம் என்று தான் அடிக்கடி யோசிக்கிறேன். அந்த யோசனையினால் நான் வாழும் அலுப்பான வாழ்விலிருந்து எனக்கு ஒரு சில நிமிடங்கள் விடுதலை கிடைக்கிறது. மனதுக்கு சுகமாய் இருக்கிறது. பெண்களின் அங்கங்களைக் கற்பனை செய்து சுயஇன்பம் காணும் சுகம். யாருக்கும் தீங்கில்லாத சுகம். சமீபகாலமாய், வாழ்வையும், சாவையும் பற்றி யோசிக்கும்போது, வாழ்க்கை தான் மிகுந்த அச்சத்தை அளிக்கிறது.

நான் இங்கு பிறந்திருந்தாலும், என் சக மனிதர்களிடத்திலிருந்து மிகவும் அந்நியப்பட்டிருக்கிறேன். ஒருபுறம், இந்தப் பேரண்டத்தில் மனிதனின் இடம் மிக மிக மிக மிக சொற்பம், அதில் ஏன் இத்தனை ஓட்டம் என்கிறார்கள். மறுபுறம், செய் அல்லது செத்து மடி என்று உந்தித் தள்ளுகிறார்கள். யானைக்கு வெடிப் பழத்தையும் இவர்களே தருகிறார்கள்; அதன் வேதனையையும் இவர்களே படம் வரைகிறார்கள். போரையும் இவர்களே நிகழ்த்துகிறார்கள்; சமாதானத்தின் பிரசங்கத்தையும் இவர்களே செய்கிறார்கள்.

என் தந்தை தான் ஆண்மையுள்ளவன் என்று நிரூபிக்கவும், என் தாய் தான் மலடி இல்லையென்று நிரூபிக்கவும் என்னைப் பெற்றெடுத்தார்கள். அல்லது அவர்களும் அப்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். நான் பிறந்ததும் உயிருடன் இருக்கிறேன் என்று அழுது நிரூபித்தேன். நான் சரியாய் வளர்கிறேன் என்று அவர்களைப் பார்த்தும், சிரித்தும், தவழ்ந்தும், நடந்தும், பேசியும், ஓடியும் நிரூபித்தேன். பள்ளியில் படித்தும், பரிட்சை எழுதியும் நிரூபித்தேன். வேலையில் உழைத்து நிரூபித்தேன். திருமணம் செய்தால், குழந்தை பெற்று ஆண்மையுள்ளவன் என்று...ஒரு நாள் தானாய் செத்தும் நிரூபிப்பேன், மனிதன் சாஸ்வதம் இல்லை என்று.

நான் யார், எப்படி இருப்பேன், என்ன படித்தேன், எதில் ஜெயித்தேன், எதில் தோற்றேன், என்ன என் பிரச்சனை..இதையெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. நான் உங்களுடனேயே இருக்கும் ஒரு வேற்றுகிரகவாசி. இப்படிச் சொல்லலாம், எனக்குத் தற்கொலை எண்ணங்கள் தோல்வியினால் வரவில்லை. இப்படி அலுப்பாய் வாழ்வதினால் வருகிறது. வாழ்வின் ஒவ்வொரு படியிலும் Hence Proved என்று சொல்லிக் கொண்டே ஏற எனக்கு அலுப்பாய் இருக்கிறது.

வீழ்ந்தாரைக் கண்டால் வாய் விட்டுச் சிரிக்கும்

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்

இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்

இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்

அறுபது வருடங்களுக்கு முன் இந்த வரிகளை எழுதிய கா. மு. ஷெரீப்பின் கைகளுக்கு முத்தம் கொடுப்பேன். அறிவுள்ளவர்களாய் இருந்தால், இந்த வரிகளைக் கேட்ட பிறகாவது வாழ்வின் துயர் காரணமாக ஒரு சக மனிதனை சாக விட்டிருக்க மாட்டீர்கள். மளிகைக் கடை அண்ணாச்சி போல் எப்போதும் எதையாவது எடை போட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள். உங்கள் மகனையோ, மகளையோ பக்கத்து வீட்டு பிள்ளையுடன் ஒப்பிட்டுப் பேசி இருக்க மாட்டீர்கள். வெற்றி வெற்றி என்று வெறி கொண்டு திரிந்து அறத்தை விற்றிருக்க மாட்டீர்கள். இன்று என்னை இந்தக் கடிதம் எழுத உந்தி இருக்க மாட்டீர்கள்.

"இந்த வழியில் நாங்கள் சென்றோம்" என்று சொல்லுங்கள். "இதில் தான் செல்ல வேண்டும்" என்று சொல்லாதீர்கள். எனக்கு மற்றொரு வழி பிடித்திருந்தால், நான் தோற்றுத் திரும்ப வேண்டும் என்று விரும்பி அங்கேயே எனக்காகக் காத்திருக்காதீர்கள். ஒரு வேளை, நான் தப்பித் தவறி, தோற்காமல் திரும்பினால் என்னைப் பெருமிதம் கொள்ளவும் வைக்காதீர்கள். ஒவ்வொரு படியாய் நானே தட்டுத் தடுமாறி ஏறிக் கொள்கிறேன் Hence proved இல்லாத படிக்கட்டுகள். நீங்கள் எல்லோரும் ஏறிக் கொண்டிருக்கும் படியில் நான் இறங்கி வந்து கொண்டிருக்கலாம். நொண்டி அடித்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை, எனக்குப் படிக்கட்டுகள் கூட தேவையில்லாமல் இருக்கலாம். சமதளத்தில் நான் ஆனந்தமாய் என் அறுபது வயது வரை வாழ்ந்து விட்டுப் போகிறேனே. உங்களுக்கு என்ன வருத்தம்? நிரூபணம் இல்லாத ஒரு வாழ்க்கை வேண்டும் எனக்கு.

விசித்திரமாய் இருக்கிறது, "தற்கொலை" என்று ஒரு விளையாட்டில் தான், ஜெயித்தால் அவுட்!

கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன், இந்தக் கடிதத்தை நான் படிக்கிறேனா, அல்லது ஒரு போலீஸ் அதிகாரி படிக்கிறாரா என்ற இடைவெளியில் தான் என் உயிர் இருக்கிறது.

எனக்குத் தெரியும், என் சாவிலும் நீங்கள் என்னை எடை போடுவீர்கள். எதை நிரூபிக்க இவன் இப்படிச் செய்தான் என்று கேட்பீர்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் வெற்றியை நோக்கி மட்டுமே ஓட வேண்டும் என்ற உங்களின் நிர்பந்தம் உவப்பாய் இல்லை எனக்கு. தோல்வியை நோக்கித் தலை தெறிக்க ஓட வேண்டும் எனக்கு. அதனால் என்ன? ஒருவேளை, உங்களுக்கு இனி நான் எதையும் நிரூபிக்கப் போவதில்லை என்பதற்கான முடிவாய் இது இருக்கலாம்.

19/08/1998
சென்னை
------------------

24/2/2040

படிக்கப் படிக்கச் சிரிப்பாய் வந்தது. "தாத்தா" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.

அன்று வேலையை முடித்து விட்டு வர சற்று நேரமாகிவிட்டது. பதட்டத்துடன் கதவைத் திறந்ததும் மூத்திர நெடி முகத்தில் அறைந்தது. ரமா அக்கா வரவில்லை என்று புரிந்தது. அம்மா கட்டிலில் படுத்தபடி அரற்றிக் கொண்டிருந்தாள். விளக்கைப் போட்டேன். அவள் கண்கள் கூச இமைகளை நெறுக்கிக் கொண்டாள். அவள் உடையெங்கும் ஈரம். வெகுநேரமாய் ஈரத்தில் கிடந்ததால் கால்கள் சில்லிட்டிருந்தன.

அடுக்களைக்குச் சென்று அடுப்பு மூட்டி ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தேன். திரும்பி வந்து அவள் உடலில் போர்த்திய துணியை விலக்கினேன். தொப்பலாய் நனைந்திருந்தது. அதை எடுத்து கீழே போட்டேன். அவள் தெம்பில்லாமல் அரற்றிக் கொண்டே இருந்தாள். கவனமாகக் கேட்டால் என்னை வைது கொண்டிருந்தாள். பாவி, பாவி...என்னைக் கொன்னுடு, கொன்னுடு என்றும், ரமா முண்ட என்றும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பழைய தகரக் கட்டில் கொஞ்சம் தொட்டாலே க்ரீச்சிட்டது.

காலையில் துடைத்துக் காயப்போட்டிருந்த அந்த நைந்து போன லுங்கியை கொண்டு வந்தேன். அவளின் கால்களைத் தூக்கி லுங்கியால் துடைத்தேன். லுங்கி நன்றாக காய்ந்திருந்தால், அது ஈரத்தை உறிஞ்சிக் கொண்டது. அவள் கால்களை சூட பறக்கத் தேய்த்து விட்டேன். வலிக்குதுடா...சண்டாளப் பாவி...என்று சற்று பலமாகவே சொன்னாள். எனக்கு இது பழகிவிட்டது. ஒன்றா, இரண்டா, ஏழு வருடங்களாய் தினமும் அவளின் வசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அம்மா ஒரு வாழ்வாங்கு வாழ்ந்து முடித்தவள். நான்கு பிள்ளைகளைப் பெற்று, கணவனை இழந்து தனியாக அத்தனை பேரையும் ஆளாக்கியவள். என் பதினைந்து வயதில் அண்ணன்கள், அக்கா அத்தனை பேருக்கும் கல்யாணம் செய்து முடித்தவள். அவர்களின் பிள்ளைகள் வளரும் வரை, இங்கே அங்கே என்று போட்டி போட்டுக் கொண்டு உறவு கொண்டாடப்பட்டவள். மரம் தழைத்தோங்கி நிற்கும்போது தானே பறவைகளின் கூடு. அது பட்டுப் போன பிறகு பறவைகளுக்கு அங்கு என்ன வேலை? நடமாடும் வரை அவர்கள் அத்தனை பேரின் பொதி சுமந்தவள் கை கால் விழுந்த போது அவளே பொதியாய் மாறிப் போனாள். அன்று வாழ்வில் ஏதோ புரிந்து கொண்டவள், எல்லோரிடமும் துவேஷத்தை மட்டும் பாராட்டத் தொடங்கினாள். பரிதாபப்பட்டு பார்க்க வருபவர்களையும் வசை மாப் பொழிந்தாள். அவளின் கையறுநிலையின் மீது உள்ள கோபத்தை எல்லோரிடமும் ப்ரயோகித்தாள்.

விசித்திரமாய் இருக்கிறது. நாம் ஒருவரிடம் ஒரு சாதாரண உதவி கேட்க வேண்டும் என்றாலும், அவர்கள் நம்மை என்ன எரிச்சல் படுத்தினாலும், அதை நாம் பொருத்துக் கொண்டு அந்த உதவியைக் கேட்டுப் பெறுவோம். ஆனால் என் அம்மா, அவளின் எல்லாத் தேவைகளுக்கும் முழுவதுமாய் சார்ந்திருக்கும் என்னிடம் தான் அதிக எரிச்சல் அடைகிறார். அதிக வசை பொழிகிறார். நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.

நான் செய்வதை பெரிய தியாகமாக நான் நினைப்பதில்லை. ஒருவேளை, இப்படி இருக்கலாம். அவள் எனக்கு கல்யாணம் செய்து வைக்கவில்லை. அதனால் எனக்குக் குழந்தைகள் இல்லை, அதனால் அவளை உறவு கொண்டாடவில்லை, அதனால் அவளை உதறத் தேவையில்லாமல் போயிருக்கலாம். அதோடு, சதா துவேஷித்துக்கொண்டே இருக்கும் ஒருவருக்கு பணிவிடை செய்வதில் ஏதோ ஒரு ஞானம் இருக்கிறது.  ஓங்கி அறையும் ஒருவரிடம் மறு கன்னத்தைக் காட்டும் அன்பு அது. அதை அன்பு என்று சொல்லும்போதே, உண்மையில் அது அன்பு தானா என்ற கேள்வியும் எழுகிறது.

கட்டிலைத் துடைத்து விட்டு, மின்விசிறியை நிறுத்தினேன். அவள் உடைகளைக் கலைந்தேன். ஒரு வயதான, பட்ட மரம் போல இருந்தாள். உடலெங்கும் எண்பது வயதின் வேர்கள் பரவிக் கிடந்தன. அடுக்களை சென்று வெந்நீரை எடுத்து, கொஞ்சம் மஞ்சள் சேர்த்தேன், கையோடு ஒரு நல்ல துணியை எடுத்து கொண்டேன். துணியை வெந்நீரில் முக்கிப் பிழிந்து மெதுவாய் உடலெங்கும் துடைத்து விட்டேன். அவள் உதடுகள் எதையோ முனுமுனுத்துக் கொண்டிருந்தன. இரண்டு கைகளும், கால்களும் எந்த வித அசைவும் இல்லாமல் கிடந்தன. முழுவதும் துடைத்து விட்டு, துவைத்துக் காய வைத்திருந்த வேறு புடவையை உடலில் சுற்றினேன். இன்னொரு நைந்து போன புடவையை அவளின் முதுகின் கீழ் வைத்துக் கீழ் வரைப் பரப்பினேன். இடையில் கட்டில் ஓயாமல் ஓசை இட்டுக் கொண்டே இருந்தது. மின்விசிறியைப் போட்டு விட்டு, அடுக்களைக்குச் சென்று இருவருக்கும் கொஞ்சம் கருப்பட்டிக் காபி போட்டேன்.

கண்ணை மூடிக் கொண்டிருந்தவளை மெல்ல என் மடியில் கிடத்தி, பதமான சூட்டில் காபியை ஊட்டினேன். ஓவ்வொரு முறை வாயில் ஊற்றி விட்டு நெஞ்சைத் தடவி விட்டேன். இதன் இடையில், சனியனே, மெல்ல என்று ஏதோ சொன்னாள். அவளுக்கு கொடுத்து விட்டு, படுக்க வைத்து, நான் ஒரே மடக்கில் என் பங்கு காபியை வாயில் ஊற்றினேன்.

களைத்து போட்ட உடைகள், துணிகள் அனைத்தையும் அள்ளி எடுத்து சோப்பு பவுடரில் ஊற வைத்தேன். உள்ளே வந்து சாமி படம் அருகில் வைத்திருந்த ஊது பத்தியை ஏற்றினேன். நல்ல மணம் பரவத் தொடங்கியது. மனதுக்குக் கொஞ்சம் உற்சாகமாய் இருந்தது. அடுக்களைக்கு சென்று அரிசி களைந்து சாதம் வைத்தேன். இருந்த இரண்டு தக்காளியை வைத்து, புளியைக் கிள்ளிப்போட்டு ரசம் வைத்தேன். அம்மாவுக்கு சாதம் குழைவாய் இருக்கணும். இல்லைன்னா இறங்காது.

சாதம் நன்றாகக் குழைந்திருந்தது. கொஞ்சம் ஆற வைத்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் தட்டில் எடுத்து வைத்து அம்மாவுக்கு ஊட்டினேன். இருமலும், வசையும் தொடர்ந்தது. ஒரு வழியாய் போராடி ஊட்டி முடித்து, நான் நாலு வில்லல் வாயில் போட்டுக் கொண்டேன். அம்மாவுக்கு மாத்திரைகளை பொடி செய்து கொஞ்சம் கொஞ்சமாய் வாயில் ஊற்றினேன். கசப்பு நாக்கில் ஒட்ட ஒமட்டினாள். அதிக இருமல் வந்துவிட்டால், நெஞ்சு எரிச்சல் அதிகமாகிவிடும். மெது மெதுவாய்க் கொடுத்தேன். மருந்துக் கசப்புக்கு டாக்டரைத் திட்டினாள். விளக்கை அணைத்தேன்.

அவளை ஆசுவாசப்படுத்தி படுக்க வைத்து, ஊறப் போட்டத் துணிகளைத் துவைத்தேன். மணி பதினொன்னரை ஆகி இருந்தது. கட்டிலுக்கு அருகில் பாய் விரித்து, சுவரில் சாய்ந்தபடி அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவை எங்காவது சேர்த்து விடும்படி அண்ணன்களும், அக்காவும் சொன்னது ஏனோ ஞாபத்துக்கு வந்தது. அதனால் என்ன ஆகி விடப் போகிறது. அவளுக்கு நான் துணை, எனக்கு அவள் துணை. மனித மனம் எல்லா அலுப்பான வேலைகளிலும் ஒரு கட்டத்தில் ஒருவித களிப்பைக் கண்டடைந்து விடும் என்றே தோன்றுகிறது.

எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. பயங்கரமான இருமல் சத்தம் கேட்டு எழுந்தேன். விளக்கைப் போட்டு அருகில் இருந்த செம்பில் இருந்து தண்ணீரை எடுத்து அம்மாவை படுக்க வைத்து நெஞ்சைத் தடவிக் கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றினேன். தண்ணீரை வழக்கத்தை விட அதிகமாக துப்பினாள். அவள் முகம், சொல்லமுடியாத வலியை, துயரைக் கொண்டிருந்தது. தண்ணீரைக் கீழே வைத்து, நான் அவள் நெஞ்சைத் தடவத் தடவ, அவள் கண்களை அகலமாய் விரித்து வேண்டாம் என்பது போல் ஏதோ செய்தாள். அவளின் முகத்தில் எப்போதும் இருக்கும் துவேஷம் இன்று பூரணம் பெற்றது போல் அவள் கண்களை அகல விரித்திருந்தாள். நோய்ப்பட்ட உடம்பில் இத்தனை துவேஷத்துடன் கண்கள் வெளியே வருவது போல் அவளை அப்படிப் பார்க்க பயங்கரமாக இருந்தது. இது வரை அவள் அப்படிச் செய்து நான் பார்த்ததில்லை.  நான் நெஞ்சிலிருந்து கையை எடுத்ததும், கண்களை மூடிக் கொண்டு, மூச்சை இழுத்து இழுத்து விட்டாள். மூச்சு விடச் சிரமப் படுவதைப் பார்த்து, உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று எழ முயன்றால் அதே துவேஷப் பார்வை. தலையை வெட்டி வெட்டி மறுத்தாள்.

அவளை மடியில் கிடத்தியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். தலையை வெட்டியபடியே, கண்களை மூடியும், திறந்தும் போராடிக் கொண்டிருந்தாள். ஒரு கணத்தில், மூச்சை இழுத்து ஒரு விதமான விநோத ஒலியுடன் அவள் அடங்கிப் போனாள். அதன்பிறகு உடலில் எந்த அசைவும் இல்லை. அவள் நெஞ்சில் கை வைத்தேன், கண்கள் மூடியபடியே இருந்தது.

அவளின் அந்த அகன்ற பார்வைக்கும், வெட்டிய தலைக்கும் எனக்கு விடை கிடைத்தது போலத் தோன்றியது. அவளின் அத்தனை துவேஷத்துடன் நான் செய்த அன்புக்குக் கைமாறாக அதே துவேஷத்துடன் அவள் எனக்குக் காட்டிய அன்பாக அவளின் முடிவு எனக்குப் பட்டது. போதும் போடா என்று தாய் ஒரு மகனிடம் சொல்வதை போல்.

அவளின் தலையை கட்டிலில் கிடத்தி, அவளையே பார்த்து கொண்டு நின்றேன். இன்னும் முகத்தில் துவேஷம் தீர்ந்தபாடில்லை. அவளின் கால்களுக்கு அருகில் அமர்ந்து, அவளின் கால்களைப் பற்றி "நன்றிம்மா" என்றதும் ஏனோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.