"ராஞ்சானா" விமர்சனத்தின் போதே எழுத வேண்டும் என்றும் நினைத்தேன். மறந்து விட்டேன். "சிவாஜி", "எந்திரன்" படங்களின் டிரைலர் வந்த போது கூட எப்போது படம் வரும், பார்ப்போம் என்ற ஆவல் அதிகம் வரவில்லை. ஒரு தமிழ் படத்தின்  டிரைலரை பார்த்து எப்போடா இந்த படம் வரும் என்று நான் ஆவல் கொண்டது இந்தப் படத்துக்குத் தான்! [டிரைலரை கட் பண்ணவன் புத்திசாலி, எல்லா நல்ல சீனையும் அதுல வச்சுட்டான்!] அப்போதே அய்யயோ, இவ்வளவு ஆவலா இருக்கோம், டிரைலர் மாதிரி படம் இருக்குமா என்று உள்ளூர ஒரு சந்தேகமும் வந்தது.

- மரியான் என்று உண்மையில் யாருக்காவது பெயர் வைப்பார்களா? கதைக்காக தனுஷின் பெயரை  வேறு ஏதாவது வைத்து விட்டு, ஒரு குறிப்பாய் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.


- ஒரு காதல்; ஒரு பிரிவு; இருவரும் இணைந்தார்களா இல்லையா? இது தான் மரியான் கதை. என்ன புதுமையான கதை பாருங்கள்!

- பரத்பாலவுக்கு கதாபாத்திரங்களுக்கு நல்ல பெயர் வைக்கத் தெரிந்திருக்கிறது. மரியானும் சரி, பனிமலரும் சரி. அற்புதமான பெயர்கள் இல்லையா?

- இந்தக் கதையை எடுக்க பரத்பாலாவை எது உந்தியிருக்க வேண்டும் என்று யோசிக்கிறேன்? என்ன புதுசாய் இருக்கிறது இந்தக் கதையில்? தனுஷா? அப்புறம், தமிழ் மக்களுக்கு அப்பிரிக்காவின் சூடான் பிரதேசம் பரிட்சயமிருக்காது, அங்கே ரெண்டு சிறுத்தையை காட்டி மிரட்டிரலாம், அப்புறம்,  எப்படியும் இசையமைக்க ரகுமானை போட்டு விடலாம், ஒரு மினிமம் கியாரண்டி என்று நினைத்திருப்பாரோ?

- அரதப் பழசான கதையையும் நல்ல ஒரு ட்ரீட்மென்ட் மூலம் அழகாகவும், சுவாரஸ்யமாகவும் ஆக்கி விடலாம். அப்படிப்பட்ட சுவாரஸ்யங்களும் படத்தில் கம்மி தான்.

- இந்த படத்தை இரண்டரை மணி நேரம் உட்கார்ந்து மக்கள் பார்க்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தனுஷும், பார்வதியும் தான். இருவரும் அருமையாய் செய்திருக்கிறார்கள். தனுஷை பற்றி கேட்கவே வேண்டாம். காதல், வெட்கம், கோபம், பயம், என்று முகத்திலேயே ஃபுல் பாடி லாங்குவேஜ் காட்டுகிறார்.

- பார்வதி சில சமயங்களில் தேவதையாய் தெரிகிறார்; சில சமயங்களில் தேவைக்கேற்ப தெரிகிறார். மற்ற கதாநாயகிகளை நினைத்துப் பார்க்கும்போது இவர் நடிக்கத் தான் வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது!

- ரகுமானின் பெயரை போட்டதும் தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. "நெஞ்சே எழு" எனக்குப் பிடித்தது. "கடல் ராசா" பரவாயில்லை. பல்லவியை தவிர மற்ற வரிகள் ரொம்ப சாதாரணம். [பல்லவியை யாரு எழுதினா?]  மற்றபடி எல்லாம் சாதாரண பாடல்கள் தான். ஆனால் இந்தப் படத்திற்கு இத்தனை பாடல்கள் தேவையேயில்லை. அவைகள் கதைக்கு மிகப் பெரிய தொய்வை ஏற்படுத்துவதாய் உணர்ந்தேன்.

- ஒளிப்பதிவுக்காகவும் இந்தப் படத்தை பார்க்க விரும்பினேன். நான் செய்த தவறு, நங்கநல்லூர் வெற்றி தியேட்டருக்கு சென்றது. படத்தின் ஆரம்ப காட்சிகள் அதீத ஒளியுடன் இருந்தது. சரி ஆப்ரிக்க வெயிலை அப்படி படம் பிடித்திருப்பார்கள் என்று நினைத்தேன். கருமம், படம் முடியும் வரை அப்படித் தான் இருந்தது. கடலின் நீலமே கண்ணுக்குத் தெரியவில்லை! ஒளியும் சரியில்லை, ஒலியும் சரியில்லை!

- ஆக மொத்தத்தில் என்னை பொருத்தவரை, படத்தில் நடிகர்கள் நன்றாய் நடிக்கிறார்களோ இல்லையோ, படத்தின் பிரஸ் மீட்டுகளில் "இப்படி ஒரு படத்தை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது!" இந்தப் படத்தை நான் ஒத்துக்கிட்டதே இந்த படத்தோட கதைக்காக தான் என்றெல்லாம் பீலா விட்டு, இமாலய நடிப்பு நடித்து நம் பையில் உள்ள நூறு ரூபாயை புடுங்கிக் கொள்கிறார்கள்.



"லுடேரா" படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்துத் தான் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். நேற்று மாலை ஷோ அருகில் எங்கும் தென்படவில்லை. இன்று ஒரு படம் பார்த்தாக வேண்டும் என்று மனது அடித்துக் கொண்டது. அலுவலகம் விட்ட வழியிலேயே தியேட்டர்...டிக்கட்டும் எளிதாய் கிடைத்து விடும். உடனடியாய் படம் பார்க்க வேண்டும் என்றால் அங்கு தான் போயாக வேண்டும். அந்தப் படத்தை தான் பார்த்தாக வேண்டும். வேறு வழியே இல்லை! மனதை திடப்படுத்திக் கொண்டேன். கட் பண்ணா...

வெற்றி தியேட்டர், சிங்கம் II! இந்த மாதிரி படங்களுக்கு எவ்வளவு சீப்பாய் முடியுமோ, அவ்வளவு சீப்பாய் முடித்துக் கொள்வது என் வழக்கம். இருந்தும் என்னமோ நேற்று சொகுசாய் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. 150 ரூபாய் டிக்கட் வாங்கிக் கொண்டேன். வண்டி வைத்து விட்டு டோக்கன் வாங்கும்போது என் முன்னாள் இருந்த பெண்மணி டோக்கன் வாங்கிக் கொண்டே தள்ளி நின்ற கணவரிடம் என்னாச்சு, என்னாச்சு, என்னாச்சு என்று கேட்டுக் கொண்டே சென்றார். என்னையும் அறியாமல், "கிரிக்கெட் வெளயாண்டோம்!" என்று சொல்லி விட்டேன். நல்ல வேளை அவர் காதில் விழவில்லை. டோக்கன் கொடுப்பவர் சிரித்துக் கொண்டார். நான் உள்ளே எஸ்கேப்! நல்ல ஏ. சி. போட்டு, ஃபேன் வேறு  போட்டிருந்தார்கள். ஜில்லென்று இருந்தது. பக்கத்தில் ஒரு குடும்பம் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் வீட்டிலிருந்து ஒரு அரிசி மூட்டையை கொண்டு வந்திருந்தார்கள். படம் ஆரம்பிக்கவேயில்லை, அதற்குள், பப்ஸ், சிப்ஸ் என்று போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். பரவாயில்லையே, வீட்டிலிருந்தெல்லாம் எடுத்துட்டு வர அனுமதிக்கிராங்களே இந்த தியேட்டர்ல என்று நினைத்துக் கொண்டேன். படம் ஆரம்பித்தது!

ஒரு பெரிய சிங்கம் உறும, அது அப்படியே கிராபிக்ஸ்சில் இரண்டாய் பிரிந்து, ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்க அப்படியே சிங்கம் II என்ற லோகோவை போட்டார்கள். எனக்கு பகீர் என்றது. கொஞ்சம் அவசரபட்டுட்டோமோ என்று வடிவேலு மாதிரி ஃபீலிங்கோடு படம் பார்க்க ஆரம்பித்தேன்.

படம் ஆரம்பித்தவுடன் ஹோம் மினிஸ்டர், துரைசிங்கத்தை ரோட்டில் வைத்தே "நம்ம பிளான்படி ராஜினாமா பண்ணிட்டீங்க. இனிமே தூத்துக் குடியில அண்டர் கவர்ல இருங்க!" என்று கட்டளை இடுகிறார். இப்படி ஒரு ஹோம் மினிஸ்டர் நமக்கு இல்லாம போயிட்டாரே என்று இருந்தது. கட் பண்ணா, தூத்துக்குடி கடலை ஜிம்மி ஜிப்பில் அப்படியே ஒரு சுற்று சுற்றி ஒரு கப்பலில் வந்து நின்றால் அஞ்சலி தன்னோட இடுப்பை ஆட்ட [க்ளாப்ஸ் அள்ள] ஒரு பாட்டு. "ஆரம்பிச்சிட்டாங்களே!...உனக்கு வேணும்டா" என்று மனசு திட்டியது. சரி, விடு, கேவலமா திட்டி ஒரு போஸ்ட் போட்டா போவுதுன்னு மனசை தேத்திட்டு படம் பார்த்து முடிச்சேன். இப்போ இந்தா இந்த போஸ்ட்!

ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்! இந்தப் படத்தை நான் திட்டப் போறதில்லை. ஏனென்றால் படம் பார்த்து முடித்தவுடன் ஹரி என்னை அந்த அளவுக்கு மாற்றி விட்டார். ஒரு வெற்றிப் படத்தை எடுத்து விட்டு, அதை தொடர்ந்து அடுத்த பாகத்தை அதே விதத்தில் எடுப்பது கடினம். ஹரி கனகச்சிதமாய் அதை செய்திருக்கிறார்! உண்மையான சிங்கம் ஹரி தான்! படத்தின் காட்சிகளில் டாடா சுமோக்கள் "எண்பது" கிலோமீட்டர் ஸ்பீடில் பறந்தால், திரைக்கதை ஜெட் ஸ்பீடில் பறக்கிறது. நான் "சி" செண்டருக்குத் தான் படம் எடுக்கிறேன் என்பதில் ஹரி தெளிவாய் இருக்கிறார். அதில் நேர்மையாய் இருக்கிறார், முக்கியமாய் அதை சரியாய் செய்கிறார். வழக்கமான போலீஸ் திருடன் கதை தான் என்றாலும் திரைக்கதையில் நிறைய உழைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

ஹரி சீன்களை  பிடிக்கும் விதம் எப்போதுமே பர பர தான். அது "சாமி"யாய் இருக்கட்டும், "அருளாய்" இருக்கட்டும், "ஐயா"வாய் இருக்கட்டும், சிங்கமாய் இருக்கட்டும்! நானும் திரைக்கதை எல்லாம் எழுதி பார்ப்பதால் சொல்கிறேன், சீன் பிடிப்பது சாதாரண விஷயமே கிடையாது. லைன் பிடித்து விடலாம். ஆனால் அதை படிப்படியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, இதுவரை வராத மாதிரி, அதுவும் சுவாரஸ்யமாய் எடுத்துச் செல்லவது மிகக் கடினம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒரு லவ் சப்ஜக்ட் என்றால் எப்படி காட்சிகளை வைப்பீர்கள்? இதுவரை தமிழ் சினிமாவில் காதலை தவிர்த்து வந்த படங்களை எண்ணி விடலாம். அப்படி இருக்கும்போது இதில் புதிதாய் என்ன செய்வது? எப்படி சுவாரஸ்யம் ஆக்குவது, மண்டை காய்ந்து விடும். காதலுக்கே இப்படி என்றால் திருடன் போலீஸ் கதையில் ஸ்கோப் அதை விட கம்மி. அதனால் தான் சொல்கிறேன் அதிலும், ஹரி தன் படங்களில் கூடிய மட்டும் லாஜிக்குகளை சரியாய் வைப்பார் என்பது என் கருத்து. இந்தப் படத்தையே எடுத்துக் கொள்வோம்.

சிங்கம் பெரிய ஹிட். அதன் அடுத்த பாகம் கொஞ்சம் பெரிய canves ல் இருந்தால் தான் சுவாரஸ்யமாய் இருக்கும். அதற்கு என்ன செய்யலாம்? ஒரு இன்டர்நேஷ னல் கள்ளக்கடத்தல்காரனுக்கும், லோக்கல் தாதாக்களுக்கும் கனெக்ஷன். சென்ற பாகத்தில் துரைசிங்கம் வேலையை விட்டு விட்டார். ஆனால் படம் ஆரம்பித்தவுடன் அவர் அண்டர்கவரில் இருக்கிறார் என்று நம்மை தெளிவு படுத்தி விடுகிறார். ஆயுதக் கடத்தலை பற்றி துப்பு துலக்க ஆரம்பிக்கிறார். ஆனால் அது போதை மருந்து கடத்தலில் சென்று நிற்கிறது. அண்டர்கவரில் இருந்தால், யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி அவர் என்ன வேலை செய்யலாம்? என்.சி.சி. ஆபிசர். முதல் பாகத்தில் சொல்வது போல் பலசரக்குக் கடை வைக்கவில்லை, ஏன் என்றால் அதில் ஸ்கோப் அதிகம் இல்லை. என்.சி.சி. ஆபிசராய் இருக்கும்போது இருக்கும் கெத்து அண்ணாச்சி கடையில் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்தால் கிடைக்காது. அதோடு போன தடவை அனுஷ்கா மட்டும். இந்த முறை இன்னும் கொஞ்சம் கிளாமர் ஏற்ற வேண்டும், அதற்கு ஹன்சிகா. அவர் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் மாணவி. அவள் காதலில் விழுவது, அனுஷ்காவுக்கும் இவருக்கும் ஏன் இன்னும் கல்யாணம் ஆகவில்லை, மூன்று லோக்கல் தாதாக்கள், அதில் இருவர் எதிரிகளாய் நடிப்பது, அவர்கள் மூவருக்கும் இன்டர்நேஷனல் தாத்தாவுடன் தொடர்பு. ஒவ்வொன்றாய் துரைசிங்கம் துப்பு துலக்கும் அழகு...ஒவ்வொரு காட்சிக்கும் அப்படி ஒரு முடிச்சு! அப்படி ஒரு வேகம், அப்படி ஒரு சுவாரஸ்யம். என்ன, பிரதீப் இப்படி ஆயிட்டானேன்னு நெனைக்காதீங்க, நான் உலக சினிமாவோடு இதை நிறுத்தி பார்க்கவில்லை. மாஸ் படம் என்று வரும் மரண மொக்கை படங்களுடன் இதை நிறுத்துப் பார்த்தால் இது சூப்பர் படம் தான்!

சூர்யா அபாரமாய் உழைத்திருக்கிறார். துரைசிங்கமாய் விரைப்புடன் அவர் நடப்பது, நடிப்பது கிளாஸ். கிட்டத்தட்ட ஒரு நாற்பது, ஐம்பது பேரை பாய்ந்து பாய்ந்து அடித்து சாய்க்கிறார். ஹன்சிகாவையே தூக்கி விட்டாரே என்று நினைத்தேன், கடைசியில் பார்த்தால் அந்த நைஜீரிய வில்லனையே தூக்கி சுற்றுகிறார்! அடேயப்பா! சாதிக் கலவரத்தின் போது நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருப்பதை பார்த்து சார்ஜ் எடுத்துக் கொள்ள யுனிஃபார்ம் மாட்டும்போது தியேட்டரில் அத்தனை பேரும் துரைசிங்கமாய் மாறி விடுகிறோம்! இண்டர்வல் ப்ளாக் செம!!

ஹன்சிகா பள்ளி சீருடையில் பாந்தமாய் இருக்கிறார். சூர்யாவை பார்த்து உருகினாலும், கனவில் பாட்டு பாடி உயிரெடுக்கவில்லை. இன்னும் கொஞ்சம் உதட்டசைவில் கவனம் செலுத்தலாம்.

அனுஷ்கா...நான் துரைசிங்கமாய் இருந்தால், அனுஷ்காவை ஓரம்கட்டி விட்டு, ஹன்சிகாவின் காதலை ஏற்றிருப்பேன்! முதல் பாகத்துக்கும் இந்த பாகத்துக்கும் ஏதோ பத்து வருட இடைவெளி மாதிரி இருக்கிறார். பெண்களுக்குத் தான் எவ்வளவு வேகமாக வயதாகிவிடுகிறது. பாவம்!!

சந்தானத்தின் காட்டில் பேய் மழை! "ஒரு வெட்டுக்கு மூன்று துண்டு" என்று இவர் சொல்ல, பதிலுக்கு ஒருவர், " ஒரு வெட்டுக்கு ரெண்டு துண்டு தான்" என்று சொன்னவுடன், சந்தானம் பதிலுக்கு, "நான் வெட்டும்போது அவன் கழுத்துல துண்டு போட்டுருந்தான், அதையும் சேத்து சொன்னேன்!" என்பது கிளாசிக் சந்தானம். "பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே!" என்றால் தியேட்டர் குலுங்குகிறது.

விவேக் இந்தப் பாகத்தில் ரொம்ப அடி வாங்குன செம்பு!

நைஜீரிய வில்லன் நல்ல உடல்மொழி. அவ்வளவு பெரிய வில்லன் துரைசிங்கத்திடம் இவ்வளவு பயப்படுவானா என்று இருந்தது. சிங்கத்திடம் தப்பித்து, கடலுக்குள் செல்லாமல், கரையில் இருந்தே அவர் ஏதாவது செய்திருக்கலாம். இன்னும் சுவாரஸ்யம் கூடி இருக்கும் என்று நினைக்கிறேன்.

மற்றபடி ரகுமான், விஜயகுமார், ராதாரவி, நாசர், அந்த சோப்பு விளம்பரம் ஆண்டி, யுவராணி, சுமித்ரா, நிழல்கள் ரவி ஆல் வெல் பிரசன்ட்!

படத்தில் துரைசிங்கம் டி.எஸ்.பி. படத்தின் இசையும் டி.எஸ்.பி. லெட் சிங்கம் டான்சும், "கண்ணுக்குள்ள கன்னு வச்சி என்னை கொல்லாதே", ஒகே! மற்றபடி இரைச்சல்.

சிங்கம் II எனக்கு ஓகேப்பா!!

ஒரு பெண்ணின் பின்னால் பைத்தியமாய் திரிபவனை வட இந்தியாவில், அதுவும் குறிப்பாய் பஞ்சாப் மாநிலத்தில் "ராஞ்சானா" என்று அழைப்பதுண்டு. நம் ஊரில் அம்பிகாபதி, அமராவதி போல், அவர்கள் ஊரில் ஹீர், ராஞ்சா! [காலா காலத்துக்கும், ஊருக்கு ஒரு அமர காதல் காவியம் இருந்தும் இன்றும் காதலை எதிர்க்கிறார்கள்!] ராஞ்சா ஹீரின் பின்னால் காதல் பைத்தியம் பிடித்து சுற்றியது போல் இந்தப் படத்தில் தனுஷ் சோனம் கப்பூரை சுற்றுகிறார். "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் இளைஞர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்பது போல்...அவரின் காதலுக்காகவும் அவளின் ஒரு கடைக்கண் பார்வைக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணிக்கிறார். அதனால் "ராஞ்சானா"

தனுஷுக்கு இதை விட அற்புதமான என்ட்ரி பாலிவுட்டில் கிடைப்பது அரிது. இந்தப் படம் எப்படி சாத்தியமானது என்றே ஆச்சர்யமாய் இருக்கிறது. "கொலைவெறி" பாடல் என்ன தான் புகழ் பெற்றாலும், தனுஷை கூப்பிட்டு படம் முழுதும் வியாபித்திருக்கும் [படம் விட்ட பிறகு நம் மனமெங்கும் வியாபித்து விடுகிறார்!] ஒரு கதாபாத்திரத்தை கொடுப்பதென்றால் சாதரணமா? அதுவும் செக்கச் செவேல் வட இந்தியர்கள், தனுஷ் மாதிரி ஒரு மாநிற ஒல்லிபிச்சானை எப்படி யோசித்தார்கள்? தனுஷை இந்த அளவு தூக்கி நிறுத்த அபே தியோல் வேறு உப்புக்குச் சப்பாணி போல் வந்து போகிறார். கேட்டால், இந்தக் கதைக்கு தனுஷ் தான் பொருந்துவார் என்று காதில் பூ சுற்றுகிறார்கள். புரியவில்லை. ஒரு வேலை, தேசிய விருது செய்த மாயமோ? இருந்தும், இது ஒரு இனிய ஆச்சர்யம் தான். அதே ஆச்சர்யம் இது வரை தனுஷை பார்க்காத வட இந்தியர்களுக்கும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தனுஷ் பட்டையை கிளப்பி இருக்கிறார். [இதற்கு வேறு வார்த்தையே இல்லையா? "ரவுசு விட்டிருக்கிறார்" எப்படி?]

தனுஷ் உடலில் சதை போடாத வரை, இன்னும் பத்து வருடங்களுக்கு பள்ளியில் படிக்கும் பையனாக நடிக்கலாம்! அவர் உடலின் தன்மையை வைத்து மட்டும் சொல்லவில்லை, நடிப்பில் அவரின் உடல் மொழியையும் பார்த்து சொல்கிறேன். அந்த விடலை வயதிற்கே உரிய துருதுருப்பு, குறுகுறுப்பு, சுறுசுறுப்பு என்று எல்லா பருப்புக்களையும் தன் உடல்மொழியில் கொண்டு வந்து விடுகிறார். "3" படத்திலேயே நாம் பார்த்து விட்டாலும், "வட" இந்தியர்கள் "அட!" போட்டிருப்பார்கள் என்பது நிச்சயம்! தனுஷ் பத்து வருடத்துக்கு முன்னால் சேர்ந்தாற்போல் நாலு வார்த்தை இங்கிலீஷ் கூட பேசத் தெரியாதவராய் இருந்தார். இன்று ஹிந்தி, இங்கிலீஷ் என்று சகலத்திலும் செம! ஆங்காங்கே ஹிந்தி உச்சரிப்பு சரியாய் வர வேண்டும் என்று அழுத்தி பேசியது தெரிகிறது, ஆனால் பெரும்பாலான இடங்களில் அசத்தல், அக்மார்க் ஹிந்தி!



தனுஷின் உடல்மொழியை பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லை? பல இடங்களில் அவரது நடிப்பில், உடல் மொழியில், ரஜினியை பார்க்கிறேன். பல்லைக் கடித்துக் கொண்டே, சிரித்தபடி ஓடும்போதும், இடுப்பில் கை வைத்துக் கொள்ளும்போதும், சில க்ளோசப்புகளில் தெரிகிறது! அவர் தெரிந்து செய்கிறாரா, அல்லது இயல்பாய் அப்படி வந்து விடுகிறதா தெரியவில்லை. நான் எல்லாம் ரஜினி படம் பார்க்கும்போது நானே பாதி ரஜினியாய் தான் இருப்பேன். அவர் பேசப் பேச, நமக்கும் கண்கள் சிறுத்து, மூக்கு புடைத்து விடும்! ரஜினி மாதிரி மாறும் ஃபீல் நமக்கு நல்ல தான் இருக்கும், அப்போது நம்மை பார்ப்பவர்களை அது செம காண்டாக்கிவிடும். அதனால் இதையெல்லாம் தனுஷ் குறைத்துக் கொள்வது நல்லது. அவருக்குத் தான் நல்லா நடிக்க வருதே, அப்புறம் எதுக்கு இதெல்லாம்?



படம் முழுதும் தனுஷ், தனுஷ், தனுஷ் தான். சிரிக்கிறார், முறைக்கிறார், அழுகிறார். கதை ஒன்றும் புதுமையான கதை இல்லை. ஒரு பையன், ஒரு பெண்ணை சின்ன வயதில் இருந்தே காதலிக்கிறான். விஷயம் தெரிந்து அந்தப் பெண்ணை ஊர் கடத்தி விடுகிறார்கள். பல வருஷம் கழித்து திரும்பு வரும் அவள் இவனை சுத்தமாய் மறந்து வேறொருவனை காதலிக்கிறாள். அவனை கல்யாணம் பண்ண அவள் இவனின் உதவியையே நாடுகிறாள். தனுஷ் செய்த பிழையால் கல்யாணம் நின்று, அந்தப் பையன் இறந்து விடுகிறான். அந்த குற்ற உணர்வில் அவளுக்காகவே அவன் வாழ முற்படுகிறான். இறுதியில் அவளுக்காகவே உயிர் துறக்கிறான். எண்ட் டைட்டிலுக்கு வெள்ளித் திரையை பார்க்க! [பின்ன? நான் தான் ஃபுல்லா சொல்லிட்டேனே!]

முதல் பாதியில் க்யுட்டாய் ஒரு சிறு நகரில் உலவி வந்த ஒரு சாதாரண பையன் இடைவேளைக்குப் பிறகு சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு ஆகி விடுகிறார். தனுஷ் தொட்டதெல்லாம் துலங்குகிறது, எந்த பிரச்சனை வந்தாலும் தனி ஆளாய் சரி செய்து விடுகிறார். எனக்கு என்னமோ, "திருவிளையாடல் ஆரம்பம்" படம் பார்த்த மாதிரி இருந்தது. தனுஷின் ஹிந்தி மற்றும் நடிப்பு தான் படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது.

சோனம் கபூர் தட்டையாய், நெடு நெடுவென்று இருக்கிறார். முதல் பாதியிலும், பின் பாதியிலும் அந்தக் கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

அபே தியோல் சிறிது நேரம் வந்தாலும் அருமையாய் செய்திருக்கிறார். வழக்கமாய் படத்தில் வருவதை போல் காதலியின் காதலன் கெட்டவன் என்று காட்டாதது ஒரு ஆறுதல்!

தனுஷின் நண்பன் கதாப்பாத்திரமும், தனுஷை நினைத்து உருகும் அந்த தெத்துப் பல் பெண்ணும் நல்ல தெரிவு. தனுஷ் சோனமை எவ்வளவு காதலித்தாரோ, அதை விட பல மடங்கு அந்தப் பெண் தனுஷை காதலிக்கிறார். அவரின் கதையை "ஹீரானா" என்று ஒரு படம் எடுக்கலாம்!

ரகுமானின் இசையில் தும் தக், ராஞ்சானா பாடல்கள் அருமை. தனுஷின் ஹிந்திக்காகவும், நடிப்புக்காகவும் பார்க்கலாம்!
சீரு கெட்ட சமூகமிது
சாதி கட்டி அழுவுது
கரி படிஞ்ச தன் முகத்தை
சேறு கொண்டு கழுவுது

அன்பு ஒன்ன விட்டுட்டு
அழிவு தேடி ஓடுது
வெட்டருவா கையுமா
வெறி கொண்டு அலையுது

நாகரீகம் வளந்து போச்சு
நாட்டில் பல வகையில
ஆயிரம் தான் படிச்சாலும்
அறிவு இன்னும் வளரல

சாதி வெறி தன்னாலே
நல்ல குடி கெட்டுது
இந்த நாட்டில் வாழ
மூச்சு எனக்கு முட்டுது

சட்ட திட்டம் வகுத்திருந்தும் 
சாதி வெறி போவல
கேடு கெட்ட சனங்களே
ஆதி மனுஷன் தேவல

* இளவரசனின் மரணம்!
சத்திரத்தில் கிடக்க வேண்டும். வானம் இருட்டிக் கொண்டு வருகிறது. சேலை நுனி சிவப்பாய், இல்லை கருஞ் சிவப்பாய் அப்படியே பரப்பிக் கொண்டே ஓடுகிறாள், சினிமாவில் கனவுக் காட்சியில் ஓடுவதை போல...ஒரு நீரோடை ஓடுகிறது. எங்கும் யவ்வனம். அமைதி. சாந்தி. என் கண்களை மூடி ரசிக்கிறேன். காற்று என் முகத்தில் அறைகிறது. தூரத்தில் ஒரு யானை தண்ணீர் குடிக்கிறது. மனதில் தோன்றுவதை நான் அப்படியே எழுதவில்லை, இங்கு எழுதக் கூடியதை மட்டும் எழுதுகிறேன் என்று தெரிகிறது. மீண்டும் மீண்டும் மனதில் முலைகள் தெரிகிறது. நல்ல ஓங்கு தாங்கான முலைகள். முகம் தெரியவில்லை. வானத்தின் நீலம் தண்ணீரில் தெறிக்கிறது. மீன்கள் துள்ளி ஓடுகின்றன. ஓடையின் சத்தம் ரம்மியமாய் இருக்கிறது. நான் ஒரு கட்டில் தான் உட்கார்ந்திருக்கிறேன். கருப்பு சேலை உடுத்திய பெண். சிவந்த பொட்டு நெற்றியில் இட்டு என்னை பார்த்து சிரிக்கிறாள். அவள் ஏனோ சானா கானை போல் இருக்கிறாள். சானாவை ஏன் நினைத்தோம் என்று நினைக்கும்போது வித்யா பாலன் தோன்றி மறைகிறார். ஒரு ஆணின் மனம் என்ன நினைக்கிறது என்று ஆராய்ந்தால் அதில் முக்கால்வாசி பெண்களின் ஞாபகம் தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

திடீரென்று மேல் சொன்ன அத்தனையும் ஒரு சினிமா படம் போல் திரைக்குள் போய் விடுகிறது. ஒரு திரையரங்கு தெரிகிறது. மக்கள் மெய் மறந்து இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எங்கே என்று தேடுகிறேன். யாரோ ஆர்டர் செய்த தின்பண்டங்களை எடுத்துக் கொண்டு ஒருவன் இருட்டுக்குள் தட்டுத் தடுமாறி வருகிறான். திடீரென்று சென்னையின் முக்கியமான சாலை தெரிகிறது. எல்.ஐ.சி. பில்டிங் தானே அது? எத்தனை வாகனங்கள். விர் விர்ரென்று போகின்றன. எதிரில் உள்ள கட்டிடத்தில் வாழை இலை போல் உள்ள ஒன்று மயில் தோகை போல் விரிந்து பரந்திருக்கிறது. மயில் என்றதும் நேற்று செய்தித்தாளில் படித்த மயில்கள் இறந்த செய்தி ஞாபகம் வருகிறது. மூளையின் திறனை நினைத்து வியக்கிறேன். எப்படி முடிச்சுப் போடுகிறது ஒவ்வொரு ஞாபகத்திற்கும். கருப்பு நிறப் பெட்டியும், சைதாப்பேட்டையும் தெரிகிறது. அங்கு ஆட்கள் சாலையை கடக்கிறார்கள். அருகில் ஹெல்மட் அணிந்த ஒருவன் கிளம்பத் தயாராயிருக்கிறான். இவன் எங்கு போய்க் கொண்டிருப்பான்? இவன் கதை என்ன? எத்தனை மனிதர்கள், எத்தனை வாழ்க்கை? எத்தனை கதைகள்? யார் இவர்கள்? இந்தக் கணத்தில் இவர்களுடன் நான் இருக்க எது என்னை விதித்தது? உளறாதே என்கிறது மனம்.

ராஜ்பவன் வரை வந்து விட்டேன். அந்த கேட்டை தாண்டி என்ன ஒரு அமைதி. இரு காவலர்கள் காவல் காத்து நிற்கிறார்கள். ஒரு இலக்கில்லாத பயணம் போல உள் செல்கிறது ஒரு தார் சாலை. ஒரு குப்பை இல்லை. கவர்னர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? கவர்னர் என்றதும் ஏன் தலைப்பாகை போட்ட ராதாகிருஷ்ணன் ஞாபகம் வருகிறார். ரோசைய்யாவை ஞாபகப்படுத்திக் கொண்டேன். வழுக்கை தலை, வயதான ஆள். குர்தா, வேஷ்டியில் மெல்ல படியிறங்குவது போல்! மான்கள் அவரை வழி மறிக்கவில்லை தான், மறித்தால் எப்படி இருக்கும்? மான்கள் விளையாடும் ஒரு பெரிய பங்களாவில் தனக்கு வாழ்க்கை வாய்த்திருப்பதை நினைத்து அவர் என்றாவது மகிழ்ந்திருப்பாரா? அத்தனை ரசனை உள்ளதாய் இருக்குமா அவர் வாழ்க்கை? புள்ளி மான்கள் என்ன அழகு!

"ஒரு டீக்கடையை" நினைத்துப் பார்க்கிறாயா என்று ஒரு கோடு காட்டி விட்டு மேலும் தொடர்கிறது மனம். மாஸ்டர் டீயை உயர உயர அத்துகிறார். ஜனங்கள் சாலையை வெறித்தபடி, வாழ்க்கையை வெறுத்தபடி [இந்த வாக்கியத்தை என்னுள் இருந்த அறிவுஜீவி எழுத்தாளன் கோர்த்துக் கொள்கிறான்!] டீ குடிக்கிறார்கள். வாகங்களின் இரைச்சல், புகை...அப்பப்பா..என்ன நகரம் இது? நரகம்! மனம் மூனாரை கற்பனை செய்கிறது. எத்தனை வேறுபாடு. பச்சை கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது. அந்த அழகை ரசிப்பதற்குள், ஒரு தேயிலை செடியின் கீழ் யாரோ குடித்துப் போட்ட பிளாஸ்டிக் கப் கண்ணில் படுகிறது. முகம் வாடுகிறது. பெரியவர்களை மதிப்பது நல்ல பழக்கம். அப்படி என்றால் இயற்கை எவ்வளவு பெரியவர்? ஏன் அவரை நாம் மதிப்பதே இல்லை? திடீரென்று அங்கிருக்கும் கட்டடங்கள் சரிந்து விழுகிறதை நான் எழுதப் போவதில்லை. உத்தரகண்டில் நடந்ததை பார்த்து விட்டு காப்பி அடித்து விட்டான் என்று சொல்வார்கள்.

அடுத்து நினைப்பதை அடுத்த பாராவிற்குள் எழுத வேண்டும் என்று மனம் கட்டளையிடுகிறது. அதன் கட்டளைப்படி...கட்டளைப்படி நடக்க வேண்டும், தொட்டனைப்பதே எனக்குப் போதும். ஒரு இறைவன் வரைந்த கதை..புதிய கவிதை..புதிய கவிதை..கதை முடிவும் தெரியவில்லை! ஆஅ.........ஒரு கிளியின் தனிமையிலே இரு கிளியின் உறவு, உறவு உறவு உறவு உறவு...ஏசுதாசுடன் சித்ராவின் குரல் மனதில் கேட்கிறது. அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் இப்போது பார்த்தால் சிரிப்பாய் இருக்கிறது. இந்த அளவு கற்பனை வறட்சி உள்ளவர்களுக்கா இளையராஜா அப்படி பாட்டு போட்டுக் கொடுத்தார்? மணிரத்னம் தான் கொஞ்சம் ஜஸ்டிஃபை செய்தார். இதை தமிழில் எப்படி எழுதுவது? ஜஸ்டிஃபை செய்தார் என்பதை? எவ்வளவு யோசித்தும் வரவில்லை. நம் தாய்மொழியில் எழுதுவதற்கு நமக்கு வரமாட்டேன் என்கிறது!

தாய்மொழி என்றதும் பள்ளியில் படித்த நிறைய செய்யுள் உனக்கு இன்னும் மனப்பாடமாய் தெரியுமே, என்று மனம் ஞாபகப்படுத்துகிறது. அன்று அப்படி பீற்றிக் கொண்டு இரண்டு வரி பாடியதும் மறந்திருந்தது தெரிந்தது. பாதகமில்லை. மீண்டும் முயற்சிக்கலாம். அங்கிங்கெனாதபடி ஆனந்த பூர்த்தியாகி, இடையில் ஏதோ வருமே...[கடைசியில் ஞாபகம் வந்தது, எங்கும் பிரகாசமாய்] தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் படிக்கிச்சை...மறந்து விட்டது. இது ஏழாவதில் வந்த செய்யுள். மெய்தான் அரும்பி விதி விதிர்த்து உன் விரையார் கழர்க்கென் கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய் தான் போற்றி சய சய போற்றி என்னும் உடையாய் என்னை கண்டு கொள்ளே! இல்லை, சொதப்புகிறேன். எட்டாவது பாடமும் மறந்து விட்டது. எல்லாம் மறந்து விட்டது. எப்போது மறந்தது? இந்த செய்யுள்களை ஞாபக அடுக்கிலிருந்து கழட்டி விடலாம் என்று மூளை எப்படி முடிவெடுத்தது? எனக்குத் தேவைப்படாது என்று அதற்கு எப்படித் தெரியும்? புரியவில்லை.

என்னங்க மண்டை காய்ஞ்சுருச்சா? நிறுத்திட்டேன். ஒண்ணுமில்லை. கண்ணை மூடி கொஞ்சம் சிந்திச்ச நம்ம மனம் எவ்வளவு யோசிக்குது? அதை ஆவணப்படுத்தினா எப்படி இருக்கும்னு ஒரு விபரீத ஆசை. மனம் யோசிப்பதை எழுதினேனா, அல்லது இதை எல்லாம் யோசி என்று மறைமுகமா அதை தூண்டினேனா தெரியவில்லை. இன்னும் ராவா வரும்னு தான் நெனைச்சேன். இன்னொரு தடவை இரக்கமேயில்லாமல் கத்தரிக்காமல், வெட்டி ஒட்டாமல் எழுதி பாக்கணும். முதலில் எனக்கு இந்த நினைப்பு 2005ல் வந்தது. பலமுறை எழுதி எழுதி பார்த்தேன். இப்போது தான் ஒரு கோர்வையாய் வந்திருப்பது போல் தோன்றுகிறது. பரவாயில்லை, வெட்டி ஒட்டி எழுதினாலும், என் மனம் அத்தனை அசிங்கமாய் எதையும் யோசிக்கவில்லை. ஒருவேளை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்து கொஞ்சம் பொறுப்புடன் அது செயல்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இப்போ என் மனம் என்ன சொல்லுதுன்னா...முன்பு வலையுலகில் மற்றவருக்கு அழைப்பு விடுத்து விளையாடுவது போல் [அப்படி எந்த விளையாட்டும் இப்போது நடப்பதில்லையா?] இதை விளையாடி பார்க்கலாமேன்னுது! என்ன சொல்றீங்க? உங்க மனம் என்ன சொல்லுதுன்னு எழுதி பாருங்களேன்! சுவாரஸ்யமா இருக்காது? இதுக்கு முன்னாடி இந்த மாதிரி யாரவது முயற்சி பண்ணியிருக்காங்களா?
விஸ்வரூபம் படத்தில் கமலின் "Directorial Touches" விளக்கிக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் ஓடுகிறது. கமல் புத்திசாலி. திரை மொழி நன்கு அறிந்தவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரின் அத்தனை அறிவையும், திரை ஞானத்தையும் வைத்துக் கொண்டு எந்த மாதிரி படங்களை எடுக்கிறார் என்பதில் தான் எனக்கு ஒரு உறுத்தல். விஸ்வரூபம் படத்தையே எடுத்துக் கொள்வோம். அது ஒரு மிகச் சாதாரண மசாலா படம். துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்சை வைத்து ஜல்லி அடித்த மாதிரி இதில் சீசேம் செல்சை வைத்து ஜல்லி அடித்து இருக்கிறார்கள். [தாங்க்ஸ் வாத்தியார்!]

படத்தின் ஆரம்பத்தில் ஒருவன் மிக நல்லவனாய், அமைதியானவனாய், அம்மாஞ்சியாய் இருப்பான், அவனே ஒரு சந்தர்ப்பத்தில் முப்பது பேரை பறந்து பறந்து [மறைக்கப்பட்ட ரோப்பை பிடித்திருக்கும் கையை கவனிக்கவும்!] அடிப்பான் என்று இனிமேல் தமிழ் சினிமாவில் யாராவது படம் எடுத்தால் உண்மையில் நானே அப்படி மாறி அந்த படம் எடுத்தவர்கள் அத்தனை போரையும் பறந்து பறந்து அடிப்பேன்! இன்னும் எத்தனை வருஷம்யா இதே கதையை சொல்லுவீங்க? உங்களுக்கு ட்விஸ்ட் தானே வேணும்? நான் சொல்ற மாதிரி செய்யுங்க! படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன், அம்மாஞ்சியாய் அப்பாவியாய் இருப்பான். அவன் படம் முடியும் வரை அப்படியே இருப்பான்! மக்கள் எல்லோரும் இவன் விஸ்வரூபம் எடுப்பாண்டா என்றே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அனால், அவன் கடைசி வரை அப்படியே இருப்பான். எப்படி ட்விஸ்ட்? [என்ன கழுத, படம் ஓடாது!]


அந்த வீடியோவுக்கு வருவோம். கமல் விஸ்வரூபம் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் போகிற போக்கில் கதைக்கு தேவையான பல விஷயங்களை பூடகமாக சொல்லிக் கொண்டே போகிறார். அதை திரும்ப திரும்ப பார்த்தால் தான் புரியும் என்கிறார்கள். கண்டிப்பாய் நானும் ஒத்துக் கொள்கிறேன். பூடகமாக பல விஷயங்களை வைத்திருக்கிறார் தான். ஆனால் அவர் எப்படிப்பட்ட ஒரு கதைக்காக இதை எல்லாம் செய்கிறார் என்பதில் தானே அதன் வலு குறைந்து விடுகிறது! "நோலன்" படங்களில், "குப்ரிக்" படங்களில் இப்படி பல விஷயங்கள் பூடகமாய் இருக்கும். அதோடு நல்ல ஒரு கதையும் இருக்கும். அந்தக் கதையின் கருவை நினைத்து, பிரமித்து, மீண்டும் மீண்டும் நாம் பார்க்கும் போது அடப்பாவி, இங்கேயே இதை சொல்லிட்டானா என்று ஆச்சர்யமாய் இருக்கும். அது அற்புதமான ஒரு படானுபவத்தை கொடுக்கும். இந்த மாதிரி படங்களை அலசி ஆராய்ந்து நூறு பதிவுகள் இருக்கிறதே, அவைகளை படியுங்கள்.

நான், கஜினி படம் பார்க்கும்போது பதினைந்து நிமிடத்தில் மறக்கும் ஒருவனால் எப்படி கொலை எல்லாம் செய்ய முடியும்? எல்லாவற்றையும் அவன் ஞாபகப்படுத்திப் பார்ப்பதற்குள் மறுபடியும் மறந்து விடுவானே என்ற கேள்வி தான் என் மனதில் இருந்தது! படம் கலகலவென்றும், விருவிருவென்றும் இருந்தாலும், அந்த லாஜிக் இடைஞ்சலே என்னை அதிகம் தொந்தரவு செய்தது. அதுவே அந்தப் படத்தின் மூலமான மெமெண்டோவை பாருங்கள். அந்த இடைஞ்சல் இருக்காது. முதல் முறை படம் பார்க்கும்போது உங்களுக்கு பயங்கரமாய் குழம்பும். மறதி உள்ளவன் வாழ்க்கை அப்படித் தானே இருக்கும்? இதை தான் நான் சொல்கிறேன். சொல்ல வந்த கதையை நேர்மையாய் சொல்லுங்கள் என்று. அவர்கள் அதை தான் செய்கிறார்கள். ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்க விரும்பினால், அதே மாதிரி எடுக்க வேண்டியது தானே? ஏன் தமிழ்நாட்டு மசாலாவை அதில் தடவுகிறீர்கள்?

கமலிடம் நான் எதிர்பார்ப்பது ராஜ பார்வை, பேசும்படம், மகாநதி போன்ற படங்களை..அமைதியாய் இருக்கும் ஒருவன் அம்பது பேரை அடிப்பான் என்பதையெல்லாம் ரஜினிகாந்த் பார்த்துக் கொள்வார். அதுக்குத் தானேப்பா அவரை வச்சிருக்கோம்! அவர் இன்னும் நூறு படத்தில் அதை செய்தாலும் நாம் பார்ப்போம்! என்ன நான் சொல்றது?

அப்புறம் கமலை பற்றி இவ்வளவு பேசுறதால, இதுக்கு சம்மந்தம் இல்லாத ஒரு விஷயத்தையும் இங்கே சொல்லணும். நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அபூர்வ ராகங்களில் ரஜினி தேர்வானத்தை பற்றி சொன்னார். அதை பயங்கர டிவிஸ்டுடன், சுவாரஸ்யமாய் தான் சொன்னார். ஆனால் என்னைப் பொருத்தவரை அது அவரின் முகத்திரையை தான் கிழித்தது. விஷயம் இது தான். அபூர்வ ராகங்கள் வரும்போது இவர் பாலச்சந்தரின் ஆஸ்தான சீடன் ஆகிவிட்டார். இவர் தான் அந்தப் படத்தின் கதாநாயகன். ரஜினி ரோலுக்காக ஆள் எடுத்துக் கொண்டிருக்கும்போது இவர் அங்கு இருந்திருக்கிறார். "என்னடா, செம ரோலாய் இருக்கும் போல இருக்கே...எவனோ வந்து தட்டிட்டு போயிடுவான் போல இருக்கே!" என்று இவர் பதறி இருந்திருக்கார். பாலச்சந்தரிடம் போய், "சார் நான் பண்றேனே" என்றாராம். அவர் "நீ தான் இந்த படத்துல ஆல்ரெடி நடிக்கிறியே?" என்றாராம். "இல்லை சார், பரவாயில்லை, இதையும் நானே டபுள் ரோலா பண்ணிடறேனே" என்றவரை, "அதெல்லாம் வேணாம், நீ போடா" என்று பாலச்சந்தர் விரட்டி விட்டார். அந்த ரோலுக்குத் தான் பிறகு ரஜினியை போட்டார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவர் அப்போது பாலச்சந்தரின் பிரதான சிஷ்யன். அவரின் எல்லா படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார். நடிக்கப் போகிறார். அந்தப் படத்தின் கதாநாயகனே இவர் தான்! அது ஒரு தம்மாதுண்டு ரோல். அதையும் பிறருக்கு விட்டுக் கொடுக்க இவருக்கு மனமில்லை. என்ன தான் கலை தாகம், தொழில் பக்தி என்றாலும் ஒரு அளவில்லையா? இங்கே என்ன நவராத்திரி படமா எடுக்குறாங்க? சாவித்திரி தவிர எல்லாமே சிவாஜி கணேசனா இருக்கிறதுக்கு? நல்ல வேலை பாலசந்தர் கொஞ்சம் அசந்திருந்தாருன்னா நமக்கு ரஜினி கெடைச்சுருப்பாரான்னு சந்தேகம் தான்! ம்ம்...கமலை மட்டும் சொல்லி தப்பில்லை. "அவாள்ல" முக்காவாசி பேர் அப்படித் தான் இருக்கா!