எல்லோருமே காதலை தூக்கி பிடித்திருக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு காதலே பிடிக்காது. அவனுக்கு அது பிடிக்கும்போது என்ன நடக்கிறது? இது தான் கதை.

தீயா வேலை செய்யணும் குமாரு [தீவேசெகு], "சோட்டி சி பாத்" [ஹிந்தி] படத்தின் மொக்கை தழுவல். அது எனக்கு பிடித்த படம். எழுபதுகளில் அமிதாப் பச்சன் ரத்தம் வழிய வழிய எல்லோரையும் சுட்டுக் கொண்டிருந்த காலத்தில் அழகாய், அமைதியாய் வந்த ஒரு நல்ல படம். அதை அப்படியே எடுத்திருந்தாலும் அருமையாய் வந்திருக்கும். அதை விட்டு விட்டு, அதை தமிழ் படுத்துக்குறேன் என்று சொல்லி படுத்தியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதையை உங்களுக்குச் சொல்கிறேன். சுயநம்பிக்கை இல்லாத, பயந்தாகொல்லி, மிடில் கிளாஸ் ஒருவன் ஒரு அழகான பெண்ணை வளைக்க முயல்கிறான். என்ன முயன்றும் தோற்றுக் கொண்டே இருக்கிறான். இந்த மாதிரி விஷயங்களுக்கு ஆலோசனை வழங்கும் கர்னல் ஒருவரிடம் பாடம் படிக்கிறான். அவரின் ஆலோசனைப்படி, தன் அத்தனை குறைகளையும் தீர்த்துக் கொண்டு அந்தப் பெண்ணை கை பிடிக்கிறான். சிம்பிளான கதை. அழகான திரைக்கதை. சரியான நடிப்பு, வசனம். பாடல்களும் அருமையாய் இருக்கும். அந்த மிடில் கிளாஸ் ஆளாக அமோல் பலேக்கர். கர்னலாக அசோக் குமார். தீவேசெகு வில் அந்த மிடில் கிளாஸ் ஆள் சித்தார்த். அட்வைசராய் சந்தானம். அதில் அசோக் குமாரிடம் ஒரு காட்சியில் அட்வைசுக்காக அமிதாப் வருவார். இதில் விஷால் வருகிறார்! [ஹிந்தியில் அமிதாப்பை வைத்து அதே படத்தை எடுத்த தயாரிப்பாளர் ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார், தமிழில் விஷாலை வைத்து அதே இயக்குனர் மற்றொரு படம் எடுக்கிறார்! இதுலையுமாடா  காப்பி!!]

சுந்தர் இப்படி ஒரு ஹிந்தி படத்திலிருந்து சுட்டு விட்டாரே, ஏன் இதற்கு இதெல்லாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதை எழுதும்போது வின்னர் படம் டீவியில் ஓடிக் கொண்டிருந்தது. அதில் பார்த்தால் பிரசாந்த், கிரண் கட்டிலில் விழும் காட்சி அப்படியே "ஹம் ஆப்கே ஹைன் கௌன்" காட்சியின் காப்பி. சல்மான் கான் மாதுரி தீட்சித் எதிர்பாராத போது, அவர் கையை விடுத்து விடுதலை அளித்து அவரின் கையை அவரே கட்டிக் கொண்டு மாதுரியை இம்ப்ரெஸ் செய்வார். பிரசாந்த் அதையே அசட்டுத்தனமாய் செய்கிறார். சரி தான், ஹிந்தி ஒழிந்ததால் யாருக்கு லாபமோ தெரியவில்லை, நம் கோலிவுட் இயக்குனர்களுக்கு நல்ல லாபம் தான்! சுந்தரின் "கலகலப்பு" எனக்குப் பிடித்தது. அந்த அளவுக்கு கூட இல்லை இந்தப் படம். படத்தில் ஆயிரம் லாஜிக் ஓட்டைகள். படத்தில் எனக்குப் பிடித்தது காஸ்ட்யும்ஸ். குஷ்புவுக்கு நல்ல டிரெஸ்ஸிங் சென்ஸ்! பாட்டும் ஒன்று ரெண்டைத் தவிர தேறவில்லை.ஆமா, அது என்ன சந்தானம் ஹன்சிகாவை அப்படியே சாப்பிடுவது போல் பார்த்தார். நானும் சரி, இவர் அவரிடம் காதலில் விழப் போகிறாரோ என்று நினைத்தேன். திடீரென்று பாசமலர் பாட்டை போட்டு அண்ணன் தங்கச்சின்னு சொல்லிட்டீங்க? டிவிஸ்டா? சரி சரி...

சித்தார்த்துக்கு 34 வயதா? நம்பவே முடியவில்லை. இன்னும் சின்ன பையனை போலவே இருக்கிறார். தாடி மீசை சரியாய் வளரவில்லை என்றால் கொஞ்சம் இளமையாய் தான் தெரிவார்கள் போல! ஒன்று பல்லைக் காட்டி சிரிக்கிறார், இல்லை பாவமாய் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்கிறார். அவ்வளவுதான் இவரின் நடிப்பு! இவரின் ஒரே மாதிரியான ரியாக்ஷன்ஸ் அலுப்பூட்டுகிறது. இவரை வைத்து ஒரு படம் வரப் போகிறது என்றாலே, இவரை ஏன் போடுகிறார்கள் என்று தான் தோன்றுகிறது! விடை தெரியவில்லை...சாரி!

ஹன்சிகா, சின்ன குஷ்புவா இவர்? இப்போதே பெரிய குஷ்பு மாதிரி இருக்கிறார்! நல்ல காஸ்ட்லி விர்டிஃபைட் டைல்ஸ் மாதிரி மொழு மொழு என்று இருக்கிறார். [நானும் கொஞ்சம் சந்தானம் மாதிரி லைன் பிடிக்க ஆசைப்பட்டு எழுதினேன்!] தொப்புள் குலுங்க அந்த பரந்து விரிந்த வயிற்றுடன் அவர் ஆடும்போது ஜெயமாலினி  ஞபாகம் வருகிறார். என்னமோ வாயசைக்கிறார், என்னமோ வார்த்தை வருகிறது. என்ன டாஷுக்கு மொழியே தெரியாத நமக்கு கொஞ்சமும் சம்மந்தமே இல்லாத ஒரு பெண்ணை நடிக்க வைக்க வேண்டும் என்று புரியவில்லை. இதை சொன்னால் எனக்கு வயசாயிருச்சுன்னு சொல்லுவீங்க! அதனால் நான் எதுவும் சொல்லாமல் உங்களோடு சேர்ந்து ஜொள்ளுகிறேன்!

சந்தானத்துக்கு லவ் குரு கதாப்பாத்திரம். சிவ கார்த்திகேயன் முதல் ஆர் ஜே பாலாஜி என்று வாயால் வாலிபால் விளையாடும் பலர் வந்தாலும் இவரின் இடம் இன்னும் இவரிடமே இருப்பதிலேயே தெரிகிறது இவரின் பலம்! எங்கிருந்து தான் அந்த ஒன் லைனர்ஸ் பிடிப்பாரோ! டீவியில் போடுவதையும் சேர்த்து, மனோபாலாவை பார்த்து, "ஹே நடராஜ் பென்சில்", "ஒடம்ப மூட்றா, பச்சரிசின்னு எறும்பு இழுத்துட்டு போயிற போகுது!" என்பதிலும் சரி, "தட்டுல அல்வா விழுந்தாலும், ஐஸ்க்ரீம் விழுந்தாலும் உடனே நக்கிடனும்", "தும்பிக்கை தான் குறை, இருந்தா கும்கி யானை மாதிரியே இருப்பான்!" "இவன் யாரு, பலூன் விக்கிறவன் மாதிரியே இருக்கிறான்", "இது வீடு இல்லை விக்ரமன் சார் படம்!" என்று படம் பூராவும் அவரின் கலாய் தான்! காற்று அவர் பக்கம் அடிக்கிறது, தூற்றிக் கொள்ள வேண்டியது தான்!

என் ஃபேவரைட் [யாருக்கு பிடிக்காது இவரை!] ஆர் ஜே பாலாஜியின் குரலில் படம் ஆரம்பிக்கிறது. இவரின் பேச்சுத் திறமையை கண்டிப்பாய் தமிழ் சினிமா உபயோகப்படுத்திக் கொள்ளலாம். சந்தானம் ஒன் லைனர்ஸுக்காக இவரை இப்போதே சேர்த்துக் கொள்வது நல்லது, இல்லையென்றால் பின்னால் வருத்தப்பட வாய்ப்புண்டு! நடிப்பு என்று பார்த்தால் பரவாயில்லை, காமெரா இருக்கிறது என்ற முதல் குறுகுறுப்பு ஆங்காங்கே தெரிந்தாலும், பேசியே ஆளை காலி செய்து விடுகிறார். உதாரணமாய் "பெய்ன்ட் டப்பா அட்வர்டைஸ்மெண்ட்ல வீடு மாதிரி இருக்குன்னு பாக்குறீங்களா", "மொட்டை மாமா, மூக்கு மாமா", "சுல்தானே வெயில்ல காயிராறு, ஒட்டகத்துக்கு குலாப் ஜாமூனா?" "ஆம்பள ஏர் ஹோஸ்டஸ் மாதிரி இருக்கீங்க", "துப்பாக்கி பட தீவிரவாதி மாதிரி தொரத்தாதேடா!" என்று கேப்பில் கல்லா கட்டுகிறார். டேக் இட் ஈசி வித் பாலாஜியில் இந்தப் படத்தையும் கிண்டல் அடிப்பாரா என்று பார்க்க வேண்டும்!

கணேஷ் வெங்கட்ராம் - சீரியசாய், என்ன இல்லை இவரிடம்! தமிழே தெரியாது, தமிழ்நாட்டின் கலர் கிடையாது, நடிக்க வராது...இருந்தாலும் நமக்கு ஹன்சிகா  வேண்டும். எல்லாம் தெரியும் ஆனால் அமேரிக்கா மாப்பிள்ளையாய் கூட வாய்ப்பு தர மாட்டோம்! பாவம்,  ஐம்பதுகளில் பிறந்திருந்தால் எம்.ஜி.ஆர், ஜெமினி போல் தமிழ் சினிமாவில் வலம் வந்திருப்பார். தனுஷ், விஜய் சேதுபதி காலத்தில் பிறந்து இவர் படும் அவஸ்தை, ஐய்யோ பாவம். இவரை கலாய்த்து படத்தில் வரும் ஒன் லைனர்ஸ் ஸ்பான்சர் யார்? சந்தானமா, பாலாஜியா? உதாரணம்: ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன், பனியன் விளம்பரத்துல வர்ற மாதிரி இருக்கான்!


என்னடா விமர்சனம்னு ஒன் லைனர்ஸ் போட்டே கடத்திட்டேன்னு நெனைக்கிறீங்க!? அட படமே அதானே பாஸ்!
1 Response
  1. Anonymous Says:

    சுந்தரின் காப்பிக் கோப்பையில் இதையும் சேர்த்துக்குங்க.

    ஹன்சிகாவின் ஆபிஸ் intro scene 'Woman on top' படத்துல பெனெலோப்பி க்ரூஸின் SFO ஹோட்டல் intro scene பாத்து காப்பி அடிச்சது.