தமிழ் திரைப்பட இயக்குனர் திரு மணிவண்ணன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். நான் அவரைப் பற்றி பேசப் போவதில்லை. இந்நேரம் அவரைப் பற்றி நம் தொலைக்காட்சிகளில் நிறைய பேசி இருப்பார்கள். என்னுடைய ஒரு நண்பருக்கு அவர் நல்ல பழக்கம். என்னையும் அஞ்சலி செலுத்த  அழைத்துச் சென்றார்.  அந்த தெருவே கூட்டத்தில் அடைந்து கிடந்தது. பைக்கை அந்த தெருவின் முனையிலேயே விட்டு விட்டு நடந்து சென்றேன். உள்ளே கண்ணாடி பெட்டகத்தில் அமைதிபடை எடுத்தவர் அமைதியாய் கண்ணயர்ந்திருந்தார். பக்கத்தில் சீமான், சத்யராஜ், மனோபாலா ஆகியோர் அமர்ந்து வணக்கம் செலுத்துபவர்க்கு பதில் வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். இரண்டு நிமிடத்தில் நான் வெளியே வந்தேன். தில்லு முள்ளு சிவாவை சுற்றி ஒரு பெரும் கூட்டமே இருந்தது. அவர் மீடியாவுக்கு தன இரங்கலை தெரிவித்துக் கொண்டிருந்தார். மக்கள் அவரை சுற்றி கொண்டாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் திரும்பும்போது சிவா கார்த்திகேயன் வந்தார். விட்டால் காரில் வீட்டுக்குள்ளே சென்று விடுவார் போலிருக்கிறது. அவரைச் சொல்லி குற்றமில்லை. எல்லா கலைஞர்களும் அப்படித் தான் நடந்து கொள்கிறார்கள். இன்னோவா காரில் பத்து அல்லக்கைகளுடன் வந்து இறங்குகிறார்கள். டிரைவர் பாவம், காரை திருப்புவதற்குள் படாத பாடு படுகிறார்.

மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று யார் சொல்வது? எல்லோரின் கையிலும் ஒரு கேமெரா ஃபோன். ஒரு நடிகரை விடாமல் சுட்டுத் தள்ளுகிறார்கள். எனக்கு எரிச்சலாய் வந்தது. நடிகர்கள் என்றால் வானில் இருந்து குதித்தவர்களா? அவர்களும் நம்மை போல் மனிதர்கள் தானே? அவரை பார்த்து விட்டதிலும், அவரை படம் பிடித்து விட்டதிலும் அப்படி என்ன பெருமை? அதுவும் ஒரு சாவு வீட்டில்! நேற்று வரை மணிவண்ணன் அங்கு தான் வசித்தார் என்று தெரியாமல் இருந்தவர்கள் இன்று முந்திக் கொண்டு குழந்தை குட்டிகளோடு அவரை அஞ்சலி செலுத்த வேண்டிய காரணம், நடிகர்களை பார்க்க வேண்டும் என்று ஒரே காரணம்! நம் தாய்மார்கள் சாவு வீட்டின் முன்னாள் நின்று கொண்டு, இவர் வர்றாரு, அவர் வர்றாரு, என்ன அவசரம், எல்லா நடிகருங்க வருவாங்க, பாத்துட்டு போவோமே என்று ஒரே கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்! நான் அந்த தெருமுனையில் வந்து வண்டி எடுக்கும்போது என் நண்பருக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

ஏதோ ஒரு திருவிழாவுக்குப் போவது போல் பெண்கள் போகிறார்கள். ஒரு பெண் பள்ளியில் இருந்து அப்போது தான் வந்திருந்த அந்த சிறுமியை சீருடை கூட மாற்றாமல் அழைத்து வருகிறாள். "மணிவண்ணனா! யாரும்மா அவரு" என்று அப்பாவியாய் கேட்டுக் கொண்டே வருகிறாள் அந்த சிறுமி! எல்லா பெண்களும்  முகத்திலும் அப்படி ஒரு பூரிப்பு, சிரிப்பு, குதூகலம்!!

பாக்யராஜ் பின்னாலேயே ஓடுகிறார்கள். சத்யராஜை பார்த்து விட்டு, ஏதோ கடவுளையே பார்த்த மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிவாவை சுற்றி நின்று சார், தில்லு முள்ளு சூப்பர் என்கிறார்கள்! சிவா கார்த்திகேயண்டா, பாருடா என்று அலைபாய்கிறார்கள் சிறுவர்கள். இன்னைக்கு மட்டும் நான் பத்து நடிகர்களை பார்த்துட்டேன் தெரியுமா என்று பூரிக்கிறார்கள். சிறுவர்களை விடுங்கள், பெரியவர்களே இந்த லட்சணத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு பெண்மணி தன் ஸ்கூட்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு, அதில் தன் செருப்பை கழட்டி விட்டு, ஒரு தண்ணி பாட்டிலோடு நாலு குழந்தைகளை கூட்டிக் கொண்டு வருகிறார். [என்னா ஏற்பாடு!] நான் கேட்டவரை, அந்த மக்களில் யாரும் மணிவண்ணனை பற்றி பேசவில்லை. ரஜினி வருவாரா, விஜய் வருவாரா, சூர்யா வருவாரா என்று தான் பேசிக் கொண்டார்கள். இப்படி வேறு எந்த நாட்டிலாவது நடக்குமா? நாம் தான் இத்தனை பைத்தியமா இருக்கிறோமா? தெரியவில்லை.

ஒரு புகழ் பெற்ற கலைஞனுக்கு  சாவு வீட்டை எதிர்கொள்வது மிகப் பெரிய சவால் என்று தான் நினைக்கிறேன். சினிமா நட்சத்திரங்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சாபக் கேடாகத் தான் இருக்கும். புதுமுக நடிகர்களுக்கே இவ்வளவு கஷ்டம் என்றால், ரஜினி, கமலை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்! ரஜினி இன்று கூட ஒரு சாவு வீட்டுக்கு வந்தால், எங்கு ரசிகர்கள் அங்கேயே "தலைவர் வாழ்க, சூப்பர் ஸ்டார் வாழ்க" என்று கத்தி விடுவார்களோ என்ற பயத்தில் தான் வருகிறார்! அப்படி சில சமயங்கள் நடந்தது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்! அந்தக் கணம் எப்படி இருக்கும்? அதிலும் இறந்தவர் தனக்கு நெருக்கமானவராய் இருந்தால், அந்த இடத்தில் அத்தகைய செயல் எத்தனை சங்கடமாய் இருக்கும்! பிறகு இறந்தவரை பற்றி அங்கு என்ன பேச முடியும்? நம் நட்டு மக்களின் அறியாமையை நினைத்தால் சங்கடமாய் இருக்கிறது? அதோடு, வருங்கால சந்ததிகள் இதே பலவீனத்துடன் வளர்வதை பார்க்கும்போது கவலையாய் இருக்கிறது!

அந்தக் கூட்டத்திலிருந்து விலகி நடந்து "சரி, கலைஞன் என்பவன் இறந்தும்  மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளிக்கிறான்!" என்று வைத்துக் கொள்வோம் என்று நானே என்னை தேற்றிக் கொண்டேன்! வேறு என்ன செய்ய?

மணியின் ஆத்மா சாந்தி அடையட்டும்!
11 Responses
  1. Rajamani Says:

    so sad to hear about this behaviour. your observation are so accurate. it would have been hilarious but for the sad occassion. dont know when we will improve.


  2. உங்களது வருத்தம் நியாயமானதே. சினிமா நடிகர்களின் பின்னால் அலையும் இந்த ஆட்டுமந்தைகளுக்கு துக்கம் நடந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் எதிர்பார்ப்பது நம் குற்றமே.


  3. Anonymous Says:

    Second u pradeep...


  4. Anonymous Says:

    நம் நட்டு மக்களின் அறியாமை பலவீனத்துடன் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.அதனால் தான் அவர்களும் புலி கொடி போர்த்தி மக்களுக்கு காட்ட கூடியதாக உள்ளது.


  5. Anonymous Says:

    Very true..


  6. Anonymous Says:

    very very true...



  7. அய்யா !நீங்களே அப்படி ஒரு போக்கில்[ரஜினி வெறியராக ] இருந்து கொண்டு தமிழக மக்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது முரண்பாடாக உள்ளது ஒரு இலக்கிய கூட்டத்தில் கூட உங்களால் ரஜினியை தவிர வேறு நிகழ்வுகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றால் இறப்பு கூட்டத்தில் மக்களின் நடவடிக்கையை எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்கேரீர்கள் !


  8. Sabareesan Says:

    சிலர் மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்த வந்தார்கள். சிலர் நடிகர்களை வேடிக்கை பார்க்க வந்தார்கள். சிலர் ப்ளாகுக்கு எழுத விஷயம் கிடைக்குமா என்று பார்க்க வந்தார்கள். [இதில் நீங்கள் எந்த வகை ?]

    // ஒரு பெண்மணி தன் ஸ்கூட்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு, அதில் தன் செருப்பை கழட்டி விட்டு, ஒரு தண்ணி பாட்டிலோடு நாலு குழந்தைகளை கூட்டிக் கொண்டு வருகிறார். [என்னா ஏற்பாடு!]//

    இதில் என்ன தவறென்று நினைக்கிறீர்கள்?
    நீங்களும்தான் வண்டி [2 வீலெர் ] எல்லாம் எடுத்து போயிருக்கிறீர்கள். "என்ன ஒரு முன்னேற்பாடு" என்று யாரேனும் சொல்லலாம் அல்லவா ?

    தாங்கள் மட்டுமே உலகில் ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள ஜீவி என்று சிலருக்கு தோன்றும் போலிருக்கிறது.


  9. Unknown Says:

    it is pratical pepepole


  10. Anonymous Says:

    ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது நமது மக்கள் திருந்த போவதில்லை தாங்கள் ஆட்டுமந்தைகள் மாதிரி இருப்பதிற்கு ஏதாவது காரணம் சொல்லி நியாயப்படுத்தி கொண்டிருப்பார்கள்.