இன்று காலை ஏழு இருபது டபுள் டெக்கர் ரயிலில் என் குடும்பம் பெங்களூர் பயணம். ரயிலேற்றிவிட சென்றிருந்தேன். [ஒரு பதிவுக்காச்சு!] சென்ட்ரல் எதிரில் இருக்கும் பாலத்தில் இருந்து கீழே இறங்கும்போதே ஆரம்பித்து விடுகிறது...கார்களின் அணிவகுப்பு. சென்ட்ரல் மாதிரி ஒரு குப்பை ரயில் நிலையம் உலகத்திலேயே எங்கும் இருக்காது. நாளுக்கு லட்சக்கணக்கில் பயணிகள் வந்து போகும் இடம் கந்தரகோலமாய் இருக்கிறது. பாலத்திலிருந்து இறங்கும் கார்கள் சிக்னலில் வலது பக்கம் திரும்பி சிக்னலை தாண்டியதும் இடது புறம் திரும்ப வேண்டும். சென்ட்ரலில் இருந்து கிளம்பும் பஸ்கள் ரோட்டுக்கு வருவதற்கு வலது பக்கம் வருகிறது. அவ்வளவு தான், முட்டி மோதிக் கொண்டு ஒரே இரைச்சல். எதிரில் பார்த்தால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை! இத்தனை பெரிய ரயில் நிலையத்திற்கு எதிரில் இத்தனை பெரிய ஆஸ்பத்திரியை கட்ட எந்த புண்ணியவான் யோசித்தானோ! வெள்ளைக்காரன் காலத்தில் கட்டி இருக்கலாம், அப்போது வாகனங்கள் குறைவு. அவன் தேவையில்லாமல் ஹாரன் அடிக்க மாட்டான். ஆனால் நம் மக்கள்? ஆளே இல்லாத ரோட்டிலேயே தனக்கு பிடித்த பாட்டையே ஹாரனாய் அடித்துக் கொண்டே போவான், இந்த இடத்தில் கேட்கவா வேண்டும். நோயாளிகள் பாவம்!!
எங்கள் கால் டாக்சி ஒரு வழியாய் இடது புறம் திரும்பி நிலையத்தில் நுழைவதற்காக கார்களின் வரிசையில் நின்றது. ஏழு இருபதுக்கு ரயில். மணி ஆறே முக்கால்! என் அப்பா ரயில் ஏறுவதென்றால் முதல் நாளிலிருந்தே டென்ஷன் ஆகிவிடுவார். இப்போது கேட்க வேண்டுமா? அந்த நுழைவாயிலில் நின்று கொண்டு இருந்த ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள் இங்கேயே இறங்கிக்குங்க என்று வரும் வண்டிகளை எல்லாம் கையசைத்து அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். ஆறு பெரிய லக்கேஜ்கள், இரு வயதானவர்கள், ஒரு பெண், ஒரு குழந்தையோடு எப்படி ஐயா இறங்கி நடப்பது? நல்ல வேலை எங்களிடம் சொல்லவில்லை. எங்கள் ஓட்டுனர் சாமர்த்தியமாய் உள்ளே நுழைந்து படாத பாடு பட்டு ஒரு இடத்தை பிடித்து நிறுத்தினார். வெகு நேரம் நிறுத்தினால் அபராதம் போடுவார்களாம். எளிதாய் காரை நிறுத்த இடம் இருந்து, லக்கேஜ்களை இறக்கி போக முடிந்தால், நான் ஏனைய்யா அங்கே நிற்கப் போகிறேன்? மக்களுக்கு எந்த வித வசதியும் செய்து கொடுக்காமல் அபராதம் வேறு வசூலிக்கும் நாடு நம் நாடு தான்! கடகடவென இறங்கி லக்கேஜ்களை அடுக்கி விட்டு நான் நடைமேடை டிக்கட் வாங்கச் சென்றேன். இன்னும் இந்த நடைமேடை சீட்டு ஏன் வாங்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. சென்ட்ரலில் இது வரை செக் செய்து நான் பார்த்ததேயில்லை. இருந்தும், கடமை!! சீட்டை வாங்கிக் கொண்டு லக்கேஜ்களுடன் உள்ளே நுழைந்தோம்.
உள்ளே ஒரு நாடே இருந்தது. [கவனிக்க ஊர் இல்லை, நாடு!] இத்தனை பேரா இன்று பிரயாணப்பட்டிருக்கிறார்கள்? இதே நேரம் தான் ஒரு பெரிய கூட்டம் சாலையில் அலை மோதுகிறது, இதே நேரம் தான் ஒரு பெரிய கூட்டம் கவுந்தடித்துத் தூங்குகிறது! இன்னும் எத்தனை பேரடா இருக்கீங்க நாட்ல? டிஸ்ப்ளேயில் வழக்கம் போல் எல்லா ரயிலின் விவரங்களையும் பார்த்த பிறகு, நம் ரயில் இங்கிருந்து தான் கிளம்புகிறதா? இன்று தானா? இந்த நேரம் தானா? என்று அடிப்படை கேள்விகள் எழுந்து டிக்கட்டை சரி பார்த்த பிறகு மெதுவாய் ஒரு ஓரமாய் அதன் விவரம் ஓடியது. ஏழாவது நடைமேடை. அப்பாடா! அந்தக் கூட்டத்தில் முட்டி மோதி, இழுத்துக் கொண்டு செல்லும் சக்கரப் பெட்டி ஒரு புறம் போக, நான் ஒரு புறம் போக, அதையும் தாண்டிச் செல்லும் கூட்டம்! இத்தனை கூட்டம் ரயிலை பிடிக்க முந்தியடித்துக் கொண்டு ஓடும் இடத்தில் நட்ட நடுவில், நடு சென்டரில், ரயிலிலிருந்து இறங்கும் சரக்குகளை வைத்துக் கொண்டு கணக்கு பார்த்து கொண்டிருக்கிறார்கள். அந்த சரக்குகளை ஏற்றும் வண்டி ரயிலை விட பெரிதாய் இருக்கிறது. வண்டி ஒரு இடத்தில் போகிறது, அதை இழுத்துக் கொண்டு போகும் ஆள் எங்கோ இருக்கிறான். அவனுக்கு தான் மட்டும் தான் அந்த நடைமேடையில் இருப்பதாய் ஒரு பிரமை. என்ன ஒரு செளகரியம். முருகா....
ஒரு வழியாய் ஏழாவது நடை மேடை வந்து சேர்ந்தோம். நான் நினைத்தது போல் எங்கள் பெட்டி எஞ்சினுக்கு பக்கத்தில் இருந்தது. எஞ்சின் தான் பெங்களூருக்கு அருகில் இருந்தது! வந்தோம், சிறிது நடந்தோம், ரயிலில் ஏறினோம் என்று எனக்கு இருந்ததேயில்லை. நல்ல பேரு வச்சான், நடை மேடை என்று, நடந்தோம் நடந்தோம்...எல்லா பெட்டிகளையும் கடந்தால் கடைசி பெட்டி நம் பெட்டி! டபுள் டெக்கர் ரயில் [டபுள் டெக்கர் தமிழில் இரண்டடுக்கா?]...அட! வெளித்தோற்றம் அருமை. சிவப்பும் மஞ்சளும் கலந்து கட்டி ஒரு கலரில் பார்க்க ஜோராய் இருக்கிறது. ரயில் முழுவதும் குளு குளு வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே? ஒன்று கீழ் தளம், இன்னொன்று மேல் தளம். உள்ளே நான் ஒருவனாய் போகவே கஷ்டமாய் இருக்கிறது, இதில் லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு...இதில் எதிரில் வரும் ஆட்கள்! இடப்பற்றாக்குறை மிகுந்து அந்த இடமே ஒரே டஞ்சன்! ஒன்லி சீட்டிங். ஐந்தரை அடி உள்ள எங்களுக்கே முன்னால் சீட் முழங்காலில் இடிக்கிறது. ஆறு ஆடி ஆட்கள் ஒழிந்தார்கள். லக்கேஜ்களை வைக்க மேலே ஒரு அடுக்கு. அதில் பெண்களின் ஹாண்ட்பேக் மட்டும் தான் நுழையும். எந்த பெரிய பையும் நுழையாது. அதிலும் சக்கரப் பெட்டி லக்கேஜ்களை வைத்திருந்தால் நீங்கள் காலி! நான் கஷ்டப்பட்டு இரண்டு பைகளை திணித்தேன். பெங்களூர் வருவதற்கு அரை மணி முன்னரே அதை வெளியே எடுக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் இறங்க முடியும். ஒரு ஊருக்கு போவதென்றால் நம் மக்களின் மனநிலை என்ன என்று அரசாங்கத்துக்கு தெரியாதா? எத்தனை பொருள்கள் சேரும் என்பது தெரியாதா? வெள்ளைக்காரனுக்கு செய்ய வேண்டிய ரயிலை எல்லாம் நம் ஊரில் ஏன் செய்கிறார்கள்? "இரண்டடுக்கு வைத்தால் இன்னும் நிறைய காசு சம்பாதிக்கலாம் மற்றபடி வசதியை பற்றி நமக்கென்ன கவலை!" என்பது போல் இருக்கிறது இவர்களின் யோசனைகள்! நிச்சயம் சொல்வேன், அதில் பெரிய லக்கேஜ்களை வைத்துக் கொண்டு பிரயாணம் செய்பவர்கள் நரக வேதனையை தான் அனுபவிப்பார்கள்.
ரயிலில் என்ஜினை ஓட்டியதால் லேசாய் அசைந்ததும் நான் வெளியே வந்தேன். கீழ் அடுக்கில் உள்ளவர்களிடம் முழங்கால் இட்டுக் கொண்டு விடை கொடுத்துக் கொண்டிருந்தார்கள் உறவினர்கள். பார்ப்பதற்கு புதுமையாய் இருந்தது. அங்கு உள்ள ஒரு கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டு ரயில் புறப்படுவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். உண்மையில் என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது தான் கவனித்தேன், அந்த நடைமேடையில் வலது பக்கத்தில் யாருமே இல்லை. அடப்பாவிகளா, அங்கு நடைமேடைக்கு ஓடும் மக்களின் நடுவில் அத்தனை சரக்குகளையும் கொட்டி வைத்திருக்கிறீர்கள், இங்கு இவ்வளவு பெரிய இடம் சும்மா கிடக்கிறதே என்று! சரக்குப் பெட்டியை இந்த மாதிரி இடங்கள் வருவது போல் நிறுத்தினால் என்ன? எப்படியும் அதையும் ஒரு தள்ளு வண்டியில் தான் வைத்துக் கொண்டு தள்ளிக் கொண்டு போகப் போகிறார்கள். இங்கிருந்தே தள்ளிக் கொண்டு போகலாமே? ஏன் மக்களின் நடமாட்டம் இருக்கும் இடத்தில்? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா? மிகவும் சலிப்பாக இருந்தது. ரயில் கிளம்பியதும், இந்து இடுக்கில் உட்கார்ந்திருந்த என் குடும்பத்தை பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டே செயற்கையாய் ஒரு டாட்டா காட்டி விட்டு கிளம்பினேன்.
எதிரில் இருக்கும் பறக்கும் ரயிலில் ஏறி வேளச்சேரி சென்று பின்பு அங்கிருந்து மடிப்பாக்கம் செல்ல வேண்டும். அயர்ச்சியாய் இருந்தது. வெயில் வேறு ஆரம்பித்துவிட்டது. அப்போது தான் பையில் ரயில் டிக்கட் எடுக்க சில்லறை இல்லை என்று நினைவுக்கு வந்தது. ஒரு நடை மேடை கடைக்கு போய் நூறு ரூபாய்க்கு சில்லறை கேட்டேன். எதையாவது வாங்கலாம் என்றால் ஒன்றும் பிடிக்கவில்லை. "சில்லறை கொடுக்கிறேன், ஆனால் தொண்ணூறு ரூபாய் தான் கிடைக்கும்" என்றார் கடைக்காரர். "ஏன்" என்றேன்? பத்து ரூவா கமிஷன் சார் என்றார். சில்லறை கொடுப்பதர்க்கெல்லாம் கமிஷன் வாங்க ஆரம்பித்து விட்டார்களா என்று யோசித்தேன். நல்ல வேளை, கடையில் தண்ணீர் போட்டுக் கொண்டிருந்தவர் என்னை பார்த்து சிரித்தார். அப்போது தான் அது தமாசு என்று புரிந்தது. என்னை பார்த்தாலே இப்படி எல்லாம் பேசணும்னு தோணும் போல! எப்படித் தான் கண்டுபிடிக்கிறாங்களோ! ஒரு பிறவிக் கலைஞன் நான், என்கிட்டயே ஆக்டிங்கா என்று நினைத்துக் கொண்டேன். [இதெல்லாம் சொன்னா இருபது ரூபா கேப்பானே!] சரி போனால் போகட்டும் என்று "ஒரு தண்ணீர் பாட்டில் கொடுங்க" என்றேன். சில்லென்று ஒன்று வாங்கிக் கொண்டேன். "இதுக்கு கமிஷன் கிடையாதுல்ல?" என்றேன். "இல்லை சார்" என்றார், சிரித்துக் கொண்டே. "நல்லா வியாபாரம் பண்றீங்க" என்றேன். "என்னங்க பண்றது, கடைக்கு வாடகை தரனும், அம்மா வேறு வெலய எல்லாம் ஏத்திட்டாங்க, நாங்க பப்ளிக் கிட்ட தானே வாங்கணும்" என்றார். ஆமா எல்லாத்தையும் தாங்க பப்ளிக்னு ஒரு இளிச்சவாயன் இருக்கானே என்று நினைத்துக் கொண்டு நடையை கட்டினேன்.
எதிரில் உள்ள பூங்கா நிலையத்திற்கு சென்று பறக்கும் ரயிலை பிடிக்க வேண்டும். எல்லோரு மாதிரியும் ரோட்டை க்ராஸ் செய்யாமல் சப்வேயில் இறங்கினேன். கொஞ்சம் இங்கே அங்கே பார்த்துக் கொண்டே நீங்க இறங்கினீர்கள் என்றால் அவ்வளவு தான், நேராய் கீழே விரித்திருக்கும் ஒரு வாட்ச் கடையில் உங்கள் காலை கை வைக்க வேண்டி இருக்கும். அடப்பாவிகளா...உங்களை எல்லாம் கேப்பாரே இல்லையா? படி ஏறி மேலே வந்ததும், மலை ஏறத் தொடங்கினேன். ஆமாம் மேம்பாலத்தை தான் சொன்னேன். சென்ட்ரல் எங்கோ இருக்கிறது, பூங்கா ரயில் நிலையம் எங்கோ இருக்கிறது. அந்த பாலத்தின் வழியே எல்லா மக்களும் லக்கேஜ்களுடன் ரயில் பிடிக்க ஓடுகிறார்கள். வெளிநாட்டு ஏர்போர்டில் இருப்பது போல், அங்கிருந்து இங்கு வரை ஒரு கன்வேயர் பெல்ட் போன்று ஒன்றை வைத்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும். ஏறி நின்றால் அது இங்கு கொண்டு வந்து இறக்கி விட வேண்டும்! எவ்வளவு செலவாகிவிடும்? பக்கத்திலேயே பல கோடிகள் செலவு செய்து கட்டிய தலைமைச் செயலகம் பாழாய் கிடக்கிறது. மக்களுக்கு என்று வரும்போது இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது! வர வர நம் நாட்டை நினைத்தால், நாற்பது வயதில் நான் போய் சேர்ந்து விடுவேன் போலிருக்கிறது!
அரசாங்கம் தான் மக்களை மதிப்பதில்லை. இந்த வெயிலாவது கொஞ்சம் கருணை காட்டலாம்! ஏழரை மணிக்கு சுட்டெரிக்கிறது. நான் நடக்கும்போது அருகில் ஒரு பெண் [சின்க்கி போல் இருந்தார்] வேர்க்க விருவிருக்க வலது கையில் ஒரு சக்கர பெட்டியும், இடது கையில் ஒரு தோல் பையும் மாட்டிக் கொண்டு மலை ஏறிக் கொண்டிருந்தார். பார்க்க பாவமாய் இருந்தது. உதவிக்கரம் நீட்டலாம் என்று யோசிக்கும்போது படி இறங்கும் இடம் வந்தது. துணிந்து கேட்டேன். சற்று நேரம் என்னை திருடனை போல் பார்த்தவள், [பட்டணத்துல பாத்து சூதானமா நடந்துக்கம்மா என்று யாராவது சொல்லி அனுப்பி இருக்கக் கூடும்] திருடினாலும் பரவாயில்லை, இனி நம்மால் இதை தூக்கிக் கொண்டு படி இறங்க முடியாது என்று நினைத்திருப்பாள் போலும், சரி என்று ஒப்புக் கொண்டாள். அந்தப் பெட்டி என் கணம் இருந்தது. தட்டுத் தடுமாறி ஒரு வழியாய் இறங்கி டிக்கட் கவுண்டருக்குள் டிக்கட் வாங்க முனைந்தோம். "உங்களுக்கும் நான் சேர்த்து வாங்கி விடுகிறேன்!" என்றெல்லாம் அவள் மிகையாய் நடந்து கொள்ளவில்லை. அவள் அவள் டிக்கட்டையும் நான் என் டிக்கட்டையும் வாங்கினோம். மறுபடியும் ஒரு சப்வே. ஏறி இறங்கி அப்பாடா...என்று மூச்சு வாங்குவதற்குள் ரயில் வருவது தெரிந்தது. "மிக்க நன்றி" என்றாள் சம்பிரதாயமாய்! தண்ணீர் குடித்து விட்டு, "வேண்டுமா?" என்று கேட்டேன். வாங்கப்போனவள் "சில் தண்ணி வேண்டாம்" என்று சொல்லிவிட்டாள். சென்னையில் சில் தண்ணி குடித்தால் தான் பானை தண்ணீர் மாதிரி இருக்கும். சாதாரண தண்ணி குடித்தால் சுடு தண்ணீர் தான்! எப்படி சில் தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார்கள் என்று தோன்றியது.
ரயிலின் முதல் பெட்டி வந்து அருகில் நின்றது. கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு ஏறியது. சென்ட்ரலில் ஊருக்குச் செல்பவர்கள் எல்லாம் திரும்பி வந்தது போல் கூட்டம். ஏண்டா நீங்க எல்லாம் ஊருக்குப் போலியா? என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. சத்தியமாய் சொல்கிறேன். உத்தரகண்டில் வந்தது போல், ஒரு வெள்ளமோ, சுனாமியோ, பூகம்பமோ வந்து ஒரு பத்து இருபது ஆயிரம் என்று போவதை விட, ஒரு முப்பது, நாற்பது கோடி போய் சேர்ந்தால் நாடு செழிக்கும். அப்படி ஆகும் என்றால் நானும் போகத் தயார்! [நல்லவன்டா, நீ நல்லவன்டா!] என்னா கூட்டம்! அடித்து பிடித்து அவளின் பெட்டியை தூக்கிக் கொண்டு அவளுக்கும் ஒரு இடம் பிடித்தேன். எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது! அவளுக்குத் தரமணி இறங்க வேண்டும். பெட்டியை தூக்கி வந்ததை காரணம் காட்டி நான் எதுவும் பேச விரும்பவில்லை. நிற்க, நான் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லை. ஃபிகர் சுமார் தான்! அது ஒரு காரணமாய் இருக்கலாம்.
தரமணி அருகே வந்ததும், அவளே மெதுவாய் பேச்சு கொடுத்தாள். ஹைதிராபாத்தில் படிக்கிறாளாம். இங்கு ப்ராஜக்ட் செய்ய வந்துள்ளாலாம். நான் என்ன செய்கிறேன் என்று கேட்டால். ஐ.டி. என்றதும் கொஞ்சம் உற்சாகம் ஆனாள். பிறகு ஏதோ சொல்ல வந்தால், காற்றில் சரியாய் கேட்கவில்லை. வீடு வரைக்கும் இந்த பெட்டியை தூக்கிட்டு வந்துற்றியா என்பது போல் தோன்றியது. பிறகு அவள் பாவம் பொழைச்சு போறான் என்று விட்டு விட்டால். நானும் கேட்கவில்லை. ஒருத்தன் சிக்கிட்டா போதுமே!! வேளச்சேரி வந்ததும் இறங்கி வீட்டுக்கு நடந்தேன். தமிழர்கள் எப்போது இப்படி துப்பக் கற்றுக் கொண்டார்கள் என்று ஆராய வேண்டும். படித்தவன், படிக்காதவன் என்று எவனை பார்த்தாலும் துப்பிக் கொண்டே தான் நடக்கிறான். முன்பு ஓரத்தில் துப்பினான், இப்போது நடு ரோட்டில் துப்புகிறான். இதை படிப்பவர்களில் பத்து சதவிகிதம் பேர் இந்தப் பழக்கத்திலிருந்து திருந்தினாலும் எனக்கு மகிழ்ச்சி! [படிக்கிறதே பத்து பேரு தான்! பேராசை] இந்த நாட்டில் எத்தனை விஷயத்தை தான் திருத்துவது? மாற்றம் மெதுவாய் தான் வரும், இப்போது நாம் போராடினால் தான் பேரன் பேத்தி காலத்திலாவது நல்ல சமுதாயம் அமையும் என்ற பேச்சில் எனக்கு நம்பிக்கையே போய் விட்டது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!