ஒரு நண்பரின் மூலம் ஜெயா டிவியின் பதினான்காவது ஆண்டு தொடக்க விழா மற்றும் எம் எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி அறுபது ஆண்டு கால திரையிசை சாதனைக்கான பாராட்டு விழா நிகழ்ச்சிக்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழக முதல்வர் தலைமையேற்று நடத்தினார்.  சாலை எங்கும் ஃபோகஸ் லைட்டுகள். சென்ட்ரல் தொடங்கி அம்மாவின் கட் அவுட்டுகள்.  அரங்கத்தின் உள் வரை அது நீள்கிறது. இத்தனைக்கும் கட் அவுட் வைப்பதெல்லாம் இப்போது அவருக்குப் பிடிப்பதில்லை என்று வேறு சொல்கிறார்கள்.  அந்த ஏரியாவே காக்கிச் சட்டைகளால் நிரம்பி வழிந்தது. என் வரிப் பணம் இப்படியெல்லாம் சீரழிகிறதே என்று வேதனையாய் இருந்தது. நேரு உள்ளரங்கம் இத்தனை பெரிது என்று எனக்குத் தெரியாது. கேட், கேட்டாக சுற்ற விட்டுக் கொண்டே இருந்தார்கள். ஒரு வழியாய் ஒரு வழியில் உள்ளே அனுமதித்தார்கள்; பயங்கர கெடுபிடியுடன்! தண்ணீர், சாப்பாடு சமாச்சாரம் என்று எதுவுமே உள்ளே அனுமதி கிடையாது. நான் குடை கொண்டு போயிருந்தேன். அதையும் எடுத்து வெளியே போட்டு விட்டார்கள். எங்கும் சோதனை, ஏனடா வந்தோம் என்று ஆயிற்று. கேட்டால் முதல்வரின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடு! வேடிக்கை என்னவென்றால் ஜெயா டிவி பல வித "அதிகார துஷ்ப்ரயோகங்களை" கடந்து வெற்றி நடை போடுகிறது என்று ஜெ [அம்மா என்றெல்லாம் சொல்ல முடியாது!] வே சொல்கிறார். ஆமா மேடம், மேல் சொன்ன அத்தனைக்கும் பெயர் என்னவாம்?

எல்லா தடவல்களுக்கும் பிறகு ஒரு வழியாய் உள்ளே நுழைந்து ஒரு சீட் தேடி அமர்ந்தேன். முதல் வரிசை, வீ வீ ஐ பிக்களுக்கு. அதாவது, விழா நாயகர்கள், ஜெ, ரஜினி, கமல், பாலச்சந்தர், ஏவிஎம் சரவணன், இளையராஜா. அடுத்த வரிசை வீ ஐ பிக்களுக்கு! பழம்பெரும் நடிகர்கள், பாடகர்கள் அனைவரும். பிறகு கட்சிக் கண்மணிகளுக்கு! மேல் வரிசையில் தான் பார்வையாளர்களுக்கு! கமல் பாலச்சந்தரின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்படி யூகித்துக் கொண்டேன். ஏன் என்றால், நான் உட்கார்ந்த இடத்திலிருந்து அங்கு வைத்திருந்த பெரிய டிவியே சின்னதாய் தான் இருந்தது! பிறகு இளையராஜா வந்தார். டிவியில் பிரபுவையும், சத்யராஜையும் காட்டும்போது ஒரே கரவொலி. அவர்களும் உற்சாகமாய் கையசைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு தான் தெரிந்தது, அது அவர்களுக்கான ஒலி அல்ல, ரஜினியின் வருகை என்று! பல்ப்! மனிதர் குருவை கண்டால் போதும் காலில் விழுந்து விடுகிறார். என்ன ஒரு பணிவு! மேடையில் ஏறியதும் மக்களை பார்த்து பெரிய கும்புடு ஒன்று போடுகிறார். ஒரே ஆரவாரம்! ரஜினி செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கூட்டம் சைக்கிக் ஆகிறது! ஒரு வழியாய் செட்டில் ஆன பிறகு, மெல்ல ஜெ வந்தார். அவருக்கு ஒரு தனி வழி, நேராய் அது மேடைக்கு கொண்டு வந்தது. அவர் அந்த மேடையில் வந்ததும், ஏதோ தேசிய கீதம் போட்டது போல் கீழ் உள்ள அத்தனை பெரும் எழுந்து நிற்கிறார்கள். அவர் அமர்ந்ததும் தான் அமர்கிறார்கள்!  அடப் பாவிகளா!

ஒரு வழியாய் விழா ஐந்து மணிக்குத் தொடங்கியது. சின்மயி, விஜய் ஆதிராஜ் [மனிதர் எப்போது பார்த்தாலும் அதே மாதிரி இருக்கிறார்!] தொகுத்து வழங்கினார்கள். எம் எஸ் வி, ராமமூர்த்திக்கு ஜனாதிபதி அவார்ட் கிடைக்காததால் ஜனங்க அவார்ட் கொடுப்போம் என்று கூறி "திரையிசை சக்கரவர்த்தி" மக்கள் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டத்தை ஜெ அவர்கள் எம் எஸ் விக்கு வழங்கினார். ராமமூர்த்தி பற்றி யாரும் நிறைய்ய பேசவில்லை. ஜெ பேசும்போது "கண் போன போக்கிலே" பாட்டில் வரும் சோலோ வயலின் ராமமூர்த்தி வாசித்தது என்றார். அறுபது ஆண்டு கால சாதனைக்காக அறுபது பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றையும் இருவருக்கும் வழங்கி கவுரவித்தார். அதோடு அவரின் இசையில் பாடிய பலருக்கு தங்கப்பதக்கம் அளித்தார். வழக்கமாய் இந்த மாதிரி விழாக்களில் முதலில் பாட்டு, ஆட்டம் என்று கச்சேரி தான் நடக்கும். எல்லாம் ஆய்ந்து ஓய்ந்த பிறகு நிகழ்ச்சிக்கு வருவார்கள். ஆனால், இங்கே, முதலில் நிகழ்ச்சியை மட மடவென முடித்து விட்டு பிறகு கச்சேரிக்குச் சென்றது சற்று ஆறுதலாய் இருந்தது! கச்சேரி தொடங்கியதும் பல பிரபலங்கள் கழண்டு கொள்ளவும் சவுகரியமாய் இருந்தது.

முதலில் ஜெயா டிவி சி ஈ ஓ ராவ் அவர்கள் தமிழில் தங்கு தடையற பேசினார். ஜெயா டிவி தொடங்கி பதிமூன்று ஆண்டுகள் முடிவடைந்தாலும் ஜெ பங்கு பெரும் முதல் நிகழ்ச்சி இது தான் என்றார்.

ஏவிஎம் சரவணன் எம் எஸ் வி யுடன் அமர்ந்து ட்யூன் போட்ட காலங்களை நினைவு கூர்ந்தார். இருவரும் வித்யா கர்வமில்லாதவர்கள் என்றார். எம் எஸ் வி, எனக்கு ஏதோ கொஞ்சம் மியூசிக் தெரியும், நான் போடறேன், உங்களுக்குப் புடிச்சதை எடுத்துக்குங்க என்று ஒன்றும் தெரியாதவர் போல் சொல்வார் என்று சொன்னார். ஜெய டிவியில் தான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளை சொன்னார்.

பிறகு இளையராஜா பேசினார். எம் எஸ் வி அவர்கள் துப்பிய எச்சங்கள் தான் எனக்கு உணவாய் அமைந்தது என்றார். ஜெ வை வெண்ணிற ஆடை படத்தின் பாடல் காட்சியின் [அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்] படப்பிடிப்பில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று பார்த்ததாகச் சொன்னார். எம் எஸ் வி அவர்களை பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை என்று முடித்துக் கொண்டார்.

பிறகு பாலச்சந்தர். வயதானாலும் அவரின் கம்பீரம் இன்றும் அப்படியே இருக்கிறது. நல்ல கண்டிப்பான ஒரு கல்லூரி பேராசிரியர் மாதிரி எந்த நிகழ்ச்சியாய் இருந்தாலும் மிடுக்காய் வருவார்.  இந்த விழாவை ஜெயா டிவி எடுத்தது திரையுலகினர் எங்களுக்கு இழுக்கு. இது நாங்கள் எடுக்க வேண்டிய விழா என்று ஆதங்கப்பட்டார். இருவருக்கும் மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கத் தவறி விட்டதாகவும் அது கிடைக்க முதல்வர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அவரும், எம் எஸ் வி யும், கண்ணதாசனும் இணைந்த எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் என்றும், அந்தப் பாடல்களைத் தாங்கி நின்ற தன்னுடைய அத்தனை படங்களையும் அவருக்கு சமர்ப்பிப்பதாகச் சொல்லி முடித்துக் கொண்டார். 

அடுத்து கமலஹாசன். வழக்கமான சாமர்த்தியமான பேச்சு. இத்தனை ஆண்டுகள் கழித்து இது தான் நீங்கள் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி எனும்போதே, செல்லம் கொடுத்து வளர்ந்த குழந்தை இது இல்லை, தானே வளர்ந்த குழந்தை என்று புரிகிறது என்றார். நான் முதலில் வாயசைத்தது எம் எஸ் ராஜேஸ்வரியின் குரலுக்குத் தான் என்றார். அவர்கள் அனைவரையும் கவுரவப்படுத்தியது என்னை கவுரவப்படுத்தியது போலிருக்கிறது என்றார். இசை அமைக்கும் இளையராஜாவுக்கே சொல்வதற்கு வார்த்தை இல்லையென்றால் இசையை கேட்க மட்டுமே தெரிந்த நான் என்ன சொல்ல முடியும் என்று கூறி முடித்துக் கொண்டார். 

ரஜினி. அடுத்து திரு ரஜினி [பேசத் தான் அழைக்கிறார்கள் என்று ரஜினி எழுந்து பாதி தூரம் வந்து விட்டார்] அவர்களுக்கு திரு ராவ் அவர்கள் நினைவுப் பரிசு வழங்குவார். பிறகு சென்று அமர்ந்து கொண்டார். ரஜினியின் வேகத்தை பார்த்து அனைவரும் ரசித்துச் சிரித்தனர். நினைவு பரிசை வாங்கி வைத்துக் கொண்டு விறு விறுவென்று நடந்து மைக்கை பிடித்தார். வழக்கமான குளறல், உளறல் பேச்சு. இன்றும் இவரால் தங்கு தடையில்லாமல் தமிழில் பேச முடியவில்லை. சார், பேசாம குஷ்பூகிட்ட போய் தமிழ் கத்துக்குங்க! "எங்கே பிராமணன்" என்ற நிகழ்ச்சியை தான் விரும்பிப் பார்த்ததாகவும், அது திடீரென்று நின்று விட்டதால், சோவிடம் நான் விசாரித்தேன். ஏன் சார், நல்லா தானே இருக்கு, ஏன் நிறுத்துட்டீங்கன்னு...ஆமா, சி எம் கூட கேட்டாங்க. ஆனா எனக்கு வேலை இருக்கு, அதான் மேற்கொண்டு பண்ண முடியலை ன்னு சொன்னாரு! சி எம் மே கேட்டு முடியாதுன்னு சொல்றதுக்கு ஒருத்தர் நாட்ல இருக்காருன்னா அது சோ தான் என்று ஒரு போடு போட்டார்! அதைக் கேட்ட சோ தலையில் அடித்துக் கொண்டது ஹை லைட்! ஜெ இருக்கும் மேடையில் என் நண்பர் கலைஞர் என்று ரஜினி பேசுகிறார். இதிலிருந்து அவர் எதையும் தயார் செய்து கொண்டு வருவதில்லை. அங்கு அப்போது என்ன வருகிறதோ அதை பேசி விடுகிறார் என்று தெரிகிறது. தான் வித்தியாசமாய் இருப்பதால், எம் எஸ் வி தனக்கு முதலில் குரல் கொடுத்தார் என்றார். இந்த மேடையில எல்லாரையும் விட நான் தான் ஜூனியர், அவர்களுக்கே சொல்ல வார்த்தை இல்லைன்னு சொல்றப்போ, நான் என்ன சொல்ல முடியும் என்று முடித்துக் கொண்டார். 

பிறகு ஜெ சிறப்புரை ஆற்றினார். உண்மையிலேயே சிறப்பாய் இருந்தது. அவருடைய கணீர் குரலில் எம் எஸ் வி பற்றியும், ராமமூர்த்தி பற்றியும் தன்னுடைய அனுபவங்கள் கலந்து சொல்லி முடித்தார். அவர்களின் பெயரை பத்மா விருதுக்காக ஏற்கனவே பரிந்துரைத்ததாகவும், அதை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றும், தான் சொன்னால் நடக்கும் காலம் வரும், அப்போது கண்டிப்பாய் உங்களுக்கு அந்த விருதை வாங்கித் தருவேன் என்றும் சூளுரைத்தார். பிறகு ஜெய டிவி ஊழியர்களுக்கு சம்பள உயர்வையும் [30 முதல் 40%!] பல வித சலுகைகளையும் அறிவித்தார். அவரே தயாரித்த எம் எஸ் வியின் சிறந்த பாடல்கள் கச்சேரியை தானும் கேட்டு ரசிக்கப் போவதாய் சொல்லி முடித்துக் கொண்டார். 

எம் எஸ் வி அவர்கள் ஏற்புரையை தன்னுடைய வழக்கமான சுருக்கமான பாணியில் முடித்துக் கொண்டார். 

பிறகு கச்சேரி தொடங்கியது. ஒய் ஜி மகேந்திரா "நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா" பாடலுக்கு அருமையாய் விசிலடித்தார். அவரின் நெஞ்சத்தில் இருவருக்கு நிரந்தர இடம், ஒன்று நடிகர் திலகம் இன்னொன்று எம் எஸ் வி, ராமமூர்த்தி என்றார். [நாகேஷ் எங்கே சார்?] ஆமாம், இவரும் இளமையாய் தான் இருக்கிறார். இவரை ஏன் மார்க்கண்டேயன் என்று அழைப்பதில்லை? திரையுலக மார்க்கண்டேயனும் [சிவகுமார்] கச்சேரிக்கு இடையில் அவருடைய வழக்கமான பாணியில் சுருக்கமாய் பேசி விட்டுச் சென்றார். ஜெ வை அவர் அம்மா என்று அழைக்காமல் "எங்கள் திரையுலக சகோதரி" என்று அழைத்தது சற்று ஆறுதலாய் இருந்தது! அவர் பேசும்போது அவருடைய ஞாபக சக்தியை பறைசாற்றும் விதமாக அவர் கூறும் சில விஷயங்கள் அலுப்பு தட்டுகிறது. இந்த நாள், இந்த நேரத்துல இந்த கலர் சட்டை போட்ருந்தேன், இந்த ஹோட்டல்ல சாப்டேன் என்ற ரேஞ்சில் படுத்துகிறார். போதும் சார்!

பி சுசீலாவை மாலை பொழுதின் மயக்கத்திலே பாடலை பாட அழைத்தார்கள். தங்கப் பதக்கத்தால் ரொம்பவே உருகி விட்டார் என்று நினைக்கிறேன். உளறு உளறு என்று உளறினார். பாடலை அருமையாய் பாடினார். என்ன குரல் வளம் அவருக்கு! ஏ எல் ராகவன் இன்னும் அருமையாய் பாடுகிறார். பழைய பாடகர்களின் குரலில் ஜெயா டிவியில் பாடும் பாடகர்கள் மிக அருமையாய் பாடினார்கள். 

டி எம் எஸ், பி பி எஸ் போன்றோர்கள் மிகவும் தளர்ந்து விட்டார்கள். மேடையில் ஏறவே முடியவில்லை. அவர்களை படுத்தி மேலே அழைத்து வந்து பதக்கம் பெறச் செய்கிறார்கள். ஜெ அவர்களுக்கும் அம்மா தானே, பிள்ளைகள் மேல் பாசமாய் அவர்களே கீழே வந்து கொடுக்கலாமே? நான் பார்த்த வரை ஜெ வை பார்த்தால் ஸ்ட்ரிக்ட் எச் எம் ரேஞ்சுக்கு எல்லோரும் கை கட்டி வாய் பொத்தி நிற்கிறார்கள். அவரை வைத்து இயக்கிய பாலச்சந்தர் அப்படி வணக்கம் போடுகிறார். அவர்கள் வயதையும் மீறி ஒரு பதவிக்கு இத்தனை அடிபணிவது அசிங்கமாய் இருக்கிறது. தமிழ்நாட்டில் தான் இப்படி எல்லாம் நடக்கும்!

திரும்பி வரும்போது நான் போட்டு போன குடை அப்படியே இருந்தது! தமிழ்நாட்டில் இப்படியும் நடக்குமா? 
6 Responses
  1. Anonymous Says:

    Classic writing!!!!!!


  2. Thank u Anony [peraavathu podungappa...]


  3. Anonymous Says:

    I think, Mega TV had done much more facilitation to MSV that Jaya TV; Jaya TV did it because they could not get anybody else for their 14th anniversary.

    Venkatesh



  4. Ram Says:

    Nice narration Pradeep....