மற்றுமொரு சுதந்திர தினம். வழக்கமான கொடியேற்றல்கள். சம்பிரதாயமான கொண்டாட்டங்கள். புளித்துப் போன அரசியல்வாதிகளின் உறுதி மொழிகள். மேடைப் பேச்சுக்கள், போலி பெருமிதங்கள்! சுதந்திரம் அடைந்து அறுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் நாட்டில் அருபத்தைந்தாயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. எதை நினைத்து சுதந்திரத்தை கொண்டாடுவது? அறுபத்தைந்து ஆண்டுகளாய் வளரும் நாடுகளில் பட்டியலில் தான் இருக்கிறோம். ஒரே முன்னேற்றம் முப்பது கோடி இருந்த மக்கள் தொகை நூற்றி இருபது கோடி ஆகியிருக்கிறது.
நான் அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல மாட்டேன். நாட்டின் இந்த நிலைக்கு நாம் தான் காரணம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தான் காரணம். நேர்மையாய் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு எத்தனை பேர் வாழ்கிறோம்? எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம், பொறுப்பின்மை, களவாணித்தனம். சுயஒழுக்கம் என்பது மருந்துக்கும் கிடையாது. அரசியல்வாதிகளை சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது? நமக்கு அளிக்கப்பட இடத்தில் நாம் என்ன தப்பு செய்ய முடிகிறதோ, அவர்களுக்கு அளிக்கப்பட இடத்தில் அவர்கள் அதை செய்கிறார்கள்.
தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப் பாக்கணும்
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்
காலங்காலமாக சினிமா பாடல்களை பாடி வருகிறோம். ஆனால் அதிலிருந்து நம் வாழ்க்கைக்கு என்ன எடுத்துக் கொண்டோம்? மேடைக்கு மேடை காந்தி, காமராஜர் பிறந்த நாடு என்று பீற்றிக் கொள்கிறோம். அவர்களின் வாழ்வியல் தத்துவமான "எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை" என்றைக்காவது கடைபிடித்திருப்போமா? பொய் சொல்லாமல் நம்மால் ஒரு நாள் வாழ முடியுமா? தவறு செய்தால் மன்னிப்பு கேட்கும் திடம் நமக்கு இருக்கிறதா? இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத கடவுளுக்கு செய்யும் செலவுகளில் கொஞ்சம் நம் கன் முன்னே ரத்தமும் சதையுமாய் இருக்கும் மனிதனுக்கு நாம் செய்வோமா?
நாட்டில் சாதி மத சண்டைகள் ஒழியவில்லை. இன்றும் எங்கோ ஓர் இடத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு அநீதி இழைத்து கொண்டு தான் இருக்கிறோம். இன்று ஒரு படி மேலே போய், கெளரவக் கொலைகள் வரை வந்து விட்டோம்!
என்று ஒரு பெண் தன்னந்தனியாய் கழுத்து நிறைய நகைகளுடன் இரவு பனிரெண்டு மணிக்கு தெருவில் தனியாய் நடக்க முடிகிறதோ, அன்று தான் உண்மையான சுதந்திரம் அடைகிறோம் என்று காந்தி சொன்னார். கழுத்து நிறைய நகைகளை விடுங்கள், இரவு பனிரெண்டு மணி கூட விடுங்கள், ரோட்டில் ஒரு பெண் தனியாய் நடக்க முடிகிறதா? பத்து இருபது பேர் குடித்து விட்டு ஒரு பெண்ணை நடு ரோட்டில் வன்கொடுமை செய்கிறார்கள். அதை வீடியோ எடுத்து இணையம் எங்கும், தொலைக்காட்சியில் அத்தனை சானல்களிலும் ஒளிபரப்புகிறார்கள். என்ன அநியாயம் என்று நாமும் ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம், பிறகு இந்த நாட்டை திருத்த முடியாது என்று சானலை மாற்றி விடுகிறோம். காந்தி சொன்ன சுதந்திரம் எங்கே?
வறுமை ஒழியவேயில்லை. இன்றும் நாற்பது சதவிகிதம் இந்தியர்கள் நாளைக்கு $1.25 குறைவான வருமானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு சராசரி வருமானமே முப்பத்திரண்டு ரூபாய் இருந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வர மாட்டார் என்று நாகூசாமல் சொல்கிறார்கள்.
இன்று செய்தித்தாளை படிப்பது போன்ற ஒரு மனச் சோர்வு கிடையாது. செய்தித்தாளை படித்து நம் நாளை துவக்க முடியுமா? ஒவ்வொரு செய்திகளையும் படித்தால் ரத்தக்கொதிப்பே வந்து விடும். ஒரு பக்கம் வெள்ளம் வந்து வாழ்வியல் பாதித்தது என்று செய்தி. அடுத்த பக்கத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதித்தது, பஞ்சத்தில் இத்தனை பேர் இறந்தார்கள் என்று அஞ்சலி! என்ன ஒரு வேடிக்கை?
உழவர்களை முழுவதுமாய் புறக்கணித்து விட்டோம். விவசாயம் முற்றிலும் அழிந்து கொண்டிருக்கிறது. அவர்களின் வயலுக்கு வாங்கிய பாலிடாயில் தான் இன்று அவர்களுக்கு கடைசி உணவாக ஆகிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளை புறக்கணித்த எந்த தேசம் உருப்படும்?
நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று மார் தட்டும் அதே சமயத்தில் பக்கத்து மாநிலத்துடன் அடித்துக் கொள்கிறோம். அந்த இந்தியன் என்ன ஆனான் என்று தெரியவில்லை.
எங்கும் லஞ்சம் விரவிக் கிடக்கிறது. நாட்டில் எல்லாவற்றிற்கும் ஒரு ரேட் இருக்கிறது. வொயிட்ல இத்தனை ப்ளாக்ல இத்தனை என்று நாகூசாமல் பேசிக் கொள்கிறோம். நான்கு வயதுக் குழந்தை ஸ்ருதிக்கு சாக வேண்டிய வயதா?
மிதக்கும் சொர்க்கம் என்று சொல்லிச் சொல்லி ஒரே ஒரு சொர்கத்தை வைத்துக் கொண்டு நாட்டையே தீவிரவாதம் என்ற பெயரில் நரகமாகிவிட்டோம்.
மக்களாட்சி என்று பெயருக்கு தான் சொல்கிறோமே தவிர, மன்னராட்சியை போல் வாரிசு அரசியல் தான் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அத்தனையும் அவர்கள் குடும்பச் சொத்தாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை தான் நாம் பார்க்க, கேட்க, படிக்க வேண்டி இருக்கிறது.
கல்விமுறையை பற்றி கேட்கவே வேண்டாம். நம் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்? அவர்கள் நல்லவர்களாக, நாலு பேருக்கு உதவுபவர்களாக வளர்கிறார்களா? நம் குழந்தைகளை அறிவுக் குருடர்களாக அல்லவா வளர்த்து வருகிறோம். கசடற கற்பதை விடுங்கள், என்ன கற்கிறோம் என்றே தெரியாமல் மதிப்பெண் ஒன்றையே நோக்கி ஓடும் கடிவாளம் கட்டிய குதிரைகள் ஆகிவிட்டன நம் குழந்தைகள். குழந்தைகள் நம்மை பார்த்து தான் கற்றுக் கொள்கிறார்கள். நான் ரெட்டை மதிக்காமல் சிக்கனில் க்ராஸ் செய்தால் நாளை அவன் எப்படி அதை மதிப்பான்? அப்போது வருங்கால இந்தியா எப்படி இருக்கும்?
நூற்றி அறுபத்தைந்தாவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் என்று சம்பிரதாயமாக இருக்கும்! வேறு என்ன சொல்ல?
நான் சுதந்திர தினத்தை பெருமையாக நினத்ததை நிறுத்தி பல வருடம் ஆகி விட்டது. ஆனால் இன்றும் அதெ கெள்வி நாம் என்ன செய்துவிட்டொம் என்று