உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப் பட்டது.
உச்சி பொழுது. சென்னையின் மார்கழி வெயில் உக்கிரம். தம்பி என்ற ஒரு குரல் கேட்டுத் திரும்பினேன். ஒரு கான் க்ரீட் தடுப்பு நிழலில் ஒன்றிக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் நான் வண்டி எடுப்பதை கவனித்து என்னை விளித்தார். ஊன்றுகோலின் வசதியுடன் மெல்ல நடந்து என்னருகில் வந்தார். தொண்டுக் கிழம். நெற்றி நிறைய பட்டை. அரதப் பழசான வேட்டி சட்டை. இத்தனை வயது வரை வாழக் கூடாதென்று முடிவு செய்து கொண்டேன்.
மெயின் ரஸ்தாவுக்குப் போகனும் தம்பி!
"இதோ தெரியுதே" என்று கூப்பிடு தூரத்தில் இருந்த ரஸ்தாவைக் கையைக் காட்டினேன்.
"அந்த ரஸ்தாவுல இருக்குற ஆஸ்பத்திரிக்குப் போகனும்!" என்றார் மெல்ல.
இத்தனை தள்ளாட்டத்துடன் இருப்பவரை எப்படி பைக்கில் கூட்டி செல்வது என்று எனக்கு கொஞ்சம் தயக்கம். இருந்தாலும் பாவமாய் இருந்தது. சரி வண்டியில உக்காந்துருவீங்களா? என்று கேட்டு முடிப்பதற்குள் தட்டுத் தடுமாறி ஏறி அமர்ந்து கொண்டார். நல்லா கெட்டியா புடிச்சுக்கோங்கோ என்று மெல்ல வண்டியை நகர்த்தினேன். "நீங்க போங்கோ, ஆஸ்பத்திரிக்கு நேக்கு வழி தெரியும், நான் சொல்றேன். அந்தத் தாமரை குளத்துக்கு ஒட்டினாப்பல இருக்குற சந்துல இருக்கு. ஆமா...நான் சொல்றேன். வயசாயிடுத்து, நடக்க முடியலை...முட்டி தேஞ்சு வலிக்கிறது. நீங்க நன்னா இருக்கணும். எனக்காக இத்தனை சிரமம் எடுத்துக்குறேள். இந்தக் காலத்துல யாரு இப்படி உபகாரம் பண்றா? வெயில் என்னமா மண்டையை பிளக்கிறது? மரமும் மனுஷாளும் குறைஞ்சுண்டே வர்றா, எப்படி மழை வரும், எப்படி லோகம் செழிக்கும்? இதோ நீங்க இருக்கேள், எப்படி உபகாரம் பண்றேள், இப்படி எல்லாருமா பண்றா...வயசாயிட்டா எல்லாத்துக்கும் ஒரு கேலிப் பொருள் மாதிரி ஆயிட்றோம். உடம்பு பாடாய் படுத்துறது. பகவான் கண்ணைத் தெறக்க மாட்றான். அவன் என்ன செய்வான், லோகத்துல இருக்குற எல்லாருக்காகவும் அவன் கண்ணைத் தொறந்துண்டே இருந்தா, அவன் எப்போ தான் கண்ணை மூடுறது? இந்த லாரிக்காரன் பாருங்கோ, கண்ணுல மண்ணை கொட்டிண்டே போறான். சரியான எமன்...."
எங்கே இவர் புலம்பிக் கொண்டே வழியை மறந்து விடப் போகிறார் என்று தாமரைக் குளத்தை ஆட்டோக்காரர்களிடம் விசாரித்தேன். பேச்சை நிறுத்தி மெல்ல புன்னகைத்து "நான் தான் சொல்றேனே, போங்கோ வந்தா சொல்றேன். நேக்கு தெரியும், தம்பிக்கு நம்பிக்கை இல்லை" என்று அந்த ஆட்டோக்காரர்களிடமும் மன்றாடினார். நான் மெல்ல வண்டியை நகர்த்தியதும், மறுபடியும் ஆரம்பித்து விட்டார்.
"நேக்கு 89 வயசாறது. ஒரே இருமல், சளி!! மூச்சை முட்றது. சின்ன வயசுல நான் அப்படி இருப்பேன். என் ஆம்படையா என்னை முழுங்குற மாதிரி பாப்பா...அது அந்தக் காலம். இப்போ அவ ஆஞ்சு ஓஞ்சு போயிட்டா. அவளுக்கும் ஒரு 80 வயசு இருக்கும். நீங்க யார் பெத்த புள்ளையோ, உங்களை நன்னா வளத்துருக்கா, எல்லா செல்வங்களோட நீங்க நீடூழி வாழனும்!" என்றவுடன் மறுபடியும் அந்த எண்ணம் தோன்றியது. இந்த வயது வரை சத்தியமாய் வாழக் கூடாது! ஒரு வழியாய் ஆஸ்பத்திரியில் இறங்கினோம். "சத்த இருங்கோ, நான் டாக்டரை பார்த்துட்டு வந்துடறேன்" என்று ஆட்டோக்காரரை அமர்த்தி விட்டு செல்வதைப் போல் சொல்லி விட்டு அவர் மெல்ல நடந்தார். கால்கள் தளர்ந்து, உடலை வருத்தி அவர் இறைந்து இறைந்து செல்வதை காணப் பொறுக்கவில்லை. "நீங்க உக்காருங்க, நான் விசாரிக்கிறேன்" என்று அவரை உட்கார்த்தி விட்டு அங்கு இருந்த ஒருவரிடம் விசாரித்தேன். "பதினோரு மணி வரை தான் சார் பாப்பாங்க, இனிமே நாளைக்கு தான்" என்றார். அவருக்கு இறைத்துக் கொண்டிருந்தது. மூச்சு முட்டியது. என்னிடம் சொன்னதையே அவரிடம் சென்று சத்தமாய் இறைந்து சொன்னார். "சார், கொஞ்சம் மருந்தாவது கொடுங்க..டானிக் எதாவது.." என்றேன். "சீக்கிரம் வர்றதுக்கென்ன?" என்று அவரிடம் எரிந்து விழுந்தார். சில மாத்திரைகளையும், ஒரு சிரப்பையும் என்னிடம் கொடுத்தார். "வாங்க" என்று அவரை மெல்ல எழுப்பினேன். அப்போதும் ஏதோ பேசி கொண்டே இருந்தார்.
மிகுந்த சிரமப்பட்டு, "தம்பி என்னை வீட்ல விட்டுடுங்கோ" என்றார். உங்க வீடு எங்கே என்றேன். "இதோ இந்தத் தாமரை குளத்துக்கு அந்தப் பக்கம்" என்றார் இறைந்து கொண்டே! எனக்கு புரியவில்லை. வீடும் இங்கே, ஆஸ்பத்திரியும் இங்கே..இவர் எப்படி அங்கு வந்தார்? அத்தனை தூரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்? அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில பயல்களின் உதவியுடன் அவரை மெல்ல வண்டியில் ஏற்றினேன். "தாத்தா நல்லா சாரை புடிச்சுக்குங்க" என்றான் ஒருவன். இருமி கொண்டே புன்னகை செய்தார். "ஆமா, வீடு இங்கே தான் இருக்குன்னா, அவ்வளவு தூரத்துல என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு" கேட்டேன். என் கேள்வியை சிறிதும் சட்டை செய்யாமல், "ஆ! இங்கே தான், நான் தான் சொன்னேனே, தாமரை குளம் பக்கத்துல...இந்த சந்து தான்.. ஏழாம் நம்பர் சந்து...திரும்புங்க" என்றார்! அந்த குண்டும் குழியுமான சாலையின் நடுவில் இருந்தது அவர் வீடு. ஒரு துருப் பிடித்த பழைய கேட்டை அவர் திறப்பதற்கும், அந்த வீட்டின் கதவு திறப்பதற்கும் சரியாய் இருந்தது. உள்ளிருந்து ஒரு வயதான மாமி எட்டி பார்த்தார். நான் ஒரு எட்டு வைத்து அவரிடம் பேச முயல்வதற்குள் அவர் அந்த இரும்பு கேட்டை வேகமாய் சாத்திக் கொண்டார். " தாத்தா, அந்த மருந்து மத்தியானம் சாப்டுட்டு" என்பதற்குள் தலையை ஆட்டிக் கொண்டே ஒரு வித பதட்டத்துடன் உள்ளே சென்றார். நான் மாமியை பார்த்து, "மாமி அந்த மருந்து எப்போ சாப்பிடனும்னா" என்று சொல்வதற்குள் அவர் ஆட்டிய தலையை நிறுத்தாமல் உள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொண்டார்.