யூ ட்யுபினால் டீவி இல்லாத குறையே தெரிவதில்லை. முதல் நாள் ஒளிபரப்பான நிகழ்ச்சி அடுத்த நாள் சின்ன சின்ன வீடியோவாக எண் பிரித்து போட்டு விடுகிறார்கள். யார், எப்படி இத்தனை பொறுப்புடன் செயல்படுகிறார்கள் என்று ஆச்சர்யமாகவே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? புரியவில்லை. நேற்று விஜய் டீவி அவார்ட்ஸ் பார்த்தேன். பாலிவுட்டில் நடக்கும் ஃப்லிம் ஃபேர் அவார்ட் ரேஞ்ச்சுக்கு நடத்துகிறார்கள். அதுவும் கோபி ஒவ்வொரு நாமினியையும் சொல்லும்போது எல்.ஈ.டி ஸ்கிரீனில் அவர்களின் முகம் பளிச்சிடுவது கூடுதல் பளிச்சு! வழக்கமாய் நிகழ்ச்சியை வழங்கும் யூ கி சேதுவை விட்டு விட்டு, நீயா நானா கோபியை அழைத்திருந்தார்கள். சில இடங்களில் நீயா நானா சாயல். இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்த நிறைய டைமிங் வேண்டும். ஷாருக்கான் இதில் உண்மையில் கிங் கான் தான். ஒரு சூப்பர் ஸ்டார் இப்படி ஒரு நிகழ்ச்சியை மற்றவர்களை விட சுவாரஸ்யமாய் நடத்துவது பெரிய விஷயம் தான். தமிழ் நாட்டில் இப்படி எல்லாம் நடக்குமா? ரஜினியோ விஜய்யோ இந்த நிகழ்ச்சியை நடத்தினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாய் இருக்கிறது. அதிலும் நிகழ்ச்சி முழுதும் விஜய்யின் முகத்தில் ஒரு சின்ன புன்னகையை கூட நான் பார்க்கவில்லை. ஏதோ ஒரு உலகத் திரைப்பட விழாவில் மிக மெல்ல நகரும் ஒரு அற்புதமான ஈரானிய திரைப்படத்தை வலுக்கட்டாயமாக அவரை உட்கார்த்தி பார்க்க வைப்பதைப்போல் இருந்தார். கமலஹாசனுக்கு இவர் விருது கொடுக்கிறார். கமலும் அவர் உளறுவதை தேமே என்று பார்த்துக் கொண்டு நிற்கிறார். இதில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும், நான் கூட விஜய்யை என் கம்பெனிக்கு நடித்துக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறேன் என்று கமல் காமடி வேறு செய்கிறார். விஜய் அப்படியா, எனக்குத் தெரியாதே, அது எப்போது என்பது போல் ஒரு பார்வை பார்த்தார். என்ன தான் மேடை நாகரீகம் என்றாலும் ரொம்ப அ நாகரீகமாய் இருந்தது போல் தோன்றியது. அதிலும் கமலுக்கு ஏகப்பட்ட அவார்ட்கள். சிவகுமார் சொல்வது போல் கமலை எல்லாம் இந்த ஆட்டையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அப்படியே சேர்த்துக் கொண்டாலும் அவர் மற்றவர்களுக்கு அவார்ட் கொடுப்பதோடு நின்று விட வேண்டும். மனொரமாவிடம் மைக் கொடுக்காதீர்கள் என்றால் கேட்கமாட்டேன் என்கிறார்கள். இனிமேல் பார்த்தீபனிடமும் மைக்கைக் கொடுக்கக் கூடாது. மனிதர் வித்தியாசமாய் பேசுகிறேன் என்று கொன்று விடுகிறார். அவர் எல்லோரும் பேசுவது போல் சாதரணமாய் பேசினால் ரொம்ப வித்தியாசமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அவார்ட் வாங்கிய அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள். [திட்றதெல்லாம் திட்டிட்டு...]
புத்தகங்கள் படிப்பது மிகவும் குறைந்து விட்டது. எஸ். ராமகிருஷ்ணன் பட்டியலிட்டுள்ள நூறு கதைகளையாவது தேடிப் படிக்க வேண்டும். முத்துக்கள் பத்து என்று புத்தக சந்தையில் 8 எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பை வாங்கியிருந்தேன். அதை எலி கடிப்பது போல் ஆங்கொன்றும் இங்கொன்றும் படித்து வருகிறேன். பிச்சமூர்த்தி கதைகள், ராஜம் கிருஷ்ணன் கதைகளைத் தவிற வேறு கதைகள் அதிகம் ஒட்டவில்லை. ரா.கி. ரங்கராஜன் மொழி பெயர்த்த பட்டாம்பூச்சி நாவலை மறுபடியும் வாசிக்கிறேன். ஏதாவது படிக்க வேண்டும் என்று நான் டெல்லியில் இருந்த போது வாங்கியது. அப்போது யாராவது ரா(க்)கி யைப் பற்றி என்னிடம் கேட்டிருந்தால் சில அழகிய பெண்கள் ஆண்களுக்கு செய்யும் துரோகம் என்று சொல்லியிருப்பேன். ஒரு மொழிபெயர்ப்பை படிக்கிறோம் என்ற உணர்வேயில்லை! அத்தனை எளிதாய் லாவகமாய் செய்திருக்கிறார். இவருடைய நாலு மூலையும் நான் மிகவும் ரசித்த புத்தகம். வாத்தியாரின் சில ஈ புக்குகள் இணையத்தில் கிடைத்தன. இங்கே! ஆ படித்தேன். அத்தனை சிலாக்கியமாய் எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை தொடராய் வந்த சமயத்தில் படித்திருந்தால் அற்புத அனுபவமாய் இருந்திருக்குமா (ஆ!)? கணையாழியின் கடைசி பக்கங்களை அலுவலகத்தில் ஆல்ட் டாப் முறையில் படிக்கிறேன்! பெங்களூர் தமிழ் சங்கத்தில் நின்று கொண்டே படித்து, அவரின் எழுத்தை ரசித்து சிரித்தது ஞாபகம் வருகிறது. இன்று ஆல்ட் டாபும் போது, கணையாழியின் கடைசிபக்கத்தில், தோராயமாய் ஒரு நடுப் பக்கத்தில், ஒரு சைனீஸ் கவிதையை எப்படி எழுதுவது என்று அவர்கள் சொல்வதாய் இவர் சொல்கிறார். அதாவது,
சாதரணமாக சைனீஸ் கவிதைக்கு நான்கு வரிகள் உண்டு. முதல் வரி கவிதையை தொடங்குகிறது. இரண்டாம் வரி கவிதையை தொடர்கிறது. மூன்றாம் வரி ஒரு புதிய கருத்தை ஆரம்பிக்கிறது. நான்காவது வரி முதல் மூன்று வரிகளையும் சேர்க்கிறது.
சைனீஸ் சாம்பிள்
கியோட்டாவை சேர்ந்த சில்க் வியாபாரிக்கு
இரண்டு பெண்கள்.
மூத்தவளுக்கு இருபது வயது. இளையவள்
பதினெட்டு.
ஒரு படைவீரன் கத்தியால் கொல்கிறான்.
ஆனால் இந்தப் பெண்கள் ஆண்களை தத்தம்
கண்களால் கொல்கிறார்கள்.
வாத்தியார் முயற்சி
மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்.
மணி பார்த்தான். உட்கார்ந்தான். படுத்துக் கொண்டான்.
சென்னை விட்டு திருச்சி போகும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தை கடந்து செல்லும்!
அடியேன் முயற்சி
அந்தமான் ஒரு அழகான தீவு.
அங்கு மூசா என்பவன் வாழ்கிறான்.
ஜோலார்பேட்டையில் வசிக்கும் ரசீபு கறாரானவன்.
இந்த இருவருக்கும் எந்த சம்மந்தமுமில்லை!
விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை எல்லோரும் நொக்கி எடுக்கறீங்களே..ம்ம்ம்ம் நான் இன்னும் பார்க்கலை..
Giri,
paarunga, paarunga...yaan petra inbam peruga ivvaiiyagam!
Hi pradeep! Chinese kavithai sooper... 1st n 2nd r very nice! 3rd is a 'HelloWorld'