ஒரு மழை நாள்!
ஜன்னலின் வழியே மெல்லிய சாரலோடு ஒரு குளிர் காற்று என் முகத்திலறைந்தது..கையில் சூடான coffee! அடிக்கடி பெயர் மறந்து போகும் வடநாட்டுக் கலைஞரின் சிதார் இசை டேப்பிலிருந்து காற்றில் தவழ்ந்தது. மழையின் பேரிரைச்சலுடன் அந்த சிதார் இசை கலந்தது, வெகு நாட்களுக்குப் பிறகு ஒன்று கூடிய இளம் காதலரை எனக்கு ஞாபகப் படுத்தியது. அது அந்த சூழலை மேலும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது..நான் நாற்காலியை ஆட்டிக் கொண்டே ஜன்னலின் வழியே மழை நனைக்கும் என் தெருவை ரசித்துக் கொண்டிருந்தேன்! "இங்கே நான் சுத்தம் செய்தால் உண்டு" என்று பொருமிக் கொண்டே வீட்டை சுத்தம் செய்யும் அம்மாவைப் போல் மழை பேரிரைச்சலுடன் தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்தது.. என் வீட்டுக்கு சற்று தள்ளி ஒரு மார்க்கெட் இருப்பதால் ஜன்னல் வழியே வருவோர் போவோரை வேடிக்கை பார்ப்பதே எனக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு...
எத்தனை விதமான் மனிதர்கள்? ஒருவர் கூட மற்றவரின் சாயலில் இல்லையே..நான் பார்த்த வரை, தனியே செல்லும் பெரும்பாலோர் தனக்குத் தானே பேசிக் கொண்டே போகிறார்கள். ஒரு வேளை அவர்கள் பாடிக் கொண்டே போகிறார்களோ? ஜன்னலிலிருந்து பார்ப்பதால் எனக்கு அப்படித் தெரிகிறதோ என்னவோ? ஜன்னலில் நான் வேடிக்கை பார்க்க உட்கார்ந்து விட்டால் நான் கடவுள் என்று எனக்குத் தோன்றும். ஆண்டவன் நம்மை படைத்து விட்டு மேலே இருந்து நம்மைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் போல், அவர்களுக்குத் தெரியாமல் நான் அவர்களைப் பார்த்து கொண்டிருக்கிறேன்..கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு சிலர் மேலே பார்த்து கடவுளே என்பது போல் ஒன்றிரண்டு பேர் நான் பார்ப்பதை பார்ப்பார்கள். அவ்வளவு தான்..இந்த உவமைக்கு மிகப் பொருத்தமான் இடம் மொட்டை மாடி தான்!!
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் சிரிக்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து..2 பெண்கள் சேர்ந்து போனால் என் ஜன்னலைக் கடப்பதற்குள் அவர்கள் இரண்டு முறை "கழுக்" கென்று சிரித்து விடுவார்கள்! "இன்னைக்கு என்னடி லேட்டு" என்று கேட்டு விட்டு சிரிப்பார்களோ? எப்படியோ மழை, மழலை, கவிதை, தென்றல், இயற்கை, நிலவு இந்த வரிசையில் வருவது பெண்களின் சிரிப்பு! அது கவித்துவமானது..இந்த சிதார் இசைக்கும் அவர்களின் குறுநகை எழுப்பும் சத்தத்திற்கும் நிறைய வித்தியாசம் இல்லை என்றே நினைக்கிறேன்.
குனிந்து மேலே பார்த்தேன்..வானம் எதிர் வீட்டுக் கண்ணன் வீட்டின் மொட்டை மாடியில் முடிந்து விடுவதைப் போலிருப்பதை நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்..அதற்கு வானம் ஒரு இடிச்சிரிப்பு சிரித்து "அடேய் மடையா..நீ ஒரு வட்டத்திற்குள்ளிருந்து என்னைக் காண்கிறாய், நான் விசாலமானவன் என்று உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்றது..மேலும் "கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு" ஸ்டைலில் மேகங்கள் கங்கனம் கட்டிக் கொண்டு மழை ஊற்றிக் கொண்டிருந்தது..
தெருவில் செல்வோரில் பாதிக்கு மேற்பட்டோருக்கு மழையை பிடிக்கவில்லை..சிலர் புலம்பிக் கொண்டும், சிலர் முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்..குழந்தைகள் மட்டும் தான் மழையை அனுபவிப்பதாகத் தோன்றியது. அவர்களின் முகத்தில் தான் மழையைக் கண்டதும் உற்சாகம் தெரிகிறது. மனிதன் தான் வளர்ந்ததும் எவ்வளவு மாறி விடுகிறான்!! எத்தனை தேவை இல்லாத பயங்கள் அவனைத் தொற்றிக் கொள்கிறது..மழையைக் கண்டதும் இவர்கள் நினைவுக்கு முதலில் வருவது VICKS, D-COLD தானோ? இந்தக் கவலையால் குழந்தைகளையும் இவர்கள் நனைய விடுவதில்லை.."டேய் வாடா இங்கே..தலை துவட்டு, அப்புறம் சளி புடுச்சுடும்" குழந்தைகளைக் கண்டால் எல்லோருக்கும் பிடிக்கும்..சளிக்கும் பிடிக்கிறது! எனக்குத் தெரிந்து மழையில் நனைந்ததால் இதுவரை எனக்கு சளி பிடித்ததில்லை..இன்றும் வழக்கம் போல மழையில் தொப்பலாய் நனைந்து தான் வந்தேன்..அம்மாவும் வழக்கம் போல அர்ச்சனை செய்தாள்! வாழ்வில் இப்படி எத்தனையோ எழுதாத சட்டங்கள் எல்லா வீட்டிலும் இருக்கத் தான் செய்கிறது.
மழையைப் பிடிக்காதவர்கள் அதனுடன் சமாதானம் பேசாமல் ஒரு கருப்புக் குடையுடன் மழையை எதிர்த்தால், மழை எப்படி சமாதானமடையும் சொல்லுங்கள்? "மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம், ஒரு கருப்புக் கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்!" என்ற வைரமுத்துவின் கவிதை நினைவுக்கு வந்தது.. மனுஷன் ஒன்னு புதுசா யோசிக்க விட மாட்றாரே..எல்லாத்தையும் இப்படி யோசிச்சி எழுதி வச்சுட்டாரேன்னு அழுத்துக் கொண்டேன்! அட சிதார் இசை நின்னுருச்சே..அதுக்குள்ள "A" side முடிஞ்சுருச்சா என்ன? சரி நான் போய் "B" side வச்சுட்டு வந்த்ர்றேன்! no no..நான் வர்றதுக்குள்ள நீங்க இந்த நாற்காலியிலே உட்கார்ந்துட்டா? idea!! இங்க என்னைத் தவிர யாராவது உட்கார்ந்தா ஆயிரம் பாவம்!! டஸ் புஸ்...[க்ராஸ் போட்டுக் கொண்டே!!]