காய்ச்சல்! இதைப் பற்றி S. ராமகிருஷ்ணன் தன்னுடைய துணையெழுத்தில் மிக அழகாக எழுதி இருந்தார்! இதை நானும் யோசித்துக் கொண்டிருந்தேன்..ஆனால் அவர் முந்திக் கொண்டார்.

என்னைப் பொறுத்தவரை காய்ச்சல் நம்மை கஷ்டப்படுத்துவதோடு ஒரு சிறு சந்தோஷத்தையும் தரத் தான் செய்கிறது.

குழந்தையாய் இருந்தால் school க்குப் போகத் தேவையில்லை
இளைஞர்கள் college க்குப் போகத் தேவையில்லை [ஆனால் co-ed ல் படிக்கும் மாணவர்களுக்கு இது எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தரும் என்று தெரியவில்லை..ஒரு நாள் கடலை மிஸ் ஆகுதுல்லே?]
குடும்பத் தலைவர்கள் office போகத் தேவையில்லை
குடும்பத் தலைவிகள் சமைக்கத் தேவையில்லை, துணி துவைக்கத் தேவையில்லை, பாத்திரம் கழுவத் தேவையில்லை etc.,[அட பெண்களுக்குத் தான் நிறைய வேலை இருக்கிறது!]

எல்லோருக்கும் rest!

நான் இங்கு என்னுடைய பள்ளிப் பருவத்தில் வந்த காய்ச்சல் நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்! எனக்கு எப்போதாவது தான் காய்ச்சலே வரும்..அதிலும் school க்கு லீவு போடுவது மிகவும் குறைவு. அப்படி எப்போதாவது வரும் போது அம்மா "நீ இன்னைக்கு school க்கு போகாதே, போயி படுத்துக்கோ" என்று சொல்வாள்!. என் தம்பி என்னை பொறாமையாய் பார்ப்பான்! வழக்கமாய் school க்கு 9:30 மணிக்கு கிளம்புவோம். இன்று அவன் மட்டும்..

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்


சிலோன் ரேடியோவில் பாடிக் கொண்டிருக்கும்..அப்பாடா இன்னைக்கு நம்ம school க்கு போக வேண்டியதில்லை..இவன் இப்போ போனா சாயங்காலம் வருவான்! பாவம் என்று நினைப்பேன்! அம்மா அரிசிக் கஞ்சி கொடுப்பாள்..ஆஹா அதை சாப்பிடுவதற்காகவே தினமும் காய்ச்சல் வரலாம்! சாப்ட தட்டை, டம்ளரை அங்கேயே, அப்படியே வச்சுடலாம்..[அன்னைக்கு மட்டும்!]
அப்படியே போர்வை போர்த்திட்டு படுத்தா நம்ம உடம்பு சூடு போர்வை பூரா பரவி கம்முன்னு இருக்கும்.

குக்கர் விசில் போட்டு ஒரு 12 மணிக்கு எழுப்பி விடும்! குழம்பு, ரசம் வாசனை வீடு பூரா பரவி இருக்கும். அம்மா யாரோ பழம் விக்கிற அம்மாகிட்ட கதை அளந்துட்டு இருப்பா! அம்மாக்கு டெய்லி லீவு தான்..ஜாலி, நாள் பூரா கதை அளந்துகிட்டு இருக்காளேன்னு பொறாமையா இருக்கும்..[அவள் ஞாயிற்றுக்கிழமையும் லீவில்லாம சமைக்கனும் என்பதை மறந்து!]

மெல்ல வெளியே எட்டிப் பார்ப்பேன். தெருவில் சூரியனின் ஆதிக்கத்தைத் தவிர வேறு எதுவுமே இருக்காது. ஓஹோ மத்தியானம் 12 மணிக்கு நம்ம தெரு இப்படித் தான் இருக்குமான்னு நினைத்துக் கொள்வேன்!

தூரத்தில் ஒரு பழக்கப் பட்ட குரல்:

ஈயம்பித்தாளைக்குப் பேரிச்சம்பழம் அச்சு வெள்ளம்
நிலக்கடலைப் பருப்பு பட்டானி வேர்க்கடலை
....


இப்படி பாடிக் கொண்டே ஒரு கிழவர் வந்து கொண்டிருப்பார்! சூரியனின் ஆதிக்கத்துடன் அவருடைய ஆதிக்கமும் சேர்ந்து கொள்ளும். அது அந்த 12 மணிக்கு மேலும் அழகு சேர்க்கும். அவர் என்ன தான் சொல்கிறார், என்ன தான் விற்கிறார் என்று எனக்கு ஒன்றும் புரியாது. யாரும் அவரிடம் இது வரை பேரம் செய்து பார்த்ததாய் எனக்கு ஞாபகம் இல்லை.

அதற்குள் அம்மா "டேய் ஏன் டா வெயில்லே நிக்கிற, போயி படு" என்பாள்! அந்த பழம் விக்கிற அம்மா ரொம்ப கரிசனையோடு "ஏன் ராசா காய்ச்சலா? போய் படுத்துக்கோ ராசா" என்பாள். நான் ஒன்றும் பேசாமல் என் கசக்கும் வாயை மறுபடியும் உணர்ந்து பேசாமல் வேடிக்கை பார்ப்பேன்!

அருவா, கத்திக்கு சானை புடிக்கிறது..
அருவா, கத்திக்கு சானை புடிக்கிறது..

பழைய/புதுப் பாத்திரத்துக்கு பேர் வெட்றது..
பழைய/புதுப் பாத்திரத்துக்கு பேர் வெட்றது..

ஐச், ஐச் [அது ice!!]


இப்படி பலர் என்னைக் கடந்து போய் கொண்டிருப்பார்கள். தூரத்தில் மறுபடியும் ஒரு குக்கர் சத்தம் போடும்!! அய்யய்யோ school ல் என்ன நடக்கிறதோ என்று வேண்டாத நினைவும் அடிக்கடி வந்து போகும்! காய்ச்சல் அழுத்தமாய் என்னைத் தள்ளும், கால்கள் சோர்ந்து போகும்..எனக்கு காய்ச்சல் இல்லாத போது எப்படி இருந்தேன் என்று எனக்கு மறந்து போகும்! "டேய் வந்து கஞ்சி
குடிச்சிட்டு படு" என்று அம்மாவின் குரல் அவள் என்னைக் கூப்பிடுகிறாளா இல்லை காய்ச்சலைக் கூப்பிடுகிறாளா என்று எனக்குக் குழப்பம்!!

சாப்பிட்டு படுத்தால், தூக்கத்தில் மதியம் சாப்பிட வந்த அப்பா நெற்றியைத் தொட்டுப் பார்ப்பதை உணர முடியும். இப்போது தான் படுத்த மாதிரி இருக்கும், என் தம்பி school முடிந்து வந்திருப்பான்! சே, நாமும் இன்று லீவு போடாமல் இருந்திருந்தால், இன்னேரம் நாமும் வீட்டுக்கு வந்திருக்கலாமே என்று தோன்றும். நாளைக்கு என்ன என்ன test இருக்கோ, home work
இருக்கோ என்று மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்.

தெருவெங்கும் நண்பர்களின் விளையாட்டு இரைச்சல் கேட்கும் போதும். . .
அம்மா நான் விளையாடப் போறேன் என்று தம்பி ஓடும் போதும். . .

காய்ச்சல் மீது எனக்கு வெறுப்பு வரும்...முதன் முறையாய்!!

4 Responses
 1. Anonymous Says:

  Iyalbaga irukkiradhu.. your way of writting has a flow like a stream. What we felt during fever is conveyed naturally in this.


 2. Anonymous Says:

  Pradeep

  This is an excellent post. I really enjoyed each and every line. Infact whatever you wrote in this blog, i did felt during my childhood. Especially when you explained about 12 o clock noon and what we missed in the school are really wonderful.


 3. உணர்வுகள் அப்படியே வெளிப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.


 4. RAMG75 Says:

  One more fever day. But not reliving these moments as those are all gone. May be aged now and my kid might experience these.