வேலையில்லா பட்டதாரி

தனுஷை சொல்லிக் குற்றமில்லை. சமீபத்திய படங்களில் தனுஷின் நடிப்பை எல்லோரும் புகழும்போது அவருக்கு நன்றாய் இருந்தாலும், அதே சமயம், இந்த படத்தை விற்கும்போது, விநியோகஸ்தர்கள் அவரிடம் "படம் நல்லா இருக்கு, ஆனா  நீங்க சிவகார்த்திகேயனை வச்சி எடுக்குற அடுத்த படத்தையும் எங்களுக்கே கொடுத்தீங்கன்னா உங்க படத்தை வாங்கிக்கிறோம்!" என்று கொளுத்திப் போட்டதாய் கேள்வி. அது உண்மை என்றால், தனுஷ் தொடர்ந்து "வேலையில்லா பட்டதாரி" மாதிரி படத்தை தான் எடுக்க வேண்டி இருக்கும். "புகழ்" காதுக்கும், கருத்துக்கும் நல்லது தான்!  வயித்துக்கு பணம் தானே நல்லது?!

தனுஷ் இந்தப் படத்தை எல்லாம் இடது கையால் ஊதித் தள்ளி விடுவார். "கறியில கை வை, கொன்னுர்றேன்" என்று அவர் வேண்டா வெறுப்பாய் கறி வாங்க போகும்போது ஏதோ நம் பக்கத்துக்கு வீட்டை எட்டிப் பார்ப்பது போல் இருக்கிறது. அத்தனை இயல்பு, யதார்த்தம். தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே ஒரு அம்மா இருப்பதால், சரண்யாவை "தமிழ்த் தாய்" என்று அழைக்கலாம். ஒரு கை வைத்த பனியனை போட்டு, வேஷ்டியை கட்டி,  கொஞ்சம் தலையை நரைக்க வைத்து, கண்ணாடி போட்டால்  தமிழ்த் தந்தை ரெடி. சமுத்ரகனி கச்சிதம். அந்தத் தம்பி தான் அந்தக் குடும்பத்துடன் ஒட்டாமல் இருந்தான். தனுஷ் பக்கத்து வீட்டு ஃபிகரை சைட் அடிக்க உடனே ஒரு டெலஸ்கோப் செய்கிறார். வீட்டின் எல்லா வேலையும் செய்கிறார். பக்கத்து வீட்டில் குடி வந்திருப்பவர்களுக்கு பால், கேஸ் என்று எல்லாம் ஏற்பாடு செய்கிறார். முப்பது செகண்ட் டைம் கொடுத்து பொறுக்கிகளை பின்னி எடுக்கிறார். இப்படி எல்லாவற்றிலும் கில்லியாக இருப்பவருக்கு வேலை தான் கிடைக்க மாட்டேன் என்கிறது!

இப்படி இன்னும் படத்தை பற்றி குறைகளை எழுதலாம். படத்தை விட அது போர் அடிக்கும் அபாயம் இருப்பதால், இந்தப் படம் தனுஷின் வயித்துக்கு என்று சொல்லி முடித்துக் கொள்கிறேன்!

சதுரங்க வேட்டை

விகடன் ஐம்பத்தி இரண்டு மார்க் போட்டு அரை மாமாங்கம் கடந்து விட்டது. ஜிகர்தண்டா வந்த பிறகும் கூட இது சில  தியேட்டர்களில் இன்னும் ஓடிக் கொண்டிருப்பதை வைத்தே படத்தின் தரத்தை சொல்லி விடலாம். கதை விறு விறு; திரைக்கதை பர பர; வசனம் சுருக் சுருக்; இயக்கம் பட பட! ஒரே குறையாக என்று எனக்குப் பட்டது, ஹீரோ ராங் காஸ்டிங்! சவ சவ! என்ன செய்வது, இயக்குனரே  சொல்லிவிட்டாரே, குற்ற உணர்ச்சியில்லாமல் செய்யும் தப்பு தப்பு ஆகாது என்று. ஏனோ படம் நெடுக விஜய் சேதுபதியின் ஞாபகம் வந்து அது ஏக்கமாகவே மாறி விட்டது எனக்கு. அவர் நடித்திருந்தால் இன்னொரு சூது கவ்வும்!  இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள். இத்தனை ஐடியா வச்சுருக்கீங்க, அதை ஏன் படம் எடுத்து வேஸ்ட் பண்றீங்க..ஒரு முன்னூறு கோடிக்கு ஐடியாவை ரெடி பண்ணி செட்டில் ஆவுங்க பாஸ்! எப்பவுமே ஏமாற எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க :-)

 ஜில் ஜில்...

சேதுவுக்கு அவனை பார்த்து யாராவது சிரித்தால் பிடிக்காது! அப்படி பட்ட ஒருவனை எனக்கு ரொம்ப பிடித்தது [டிரையிலர், படத்தின் முதல் பாதி], பிறகு அவனை பார்த்து ஊரே கை கொட்டி சிரித்தது என்று கதையை மாற்றி விட்டீர்கள் [பின் பாதி]. அது எனக்குப் பிடிக்கவில்லை. "என்னடா சேதுவை பாத்து சிரிக்கிறீங்க?" என்று அவனை போல நானும் ரவுடி ஆகிவிடலாமா என்று தோன்றியது!

சேதுவுக்குப் பிறகு கருணாவும், சங்கிலி முருகனும் கிளாஸ்!

அப்புறம் செளராஷ்ட்ரா மக்களாய் வரும் அம்பிகாவும், லக்ஷ்மியும் சேலை திருடுகிறார்கள் என்று காட்டி இருக்கிறீர்கள்.  எனக்குத் தெரிந்து எங்கள் சமூக மக்கள் கையில் உள்ள தங்கள் சேலையை பறி கொடுத்துவிட்டு வருவார்களே தவிர, இப்படி திருடுவதை நான் கேள்விப்படவில்லை. சரி, சினிமாவில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களையும், அவர்களின் சமூகத்தோடு நிறுத்திப் பார்த்தால், ரஜினி பத்து பேரை பறந்து பறந்து அடிக்கும்போது, மராட்டியர்கள் [ரஜினி மராட்டியர் தானே?] யார் இப்படி பத்து பேரை பறந்து பறந்து அடிக்கிறார்கள்? என்று கேட்க வேண்டி இருக்கும் என்பதால் இதை படம் என்று கருதி விட்டு விடுவோம்.

சந்தோஷ் நாராயணனை பற்றி சொல்ல ஒன்றும் அதிகமில்லை. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இளையராஜா; ஏ ஆர் ரகுமான்; சந்தோஷ் நாராயணன்!

மற்றபடி ஜிகர்தண்டா எல்லோரும் ருசிக்க வேண்டிய பட(பான)ம்!


0 Responses