எல்லோரும் அஞ்சானை எதிர்நோக்கி காத்திருக்கும் போது நான் இரா பார்த்தீபனை  சைடா நோக்கிக் கொண்டிருந்தேன். அஞ்சானுக்கு சூர்யா வாயில் குச்சியை வைத்துக் கொண்டு பேசாமல் நிற்கும் ஸ்டில் போதும்; ஆனால் இரா பார்த்தீபனுக்கு வாயில் குசும்பை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அதை தான் மனிதர் செய்து கொண்டிருந்தார்; கிறார். படம் வரப்போகிறது என்று சொன்னதில் இருந்து "தியேட்டருக்கு வந்து பாருங்க", "இது என் படம் இல்லை, உங்க படம்", "உங்க கைதட்டல் தான் பெரும் சன்மானம்".....என்று பேப்பருக்கு பேப்பர் அவரின் பேச்சு விளம்பரங்கள். நேற்று எதேச்சையாய் ஒரு டீக்கடையில் வடையில் உள்ள எண்ணையை பிழிய ஒரு பேப்பரை எடுத்தால் அது அவரின் படத்துக்கு அடித்த பிட் நோட்டிஸ்! அதில் வேறு திருட்டு வீசிடி யில் படம் பார்க்காதீர்கள் என்று மன்றாடி கேட்டிருந்தார்! கண் கலங்கி விட்டது. மனுஷன் என்னமா யோசிக்கிறான்யா! ரொம்ப ஃபீல் ஆகி, சரி கழுதை, நூறு ரூபா தானே [உண்மையில் அறுபது ரூபாய் தான்!], இந்த உழைப்புக்கு, அர்ப்பணிப்புக்குத் தரலாம் என்று, டீயை குடித்து விட்டு, பைக்கில் ஏறும்போது என் மனசு இறங்கி, இன்று பைக்கிலிருந்து இறங்கி படம் பார்க்க தியேட்டரில் நுழைந்தேன். [ஏன் அவர் தான் எதுகை மோனையா பேசுவாரா, எங்களுக்கும் வரும்!]

அவர் சொன்னது போல் கதை இல்லாமல் எடுத்த படமா இது? இல்லை; இதிலும் ஒரு கதை, (ஒன்னா?) இருக்கு! ஒரு "நல்ல வளர்ந்த" பட் சினிமாவில் டைரடக்கராய் வளரத் துடிக்கும் இளைஞன். அவன் படத்திற்காக ஒரு கதை தேடி அலைவது தான் படத்தின் கதை. கடைசியில் அவன் ஜெயித்தானா இல்லையா என்ற ட்விஸ்டை க்ளைமாக்சில் வைத்திருக்கிறார் இயக்குனர். இந்தப் படம் ஒரு கவிதை! உங்களுக்கு கவிதை பற்றி கொஞ்சம் தெரியும் என்றால் [இரவில் வாங்கினோம்; இன்னும் விடியவில்லை! இது கவிதை இல்லை - சுஜாதா] நான் சொல்ல வருவது புரியும்!

நிறைய அபிமான நட்சத்திரங்கள். படத்தின் முக்கால்வாசி பேர் புதுமுகங்கள். கதாநாயகன் அடக்கமான அழகு; நடிப்பு. கதாநாயகி சில ஆங்கிள்களில் ஒல்லியான நயன்தாரா போல இருக்கிறார். யாருங்க அவருக்கு பொட்டு வச்சு விட்றது? இன்னொரு கதாநாயகி மொக்க! "தம்பி" ராமையா தான் படத்தில் எல்லோருக்கும் "அண்ணன்"![அய்யோ நானே பார்த்தீபன் சார் அசிஸ்டெண்டா போயிடலாம் போல இருக்கே!] இவருக்கு மட்டும் தான் படத்தில் நல்ல ஸ்கோப்! படத்தின் ப்ளஸ் இயக்குனர் பார்த்தீபனின் நச் நச் ஒரு வரிகள். ஆனால் சில சமயம் அதுவே ஓவர் டோஸ். இவர் ஒருவர் விழாக்களில் பேசினாலே தாங்காது; படத்தின் அத்தனை காரெக்டர்களும் இவர் மாதிரியே பேசினால்! பூமி தாங்காது இல்ல?

அந்த சுனாமி கிராபிக்ஸ் சூப்பர்! வலைதளங்களில் பல படங்களின் விமர்சனங்களை பார்த்து ரொம்பவே பயந்து போயிருக்கிறார் என்று நினைக்கிறேன். படம் பார்த்து விட்டு நாம் சொல்ல வேண்டியதை எல்லாம் படத்திலேயே அவர் சொல்லி விடுகிறார். சீன்கள் ஆங்காங்கே சுவாரஸ்யமாய் இருந்தாலும், மொத்தமாய் ஒரு படமாய் யோசித்து பார்க்கும்போது பேன்ட் பையில் இருந்து எடுக்கும் ஹெட் ஃபோனை போல ஒரே கொச கொசவென்று ஆகி விடுகிறது. இருந்தும், கதாநாயகன் பஞ்ச் பேசிவிட்டு பத்து பேரை பறந்து பறந்து அடிப்பதை அலுக்காமல் பார்க்கும் நாம் இதை பார்ப்பதில் தப்பில்லை.

கடைசி பஞ்ச், எந்த வித்தியாசமும் இல்லாமல் பார்த்தீபன் ஒரு படம் எடுத்தால் ரொம்ப வித்தியாசமாய் இருக்கும்! என்ன சொல்றீங்க?

அந்த பன்ச்சோட விமர்சனம் முடியுது. [இந்த விமர்சனமும் பேன்ட் பையில் இருந்து எடுக்கும் ஹெட் ஃபோனை போல ஒரே கொச கொசவென்று...?!]

கீழே உள்ளது என்னோட நாலாவது குறும்படத்தோட டீசர். பார்த்து விட்டு படம் பார்க்க தயாராகுங்கள். மேலே சொன்னது "கதை திரைக்கதை வசனம் இயக்கம்". கீழே உள்ளதில் அவை எல்லாமே "நான்"! [இந்தப் பதிவின் தலைப்பை எப்படி கொண்டு வந்தேன் பாத்தீங்களா?]


4 Responses
  1. bandhu Says:

    குறும்படம் எடுப்பதில் நல்லாவே தேறிட்டீங்க! டீசர் பிரமாதம்!


  2. பேன்ட் பையில் இருந்து எடுக்கும் ஹெட் ஃபோனை போல ஒரே கொச கொசவென்று ஆகி விடுகிறது//

    எப்படி யோசிச்சு இருக்கீங்க.அவருக்கு புதிய பாதை பிறக்கட்டும்.