நான் அலுவலகம் விட்டு வீடு சேர்வதற்கும்
மறுபடியும் வீடு விட்டு அலுவலகம் சேர்வதற்கும்
இடைப்பட்ட நேரத்தில் - சாலையில்
சில நாய்கள் அடிபட்டு சாகின்றன

அடிபட்டு இறந்த நாயை
எந்த நாயும் அடக்கம் செய்வதில்லை

நான் பார்க்கும் சமயங்களில்
பெரும்பாலும் அதில்
நாயின் அடையாளங்கள் மறைந்து - ஒரு
கந்தல் துணியாய் என் வண்டிச் சக்கரத்தில்
சிக்கி வழுக்கி விடுகிறது..

திரும்பிப்பார்த்து, அதில் சக்கரம் ஏற்றியதை
நினைத்து மனம் அசூசை கொள்கிறது

இரண்டொரு நாளில் அது
சாலையோடு சாலையாகி
மறைந்து விடுகிறது

இப்போது நான் சாலையெங்கும்
மறைந்து கிடக்கும் இறந்த நாய்களை
கடந்தபடியே வீடு சேர்கிறேன்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

சவ ஊர்வலங்களில் நடக்கும் அராஜகங்களை பார்த்தால்
ஒருவேளை, இறந்தவர் நல்லவராகவே இருந்தாலும்
அவர் வாழ்நாள் முழுதும் சேர்த்த நல்லபெயரை 
இந்த ஒரு ஊர்வலம் அழித்து விடுமோ என்று தோன்றுகிறது!

------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் எப்படி பிறந்த பிறகு
பிறந்து விட்டேனோ
அதே போல்
இறந்த பிறகு
இறந்து விடுவேன்  

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழும் போது இறந்து இருந்தால்
இறந்த பிறகு வாழ்வதெப்படி?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இறந்த பிறகு என்ன நடக்கும்?
என்னிடம் கேளுங்கள்
நான் இறந்த பிறகு