ராஜேஷ் கண்ணா. ஹிந்தி சினிமாவின் முடி சூடா வசூல் மன்னன். மேலுள்ள படத்தை பாருங்கள், எவ்வளவு ஸ்மார்டாக இருக்கிறார்! பெரும்பாலோர் ராஜேஷ் கன்னாவை ஆராதனாவில் தான் பார்த்திருப்பார்கள். நானும் அப்படித் தான். நான் பள்ளியில்/கல்லூரியில் படிக்கும்போது வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை டீடீயில் ஹிந்தி படங்கள் போடுவார்கள். அப்போது தான் பார்த்ததாய் ஞாபகம். அந்தப் படத்தின் பாடல்கள் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம் என்றும், அந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் நாட்டு மக்களும் தமிழ் பாடல்களை மறந்து ஹிந்தி பாடல்களையே கேட்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும், அப்போது தான் ஒரு புது வெள்ளமாய் இளையராஜா வந்து தமிழ் மக்களை தமிழ் பாடல்களுக்கு மறுபடியும் ழுத்து வந்தார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்! அது வேறு கதை...

என்ன சொன்னாலும், ஆராதனாவில் பாட்டுக்கள் அத்தனையும் அற்புதமான பாடல்கள் தான். சொல்லப் போனால் ராஜேஷ் கண்ணாவின் பல பாடல்கள் ஹிட் பாடல்களே! கிஷோர் குமாரின் ஹிட்ஸ் எந்த நடிகர் என்று தெரியாமல் கேட்டதுண்டு. இன்று யு ட்யுபில் பார்த்தால் அதில் முக்கால்வாசி பாடல்கள் ராஜே கண்ணாவின் பாடல்கள் தான்! அப்படி அமைந்திருக்கிறது!


ராஜேஷை நினைக்கும் பொது எனக்கு ஞாபகம் வருவது ஆராதனாவை விட "கடி பதங்" தான்! அதே மாதிரி டீடீயில் ஒரு வெள்ளிக்கிழமை இரவுப் படமாய் அதை ஒளிபரப்பினார்கள். நான் அப்போது பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். [டேய், நீ இப்போ வரை அவ்வளவு தானே படிச்சுருக்கே என்று கலாய்க்க வேண்டாம்!...] மறுநாள் எனக்கு கணக்கு பரீட்சை இருந்தது. வேண்டா வெறுப்பாய் கணக்கு போட்டு பார்த்துக் கொண்டே அந்தப் படத்தை பார்த்தேன். இன்று வரை அந்தப் படத்தையோ, பாடலையோ பார்க்கும்போது எனக்கு அந்த கருமம் பிடித்த கணக்கு பரீட்சை ஞாபகம் வந்து விடும்! "ப்யார் தீவானா ஹோத்தா ஹைன்" அற்புதமான பாடல்...அப்போது படித்த கணக்கு ஒன்று கூட ஞாபகம் இல்லை, ஆனால் அப்போது கேட்ட அந்தப் பாடல் இன்று வரை பாடிக் கொண்டிருக்கிறேன்.


அவரின் படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. அவரின் ஆனந்த் எனக்கு மிகவும் பிடித்தது. ரிஷிகேஷ் முகர்ஜியை எனக்கு எப்போதும் பிடிக்கும். ஒரு எளிமையான கதையை மிக அழகாய் படம் பிடிக்க கூடியவர். அவருடைய படங்கள் பெரும்பாலும் FEEL GOOD MOVIES தான். அதில் ராஜேஷ் கண்ணாவின் பாத்திரம் மிகவும் அற்புதமான பாத்திரம். அதில் அமிதாப்பை அவர் "பாபுமுஷாய்" என்று அழைப்பார். அது அழகாய் இருக்கும். அதை ரிஷிகேஷ் அவர்கள் ராஜ்கபூரை மனதில் வைத்து வடித்த கதாபாத்திரமாம். அவரை அவர் அப்படி அழைப்பது தான் வழக்கமாம். 


ஆனந்த் என்ற கதாப்பாத்திரம் ஒரு கொடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும். வாழ்வின் அத்தனை நம்பிக்கைகளையும் இழந்து விட்ட டாக்டரிடம் [அமிதாப் பச்சன்] வந்து சேர்வார் ஆனந்த். மரணத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் ஒருவன் வாழ்வை எவ்வளவு கொண்டாடுகிறான் என்பதை அந்த டாக்டர் பாத்திரம் அவனிடம் இருந்து கற்றுக் கொள்ளும். மிக அருமையான படம். இதை தமிழில் மொழி பெயர்க்கலாம்..இந்தக் காலத்துக்கு பொருந்துமா தெரியவில்லை...


அதில் ஆனந்த் டாக்டரிடம் சொல்லும் வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.


நீங்கள் எழுபது ஆண்டுகள் வாழ்வீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நான் ஆறு மாதம். எழுபது ஆண்டுக்கும் ஆறு மாதத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம், மரணம் ஒரு கணம் தானே? இந்த ஆறு மாதமும் நான் லட்சக்கணக்கான கணங்களை வாழப் போகிறேனே..அதற்கு என்ன சொல்வீர்கள். பாபுமுஷாய், வாழ்க்கை பெரிதாய் இருக்க வேண்டும், நீளமாய் அல்ல! வாழும் வரை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன், மரணம் இல்லை; செத்து விட்டால் நானே இல்லை. பிறகு என்ன பயம்?


பிறகு ஒரு அழகான கவிதை உண்டு படத்தில்...


மரணமே நீ ஒரு கவிதை
கவிதை எனக்கு வாக்களித்திருக்கிறது,
நிச்சயம் அது எனக்குக் கிடைக்குமென்று...
[நான் மட்டமாய் மொழி பெயர்த்திருக்கிறேன்..கவிதை நல்ல கவிதை!]

ராஜேஷ் கண்ணா தொடர்ந்து பதினைந்து படங்கள் ஹிட் கொடுத்தவராம். நினைத்துப் பார்க்க முடிகிறதா? இவரின் ரொமாண்டிக் பாணி லுத்துப் போய் தான் சலீமும் ஜாவேதும் ஒரு கோபமான இளைஞன் பாத்திரத்தை வடிவமைத்தார்கள் என்று சொல்கிறார்கள். முதலில் அந்தப் பாத்திரத்தை இவரைத் தான் செய்யச் சொன்னார்களாம், இவர் மறுத்ததும் அமிதாப்பிற்கு அடித்தது அதிர்ஷ்டம்!

 ராஜேஷை விட எனக்கு அமிதாப்பை மிகவும் பிடிக்கும்ரஜினியை பிடித்தவனுக்கு  
அமிதாப்பை  பிடிப்பதில் ஆச்சர்யம் இல்லைஇவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த "நமக் ஹராம்" பார்த்தேன். அதே ரிஷிகேஷ் முகர்ஜி படம். அழகான கதை. அந்தக் கால படங்களின் கதைகளை நாம் இரண்டே சீனில் யூகித்து விடலாம். ஆனாலும் நான் ரசித்து பார்த்தேன். இந்தப் படத்தை பார்க்கும் போது, ராஜேஷை விட, அமிதாப் வெகு இயல்பாக நடிப்பதாக எனக்குத் தோன்றியது. ஒரு வேளை நான் அமிதாப்பை கூடுதலாக ரசிப்பதால் இருக்கலாமோ என்னமோ...யோசித்து பார்க்கிறேன், தான் அவ்வளவு உயரத்தில் இருக்கும்போது, தன்னை விட உயரமான ஒரு இளைஞனை படம் நெடுக தன்னுடன் வர ராஜேஷ் எப்படி சம்மதித்திருப்பார்? அவரும் யோசித்திருப்பாரா? தன்னுடைய கரிஷ்மாவை யாராலும் கொள்ளை கொள்ள முடியாது என்று நினைத்திருப்பாரா?

அமிதாப் தன்னுடைய வலைப்பதிவில் எழுதி இருக்கிறார். ராஜேஷ் கடைசியில் சொன்ன வார்த்தை...

"Time Hogaya hain, Packup!"

என்னுடைய யு டியுப் பாடல்களில் என்றும் ராஜேஷ் கண்ணாவின் பாடல்களுக்கென்று தனி இடம் இருக்கிறது...


அமைதியுடன் அவர் ஆத்மா உறங்கட்டும்!

4 Responses
  1. ஜீவசுந்தரி பாலன் Says:

    நன்றாயிருக்கிறது. ராஜேஷ் கன்னாவின் நடிப்பில் எனக்குப் பிடித்தது ‘அமர் பிரேம்’. விபூதி பூஷண் பந்தோபாத்யாயாவின் நாவல் படமாக்கப்பட்டது. அச்சு அசல் ஒரு வங்காள நாவலையே திரையில் பார்த்தது போன்ற ஒரு அருமையான படம். என் விருப்பம் அமர் பிரேம் தான். அடுத்துதான் கடி பதங்.


  2. Jeeva,

    Naan innum amar prem paarkavillai. nedu naatkalaaka paarka vendum enRu enni kondirukkiren.


  3. Anonymous Says:

    நல்ல பதிவு. நான் அவ்வளவாக ராஜேஷ் கன்னா படத்தை பார்த்ததில்லை.

    அவருடைய மறைவு குறித்து என் அப்பாவிடம் பேசும் போது அவர் கூறினார், ஆராதனா படத்துக்கு பிறகு ராஜேஷ் கன்னா தமிழ் நாட்டில் மிகவும் பிரபலம்,எந்தளவு தெரியுமா! ஹொட்டல் கை கழுவும் இடத்துகண்ணாடியில் மக்கள் தலைசீவாமல் தடுக்க "நீங்கள் ஒன்றும் ராஜேஷ் கன்னா அல்ல" என்று எழுதி வைத்திருப்பார்கள் என்றார்.

    - Kasi


  4. Kasi,

    Even i have heard about that story :) nice to share :)