இப்படி நடக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. இத்தனை சீக்கிரம் வலை பதிவேன் என்று! அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் தான் போங்கள் (போங்கள் என்று அடித்தால் பொங்கல் என்று வருகிறது!)  சாப்டுங்க!!

பூனை நடை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமை நடை பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இந்த சமயத்தில் சென்னையில் இருந்தால் பார்க்கலாம்! "ஆலிவ் ரிட்லே" என்ற கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் நேரம் இது! [இது தான் சென்னை! புதிதாய் ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும், இப்போ ஆமை!] அதாவது டிசம்பரிலிருந்து ஏப்ரல் வரை! கடலில் மேட்டரை முடித்துக் கொண்டு [ஆஹா, இந்தப் பையன் இந்த மாதிரி விஷயத்தை எத்தனை நாசூக்கா எழுதுறான்!] சமர்த்தாய் கடற்கரையில் வந்து முட்டையிட்டுச் செல்கின்றன. கடல் ஆமைகள் குளிர்ந்த நீரைத் தவிர்த்து உலகெங்கும் சுற்றித் திரிகின்றன. இந்த வகை ஆமைகளை ஆஸ்திரேலியாவில் பார்த்திருக்கிறார்கள். இவைகள் செப்டம்பர் சமயத்தில் இனப் பெருக்கம் செய்ய இந்தியக் கடல் எல்லைக்குள் வருகின்றன. பெரும்பாலும் சென்னை, ஒரிசா ஆகிய நகரங்களின் கடற்கரைகளில் முட்டையிடுகின்றன.


Students sea turtle conservation network (மேலும் விபரங்களுக்கு: http://sstcn.org/) என்னும் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த தன்னார்வலர்கள் இரவு பகலாக இதற்காக உழைக்கிறார்கள். ஆமைகள் முட்டையிட இரவில், ஆள் நடமாட்டம் இல்லாத சமயங்களில் வருகிறது. முட்டைகளை மண்ணில் தோண்டி புதைத்துச் சென்று விடுகின்றன. அதன் பிறகு குஞ்சு பொறித்ததா, குட்டி வெளியே வந்ததா என்று எந்தக் கவலையுமில்லாமல் கடலுக்குள் சென்று விடுகின்றன..இந்தக் குட்டிகள் கடலில் சென்று தன் தாயை கண்டு பிடித்து சேர்ந்து கொள்ளும்! (நம்பி விட்டீர்களா? இது என்ன நம் தமிழ் சினிமாவா?) அந்த முட்டைகளை இவர்கள் ஒவ்வொன்றாய் கண்டெடுத்து, நாய், நரி, மனிதர்கள் (அதை காசாக்கவும் சிலர் இருக்கிறார்களே) என்று பலதரப்பிடமிருந்து காப்பாற்றி ஒரு குஞ்சு பொரிப்பகம் கட்டி பாதுகாப்பாய் வைக்கிறார்கள். குஞ்சு வெளியே வர நாற்பத்தைந்து நாட்கள் ஆகின்றன. ஒரு தடவைக்கு நூற்றுக்கணக்கில் ஆமைகள் வெளி வருகின்றன. அவைகளை மாலை வெளிச்சம் மங்கியதும் கடலில் கொண்டு போய் விடுகிறார்கள். முட்டையிலிருந்து வந்த சில நிமிடங்களில் துரு துருவென வெளிச்சத்தை நோக்கி அது ஓடுவதை பார்க்கவே கண் கொள்ளாக்  காட்சியாக இருக்கிறது! இப்படி ஆயிரம் ஆமைகுட்டிகளை கடலுக்குள் விட்டால் அதில் ஒன்றிலிருந்து ஐந்து தான் கடலோரத்தில் இதற்காகவே காத்திருக்கும் மீன்களுக்கு உணவாகாமல், வலையில் மாட்டிக் கொள்ளாமல், கப்பலின் அடியில் சிக்காமல் எல்லா வித ஆபத்துக்களையும் கடந்து பெரிதாய் வளருமாம்! அது தான் பெரிய சோகம்.நம் உள்ளங்கையில் தங்கி விடும் அளவுள்ள இவைகளா அலைகள் ஆர்ப்பரிக்கும் இத்தனை பெரிய கடலில் வாழப் போகிறது என்று நமக்கே பயமாய் இருக்கிறது. ஆனால் நம் கண் முன்னே கடல் ஒரு தாயை போல் அவைகளை உள்வாங்கிக் கொள்கிறது. சற்று முன் அங்கே நூறு குட்டி ஆமைகள் இருந்த சுவடே இல்லை. காவலர்கள் துரத்தி வந்த திருடனை வீட்டுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு எதுவுமே தெரியாதது போல் கதவடைத்துக் கொள்கிறது கடல்! கண் விழித்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. கை பிடித்து கூட்டிப் போக தாயும் கூட இல்லை. பல வருடங்கள் பழகிய நண்பனை போல கடலை நோக்கி அவைகள் ஓடுகின்றன. இயற்கையில் தான் எத்தனை விதமான ஆச்சர்யங்கள்! வாழ்நாளில் எல்லோரும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று!


3 Responses
  1. ஆமை அருமை


  2. thanks jai. if u r in chennai, must see :)


  3. நான் திருச்சி பிரதீப். ஸ்ரீரங்கம்