முருகன் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி 15 வயதில் கேரளா வந்து தன் மூன்று குழந்தைகளுடன் வீடுகளில் சென்று இஸ்திரி செய்து கொடுத்து பிழைக்கிறான். அதில் கடைசிக் குழந்தை பிறவியிலேயே கண் பார்வை இழந்தவள். அவன் மனைவி வயிற்று வலியால் இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் குடும்பத்தோடு ஒரு ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி உள்ள ஒரு சேரியில் வாழ்கிறான். அவர்களைப் போலவே கஷ்டப்படும் அக்கம் பக்கத்துக்காரர்கள். அங்கே இருக்கும் ஒரு பிச்சைக்காரிக்கு (பூங்கொடி) அந்தக் குழந்தைகளின் மீது ஒரு அலாதிப் பிரியம். ஏழைகளுக்குத் துணை ஏழைகள் தானே! அவன் இஸ்திரி போட்டுக் கொடுக்கும் ஒரு பணக்கார வீட்டில் பம்பாயிலிருந்து சுவர்னா வந்து சேர்கிறாள். அவள் ஒரு தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள், வாழ்வின் கடைசி காலங்களை தன் சொந்த மண்ணில் கழிப்பதற்காக அங்கு வந்து சேர்கிறாள். அங்கு அவளுக்கு மல்லியின் பரிச்சயம் கிடைக்கிறது. அந்தப் பிஞுக் குழந்தைக்கு இந்த உலகத்தைக் காண வேண்டும் என்ற ஆவலைப் புரிந்து கொண்ட சுவர்னா, தான் இறந்ததும் தன் கண்ணை இவளுக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுக்கிறாள். சுவர்னா சீக்கிரம் செத்துப் போக வேண்டும் என்று மல்லியின் அண்ணன் ஆன்டவனைப் பிரார்த்திக்கிறான். இதற்கிடையில் ஒரு கலவரத்தில், முருகனின் இஸ்திரி பெட்டியையும், தள்ளு வண்டியையும் கும்பல் ஒன்று கொளுத்தி விடுகிறது. வாடிக்கையாய் இஸ்திரி போட்டுக் கொடுக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெய்ன்ட் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. மூன்று பிள்ளைகளும் பசியால் துடிப்பது பொறுக்காமல் சலவைத் தொழிலாளியிடம் குறைந்த சம்பளத்தில் வேலைக்குப் போகிறான். பூங்கொடி விளையாட்டாய் மல்லியைக் கூட்டிக் கொண்டு, அவளையும் பிச்சை எடுக்க வைத்து எல்லோருக்கும் உணவு கொண்டு வருகிறாள். இதை அறிந்த முருகன் ஆத்திரம் கொண்டு அவளை அடித்துத் துரத்துகிறான். பூங்கொடி மல்லியை கண் பார்வையற்றவள் என்பதால் தான் பிச்சை எடுக்க அழைத்துச் சென்றாள் என்பதை தாங்க முடியாமல் வருந்துகிறான்.
நல்ல கதை தான் ஹீரோக்களும் பேட்டி கொடுத்து விட்டு, மாஸ் என்றும், சினிமா ஒரு வியாபாரம் என்றும் தப்பித்துக் கொண்டு கண்ட கன்றாவிகளில் நடிக்கிறார்களே, அவர்கள் பார்க்க வேண்டும் இந்தப் படத்தை. இத்தனை எளிமையான, ஆத்மார்த்தமான கதையை உருவாக்கிய கமலை பாராட்டியே ஆக வேண்டும்.
இஸ்திரி போட்டுக் கொடுத்து மூன்று குழந்தைகளுடன் சேரியில் வாழும் ஒரு சாதாரண கதாப்பாத்திரத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாய் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராய் திகழும் மம்மூட்டி நடிக்கிறார். ஒரு அழுக்கு பிச்சைக்காரியாய் பத்மப்ரியா நடிக்கிறார். நம் ஊரில் ஒரு அருமையான நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டு சந்திரமுகியும், சிவாஜியும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் குசேலன் படத்தில் கடைசி அரை மணி நேரம் ரஜினி என்ன ஒரு அற்புதமான நடிப்பு என்று சிலாகித்துக் கொள்கிறோம். பூஜாவை பிச்சைக்காரியாய் பால வாழ வைத்திருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். மலையாள சினிமாவில் அவர்கள் இதையெல்லாம் போகிற போக்கில் செய்கிறார்கள் என்று எனக்குப் படுகிறது.
படத்தில் ஒரு காட்சியில் முருகனின் மகன் பள்ளியில் ஒரு பையனை அடித்து விடுகிறான். வாத்தியாரின் புகாரைக் கேட்ட முருகன் ஏன் அடித்தாய் என்று பையனை கேட்கிறான். அவன் ரஜினியை திட்டிட்டான்பா என்கிறான் ஆவேசமாய். இதைக் கேட்ட முருகன் வாத்தியாரிடம், ஐய்யோ, ரஜினியை எப்படிங்க திட்டலாம், அவர் எங்களுக்கு சாமி மாதிரி, அதான் என் மகன் அடிச்சுருக்கான் என்று சொல்கிறான். தமிழ்நாட்டில் சினிமா என்பது ஒரு கலாச்சாரம் என்று இயக்குநர் நன்றாய் நக்கலடித்திருக்கிறார்.
படத்தில் சின்ன சின்ன விஷயங்கள் அழகாய் இருந்தன. அப்பா, அப்பா என்றூ சதா அழைக்கும் மல்லிக்கு ஏன் கண்ணு என்று வினவும் முருகனின் பாங்கு, நட்சத்திரம் இருக்கா? என்னை பாக்குதா? என்று ஒரு குழந்தைக்குரிய குறுகுறுப்பு, யார் என்ன கொடுத்தாலும், கூப்பிடாலும், "அப்பா" என்று ஒரு முறை அனுமதி கேட்கும் விதம், சந்திரமுகி படத்திற்குச் சென்று பார்க்க முடியாமல் ரஜினி வேஷ்டியா பேண்டா? ஜோதிகா சேலையா? அழகா இருக்காங்களா என்ற எல்லா அசட்டுக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் முருகனின் வேடத்தில் ஒரு பாசமுள்ள தந்தையை மம்மூட்டி நம் கண் முன் நிறுத்துகிறார். ஆனால் கண் தெரியாத பெண் என்பதற்காக அவள் எதை தொட்டாலும் புன்னகை புரிந்து கொண்டே இருப்பது உறுத்துகிறது.
பத்மப்ரியாவுக்கு சுட்டித் தனமான பிச்சைக்காரி வேடம். பொருத்தமாய் இருக்கிறார். அடிக்கடி குறும்பாய் சிரிக்கிறார். முருகனை அண்ணா என்று அழைக்கிறார். அவர் கூப்பிட்டதும் வெட்கப்பட்டுக் கொண்டே அவருடன் செல்கிறார். அந்த வெட்கத்திற்கும், அண்ணா என்று அழைத்ததற்கும் சம்மந்தம்மில்லை. அது தான் புரியவில்லை. இருந்தாலும் முருகனின் மேல் பூங்கொடி ஒருதலை காதல் கொள்கிறாள் போன்ற அசட்டுத்தனம் இல்லாதது ஆறுதல்.
சுவர்னாவாய் வரும் மீனா அதிக மிகையில்லாமல் சொன்னதை ஒழுங்காய் செய்திருக்கிறார். நோய்வாய்பட்ட தெளிவில்லாத முகம் சரியாய் இருந்தது. மேக்கப்பா அல்லது இயற்கை அழகா? அவருக்கு என்ன வியாதி என்று சொல்லாமல் விட்டது நன்றாகவே இருந்தது. அவர் கேட்கும் லதா மங்கேஷ்கரின் பாடல்கள் அருமையாய் இருந்தது.
இந்தப் படம் 2006ம் ஆண்டின் சிறந்த குடும்பப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. மம்மூட்டி, பத்மப்ரியாவுக்கு இதற்காக 2007ம் ஆண்டு ஃப்லிம் ஃபேர் அவார்டும் கிடைத்தது.
ஒரு நிறைவான படம்!