
இனிமே நான் ரஜினி கட்சி இல்லை. ப்ரூஸ்லீ கட்சி என்று புரியாத ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் என் அண்ணன். நான் ஆடிப்போய்விட்டேன். இத்தனைக்கும் அவர் வீட்டில் போன வருடத்து பைண்டிங் பண்ணிய புத்தகத்தின் ஒரு பக்க அட்டையின் நடுவில் நீளச் சதுரமாய் வெட்டித் துளை போட்டு, அதில் பல விதமான ரஜினி படங்களின் ஃப்லிம்களைச் சொருகி வெயில் விழும் இடத்தில் ஒரு கண்ணாடியை வைத்து (கண்ணாடிய வெயில்ல காட்டினா அதோட பாதரசம் போயிடும் ஏன்டா இப்படி பண்றீங்க...அம்மாவை பொருட்படுத்தாது)அந்த ஃப்லிம் அட்டையை கண்ணாடி முன்பு காட்டி அதற்கு முன் ஒரு 15 பைசா லென்ஸை வைத்தால் எதிரில் இருக்கும் சுவரில் மங்கலாய் ஜெகஜ்ஜோதியாய் ரஜினி தெரிவார். இனிமேல் அந்த படங்களை எல்லாம் ஓட்ட முடியாதா? அவர் வீட்டில் இருக்கும் மூன்று முகம் வசனத்தை டேப்பில் போட்டுக் கேட்க முடியாதா? ரஜினி படம் போட்ட பலவித பொங்கல் வாழ்த்துக்கள் என்ன ஆகும்? ரஜினி போடுவது போலவே அதே டிசைனில் சட்டை போடுவாரே..இனிமேல் அவ்வளவு தானா? இவருக்கு அப்புறம் அந்த சொத்தெல்லாம் எனக்குத் தான் என்று நினைத்தேனே இப்படி அதில் மண்ணள்ளி போட்டு விட்டாரே என்று ஒரே கவலை எனக்கு. இனிமேல் நீயும் உன் தம்பியும் ரஜினி கட்சி இல்லை;ப்ரூஸ்லீ கட்சி தான்! என்ன? என்றார் என்னை பார்த்து. ப்ரூஸ்லீன்னா யாருண்ணே என்றேன். அப்போது அவர் பீரோவின் மேல் ஒட்டியிருந்த ஒரு படத்தை காட்டினார். அதில் ஒருவர் தன் காலைத் தூக்கி நெஞ்சு பூரா முடி உள்ள ஒருவரின் கழுத்தை நோக்கி நீட்டியிருந்தார். அவர் கண்ணில் ஒரு குரூரம். அப்படித் தான் ப்ரூஸ்லீ எனக்கு அறிமுகமானார்.
அப்போது என் அண்ணன் வீட்டில் தான் டீவியும், டெக்கும் இருந்தது. (படம் பார்க்கும் போது அடிக்கடி கோடு வரும், ஹெட்டைத் திறந்து க்ளீன் செய்து செய்து பார்க்க வேண்டும்) மேலுள்ள சம்பவத்திற்குப் பிறகு அவர் பார்த்ததெல்லாம் ப்ரூஸ்லீ படங்கள் தான். ப்ரூஸ்லீ ஒரு கருப்பண்ணசாமி போல் என் அண்ணனுக்குள் வந்து சாமியாடினார். கராத்தே க்ளாஸில் சேர்ந்தார். அந்த கருப்பண்ணசாமியை கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கும் என் தம்பிக்கும் ஏற்றி விட்டார். ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் நான் முதலில் பார்த்த ப்ரூஸ்லி படம். அவருடைய ஒவ்வொரு மிரட்டல் அடியில் ரஜினி கொஞ்சம் தள்ளித் தான் போய் விட்டார். அதன் பிறகு நானும் என் தம்பியும் போடும் டிஷ்யும் டிஷ்யும் சண்டைகள் மறைந்து ஊஊஊஊஊஊஊ....ஈஈஈஈஈஈஈ என்று ஊளைச் சத்தம் சேர்ந்தது. அம்மா என் அண்ணனைத் திட்டினாள்.

ப்ரூஸ்லி 1940ம் ஆண்டில் சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். இருந்தும் அவரின் தந்தையார் சைனீஸ் ஒபேராவில் ஒரு பாடகராய் இருந்தார். அவர் அப்போது ஹாங்காங்கில் சுற்றுப் பயணம் கொண்டதால், அவருடைய வளர்ப்பு அங்கு தொடங்கியது. ப்ரூஸ்லீ ஐந்து வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தன்னுடைய 13 வது வயதில் முறையாய் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அவருடைய கோபமும், வேகமும் பல வித தெருச் சண்டைகளுக்கு காரணமாய் அமைந்தன. இதனால் பயந்த அவர் பெற்றோர் அவருடைய 18 வயதில் அமேரிக்காவில் வாழும் உறவினரின் உணவு விடுதியில் வேலைக்காக அவரை அனுப்பி வைத்தனர். ப்ரூஸ்லீ சியாடிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் லின்டாவைச் சந்தித்து காதலித்து மணந்தார். அப்போதே அவர் தனியாய் ஒரு பள்ளி அமைத்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளின் ஒன்றான குங்ஃபு வை கற்றுத் தர ஆரம்பித்தார். சீனாவில் இவையெல்லாம் சீனாவைச் சேர்ந்தவனுக்குத் தான் கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் ப்ரூஸ்லீ எந்த வித பாரபட்சமும் இல்லாமல் எல்லோருக்கும் சொல்லித் தந்தார். இதனால் அமேரிக்காவில் இருக்கும் பிற தற்காப்புக் கலை நிபுணர்களிடம் ப்ரூஸ்லீ பிரபலமானார். தற்காப்புக் கலைகளுக்கான ஒரு விழாவில் ப்ரூஸ்லி சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்ட இடத்தில் ஹாலிவுட்டின் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஜேயின் தொடர்பு கிடைத்தது. அவர் ப்ரூஸ்லீயை ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக சிபாரிசு செய்தார். தி க்ரீன் கார்னெட் என்ற அந்த ஷோவில் ஸ்கிரீன் டெஸ்டில் ப்ரூஸ்லீ தேர்வாகி அந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.
சில பல காரணங்களால் அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நின்று விட்டது. இதனிடையில் ப்ரூஸ்லீ தன்னுடைய அனுபவத்தைக் கொண்டும், இடைவிடாத பயிற்ச்சியினாலும் பல வித உக்திகளை புகுத்தி ஜீட் குன் டோ என்ற ஒரு புது விதமான யுக்தியை உண்டாக்கினார். அவருக்கு ஹாலிவுட் படங்களில் அவ்வப்போது சிறு சிறு வேடங்களே கிடைத்தன.
அவருடயை நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக ஒரு படத்தை எடுத்து வர அவர் ஹாங்காங் சென்றார். அங்கே ப்ரூஸ்லியின் திறமையை பார்த்து வியந்த தயாரிப்பாளர் ஒருவர், அவரை கதாநாயகனாக்கி "பிக் பாஸ்" படத்தை எடுத்தார். மிகச் சிறிய பொருட் செலவில் தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் அதன் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் படம் வெளி வந்து அது வரை ஓடிய அனைத்து சீன படங்களின் வசூலையும் முறியடித்தது. ஒரே நாளில் ப்ரூஸ்லீ நட்சத்திர அந்தஸ்தை எய்தினார். அதன் பிறகு வந்த ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி, ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ப்ரூஸ்லீயை வெற்றியை பறை சாற்றின. அதன் சத்தம் ஹாலிவுட்டின் காதிலும் லேசாய் விழுந்ததில், ப்ரூஸ்லீயை வைத்து என்டர் தி ட்ராகன் என்ற படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படம் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷனில் இரவு பகலாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ப்ரூஸ்லீயின் உடல்நிலை மோசமானது. ஜூலை 20, 1973ம் நாள் தலை வலிக்காக ஒரு மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கச் சென்றவர், மாத்திரையினால் மூளையில் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக செரிப்ரல் எடீமா உண்டாகி இறந்து போனார். நேதாஜியின் இருப்பைப் பற்றியும், இறப்பைப் பற்றியும் இன்றும் உலவும் வதந்திகளைப் போல் இவருடைய மரணமும் பல விதமான வதந்தைகளைக் கொண்டது. ப்ரூஸ்லியின் மரணத்திற்குப் பிறகு வெளி வந்த என்டர் தி ட்ராகன் ஹாலிவுட்டிலும் பெரும் வெற்றி பெற்றது.
ப்ரூஸ்லியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்:
ப்ரூஸ்லீயின் உயரம் 5.7, ஆனால் அவர் இறந்த போது அவரின் எடை 58 கிலோ தான்.
ஒரு பயிற்சியின் போது அவருடைய முதுகுத் தண்டில் பயங்கரமான அடி விழுந்தது. இனிமேல் அவர் எழுந்து நடக்க முடியாது என்றும் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை செய்ய முடியாது என்றும் டாக்டர்கள் சொல்லியும் அதை ஒரு துளி கூட நம்பாமல் தன் சுய முயற்சியாலும், பயிற்சியாலும் மீண்டு வந்து காட்டினார்.
ப்ரூஸ்லீயின் வீட்டில் இருந்த நூலகத்தில் அனைத்து வகையான தற்காப்புக் கலைகளைப் பற்றியும், தத்துவங்களைப் பற்றியும் கிட்டத்தட்ட 2,500 புத்தகங்களை வைத்திருந்தார்.
ப்ரூஸ்லீ ஒற்றைக் கையில் இரண்டே விரல்களை (கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து) வைத்து தண்டால் எடுப்பார்.
ப்ரூஸ்லீ அவரின் வேகத்தை மற்றவருக்கு செய்து காட்ட சில யுக்திகளை கையாண்டார். அவரால் எதிராளியின் கையில் இருந்த நாணயத்தை அவர் கையை மூடுவதற்குள் எடுத்து விட முடியும்.
ப்ரூஸ்லீ ஒரு இன்ச் தூரத்தில் இருந்து குத்தும் ஒரு குத்து கூட எதிராளியை நிலை குழையச் செய்யும். (படம் பார்க்க) இத்தனை குறைந்த தூரத்தில் அத்தனை வேகம் ஒரு துப்பாக்கியிலிருந்து புறப்படும் ஒரு குண்டுக்குத் தான் இருக்க முடியும்.
Good posting.
thanks. how to say ur name? :)
//ப்ரூஸ்லீ இறந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும், உலகின் எந்த மூலையில் இருக்கும் குழந்தைக்கும் அதனுடைய பத்து வயதிற்குள் அவரின் அறிமுகம் எப்படியோ கிடைத்து விடும் என்று தோன்றுகிறது//
உண்மை தான்..இத்தனை வருடங்கள் கழித்தும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து இருப்பது மிக பெரிய விஷயம் தான்
இவர் சீனர் தானே!
எனக்கும் இவரை பற்றி ஒரு பதிவிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை உள்ளது