175 ஆவது பதிவு
மரணம் சம்பவிக்கும் வீடுகள் என்றும் விசித்திரமானவை. அத்தனை காலமும், பத்தோடு பதினொன்றாக அந்தத் தெருவில் இருந்த அந்த வீடு திடீரென ஒரு வரலாற்றுச் சின்னமாய் உயிர்த்தெழுந்து விடுகிறது. முதன் முதலாய் மேடையேற்றப்பட்ட குழந்தையைப் போல் அந்த வீட்டின் மீது அத்தனை பேரின் பார்வையும் பதிந்து விடுகிறது. விடிந்தும் எறியும் அந்த ஜீரோ வாட்ஸ் பல்பும், தெருவில் இறைந்து கிடக்கும் நாற்காலிகளும் அந்த வீட்டின் துக்கத்தை மெளனமாய் பறைசாற்றுகின்றன. இத்தனை நாள் அந்த ஒரு வீடு இருப்பது கூடத் தெரியாமல் அதை கடந்து போனவர்கள், இன்று திடீரென அந்த வீட்டை திரும்பிப் பார்த்தபடியே செல்கிறார்கள். இறந்தவரை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும் ஆவல் அந்த வீட்டைக் கடக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
மரணம் ஒவ்வொரு வீட்டின் வாசல்படியிலும் வசதியாய் அமர்ந்திருக்கிறது. மரணமும் குழந்தையை போல் தான். ஒரு குழந்தை தனக்கு வேண்டியதை தன் வீட்டிலிருந்து எத்தகைய உரிமையோடு எடுத்துக் கொள்கிறதோ, அதே உரிமையுடன் தான் மரணமும் தனக்கு வேண்டியதை எடுத்துச் செல்கிறது. எந்த ஒரு பெற்றோருக்கும் என்றுமே அடங்காத குழந்தையாய் அது இருக்கிறது. மரணத்திற்கு இசைந்தே வாழ்க்கை இயங்குகிறது. மரணம் ஒரு காட்டாறு போல வீறு கொண்டு ஓடுகிறது, வாழ்க்கைக் கரைகள் அதற்கேற்ப வளைந்து நெளிந்து தன்னை உருவாக்கிக் கொள்கின்றன.
மரணத்தின் அதிர்வு இடத்திற்கு இடம் மாறுகிறது. கிராமங்களைப் போல் நகரங்களில் யாரும் ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவதில்லை. கிராமங்களில் ஏற்படும் அதே அதிர்வை ஒரு மரணம் நகரங்களில் ஏற்படுத்தினாலும் அங்கு துக்கங்கள் நாசூக்கானவையாகத் தான் இருக்கின்றன. துக்கம் விசாரிக்க வருபவர் அத்தனை பேருக்கும், மரணம் சம்பவித்த அந்த நிமிடத்தை பற்றி கேட்டுத் தெரிந்த கொள்ள ஆவலாய் இருக்கிறது. அதை தங்கள் மனத்திரையில் ஓட விட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள். "தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணி கொடுன்னாரு" என்று சொல்லும்போதே நம் மனம் அப்போது தான், அப்போது தான் என்று பரபரக்கிறது. நமக்கும் ஒரு நாள் இப்படித் தான் நடக்கும் என்று அப்போது தோன்றுவதேயில்லை. அந்த நொடியை ஒவ்வொருவரும் தமக்குள் அனுபவித்து வெவ்வேறு வர்ணனைகளுடன் அடுத்தவருக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
என்ன சோகம் இருந்தாலும் மரணம் எல்லோருக்கும் ஒரு வித விடுதலை உணர்வை தருகிறது. இறந்தவருக்கு நிரந்தர விடுதலை. மற்றவருக்கு தற்காளிக விடுதலை. அந்த மரணத்தில் பங்கு கொண்ட யாரும் அன்று செய்ய வேண்டிய காரியத்தை செய்யத் தவறியதற்காக தண்டிக்கப்படுவதில்லை. மரணம் அன்று ஒரு நாள் எல்லாவற்றையும் மன்னித்து ஆசிர்வதிக்கிறது. இந்தக் கால ஓட்டத்தின் பிடியிலிருந்து எல்லோரையும் சற்று தளர்த்தி ஆசுவாசப்படுத்துகிறது. சற்று நேரம் அழுது ஓய்ந்ததும் மனது லேசாகிறது. அப்போது தான் பலருக்கு வானத்தையும், நிலவையும், மரங்களின் சலசலப்பையும், குழந்தைகளின் விளையாட்டுக்களையும் பார்க்க முடிகிறது. இறந்தவரின் மூலம் பல விட்டுப் போன உறவுகள் ஒன்று கூடுகின்றன. அன்று தான் எல்லோரிடமும் நிறைய நேரம் இருக்கிறது. அவரைப் பற்றி பேச ஆரம்பித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.
அப்படி மனம் விட்டுப் பேசும் போது, பல விதமான மரணங்களைப் பற்றியும், அதைச் சார்ந்த சம்பவங்களைப் பற்ரியும் தீர ஆலோசிக்கப்படுகிறது. தான் அதில் பங்கு கொள்ளாதவரை மரணம் நேர்ந்த சம்பவங்களைப் பற்றிக் கேட்க எல்லோருக்கும் ஆவல் இருக்கிறது. அதைப் பற்றிப் பேசப் பேச அது வளர்ந்து கொண்டே வருகிறது. வாழ்க்கை எத்தனை விசித்திரமானது, மரணத்தின் முன் அது எத்தனை அற்பமானது என்று நினைக்கத் தோன்றுகிறது. மரணத்திற்கான எல்லா பதில்களும் வாழ்க்கைக்கான கேள்விக்குறிகளாய் நம் மீது குவிகின்றன. மரணத்தைப் பற்றி சிலாகிக்கும் போதும், அதன் நிதர்சனத்தை உணரும் போது, நம்மில் எங்கோ அடி ஆழத்தில் புதைந்து போய் விட்ட மனிதம் ஆனது மெல்ல தலை காட்டுகிறது. அந்த சில நொடிகள் நாம் பிறந்த குழந்தையாய் மாறி விடுகிறோம். அது வெறும் சில நொடிகள் தான். அந்தக் கனவு கலைந்தவுடன் நாம் சராசரியாகி விடுகிறோம். ஒவ்வொரு மரணமும் வாழ்க்கை எப்படி வாழப்பட வேண்டும் என்று செய்தியை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் கண்களை மூடி பயணிக்கிறோம்!