வலைப்பதிவர் பெயர்: பிரதீப்
[சுருக்கமாக - பிரதீப் குமார் ஈஸ்வரி சுப்ரமணியன்]

வலைப்பூ பெயர்: பெய்யெனப் பெய்யும் மழை!
[யாருப்பா அது பிழைன்னு படிக்கிறது?]

சுட்டி(url) : http://espradeep.blogspot.com
[வலை உரலே க்யுட்டாயில்லை! நானும் இல்லைன்னு தானே சொன்னேன்!]
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை [அதனால் தான் வலைப்பதிவு வைத்து தமிழை மேலும் வளர்க்கிறேன்!]

நாடு: இந்தியா [ஜெய்ஹிந்த்!]

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலையில் மேய்ந்த போது தெரிந்து கொண்டது கொஞ்சம்; ஷாங்ரீலா பவித்ராவின் மூலம் தெரிந்து கொண்டது கொஞ்சம்!
[பவித்ரா, உங்களுக்கு ஆபத்து! பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்!]

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : மார்ச் 19, 2004
[சனி உச்சத்தில் இருந்த போது! உங்கள் எல்லோருக்கும்!!]

இது எத்தனையாவது பதிவு: 95

இப்பதிவின் சுட்டி(url):
http://espradeep.blogspot.com/2006/05/blog-post_28.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆரம்பிக்கப்படாமல் இருந்தது!
[சமீபத்தில் சுஜாதாவின் கேள்வி - பதில் தொகுப்பை படித்ததன் விளைவு!]

சந்தித்த அனுபவங்கள்:

1. எழுத்தாளர் சுஜாதாவையும் சக வலைபதிவாளர்களையும் சந்தித்தது!
[தேசிகனுக்கு ஒரு ஆ! எத்தனை நாள் தான் ஓ போடுவது?]
2. என் வலைப்பதிவை தவறாமல் படிக்கும் நண்பர் ஒருவர், எனக்கு ஃபோன் செய்து எழுத்தாளர் சுஜாதா பேசுவதாகவும், நான் நன்றாக எழுதுவதாகவும், விகடனில் நான் எழுத முயற்சிக்க வேண்டுமாயும் கேட்டு என்னை கொஞ்ச நேரம் கலாய்த்தார்!
[அடுத்த முறை ஜெயகாந்தன் மாதிரி பேச சொல்லியிருக்கிறேன்!]
3. பஸ் ஸ்டாண்டில் என்னுடைய ரசிகர் ஒருவர் என்னிடம் ஆட்டோகிராஃப் கேட்டது!
[இது சத்தியமான பொய்!]

பெற்ற நண்பர்கள்: பிரதீப்புக்கும் எனக்கும் இருந்த நெருக்கம் இன்னும் அதிகமானது!

கற்றவை: கற்றபின் நிற்க அதற்குத் தக.
[முன் பாதியை நிரப்பு - 2 மார்க்]

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்ன? இந்தியாவுக்கு சுதந்திரம் வந்துருச்சா?

இனி செய்ய நினைப்பவை: சொல்லிப் பெய்வதல்ல மழை!

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

மதுரை மாநகரில் சுப்ரமணியன் - கீதா தம்பதியினருக்கு 1978ம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பிரதீப் வானத்தில் இருந்து குதித்தார்! நர்ஸ் காட்ச் பிடித்து தொட்டிலில் போட்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப பிரதீப் சினிமாவிலும், சினிமா பாடல்களிலும் தேர்ந்து விளங்கினார். சிறு வயதிலேயே ரஜினி போல் நடந்து காட்டியும், நடித்துக் காட்டியும் பலருடைய உள்ளத்தை கொள்ளை கொண்டார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் கொஞ்சமாய் வளர்ந்த பிரதீப்பின் வாழ்வில் அந்த சமயத்தில் விதி நன்றாக விளையாடியதில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆனார். அலுவலகத்தில் வலைபதிவதில் அயராது உழைத்தாலும் அதிலும் நேரம் மிச்சம் பிடித்து ப்ரொக்ராமிங்கும் செய்து கடமையை கண்ணும் கருத்துமாய் செய்தார்!! 2006 அல்லது 7 க்குள் யாராவது ஒரு குணவதியை மணப்பார்! இனிதே இல்லறம் நடத்துவார்? இப்படிப் பட்ட உயர்ந்த எண்ணங்களுடனும், குணங்களுடனும் வாழும் ஒரு மேதையை நாளை தமிழகம் இழந்தால் அது ஒரு பேரிழப்பாகவே இருக்கும். லட்சோப லட்சம் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துவார்கள்! செலுத்தனும்!!

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்

பெய்யெனப் பெய்யும் மழை!

மதுமிதாவுக்கு ஒரு கேள்வி! இவ்வளவு லொள்ளா எழுதியிருக்கேனே, இதை புத்தகத்துல போடுவீங்க?
கூறை மேலிருந்த கண்ணாடித் தடுப்பின் வழியே வெயில் சுள்ளென்று அடிக்கிறது. கண்ணை மூடிக் கொண்டே வெப்பத்தை உணர்கிறேன். மிகவும் சோர்வாக இருக்கிறது. வாயில் கசப்பு நிரந்தரமாய் தங்கி விட்டது. நோயின் வெம்மையோடு வெயிலின் வெம்மையும் சேர்ந்து விட்டது. கண்களைத் திறக்க நினைக்கிறேன், முடியவில்லை. மிகவும் ப்ரயத்தனப்பட்டுத் திறக்கிறேன். கண்களின் நேரே சூரிய ஒளி பட்டு கண் கூசுகிறது. மறுபடியும் கண்ணை மூடிக் கொள்கிறேன். அப்படியே சிரமப்பட்டு கட்டிலின் அந்தப் பக்கம் புரண்டு கொள்கிறேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. இப்போது கண்களைத் திறக்கலாம். என் பூப்படைந்த கண்ணின் வழியே அந்தக் காட்சியைக் காண்கிறேன். நான் தினமும் பார்க்கும் காட்சி. கண்ணாடித் தடுப்பின் வழியே நேர் கோட்டில் சூரிய ஒளி கட்டிலில் பட்டு அந்தக் கண்ணாடித் தட்டின் வடிவம் கட்டிலில் கிடக்கிறது. அந்த ஒளியின் ஊடே மாசு படிந்த ஒரு உலகம் தெரிகிறது. பல கோடி வருடங்களாய் கொளுந்து விட்டு எரியும் சூரியனின் ஒளியில் வயோதிகம் இல்லை. அதே வேகம், அதே தினவு, அதே வீச்சு, அதே கர்வம்! சூரியனை எந்த நோயும் பீடிப்பதில்லை போலும்.

இன்று என்ன தேதி, என்ன கிழமை, என்ன மாதம்? மூக்குக் கண்ணாடி அணியாத மங்கிய பார்வை போலாகிவிட்டது நினைவுகளும்! நினைவுகளின் துல்லியத்திற்கும் ஒரு மூக்குக் கண்ணாடி அவசியம் என்று தோன்றுகிறது. நினைவுக்கு ஏது மூக்கு? என்ன இது? ஒரே பிதற்றலாய் இருக்கிறதே? பேசும் போது பிதற்றுவது தான் உளரலென்றால் மனதளவில் இப்படிப் பிதற்றுவதற்கு என்ன பேர்? சே! என்ன உளரல் இது? உடம்பு நோய் கண்டும் இந்த மனது ஓய்வு எடுக்க மறுக்கிறதே? உடம்பு பாடாய் படுகிறது என்று சிறு இரக்கம் கூட காட்டுவதில்லையே இந்த மனம்? என்னால் முடியவில்லை. ஆமாம்....?, இந்த என்னால் என்பது உடலா, மனதா? ஏன் இப்படி உளருகிறேன் இன்று? சூரிய ஒளி மங்குகிறது. ஏதோ மேகம் மறைத்திருக்க வேண்டும். தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்ற வாசகம் ஞாபகம் வருகிறது. இந்த மூளை தான் மனதை செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறது?! இந்த மனக்கிறுக்கின் உளரலுக்கு செவி சாய்த்து மூளைப் பரணில் இருக்கும் கண்டதை தூசி தட்டி எடுத்துத் தருகிறதே? உடல் சொல்கிறது, இரண்டும் கூட்டுக் களவானிகள் என்று!

என் உடல் வெப்பத்தால் கட்டில் சுடுகிறது. இவ்வளவு நேரம் அதை உணரக்கூடாது என்று என் எண்ணங்களை திசை திருப்பிப் பார்த்தேன். பலிக்கவில்லை. கொஞ்சம் புரண்டு கொள்கிறேன். வேட்டியை இரு கால்களுக்கும் இடையில் நன்றாய் செலுத்திக் கொள்கிறேன். என்ன வெப்பம்?! உடலெல்லாம் ஒரே அசதி. நான் ஓடிய ஆடிய காலங்கள் நினைவுப் பரணில் எங்கோ தூசு கண்டு கிடக்கிறது. அதை எடுத்து தூசு தட்ட நினைத்தால் இருமல் வரும்! இதோ வந்து விட்டது..இவ்வளவு நேரம் எப்படி மறந்து போயிருந்தேன். அப்பா, உயிரை உள்ளிருந்து பிடுங்கி எறிவது போல் அவ்வளவு அழுத்தமான, ஆழமான இருமல்கள்! என் வயதான, இறந்த போன, இறந்த கால மனைவியின் தளர்ந்த கைகளை மிகவும் கஷ்டப்பட்டு நினைத்துக் கொண்டு என் மார்பை வருடிக் கொள்கிறேன்! இதமாய் இல்லை தான். அப்படி இருப்பது போல் கற்பனை செய்து கொள்கிறேன்! வற்றிய கிணறைப் போல வற்றி இருந்த பாத்திரத்தில் மிகவும் சிரமப்பட்டு தண்ணீர் எடுக்கிறேன்..இல்லை; எடுக்க முயல்கிறேன். ஆஹா...விரல்களில் ஈரம் படிகிறது! நல்ல வேளை அதிகமாய் தண்ணீர் இல்லை, டம்ளரில் நிரம்ப தண்ணீர் இருந்தால் அதை தூக்க சிரமம் ஏற்பட்டிருக்கும். ஏதோ டம்ளரில் ஒட்டி இருந்த ஒரு திவளை நீரை நாக்கில் நனைத்துக் கொள்கிறேன். எனக்கு யாருமே இல்லையா? என்று மனதில் ஒரு குரல் ஓலமிட்டு அழுகிறது! பாழடைந்து போன கண்களில் சிறிது கண்ணீர் சுரக்கிறது. நானிருக்கிறேன் என்று ஒரு சிறு தென்றல் என் கண்ணீர் துடைக்கிறது. கூரையின் கண்ணாடித் தடுப்பின் வழியே பார்க்கிறேன். நோயாளியைப் பார்க்க வருபவர்கள் பழங்கள் கொண்டு வருவது போல், சூரியன் வேஷம் போட்டுக் கொண்டு எனக்காக நட்சத்திரங்களை கொண்டு வந்து எட்டிப் பார்க்கிறது அரை குறை நிலா! அதற்குள் இரவு வந்துவிட்டதா?

வாழ்வில் மற்றொரு நாள் கழிந்தது!

அதே மாநகராட்சிப் பள்ளி; அதே போன்ற வெவ்வேறு நீண்ட வரிசைகள். ஜனநாயகக் கடனை நிறைவேற்றி விட்டு வந்தவுடன் எழுதுகிறேன். என் வாழ்நாளில் முதன் முதலாய் நான் போடும் ஓட்டு! ஒரு ஜீன்ஸ் ட்ரவுசர், ஒரு டீ-சர்ட்..கூட்டம் அதிகமாயிருந்தால் வரிசையில் ரொம்ப நேரம் நிற்க போர் அடிக்குமே என்று ஐ-பாட் ஐயும் எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டேன். நான் நினைத்த அளவுக்கு கூட்டம் அதிகம் இருக்கவில்லை. இருந்தும் காதில் ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டு நீ ஒரு காதல் சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தேன். கைலி கட்டிக் கொண்டும், அழுக்கான வேட்டி கட்டிக் கொண்டும், 3 வருடத்திற்கு முன் எடுத்த தீபாவளி சட்டையுடனும், கரை படிந்த பற்களுடனும், வித விதமாய் நின்றிருந்தனர். நான் அவர்களிடம் இருந்து தனித்து தெரிந்தேன். எந்த மடையனும் சொல்லி விடுவான், நான் சாஃப்ட்வேர் இன்சினியர் என்று! சாதாரண மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி வந்து விட்டேன்? இப்படி விலகச் செய்வது படிப்பா அல்லது பணமா? என்னைப் பற்றி அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? இப்படி பல எண்ணங்கள்! இப்படி எல்லாம் நான் நினைப்பது நியாயமா? அல்லது பேத்தலா? என்னமோ ஒன்றும் புரியவில்லை.

நீ ஒரு காதல் சங்கீதத்தையும் மீறி வரிசையில் நின்றவர்களின் அரசியல் விவாதம் காதில் விழுந்து கொண்டிருந்தது. இங்கு அரசியல் பேசக்கூடாது போர்ட் இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். என்ன அபத்தம், இந்த இடத்தில் பேசா விட்டால் வேறு எந்த இடத்தில் தான் அரசியல் பேசுவது. பேசட்டும்; தகராறு ஏதும் வராமல் இருந்தால் சரி. வெளியே ஆங்காங்கே வெவ்வேறு கட்சிக் கொடிகள் கட்டி அது காற்றில் பறந்து கொண்டிருந்தன. கொடியுடன் அவர்கள் கொள்கைகளும்! எனக்கு எங்கள் தொகுதி பெயர் என்ன? யார் இங்கு நிற்கிறார்கள், இவர்களின் அரசியல் பின்னனி என்ன? ஒன்றும் தெரியாது. நான் ஓ போடத் தான் சென்றேன்! அதாவது, 49 {ஓ}! இந்தப் பட்டியலில் இருக்கும் யாருக்கும் ஓட்டுப் போட பிடிக்கவில்லை என்றால் 49 {ஓ} போடலாம் என்று சில நாட்களாக சாஃப்ட்வேர் இன்சினியர்களுக்கு (மட்டும்!) மெயிலின் மூலம் அறிவூட்டப்பட்டது!

வரிசை நகர்ந்து நான் உள்ளே சென்றேன். என் சீட்டையும், புகைப்பட அட்டையையும் சரி பார்த்தார் ஒரு அதிகாரி. மற்றவர் அதை வாங்கி என்னுடைய பேர் இருந்த ஒரு நோட்டில் என் பெயருக்குக் கீழே அடிக்கோடிட்டு இன்னொருவருக்கு அந்த நம்பரை சொன்னதும் அவர் குறித்துக் கொண்டார். ஒரு சீட்டைக் கொடுத்தார். பக்கத்தில் ஒருவர் என் விரலை நீட்டச் சொல்லி மையிட்டார். இந்த முறை புள்ளிக்கு பதிலாய் கோடு போடப் போவதாக பேப்பரில் படித்தேன். அதே மாதிரி ஒரு கோடு இழுத்து விட்டார். கோடு மட்டும் போடுங்கள்! சரியாய் ரோடு மட்டும் போடாதீர்கள்! என்று நினைத்துக் கொண்டேன். பக்கத்தில் இருந்தவர் நோட்டு ஒன்றில் என் கையெழுத்தை வாங்கிக் கொண்டார். நல்ல வேளை அங்கே பேனா இருந்தது. இந்த முறை யாரும் என் பேனாவை கேட்கவில்லை! அந்தச் சீட்டை கொண்டு போய் அங்கு ஒரு வயதான் பெண்மனி உட்கார்ந்திருந்தார். அவரிடம் கொடுத்ததும், அதை வாங்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள அட்டைத் தடுப்புக்குள் என்னைப் போய் ஓட்டுப் போடச் சொன்னார்.

உள்ளே சென்று அந்த வோட்டிங் பேடைப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த 49 {ஓ} இல்லை; சரி அதற்கு ஃபாரம் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து வெளியில் வந்து, அந்த அம்மாவிடம் எனக்கு யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை, எனக்கு 49 {ஒ} ஃபார்ம் கொடுங்கள் என்றேன். அவர் இதில் உள்ளதைத் தான் போட வேண்டும், அந்த நீல நிற பட்டனை அமுத்துங்கள் என்று ஆங்கிலத்தில் சொன்னார். எனக்கு அது தெரியும், எனக்கு இவர்களுக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை. 49 {ஓ} ஃபார்ம் கொடுங்கள் என்றேன் மெதுவாய். அதற்குள் அந்த அறையில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டு விட்டது. நீங்க ஆபிஸர்கிட்ட கேளுங்க என்றார். அவர் பக்கத்தில் தான் வரிசை நின்று கொண்டிருக்கிறது. நான் மெதுவாய் சென்று 49 {ஓ} ஃபார்ம் கொடுங்க என்றேன். அவர் அப்படின்னா? என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே விளங்கவில்லை. எல்லோரும் என்னையே பார்க்கிறார்கள். i am really embrassed! சரி என்று சமாளித்துக் கொண்டு, எனக்கு இதில் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை என்று ஒரு ஓட்டுப் போட வேண்டும், அதற்கான ஃபார்மை கொடுங்கள் என்றேன். வரிசையில் சலசலப்பு அதிகமானது. என்ன சொல்றீங்க? ஓட்டு போட விருப்பமில்லைன்னா ஏன் வந்தீங்க? என்றார் ஆபீஸர். வரிசையில் நின்ற ஒரே ஒரு ஜீவாத்மா மட்டும், இல்லை சார் அவர் கேக்குறது சரி தான் என்று அவரிடம் கூறி விட்டு ஆனா அந்த ஃபார்ம் இங்க இல்லை, நீங்க ஏன் ஓட்டை வேஸ்ட் பண்றீங்க? போய் யாருக்காவது போடுங்க என்றார் என்னிடம். எல்லோரும் புலம்பினார்கள். போங்க போய் ஓட்டு போடுங்க என்றார். அப்படியே வெளியே போய் விடலாம் என்று நினைத்தேன். ஆனால் என் நல்ல ஓட்டு கள்ள வோட்டு ஆகாமல் இருக்க உள்ளே சென்று என் மனதில் அடுத்த படியில் இருந்த ஒரு சின்னத்தில் க்ளிக்கி என் முதல் ஓட்டை போட்டேன். [யாருக்குப் போட்டேன் என்பது ரகசியம் என்பது உங்களுக்கே தெரியும்!] எல்லோரும் என்னை பார்த்து சிர்ப்பது போலிருந்தது. அரை ட்ரவுசர் போட்ட அரை லூசு என்று நினைத்திருக்கலாம். உண்மையில் யார் அரை லூசு? மக்கள் ஏன் இவ்வளவு அறியாமையில் இருக்கிறார்கள்? மக்களை விடுங்கள், அந்த அதிகாரிகளுக்கும் அப்படி ஒன்று இருப்பதே தெரியவில்லையா? அல்லது, தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்களா? 1960 ஆண்டுகளிலிருந்து இந்த 49 {ஒ} என்பது இருக்கிறது என்றார்களே! பத்திரிக்கைகளில் எத்தனை முறை இதைப் பற்றி வந்திருக்கிறது! யாரும் நமிதாவின் படத்தைத் தாண்டிப் பார்ப்பதே இல்லையா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சரி அரசியல் கட்சிகள் தான் 49 {ஒ} பற்றி பேசமாட்டார்கள். இந்தத் தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? இந்த விழிப்புணர்வை மக்களுக்கு அது ஏன் சரியாக வழங்கவில்லை. வீடு விடாய் சென்று ஓட்டுக் கேட்கும் அரசியல் கட்சிகளோடு இவர்களும் ஒரு குழு அமைத்து வீடு வீடாய் சென்று இதைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லலாமே? ஏன் செய்யவில்லை? இதை நான் யாரிடம் சொல்ல வேண்டும்? என்ன தான் தீர்வு இதற்கெல்லாம்? ஏன் என் நாடு இப்படி இருக்கிறது? எது தான் சரியாய் நடக்கும் இங்கே? வழக்கம் போல் நிஜம் கேள்விகளின் ரூபத்தில் முகத்தில் அறைகின்றன!

வீட்டிற்கு வந்தவுடன் www.ohpodu.org சென்று ஞாநியின் நம்பர் தேடி, அவருக்கு ஃபோன் போட்டென். ஒரு நம்பர் மாறிவிட்டதாகச் சொன்னது. இன்னொன்று எப்போதும் பிஸியாக இருந்தது. நான் என்ன தான் செய்வது? எல்லா கொடுமைகளையும் பார்த்து பார்த்து இத்தனை கேள்விகளையும் எனக்குள்ளே கேட்டுக் கேட்டு இதோ வலைபதித்துக் கொண்டிருக்கிறேன்! சமயத்தில் எல்லாவற்றையும் எடுத்தெறிந்து விட்டு சமூகத்தைத் திருத்தக் கிளம்பி விடலாம் என்று தோன்றுகிறது! ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை. எல்லோரையும் போல என்னால் இந்தியான்னா இப்படித் தான் என்றும் போக முடியவில்லை! கடைசியில் ஆதங்கமே மிஞ்சுகிறது.

என் விரலைப் பார்த்துக் கொள்கிறேன். மை காய்ந்திருந்தது! என் விரலிலும் இன்று முதன் முதலாய் ஜனநாயகக் களங்கம் ஏற்பட்டு விட்டது!