நான் சென்னையிலிருந்து மதுரை செல்லும் ரயிலைப் பற்றி எழுதப் போவதில்லை. நான் மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்ததன் விளைவாக இந்தப் பதிவு! இது அதைப் பற்றிய விமர்சனப் பதிவுமல்ல. சமிபகாலங்களில் கமல் நடிக்கும் அனைத்துப் படங்களும் சர்ச்சைக்குள்ளானது நாம் எல்லோரும் அறிந்ததே..அதைப் பற்றிய என் எண்ணங்களும், கேள்விகளும் தான் இந்தப் பதிவு!
படத்திற்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று சில அரசியல்வாதிகள் கூச்சலிடுவதும், இந்தக் கதைக்கு இப்படித் தான் பெயர் வைக்க முடியும் என்று சினிமாக்காரர்கள் மல்லுக்கு நிற்பதும் இன்று சகஜமாகிவிட்டது. நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன, அதை விட்டு விட்டு, அரசியல்வாதிகள் இதை ஒரு பிரச்சனை என்று பொழுது கழிப்பது சரியாகப் படவில்லை தான்..ஆனால்...
இவர்கள் சொல்வதற்கேற்ப வீம்புக்கென்றே கலைஞர்கள் படத்தின் தலைப்பை தேர்ந்தெடுக்கிறார்களோ என்றும் சில சமயம் தோன்றுகிறது. அரசியலை விட மக்களுக்கு சினிமாவும், சினிமாக் கலைஞர்களையும் பிடிப்பதால் எல்லோரும் சினிமாப் பக்கம் சேர்ந்து விடுகிறார்கள் என்பது என் எண்ணம்.
விருமாண்டி!
சண்டியர் என்ற பெயர் ரவுடியைக் குறிப்பதாகவும், ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களை வீரமாகக் காட்டி, மற்றவரை கோழையாகச் சித்தரிப்பதாகவும், வன்முறை மேலோங்கி இருப்பதாகவும் பல குற்றங்கள் சாட்டப்பட்டு கமல் ஒரு வழியாக விருமாண்டி என்று மாற்றினார்! இந்தச் சண்டையே அந்தப் படத்திற்குத் தேவையான விளம்பரத்தைத் தேடித் தந்தது. கமல் அந்த அரசியல்வாதிக்கு எதிராகப் பேசும் பொழுது இது தூக்கு தண்டனை தடை செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்தை வலியுருத்தும் படம், இதில் வன்முறை அறவே இல்லை என்று மார்தட்டிச் சொன்னார்! ஆனால் படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்துருக்கும் அது எத்தனை பொய் என்று..அந்தப் படத்தில் வன்முறை இல்லை என்றால், கமலுக்கு வன்முறை என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று அர்த்தம்! அது எனக்குப் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. நான் பெரிய கமல் ரசிகனாக இருந்தாலும், என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. எந்த ஒரு பத்திரிக்கை விமர்சனத்திலும் படத்தில் வன்முறை அதிகம் என்று சொன்னதாய் எனக்கு ஞாபகமில்லை!! தேவர் மகனை விட, ஹேராமை விட இதில் தான் எனக்கு வன்முறை அதிகமாய் பட்டது..
மும்பை எக்ஸ்பிரஸ்!
இப்பொழுது இந்தப் படம்! கமல் வீம்பாக இது கதைக்கேற்ற பெயர், இதை மாற்ற முடியாது என்று படத்தை வெளியிட்டு அதுவும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் என் கேள்வி..
ஒரு குழந்தையைக் கடத்தும் கதைக்கு ஏன் அவர் மும்பையை தேர்ந்தெடுக்க வேண்டும்? அந்தக் கதையை சென்னையில் சொல்ல முடியாதா? கேட்டால், அந்தக் காரெக்டரின் பெயர் மும்பை எக்ஸ்பிரஸாம், ஏன் சென்னையில் இந்தக் காரெக்டர் இருந்து அதற்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் விரைவுவண்டி என்று வைத்தால் என்ன? முதலில் அந்தக் காரெக்டரின் பெயர் மும்பை எக்ஸ்பிரஸ் என்று ஏன் வந்தது? அதைப் பற்றி கமல் படத்தில் ஒன்றும் சொல்லவில்லையே..
என் கேள்வி படத்திற்கு தமிழில் தலைப்பு வைப்பதைப் பற்றி அல்ல, அந்தப் படத்தை மும்பையில் தான் எடுக்க முடியும் என்று அவர் ஏன் தீர்மானித்தார் என்று எனக்கு விளங்கவில்லை..சென்ற வார விகடனில் சுஜாதா அவர்கள் இந்தப் படத்திற்கு சரியான தலைப்பே வைக்கப் பட்டிருக்கிறது என்று சான்றிதழ் தருகிறார்.
என்ன தான் சினிமா என்ற மாய உலகில் நாம் மயங்கிக் கிடந்தாலும், கூச்சலிடும் அரசியல்வாதிகளை விடுங்கள், நியாயம் என்று ஒன்று இருக்கிறதே..ஒரு justification வேண்டாம்?
என்னடா இவன், ரஜினியையும் குறை சொல்றான், கமலையும் குறை சொல்றான், இவன் உண்மையில் யார் ரசிகன் என்றால்; உண்மையில் நான் சினிமாவின் ரசிகன்!