2 நாட்கள் சென்னை சென்று குதியாட்டம் போட்டு வந்த களைப்புடன் பதியும் பதிவு இது! என் நண்பனின் தங்கை கல்யாணத்திற்கு எங்கள் சென்னை நண்பர்களை அழைக்கச் செல்கிறோம் என்ற ஜமுக்காளத்தில் i mean போர்வையில் இங்கிருந்து ஒரு 9 பேர் சென்றோம்.. சரி இனி over to சென்னை!

எனக்கும் சென்னைக்கும் ஏதோ ஜென்மாந்திர தொடர்பு இருக்கிறதென்று நினைக்கிறேன்! அல்லது, சினிமாவை எனக்குப் பிடிப்பதால் சென்னை எனக்கு மிகவும் பிடிக்கிறதோ என்னவோ! சென்னையில் இருக்கும் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தும் நான் பொறாமைப் படுவதுண்டு..அந்தப் பிச்சைக்காரன் கேட்டால் என்னை கயிதே, கஸ்மாலம், சாவுகிராக்கி என்று திட்டிக் கொண்டே தன் திருவோட்டாலேயே அடிப்பான் என்று நினைக்கிறேன்! [தயவு செய்து இதை யாரும் கற்பனை செய்து பார்க்க வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!]

முதல் நாள் MGM, இரண்டாம் நாள் மகாபலிபுரம்..அவ்வளவு தான் எங்கள் plan..அந்த EAST COAST ROAD ல் கட்டிப்பிடித்து பைக்கில் செல்லும் ஜோடிகளைப் பார்க்கும் போது..ஹ¤ஹ¤ஹ¤ஹ¤ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!! வேறென்ன பெருமூச்சு தான்..

1. நாங்கள் தங்கி இருந்தது திருவல்லிக்கேணி, சிறிய பெரிய தெரு [இது தான் தெருவின் பெயர்]வில் ஒரு லாட்ஜா, மேன்ஷனா இல்லை இல்லை ஒரு ஸ்டே ஹோம்..நன்றாகவே இருந்தது..குழாய் திறந்தால் கோபமாய் சீற்றத்துடன் தண்ணீரார் பாய்ந்தார். [சென்னையில் தண்ணிப் பஞ்சம்னு யாருப்பா சொல்றது..]தெருவில் இருந்து வெளியே வந்தால் ஒரு பெரிய பஜார். வலது பக்கம் நேராய் போனால் அண்ணா சாலை, இடது பக்கம் நேராய் போனால் மெரினா கடற்கரை! ஆஹா..

2. சென்னையில் ஏழை பணக்காரன் என்ற எந்த ஒரு வித்தியாசமுமின்றி செயல்படும் ஒரே ஆள் நம்ம சூரியன் சார் தான்! [நிலா மேடம் இல்லையா..அதான் சூரியன் சார்!] பிரிக்கிறார்! சார், சார் நான் பெங்களுரிலிருந்து ஊர் சுத்திப் பாக்க வந்துருக்கேன் சார், என்னை மட்டும் விட்ருங்க சார் என்று நாங்கள் கெஞ்சினாலும் அவர் காதில் போட்டுக் கொண்ட மாதிரியே தெரியவில்லை! software engineer கள் அத்தனை பேரும் வியர்வை சொட்ட சொட்ட ஊர் சுற்றிப் பார்த்தோம்! என்னோட சென்னை நண்பன் எங்களுக்காக AC Tempo ஏற்பாடு செய்திருந்தான்!![எப்போ இருந்து நமக்கு வருது இந்தத் திமிரெல்லாம்?]

3. சென்னையில் எனக்கு மிகவும் பிடித்தவைகள்:
1. சினிமாவும், சினிமா சார்ந்த இடங்களும்.[ஹிஹி..புத்தி!]
2. விசாலமான சாலைகள்
3. எப்போதும் எங்கேயோ ஓடிக் கொண்டே இருக்கும் துறுதுறுப்பான மக்கள்[அப்படி எங்கே சார் போறீங்க?]
4. ஒவ்வொரு fly over லும் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான HORDINGS! [ப்ரியாமணி கொள்ளை அழுகு!]
5. இப்போது FM Radio! 4 to 5 FM radio இருக்கிறது! [இரவு 10 மணிக்கு "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல" பாட்டு ஒலிக்கிறது!!!]
6. மிக முக்கியமாக பரந்து விரிந்து கிடக்கும் வங்காள விரிகுடா! [கடல் இருந்தாலே அந்த ஊர் அழகு தான் இல்ல?]

4. இந்த முறை அண்ணா சாலை பக்கம் போகாததால் புதுப் படங்களின் விசாலமான கட் அவுட்களை பார்க்க முடியவில்லை..4 வருடத்திற்கு முன் project தேடி அலைந்து கொண்டிருந்த போது நண்பர்கள் அண்ணா சாலையின் ஒரு கம்பெனி விடாமல் ஏறி இறங்கிக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் அங்கு வைத்திருக்கும் கட் அவுட்களை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பேன்! [எப்படி project கிடைக்கும் சொல்லுங்க?]

5. சென்னையைப் பார்த்தால் இந்தியாவின் பாதி நரிக்குறவர்கள், பிச்சைக்காரர்கள் இங்கு தான் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது! இங்கு நாம் சொந்த வீடு கட்ட யோசித்துக் கொண்டிருக்கிறோம், அங்கு பலருக்கு வாடகை வீடு கூட இல்லை..ஒரு கூடாரம் கூட இல்லாமல் ப்ளாட்பாரத்தில் படுத்துக் கிடக்கிறார்கள்! மறுநாள் வழக்கம் போல் எங்களுக்கு விடிந்து விட்டது..ஆனால் இவர்களுக்கு என்று விடியுமோ தெரியவில்லை!!

6. சென்னை சென்று கடலில் கால் நனைக்காமல் வருபவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை என்று வள்ளுவர் ஒரு குறளில் சொல்கிறார்! [முழிக்காதீர்கள், துரதிர்ஷ்டவசமாய் அந்தக் குறள் நமக்கு கிடைக்கவில்லை! காலவெள்ளத்தில் அது அழிந்து விட்டதாக்கும்!!] அதனால் மகாபல்லிபுரம் சென்று கால் நனைக்க முயன்று உடல் முழுதும் நனைந்து திரும்பினோம்! [இயற்கை அன்னை கடலென்னும் சாம்பாரில் உப்பை சற்று அளவுக்கதிமாகவே போட்டு விட்டாள்! கவிதெ, கவிதெ!!]

7. மகாபலிபுரம் நான் திரைப்படங்களில் பார்த்த மாதிரி இல்லை. நான் என் கண்களின் வழி காண்பதை விட என் காமெரா கண்ணின் வழியே நிறைய பார்த்தேன்..அது கழுவி வந்தவுடன் தான் தெரியும்!! கல்லைக் குடைந்து குடைந்து மிக அற்புதமாய் பல சிற்பங்களை செதுக்கியிருக்கிறார்கள்! இளவரசியாரைப் போல எனக்கு அதன் வரலாறு தெரியவில்லை..கல்வெட்டுக்கள் ஒன்றும் கண்ணில் படவில்லை..அதைத் தொடாதீர்கள், இதை அசுத்தப்படாதீர்கள் போன்றவைகளைத் தவிர இதை யார் கட்டினார்கள், இதன் சிறப்பு என்ன ஒன்றும் இல்லை..கைடுகள் தங்களுக்குத் தெரிந்த கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

இன்று கணினியின் முன் உட்கார்ந்து நான் ஏதோ தட்டிக் கொண்டிருக்கும் போதும் என் மனம் வங்காள விரிகுடாவில் அலையாடிக் கொண்டிருக்கிறது...


1 Response
  1. Anonymous Says:

    Chennaiyai rasitha miga chilaril neengalum oruvar ena ninai kinren (sorry konjam lateeeeeeeeeeee comment)