சோன்மார்க்! எங்கும் பசுமை போர்த்திய புல்வெளி; சுற்றிலும் பனி மலை. இதற்கு "தங்கத்தினால் ஆன பசுமை வெளி" என்ற பெயரும் உண்டு. காலை எழுந்து குளித்து முழுகி, காலை உணவை கடித்து முழுங்கி, குழந்தைகளை தயார் செய்து கிளம்ப பத்து மணி ஆகி விட்டது. வழி நெடுக இனிமையான சீதோஷணம். அருமையான இயற்கை வனப்பு. ஓடையின் அருகே சுற்றுலா வந்தவர்கள் ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்கி இருந்தார்கள். அவர்களை பார்க்கவே பொறாமையாய் இருந்தது. சோன்மார்கை, பஹல்காம், குல்மார்க் போல எல்லா காலங்களிலும் பார்க்க முடியாது. குளிர் காலங்களில் இதன் பாதையே அடைபட்டு போய் விடும் என்கிறார்கள்.


நாங்கள் அங்கு போய் சேர மதியம் பனிரண்டு, பனிரெண்டரை ஆகிவிட்டது. அங்கு உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க குதிரையிலும் செல்லலாம்; காரிலும் செல்லலாம். பயங்கர குழப்பத்துக்குப் பின் சரி முதலில் சாப்பிட்டு விடுவோம் என்று ஒரு மனதாய் முடிவெடுத்து சாப்பிட்டு முடித்தோம். பிறகு எல்லோரும் குதிரையில் வர முடியாது என்பதாலும், பட்ஜெட் கட்டுப்படி ஆகாது என்பதாலும் ஒரு வண்டி பிடித்தோம். சுமோ என்று ஞாபகம். அடக்கி ஒடுக்கி உட்கார்ந்து கொண்டோம். வண்டி வாடகை ஆறாயிரம். அங்கு பனி மலையில் சறுக்கலாம் என்று கூறி பெரிய சப்பாத்துக்களையும் [முத்துலிங்கத்தை அதிகம் படித்தது தப்பாகிவிட்டது!] கால்களில் அணிந்து கொண்டோம். இரண்டு மணி ஆகி விட்டது. இப்போது கிளம்பி எத்தனை இடங்களை பார்க்க முடியுமோ தெரியவில்லை என்று வருத்தப்பட்டோம். வண்டியை கிளப்பிய டிரைவர் கொஞ்ச தூரத்தில் ஏதோ பேச ஆரம்பித்தார். வழியில் உள்ள சில புல் தரைகளை காட்டி இங்கு தான் அமிதாப் நடித்த "சத்தே பே சத்தா" எடுத்தார்கள் என்றார். அமிதாப் இப்போது தெரிவாரா என்பது போல் அந்த இடத்தை பார்ப்பதற்குள் இந்தப் பக்கம் ஒரு புல் தரையை காட்டி வேறு ஏதோ ஹிந்தி படத்தை சொன்னார். இப்படி நான்கு படத்தை சொல்லி முடிப்பதற்கும் நாங்கள் வந்து சேர வேண்டிய இடம் வந்து விட்டது. வழி நெடுக வண்டிகளின் அணிவரிசை. ஜே ஜே என்று இருந்தது. "வண்டி உள்ளே போக முடியாது என்று அங்கேயே இறக்கி விட்டு விட்டார். நீங்கள் பார்த்து விட்டு இங்கேயே வந்து நில்லுங்கள், நான் இங்கு தான் காத்திருப்பேன். ஒன்றும் அவசரமில்லை, போய் மெதுவாய் வாருங்கள்" என்றார். சரி என்று செங்குத்தான சாலையில் ஏற ஆரம்பித்தோம்.

பெற்றோர்களையும், குழந்தைகளையும் அங்கு உள்ள பல டீ கடைகளில் ஒன்றில் உட்கார வைத்து விட்டு, நான் என் மாமா மகனுடன் மலையை ஏற ஆரம்பித்தேன். சிறுவர்களுடன் எப்போதும் இந்த மாதிரி விஷயத்தில் மோதக் கூடாது. அவன் ஏதோ சமதரையில் நடப்பது போல் அந்த மலையில் அநாயசமாய் ஏறிக் கொண்டிருந்தான். நான் கண்ணு, காத்து, மூக்கு, நாக்கு என்று அனைத்தும் தள்ளி கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டு அவனுக்கு சரி சமமாய் ஏற முயற்சித்து கொண்டிருந்தேன். எந்த வெயிட்டும் இல்லாமல் இருந்தால் தான் மலை ஏற வசதி என்று என் பர்ஸ், கைபேசியையும் வைத்து விட்டு வந்து விட்டேன். ஒரு வழியாய் முக்கால்வாசி ஏறி விட்டேன். அவன் எனக்கு மேலே நின்று கொண்டிருந்தான். சரி அவன் அருகில் வந்து விட்டோம், சேர்ந்து கீழே போய் விடலாம் என்றால் பயபுள்ள மேலே இருந்து சறுக்க ஆரம்பித்து விட்டான். எனக்கும் மேலே இருந்த சறுக்க விருப்பமிருந்தாலும் ஆடை ஈரமாகிவிட்டால் வண்டியில் தருவை மடியில் வைத்துக் கொள்ள வசதியாய் இருக்காது என்று நினைத்தேன். அதனால் சரி அவன் போகிறான் என்று அதே இடத்தில் சற்று ஆசுவாசமாய் அமர்ந்து கொண்டேன். ஆஹா, என்ன ஒரு அருமையான இடம் அது. அந்த குளிர்ந்த சீதோஷணமும், குளிர் காற்றும், ஏறி வந்த களைப்பும், கண்ணுக்கு இதமான இயற்கையும் ஆஹா...சொன்னால் புரியாது! அப்படியே மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன்.


அப்போது அருகில் ஒரு குடும்பம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏதோ பிக்னிக் மாதிரி அந்த மலையில் ஏறி வந்திருந்தார்கள். கையில் ஒரு பெரிய பேக். அதில் நிறைய சிப்ஸ், பிஸ்கட் என்று பலவகை ஸ்நாக்ஸ். மொக்கு மொக்கு என்று மொக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்ததும், "ஆஹா, செல்போன் கணம்னு" நாம வச்சுட்டு வந்தோமே என்று என்னை நொந்து கொண்டேன். நான் ஏற்கனவே சொன்னது போல் மலை ஏறுவதற்கு அங்கு கைட் இருக்கிறார்கள். ஒரு சிறிய பலகை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு மலை ஏற முடியாதவர்களை அதில் அமர வைத்து மேலே இழுத்துக் கொண்டு வருகிறார்கள். என்ன ஒரு கடினமான வேலை பாருங்கள். சரி என்று நான் எழுந்தேன். எங்கு கால் வைத்தாலும் வழுக்கியது. பலகையில் அமர்ந்து சறுக்கிச் செல்ல வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன். பேரம் பேசத் தொடங்கினேன். அவர்கள் நூற்றி ஐம்பது ரூபாய் சொன்னார்கள். நான் ஐம்பது ரூபாய் கேட்டேன். [என்ன  வேலையை நினைத்து பரிதாபப்பட்டாலும் பேரத்தில் நம்மல மிஞ்ச முடியுமா?] ஒருவன் ஒத்துக் கொண்டான். பலகையில் ஏறி ஜல்லென்று கீழே வந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது, பல தடைகளை கடந்து, ஆட்களை கடந்து, முட்டி மோதி பாதி தூரம் கீழே சேர்த்தான். அதற்கு மேல் கீழே வர முடியாது என்றான். என்னிடம் பணம் வேறு இல்லை, நல்ல வேளையாய் என் மாமா, என் தம்பி அங்கே இருந்தார்கள்.  இல்லை என்றால் அடுத்த க்ரூப்பை மேலே இழுத்துச் செல்ல என்னை உபயோகப்படுத்தியிருப்பான். அவர்களிடம் பணத்தை வாங்கி கொடுத்து விட்டு கீழே இறங்கினோம்.

சூடாய் டீ குடித்தோம். லேசாய் சூறக்காத்து அடிக்கத் தொடங்கியதும், மேகம் இருண்டது, கொஞ்சம் தூறல் போட்டது. குழந்தைகள் பயந்து அழ ஆரம்பித்தன. எங்கள் வண்டியை தேடினால் கிடைக்கவே இல்லை. நல்ல வேளையாய் வண்டியில் இருந்து இறங்கும்போது என் மாமாவிடம் அந்த டிரைவரின் கை பேசி எண்ணை வாங்கச் சொன்னேன். வாங்கியும் பயன் இல்லை. எத்தனை முறை அடித்தாலும் அவர் எடுக்கவே இல்லை. எடுத்தாலும் இடக்கு மடக்காய் பேசிக் கொண்டிருந்தார். ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று வேறொருவர் வந்து அவர் தான் என்னை அனுப்பினார்,  இந்த வண்டியில் ஏறுங்கள் என்றார். கடைசியில் தான் தெரிந்தது, அவர் எங்களை இறக்கி விட்டு விட்டு வண்டியுடன் அடுத்த டிரிப்புக்கு போய் விட்டார். வந்தால் அவர்களை அழைத்து வாருங்கள் என்று இன்னொருவரிடம் சொல்லி இருக்கிறார். அந்த வண்டியில் எங்களின் பை வேறு ஒன்று இருந்தது. அதெல்லாம் கீழே போய் எடுத்துக் கொள்ளலாம் என்றார் அந்த டிரைவர். சரி, அடுத்து எங்கே என்றதற்கு, இது தான் கடைசி இடம் என்று குண்டை தூக்கி போட்டார். கேட்டால், வழியில் அவர் காண்பித்த நான்கு புல்தரைகளும் நான்கு இடங்களாம்! முதலில் வண்டியை மலையின் அருகில் வரை கொண்டு செல்லவில்லை. திரும்பி வந்தால் வண்டி இல்லை. குழந்தைகளை வைத்துக் கொண்டு மழையில் கஷ்டப்படுகிறோம், போன் அடித்தால் எடுப்பதில்லை. சரி இன்னும் இடங்கள் இருக்கிறது என்று நினைத்தால், இது தான் கடைசி என்கிறார்கள். இதற்கு ஆறாயிரம். அவர்கள் வண்டியில் நாங்கள் பயணம் செய்தது ஒரு அரைமணி நேரம் கூட இருக்காது! "அட நாதாரிகளா!" என்று எரிச்சலாய் இருந்தது.



எங்கே புறப்பட்டோமோ அங்கே வந்து சேர்ந்ததும், யாரும் அவர்களை எதுவும் கேட்க முடியவில்லை. பணத்தை அழுது விட்டு, சப்பாத்துக்களை கழட்டிக் கொடுத்து விட்டு, அதற்கும் பணத்தை கட்டி விட்டு, சன்னியிடம்  சரண் அடைந்தோம். ஒவ்வொரு தரமும் சன்னி நொந்து போய் திரும்பும் எங்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்! "இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இந்த டயத்தில் இவர்கள் சம்பாதித்தால் தான் உண்டு. வருடம் முழவதுக்கும் சேர்த்து இப்போதே சம்பாதித்து விடுகிறார்கள்!" என்று சன்னி அவர்களுக்கு வக்காலத்து வாங்கினான். ஸ்ரீநகர் நோக்கி வண்டி புறப்பட்டது.

காஷ்மீர் பூமியின் சொர்க்கம் தான், ஆனால் மனிதன் எங்கு இருந்தாலும்...????

சுற்றுவோம்...
மறுநாள் பஹல்காமில் இருந்து ஸ்ரீ நகர் கிளம்ப வேண்டும். சன்னி முன் இரவே, "நாளை மெதுவாய் கிளம்பினால் போதும், நன்றாய் ரெஸ்ட் எடுங்கள்!" என்று சொல்லி விட்டான். ஆற அமர எழுந்து, குளிரை அனுபவித்துக் கொண்டே, குளித்து முடித்து, காலை உணவை முடித்துக் கொண்டு சூடாய் தேநீர் ஒன்றை கையில் எடுத்து சுவைக்கும் போது அருகில் உள்ள பள்ளியில் மாணவிகள் "பிரேயர் சாங்" பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சிறிய அரசு பள்ளி. தேநீரி நாவுக்கும், குளிர் உடலுக்கும், அவர்களின் குரல் செவிக்கும் இன்பம் சேர்த்தது. தூரத்தில் தெரியும் பனி மலையை பார்த்துக் கொண்டே அவர்களின் பாடலை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். சூரியனின் தங்க நிறம் அந்த வெண்பனியில் பட்டுத் தெறிக்கும் காட்சி மனதை ஏதோ செய்தது.


அறைக்கு வந்ததும் ஒரு பிரளயம் காத்திருந்தது. ஒரே நாளில் பெட்டியில் உள்ள அத்தனையும் வெளியில் தான் கிடந்தது. அதை எல்லாம் எடுத்து ஒரு வழியாய் ஒடுக்கி, அடுக்கி வெளியே வந்தோம். வண்டி ஸ்ரீநகர் நோக்கி கிளம்பியது. வழியெங்கும் வனப்பு. ஊருடன் ஓடும் லிட்டர் (liddar) ஆறு. ஆங்காங்கே பள்ளத்தாக்குகள், மலை முகடுகள், வானுயர்ந்த மரங்கள், பனி மலைகள் என்று நாள் வெகு உற்சாகமாய் இருந்தது. நான் சன்னியிடம் கேட்டுக் கொண்டதுபடி ஒரு நல்ல இடம் வந்ததும் "இறங்கி பார்த்து விட்டு வாருங்கள்!" என்று அனுப்பி வைத்தான். அந்த இடத்தில் சாலையை ஒட்டி சலசலக்கும் ஆறு, சுற்றி மலைகள், குளிர்ந்த காற்று, தூரத்தில் தெரியும் பனி மலை என்று ரம்மியமாய் இருந்தது. நான் இப்படி ஒரு ஆற்றில் குளித்து விட வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தண்ணீரில் கால் வைத்தாலே கால் மறத்துப் போகும் அளவுக்கு அது குளிர்ந்திருந்தது. கை காலை நனைத்துக் கொண்டு, சிறிது குழந்தைகளுடன் விளையாடி விட்டு வண்டி ஏறினோம்.







பஹல்காமில் இருந்து ஸ்ரீநகர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணம் தான். அன்று வேறு எதுவும் ப்ளான் இல்லாததால், சன்னி மெதுவாய் ஆற அமர கதை சொல்லியபடி வண்டி ஒட்டிக் கொண்டிருந்தான். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஜம்மு காஷ்மீரில் பிறக்காத ஒருவனால் அங்கு வீடோ, நிலமோ வாங்க முடியாதாம்! அப்படி ஒரு நடைமுறை அங்கே இருக்கிறது. வெளி மாநிலத்தவர் வாங்க வேண்டும் என்றாலும், அந்த வீடு/நிலம் ஜம்மு காஷ்மீரில் பிறந்த ஒருவனின் பெயரில் தான் இருக்க வேண்டுமாம். சன்னி இதை சொன்னதும், "அது தான் இன்னும் இந்த இடம் சொர்க்கமா இருக்கு!" இல்லைன்னா நம்ம மக்கள் "ஸ்னோ வியூ", "ரிவர் வியூ", "வேலி வியூ" அபார்ட்மென்ட்ஸ் என்று பலவகையில் கட்டி இடத்தை நாறடித்திருப்பார்களே என்று எண்ணிக் கொண்டேன்.

வழியில் ஆப்பிள் தோட்டம் ஒன்றில் இறங்கினோம். ஆப்பிள் உண்மையில் அந்த மரத்தில் இருந்து தான் வருகிறது என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு கிளம்பினோம்.



பிறகு காஷ்மீரின் பிரபலமான "ட்ரை ஃப்ரூட்ஸ்" ["உளர் பழங்கள்/கொட்டைகள்" என்று சொல்லலாமா?] வாங்க ஒரு கடையில் இறங்கினோம். பயங்கர காசு. பகல் கொள்ளை. அங்கே நம் ஊர் புளியம்பழம் மாதிரி ஒன்று வாங்கினேன். பார்ப்பதற்கு கொழ கொழவென்று இருக்கிறது. புளிப்பும், இனிப்பும் கலந்து ஒரு வித்தியாசமான சுவை. அதன் பிறகு வண்டி ஒரு சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் நின்றது. ஏதோ நூற்றாண்டில், ஏதோ ஒரு மன்னன் கட்டிய கோட்டை. சன்னி ஏதோ சொன்னான். நான் தருவுக்கு டயப்பர், பால், பவுடர் என்று எடுத்துக் கொண்டிருந்ததில் கவனம் செலுத்த முடியவில்லை. அந்தக் கோட்டையில் இருந்த ஒரு கைடு, சிதிலமடைந்த ஒரு தூணில் ஒரு உருவத்தை காட்டி "இவர் தான் உங்க ஊர் ரங்கநாதர்" என்றார். "அவர் எங்க இங்கே வந்தார்? ஒரு வேலை தேனிலவுக்கா இருக்குமோ?" என்று எண்ணிக் கொண்டே, "ஆமாம், அதே முக ஜாடை!" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உங்களுக்குத் தெரிகிறதா?



பிறகு ஸ்ரீநகரை நெருங்கும்போது வழியல் ஒரு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் மாதிரி ஒன்று வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் கோலிகளும், தோணிகளும் வரவேற்கிறார்கள். ஆமாம், அது தான் ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் பேட் தயாரிக்கும் இடம். அந்த ஊரின் பெயர் சங்காம். ஒரு கடையில் இங்கே "பேட் பாருங்கள்!" என்று சன்னி இறக்கி விட்டான். கீழே தொழிற்சாலை, மேலே ஷோரூம்! தொழிற்சாலை என்றால் பிரம்மாண்டமாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். ஒரு பத்துக்கு பன்னண்டு அறை தான். அப்படி இரண்டு அறைகள். ஒரு அறையில் எந்த ஸ்டிக்கரும் ஓட்டாமல் சில பேட்டுகள் அம்மணமாய் நின்றன. அடுத்த அறையில் ஒருவர் மெஷினில் ஒரு கட்டையை விட்டு ராவிக் கொண்டிருந்தார். அது பேட்டாய் மாறிக் கொண்டிருந்தது. என் மாமா பையன் அடம் பிடித்து ஒரு பேட் வாங்கிக் கொண்டான். ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று நினைக்கிறேன். சன்னி ஒன்றை இலவசமாக வாங்கி வந்தான்! சண்டாள சர்தார்! 





ஒரு வழியாய் வண்டி ஸ்ரீநகரை அடைந்தது. ஒரு பெரிய ஹோட்டல் அருகில் வண்டியை நிறுத்தி அதோ அங்கு தெரியும் அந்த சின்ன ஓட்டலில் சாப்பிட்டு வாருங்கள் என்று சன்னி எங்களை அனுப்பி வைத்தான். வாசலில் மசாலா தோசா என்று எழுதி இருந்தது. எச்சிலை துடைத்துக் கொண்டு உள்ளே போய் கொட்டிக் கொண்டோம். வடநாட்டில் மசாலா தோசை எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. என் அப்பாவை அர்த்த ராத்திரியில் தூக்கத்தில் இருந்து எழுப்பி "டீ குடிக்கிறீங்களா?" என்றாலும் குடிப்பார். அப்படிப்பட்டவர் சாப்பிட்டவுடன் சும்மா இருப்பாரா? அவரை அழைத்துக் கொண்டு எதிரில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்தேன். நம் ஊர் மாதிரி இல்லை. யாராவது வந்து கேட்டால் தான் அடுப்பில் பாத்திரத்தையே வைக்கிறான் மனுஷன். எதிர் கடையில் வேலை பார்க்கும் ஒருவன் அங்கு வந்து நின்று கொண்டு "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்றான். நான் "சென்னை" என்றேன். "ஒ, கொலவெறி, கொலவெறி!" என்றான்.  அடுத்த நொடியே தென்னிந்தியர்கள் அருமையான மனிதர்கள் என்றான். என்ன ஒரு நகைமுரண்!

வண்டி இந்து இடுக்கில் புகுந்து நாங்கள் தங்க வேண்டிய "ராயல் ஜன்னத்" [ஜன்னத் என்றால் சொர்க்கம்] ரிசார்ட்டுக்கு வந்தது. அதை ரிசார்ட் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு இரண்டு மாடி கொண்ட ஒரு பெரிய வீடு. முன்னால் சிறிய தோட்டம். அவ்வளவு தான். அந்த ரிசார்ட்டின் எதிரே நம் கூவம் மாதிரி அழுக்காய் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.


மணி அப்போதே நாலு, ஐந்து ஆகிவிட்டது. நல்ல ஒரு தேநீரை பருகினோம். சன்னி என் மாமாவிடம், பாதுகாப்பு கருதி, "பெண்கள் இங்கேயே இருக்கட்டும், நீங்கள் வேண்டுமென்றால் அருகில் நடந்து போய் வாருங்கள்!" என்று சொல்லி இருந்தான். நாங்களும் "தீவிரவாதிகள் இங்கு ஜாஸ்தி, நீங்கள் இருங்கள்!" என்று சால்ஜாப்பு சொல்லி விட்டு நான், என் தம்பி, மாமா மூவர் மட்டும் வெளியே கிளம்பினோம். அரவிந்தசாமியை கடத்தியவர்கள் எங்கள் யாரையும் சீண்டக் கூட இல்லை . ஆற்றை கடந்து அந்தப் பக்கம் செல்ல ஒரு பாலம் இருந்தது. அதைக் கடந்ததும் கடைத்தெரு வந்து விட்டது. சிறிது தூரம் நடந்ததும் நாங்கள் சாப்பிட்ட இடம் வந்து விட்டது. அப்படியே நடந்து கொண்டிருந்தோம். "தால் லேக்கை" பார்த்து வரலாம் என்று போய் கொண்டிருந்தோம். ஒரு அறை மணி நேர நடையில் தால் லேக் கண்ணில் பட்டது. சிறிது நேரம் அங்கு அமர்ந்து விட்டு இருப்பிடம் வந்து சேர்ந்தோம்.

திரும்பி வந்தவுடன் என் மாமா பையன் தான் வாங்கிய புதிய பெட்டில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அடம்பிடித்தான். நானும் கிரிக்கெட் ஆடி ரொம்ப நாள் ஆகி விட்டது. "சரி வாடா!" என்று அந்த ரிசார்ட்டின் கார் பார்கிங்கில் விளையாடினோம். பேசாமல் கிரிக்கெட்டையே தேசிய விளையாட்டாக மாற்றி விடலாம். நாங்கள் விளையாடத் தொடங்கிய பத்து நொடிகளில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த நாலு பேர் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அப்படி ஒரு உற்சாகமான ஆட்டம் பல நாட்களுக்குப் பிறகு. நான் நினைத்ததை விட நன்றாகவே ஆடினேன். இருட்டத் தொடங்கியதும் வேர்க்க விறுவிறுக்க ஆட்டத்தை முடித்துக் கொண்டு, இரவுச் சாப்பாடு சாப்பிட்டு படுத்தோம். மறுநாள் சோன்மார்க்!

சுற்றுவோம்...
அப்படியே வருடத்திற்கு பத்து டூர் அடிக்கவில்லை என்றாலும், எனக்கு பாக்கேஜ் டூர்கள் பிடிப்பதில்லை. அவர்கள் அரைத்த மாவையே அரைப்பார்கள். செக்கு மாடு போல் ஒரே இடத்தை சுற்றிக் கொண்டிருப்பார்கள். என்னை பொருத்தவரை ஒரு வண்டி இருக்க வேண்டும், இஷ்டம் போல் சுற்ற வேண்டும், அப்போது தான் அந்த இடம், அந்த மக்கள், அங்கு உள்ள வாழ்க்கை முறையை சரியாய் அறிய முடியும். கிட்டத்தட்ட ஹிப்பிகள் மாதிரி சுற்றிப் பார்க்க வேண்டும். [இந்த அறிவெல்லாம் கல்யாணத்திற்கு முன் வராது!] ஆனால் அதை குடும்பத்தோடு செய்ய முடியாது. அதனால் பாக்கேஜ் டூர் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது.

நான் வண்டியில் ஏறியதில் இருந்து சன்னியிடம் இதைத் தான் சொன்னேன். "எல்லோரும் போகும் இடங்களுக்கு என்னை கூட்டிப் போகாதே. பொட்டானிக்கல் கார்டன், நிஷாத் கார்டன் என்று பாக்கேஜில் இருந்தது. இந்த பட்டாணி, பொரிகடலை கார்டன் எல்லாம் எங்கள் ஊட்டியிலேயே இருக்கிறது. எனக்கு எந்த "மேன் மேட்" இடங்களும் தேவையில்லை. இங்கு இயற்கையை தான் நான் பார்க்க வேண்டும்!" என்றேன். அவனுக்கு குபீல் என்று இருந்தது, அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

பேக்கேஜ் டூர்களில் இது சாத்தியமில்லை என்று எனக்குத் தெரியும். ஏன் என்றால் அவர்கள் வண்டியை எடுக்கும்போதே எங்கெல்லாம் போக வேண்டும், எத்தனை கிலோ மீட்டர் ஆகும், எத்தனை லிட்டர் டீசல் போட வேண்டும், எவ்வளவு கூலி, லாபம் என்று சகலத்தையும் ஏற்பாடு செய்து கொண்டு தான் வருவார்கள். இருந்தாலும் சில டிரைவர்கள் "கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆகும், நான் கூட்டிப் போகிறேன்!" என்று சொல்லலாம். அதனால் கேட்டுப் பார்த்தேன். சன்னி சரி என்றும் சொல்லவில்லை, முடியாது என்றும் சொல்லவில்லை.

சென்னையில் இருக்கும்போது நான் தினமும் அதிகாலை எட்டு, எட்டரைக்கு துயில் எழுவேன். இந்த மாதிரி வெளியிடங்களுக்கு போனால் ஐந்து, ஆறு மணி! அந்த வெளியூரின் காலையை நான் முதலில் அனுபவிக்க வேண்டும். முதல் நாள் இரவே, ஆறரை மணிக்கு அறைக்கு டீ வரும் என்று சொல்லி இருந்தார்கள். நான் ஆறு மணிக்கு என் மனைவியை கூட்டிக் கொண்டு, காமெராவை தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். என் அம்மாவும் விழித்திருந்ததால் அவர்களையும் அழைத்துக் கொண்டோம். வெளியே செம குளிர். ஒரு பத்து டிகிரி இருக்கும். ரிசார்ட்டுக்கு அருகில் மரங்கள் அடர்ந்த ஒரு மலை. அதை ஒட்டி ஒரு ஒத்தையடிப் பாதை ஒன்று போனது. அதில் நடந்தோம். சில அடிகள் எடுத்து வைத்ததும் வலது புறம் ஒரு பெரிய பனி மலை. கடந்து சிறிது தூரம் சென்றதும், கீழே ஒரு சாலை. அதை ஒட்டி ஒரு தெளிந்த நீரோடை. அதன் சல சல சத்தம், பறவைகளின் இரைச்சல், சுத்தமான காற்று. பார்த்துக் கொண்டே இருந்தோம். நீங்களும் பாருங்கள்...




அன்று மாலை அந்த நீரோடைக்கு அருகில் சென்று அமர்வது என்று முடிவு செய்து கிளம்பினோம். ரிசார்ட்டில் டீ வந்து போயிருந்தது. அங்கு குடிக்க சுடு தண்ணீர் கேட்டாலே கொடுக்க மாட்டான், இதில் டீ எங்கிருந்து கிடைப்பது. சரி என்று அன்றைய சுற்றுலாவுக்காக ரெடியாகத் துவங்கினோம். நானே நம்ப முடியாதபடிக்கு என் ரூமில் கீசர் எல்லாம் இருந்தது. அதில் சூடான நீரும் வந்தது. உடம்பில் குத்துவது குளிரா, கொதிக்கும் நீரா என்று புரியாமல் குளித்து முடித்தேன். ஒவ்வொருவராய் ரெடியாக, ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி என்றார்கள். எங்கள் இளவரசியை எழுப்பி அவளுக்கு நாலு லேயர் ட்ரெஸ் போட்டு பார்த்தால் பொதி மூட்டைக்கு கை கால் முளைத்த மாதிரி இருந்தாள். காலை உணவு "ஆளு பரொத்தா" என்று ஞாபகம். ஒரு கட்டு கட்டி முடிப்பதற்கும் சன்னி வந்து சேர்வதற்கும் சரியாய் இருந்தது.

அன்றைய ப்ரோக்ராம் பஹல்காமை சுற்றிப் பார்ப்பது. பஹல்காம் "valley of shepherds" என்கிறார்கள். இந்த சிறு டவுன் "லிட்டர்" நதிக்கரையில் அமைந்திருக்கிறது. சுற்றிலும் வானுயர்ந்த பனி மலை, பசுமை போர்த்திய புல்வெளி, அதை கருத்தாய் மேயும் செம்மறி ஆடுகள், சில்லென்ற சீதோஷணம், தெளிந்த நீரோடை, சுத்தமான காற்று...வேறு என்ன வேண்டும்? அருமையான இடம்.







இந்த ஊரில் ஐந்து முக்கியமான வ்யூ பாய்ண்ட் இருக்கிறது. அதை நம் காரில் சென்று பார்க்க முடியாது. அங்கிருக்கும் லோக்கல் காரை வாடகை  எடுத்துத் தான் சென்று பார்க்க வேண்டும். "சோன்மார்க்", "குல்மார்க்" எல்லா சுற்றுலா தளங்களிலும் இதே கதை தான்! நம் டிரைவர் கருத்தாய் அவர்கள் இருக்கும் இடத்தில் விட்டு விடுவார். அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் ஒதுங்கிக் கொள்வார். நல்ல வேளையாக அரசு நிர்ணயித்த தொகையுடன் வாடகை கார்கள் இருந்தன. ஒரு டவேரா (பத்து பேர் அமரும் வண்டி) வாடகை 1850 ரூபாய். லக்கேஜ்களை சேர்த்தால் ஒரு உருளைக்கிழங்கு லாரி தான் வேண்டும். என்ன செய்வது, உள்ளே எங்களை அமுக்கிக் கொண்டோம். அந்த வண்டி மலை மேல் ஒரு ஒற்றையடிப் பாதை மேல் வளைந்து நெளிந்து சென்றது. இந்த அழகில் எதிரில் வரும் வண்டி. இது போதாதென்று வழியில் இருநூறு, முன்னூறு ஆடுகளை கவலையின்றி மேய்த்துக் கொண்டு டிராபிக் ஜாம் செய்து கொண்டிருந்தார்கள். வழியெங்கும் அழகு கொட்டிக் கிடந்தது. ஆங்காங்கே ஒரு சிறிய வியூ பாய்ண்ட் இருந்தது. "ஹே நிறுத்தப்பா!" என்றால், "இங்கெல்லாம் நிறுத்திக் கொண்டிருந்தால் எல்லா இடத்தையும் பார்க்க முடியாது. வரும்போது பார்க்கலாம்" என்று அவன் வண்டியை விட்டான். சரி செம இடத்துக்குக் கூட்டிப் போகிறான் என்று நினைத்தோம். முதல் இடம் வந்தது. இறங்கியதும் குதிரைகளின் சாணத்தின் வாசம் மூக்கைத் துளைத்தது. சுற்றிப் பனி மலைகள் இருந்தாலும், வரும் வழியில் இருந்த அழகு இங்கு கொஞ்சம் கம்மியாகவே இருந்தது. அங்கிருந்து குதிரையில் செல்லலாம் என்றூம் அதற்கு வாடகை ஐநூறு அறநூறு என்றார்கள். ஆளை விடுங்கள் என்று கொஞ்சம் பெரிய புல் தரையாய் பார்த்து ஒதுங்கிக் கொண்டோம்.





அடுத்து "பேதாப் பள்ளத்தாக்கு". "பேதாப்" என்ற ஹிந்திப் படம் அங்கு எடுத்தார்கள், அதனால் அதற்கு அந்தப் பெயர். அந்த இடம் ரொம்ப காமர்ஷியலைஸ் ஆகி இருந்த மாதிரி எனக்குத் தோன்றியது. அங்கு சிறிது நேரம் கழித்து விட்டு, மெதுவாய் குழந்தைகளுக்கு வேண்டியதை ஊட்டி விட்டு, எங்களுக்கு வேண்டியதை வாயில் போட்டுக் கொண்டு வண்டியில் ஏறினால் அவன் எங்கள் மீது ஏறினான். "என்னடா?" என்றால், "ஒவ்வொரு இடமும் இவ்வளவு நேரம் பார்த்தால் நான் எப்படி அடுத்த சவாரி கூட்டி வருவது, சீக்கிரம் வாருங்கள்!" என்று மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டான். "அடங்கொய்யா, ஏண்டா நீங்க ரெண்டு ட்ரிப் அடிக்கிறதுக்காக நாங்க சீக்கிரம் வர முடியுமா?" என்று கேட்டால், அவன் பேசுவதையே பேசிக் கொண்டிருந்தான். "இது தான் டயம், இதற்குள் வர வேண்டும்!!" என்று சட்டம் பேசினான். குழந்தைகள் இருக்கும்போது அப்படித் தான் ஆகும் என்று எவ்வளவோ சொல்லியும் புலம்பிக் கொண்டே அடுத்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

அது ஒரு சின்ன மலை. அந்த மலையில்  பனி இன்னும் இருந்தது. பனியில்  சென்று நடக்க, அங்கு வாடகைக்கு ஷூ ஒன்று விலை ஐம்பது ரூபாய். பனியில்  பட்டு குளிராமல் இருக்க நீளமான ஜாக்கெட் ஒன்றின் வாடகை நூறு ரூபாய். பனியில் வழுக்காமல் மேலே ஏற ஒரு குச்சி, அதற்கு வாடகை இருபது ரூபாய். உங்களை கைத் தாங்கலாய் கைட் ஒருவன் அந்த மலையின் உச்சி வரை கொண்டு போய் விட ஐநூறு ரூபாய். டிரைவர் வேறு அரை மணியில் வாருங்கள் என்று விரட்டிக் கொண்டிருந்தான். கூட்டத்தில் அரைடஜன் வயதானவர்கள் என்பதால், என் மனைவியும், என் மாமா பையனும் [ரஜினிகாந்த் வீடு போஸ்ட்ல படிச்சீங்களே, அவனே தான்!] சென்றார்கள். மற்றவர்கள் தேவுடு காக்க ஆரம்பித்தோம்.  நான் அமெரிக்காவிலேயே பனிச்சறுக்கு வேண்டிய மட்டும் ஆடி விட்டதால் ஒன்றும் சுவாரஸ்யமாய் இல்லை. தரு என்னை வைத்துக் கொண்டு எனக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்! எல்லோரும் போகாததால் அவன் சொன்ன அரை மணியில் போய் வண்டிக்கு அருகில் நின்றோம். நேராய் கீழே கொண்டு வந்து சேர்த்து விட்டான். அங்கிருந்து சன்னி எங்களை பிக்கப் செய்து கொண்டு ரிசார்ட்டில் கொண்டு சேர்த்தான். அவனிடம் இவர்கள் செய்யும் அநியாயத்தை எல்லாம் புலம்பினேன். அவன், "ஒன்றும் செய்வதற்கில்லை. இங்கு இது தான் நடைமுறை, அவர்கள் சம்பாதிப்பது நான்கு மாதங்கள் தான். ஒன்றும் செய்ய முடியாது!" என்றான். "இதற்குத் தான் எல்லோரும் போகும் இடம் வேண்டாம்" என்று சொல்கிறேன் என்று அவனிடம் மறுபடியும் ஒரு பிட்டு போட்டேன். "நீங்கள் கவலைப்படாதீர்கள், நாளை போகும் வழியெல்லாம் உங்களுக்கு என்ன காட்ட வேண்டுமோ பாருங்கள்!" என்று சொல்லி என்னை குளிர்வித்தான்! அன்று இரவு நன்றாய் சாப்பிட்டு விட்டு, நல்ல குளிரில் வெட்ட வெளியில் எல்லோரும் அமர்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய தினம் அலைந்து திரிந்து ஓய்ந்தது...

சுற்றுவோம்...
மறுநாள் ரயில் ஜம்முவை கடந்ததும் கண் விழித்தேன். ஒரே இரவில் சமதளங்கள் யாவும் பள்ளத்தாக்குகள், தெளிந்த நீரோடைகள், மலை முகடுகளாய் மாறிப் போயிருந்தன.


முகம் கழுவி விட்டு, வாசலில் நின்று ஈரம் தடவிய குளிர் காற்றை அனுபவித்தேன். விடுமுறை தொடங்கிவிட்டது போல் இருந்தது. அப்போது தான் தூரத்தில் முதன் முதலில் பனி மலையை பார்த்தேன். மிகுந்த குதூகலத்துடன் அதை குடும்பத்தினருக்கும் காட்டினேன். ரயில் ஒரு எட்டு எட்டரை மணிக்கு உதம்பூரை அடைந்தது. அங்கிருந்து காஷ்மீர் செல்ல "ஹங்க்ரி பேக்ஸ்" என்ற நிறுவனத்திடம் பேக்கேஜ் டூர் ஏற்பாடு செய்திருந்தோம். பெட்டி, பைகளை தூக்கிக் கொண்டு ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து காத்திருந்தோம். எங்கள் டெம்போ வந்த பாடில்லை. மாமா டிரைவருக்கு கால் அடித்தால் நான் இங்கே தான் நிற்கிறேன், நீங்கள் கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள் என்றார். இத்தனை லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு எங்கே நடப்பது? ஏன் இவர் வந்து ஏற்றிச் செல்லக் கூடாது என்று எரிச்சலாய் இருந்தது. அப்போது தான் அங்கு இருந்த ஒரு டேக்சி ஸ்டாண்டில் இருந்தவர்கள், அவர் இங்கே வந்தால் எங்களுக்கு பணம் கட்ட வேண்டும். இது தான் எங்கள் நடைமுறை. அதை தவிர்ப்பதற்காக அவர் உங்களை வரச் சொல்கிறார் என்றார்கள். அடப்பாவிகளா என்று நொந்து கொண்டே நின்றோம். ஒரு வழியாய் அவர் வந்து அவர்களுக்கு பணம் கட்டி விட்டு எங்கள் சாமான்களை ஏற்றிக் கொண்டார். டிரைவர் ஒரு சர்தார்.

எல்லோரும் வண்டியில் ஏறி அமர்ந்ததும் நான் கடைசியில் ஏறினேன். டிரைவர் அருகில் இருந்த சீட்டில் அமரப் போனேன். உடனே வண்டியில் ஒரே சிரிப்பு, சத்தம். என்னவென்று கேட்டதற்கு, நான் முன்னால் உட்காருவேனா இல்லை என் மனைவி அருகில் உட்காருவேனா என்று பந்தயமாம். அடப்பாவிகளா! இத்தகைய பயணங்களில் நான் முன்னால் உட்காருவதையே விரும்புவேன். அதுவும் டிரைவர் அருகில். அப்போது தான் அவரிடம் பேச்சு கொடுத்து அந்த இடத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அறிய முடியும். ஆனால் இந்த முறை, 5 நாட்கள் அந்த வண்டியில் சுற்றியதில், மிகவும் சொற்பமான நேரமே அந்த இருக்கை எனக்குக் கிடைத்தது. காரணம்,  தரு! அவள் அம்மாவால் மட்டும் அவளை சமாளிக்க முடியவில்லை.

பயணம் இனிதே தொடங்கியது. டிரைவர் சர்தாரின் பெயர் சன்னி. அத்தனை பேரில் நானும் என் மாமாவும் நன்றாய் ஹிந்தி பேசுவதால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். உங்கள் இரண்டு பேரிடமும் தான் ஹிந்தி சிக்னல் இருக்கிறது என்று கலாய்த்தான். எதை கேட்டாலும் "கோய் டென்ஷன் நஹி ஜி" என்றான். வழக்கமான சர்தார்ஜீக்களின் உயரம் இல்லை என்றாலும், நான் அவனை அங்கிள் என்று கூப்பிடலாம் என்பது போல இருந்தான். நான் உங்களை விட சின்னவன், இருபத்தி ஆறு வயது தான் ஆகிறது என்று சொல்லி குண்டை போட்டான் [பக்கி கண்டுபிடிச்சிட்டானே!]. பயணம் ஆரம்பித்ததும் ஏதோ பஞ்சாபி பாடலை போட்டான், பிறகு பழைய ஹிந்தி பாடல்கள். இது சரிப்படாது என்று எங்கள் மொபைலில் இருந்து தமிழ் பாடல்களை போட்டோம். தலையை தலையை ஆட்டி நம் ஊர் குத்துப் பாட்டுக்களை ரசித்தான். எல்லோருக்கும் பசி வயிற்றை கிள்ள, அந்த கடுப்பில் எல்லோரும் பக்கத்தில் இருப்பவர்களை கிள்ள, சரி முதலில் சாப்பிடுவோம் என்று முடிவெடுத்தோம். இதோ அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது என்று இறக்கி விட்டான். அத்தனை கூட்டத்தை அந்த ஹோட்டல் ஜென்மத்தில் பார்த்திருக்காது போலும், ஆர்டர் செய்து களைத்து, ஒரு வழியாய் கிடைத்து, புசித்து வெளியேற ஒரு மணி நேரம் ஆகி விட்டது. வண்டியில் ஏறி சிறிது தூரத்தில் டிராப்பிக் ஜாம். உதம்பூரிலிருந்து பஹல்காம் செல்வதாய் ப்ளான். நான் சொல்கிறேன், நாம் அங்கு போய் சேர மாலை 4, 5 ஆகிவிடும் என்று பயமுறுத்தினான். இங்கு டிராப்பிக் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை என்று மேலும் ஒரு குண்டை தூக்கிப் போட்டான். எப்படியோ வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்தது.

அந்த ஜாமை கடந்து சன்னி வண்டியை விரட்டினான். முன்னால் ஒரு கார் போய் கொண்டிருந்தது. அதை ஒரு பெரிய தொப்பி போட்ட ஆசாமி ஒட்டிக் கொண்டிருந்தார். சன்னி ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தான். திடீரென்று அந்த கார் எங்கள் டெம்போவின் முன்னால் நின்றது. அந்த தொப்பி ஆசாமி காரை விட்டு கீழே இறங்கினார். அவர் காரை விட்டு கீழே இறங்குவதற்கும் சன்னியின் கைகள் மேலே சல்யுட் அடிக்க ஏறுவதற்கும் சரியாய் இருந்தது. தொப்பி ஆசாமி, சரியான உயரத்தில், ஒட்ட முடி வெட்டி, கிளீன் ஷேவ் செய்து, மிடுக்காய் ட்ரெஸ் செய்து, ட்ரிம்மாய் இருந்தார். அவரை பார்த்தவுடன் சொல்லி விடலாம் அவர் ஒரு ஆர்மிமேன் என்று! இறங்கியதும், "ஒயே, துஜே படி ஜல்தி ஹைன்?" [உனக்கு என்ன ரொம்ப அவசரமோ?] என்று ஒரே கேள்வியை கேட்டார். சன்னி வாய் பேசவில்லை. வார்த்தை வரவில்லை. ரோட்டில் இருந்தவர்கள் அவரை காருக்குள் போகச் சொல்லி சைகை செய்தார்கள். அவர் புலம்பிக் கொண்டே காருக்குள் ஏறிக் கொண்டார். சன்னியின் முகத்தில் ஈ ஆடவில்லை. அந்த ஒரு கணம், இப்படி இல்ல இருக்கணும் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டேன். செம சீன்!


வழி நெடுக பள்ளத்தாக்குகளையும், நீரோடைகளையும், மலை சிகரங்களையும் கண்டு களித்துக் கொண்டே சென்றோம். ஆங்காங்கே அழகான வ்யு பாய்ண்ட் வேறு இருந்தது.  இந்த இடத்தை பாருங்கள்...


வழியில், அந்த குறுகிய மலைப்பாதையில் அத்தனை வண்டிகள் வரும் அந்த பாதையில் சாவகாசமாய் ஒரு இருநூறு முன்னூறு ஆடுகளை ஒட்டிக் கொண்டே செல்கிறார்கள். சன்னியிடம் கேட்டதற்கு, "இந்த ஆடுகளை ஜம்முவில் இருந்து ஒவ்வொரு கோடை காலங்களிலும் மேய்ச்சலுக்காக காஷ்மீருக்கு இப்படியே கால்நடையாக ஓட்டிக் கொண்டு போவார்கள். குளிர்காலம் தொடங்கியதும் மறுபடியும் இவைகளை ஜம்முவிற்கு அழைத்து வருவார்கள். இவர்களை யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. இதற்காக பெர்மிட் கூட உண்டு. பெர்மிட் வைத்திருப்பவர்களை போலீஸ்காரன் கூட கேள்வி கேட்க முடியாது" என்றான். இந்திய அரசு காஷ்மீர் மக்களுக்கு இப்படி பல வித சலுகைகளை அளித்திருக்கிறது என்றும் சொன்னான்.

ஒரு மூன்று, நான்கு மணி நேர பயணத்திற்குப் பின்னர் மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலில் இறங்கினோம். நெய், ராஜ்மா ரைஸ் [அந்த ஹோட்டல் ஸ்பெஷல்], பாப்பட், தயிர் என்று அட்டகாசமாய் இருந்தது. ஒரு கட்டு கட்டிக் கொண்டோம். தரு தான் ஒன்றுமே சாப்பிடவில்லை. போகும் இடம் எல்லாம் சாப்பாடு கொடுப்போம். எதையும் சாப்பிட மாட்டாள். பிறகு அவளுக்கு என்று ஒரு பார்சல் வாங்க வேண்டியது, அதை பிறகு தூக்கி போட வேண்டியது! அந்த இரு வாரங்களும் அவள் அப்படித் தான் செய்தாள். பயணத்தில் அவளுக்கு எதுவுமே சாப்பிடப் பிடிக்கவில்லை.

மறுபடியும் டிராப்பிக் காரணமாக தேநீருக்கு ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். நாங்கள் பஹல்காமுக்குள் நுழையும் போது நன்றாய் இருட்டி விட்டது. நல்ல குளிர் இருந்தது. அப்போது மணி ஏழு, ஏழரை இருக்கும். ஊரே பாதி அடங்கி இருந்தது. கடைகள் சாத்தப்பட்டு விட்டன. தெருவில் விளக்குகளே இல்லை. காஷ்மீரில் 70% முஸ்லீம்கள், 20% சர்தார்கள், 10% ஹிந்துக்கள் இருப்பதாக சன்னி சொன்னான். ஆங்காங்கே தென்பட்ட ஆடவர்கள், முக்கால்வாசி பேர் தாடி வைத்திருந்தார்கள். அழுக்காய் இருந்தார்கள். ஒரு பெரிய குர்தா போன்ற ஒன்றை போட்டிருந்தார்கள். அது முழங்கால் வரை நீண்டிருந்தது. அவர்கள் கைகளும் அந்த உடைக்கு உள்ளேயே இருந்தது. கடும் பனிக் காலத்தில், இந்த உடைக்கு உள்ளே ஒரு மண்சட்டியில்அடுப்பு போன்ற ஒன்றை வைத்து உடலை சூடேற்றிக் கொள்வார்களாம். இப்படியே கதை பேசியபடி நாங்கள் தங்க வேண்டிய பயின் கிளிப் ரிசார்ட்டுக்கு சென்று இறங்கினோம். செம சில்லென்று இருந்தது. சுற்றி ஒரே இருட்டு. ரிசார்டை ஒட்டி ஒரு பெரிய மலை. சரி என்ன இருந்தாலும் காலையில் பார்த்துக் கொள்வோம் என்று நாள் முழுவதும் வண்டியில் வந்த களைப்பு தீர உணவருந்தி விட்டு படுத்துக் கொண்டோம்.

சுற்றுவோம்...
மாமா டெல்லியில் இருப்பது ராஜேந்திர பிளேஸ் அருகில் பிரசாத் நகர். இந்தப் பக்கம் இருபது நிமிடம் நடந்தால் கரோல் பாக் [கரோல் பாக் என்றால் "கரோலின் தோட்டம்" என்று அர்த்தம். இப்போது அங்கு இருப்பது நல்ல ஒரு மார்கெட். தமிழர்கள் இந்த ஏரியாவில் தான் அதிகம்.] அந்தப் பக்கம் பத்து நிமிடம் நடந்தால் மெட்ரோ ஸ்டேஷன். அருமையான லொக்கேஷன். நான் அன்று சாவகாசமாய் எழுந்தேன். வீடே அல்லோலகல்லோலப் பட்டுக் கிடந்தது. கிட்டத்தட்ட பதினைந்து பேர் 4 குழந்தைகளை சேர்த்து! நல்ல ஒரு பீங்கான் கப்பில் சுடச் சுட ஒரு டீ குடித்து விட்டு அந்த பழைய எம் ஐ ஜி பிளாட்டை சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். இந்த மாதிரி அரசு பிளாட்டுகளில் எப்போதும் சுற்றி நல்ல இடம் விட்டு அருமையாய் கட்டி இருப்பார்கள். டெல்லி என்பதால் உள்ளேயே ஒரு பெரிய பார்க், கோயில் எல்லாம் வைத்து கட்டியிருந்தார்கள்.  எனக்கு ஒன்றும் வெயில் அவ்வளவாய் உரைக்கவில்லை. பார்க் போனேன். ஒரே ஒரு பெண் குழந்தை  சைக்கிள் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். "ஏன் பார்க்கில் யாருமே இல்லை?" என்று அவளிடம் கேட்டேன். "எனக்கு தெரியாது நான் இப்போ தான் வர்றேன்" என்று பதில் கூறி விட்டு புள்ளை புடிக்கிறவன் ரேஞ்சுக்கு பார்த்து விட்டு ஓடி விட்டாள். எல்லாம் வெஷம், வெஷம் என்று நினைத்துக் கொண்டு பிளாட்டை விட்டு வெளியே வந்தேன்.

எதிரில் ஒரு பெரிய ஏரியுடன் ஒரு பார்க் இருந்தது. "அடப்பாவிகளா, ஏரின்னா நாங்க எல்லாம் கொடைக்கானல் ஊட்டி தான்யா போகணும், இங்கே வீட்டுக்கு எதுக்க இருக்கே!" என்று பார்க் உள்ளே நுழைந்தேன். ஒன்று புரியவில்லை. இந்த மாதிரி பார்க்கில் ஒரு நுழைவாயில் இருக்கும். அதில் என் போன்றோர் நுழைவதே கஷ்டம் எனும் அளவுக்கு ஒரு சின்ன இடுக்கு. அதில் நாலு இரும்பு தடுப்புகள். கொஞ்சம் வலது, கொஞ்சம் இடது என்று மாறி மாறி நுழைந்து உள்ளே போக வேண்டும். பக்கத்தில் மெயின் கேட் இருக்கும், ஆனால் அது பூட்டியே இருக்கும். எதுக்கு இப்படி வைக்கிறார்கள்? கூட்டத்தை கட்டுப்படுத்த என்று எடுத்துக் கொண்டாலும், இந்த பார்க்கில் யார் இப்படி மொத்தமாய் நுழையப் போகிறார்கள்? இந்த கருமத்தில் குர்தா போட்டா பீம்பாய் சேட்டு மாமாக்கள் எப்படி நுழைவார்கள் என்று கேள்வி எழுந்தது? என்ன கண்றாவியோ.

உள்ளே நுழைந்து படித்துறையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு மாமா, ஏதோ முணுமுணுத்துக் கொண்டே பொறி மாதிரி எதையோ ஒன்றை தண்ணீரில் போட்டுக் கொண்டிருந்தார். அதை ஒரு மீனும் சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை. அவர் ஒரு இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருந்தார். இந்தப் பக்கம் நல்ல குஸ்தி பயில்வான்கள் மாதிரி நாலு பேர் டவுசர் பனியன் சகிதம் உட்கார்ந்து, கை கால் மடக்கியபடி வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அந்த பார்க்கில் நிறையா மரங்கள் இருந்தன. நேற்று அடித்த புயலில் ஒன்று இரண்டு விழுந்திருந்தது. வேடிக்கை பார்த்தபடியே அந்த ஏரியை சுற்றி நடந்தேன். ஒருவர் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார். ஒரு சர்தார்ஜி கிழவர் "மன்மோகன் சிங்" என்று தன் நண்பர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார்.  என்று கேட்கலாம் என்று நான் நின்றேன். அவர் நிறுத்தி விட்டார். சரி என்று நடந்தேன். நிறைய வெண்ணிற வாத்துக்கள் ஒரு கூண்டில் இருந்தன. அவைகளுக்கு ஒரு பெண்மணி ப்ரெட் கொடுத்துக் கொண்டிருந்தார். "க்வாக், க்வாக்" என்று அவைகள் தத்தி தத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தன. எனக்கு தருவின் ஞாபகம் வந்தது. வாத்தை பார்த்தால் போதும், அவள் வாய் வாத்தின் வாயை போல் மாறி விடும். வாத்தின் குவாவை விட அவளின் குவா அழகு.

ஒரு ரவுண்டு அடித்து மீண்டும் அதே நுழைவாயில். வீட்டுக்கு நடந்தேன். அன்று இரவே காஷ்மீர் செல்ல உதம்பூருக்கு ரயில் பிடிக்க வேண்டும். பயணத்துக்கு வேண்டியதை எடுத்து வைக்க ஒரு போருக்கான ஆயுத்தங்கள் தொடங்கி இருந்தன. மாமா, அவரின் நண்பர் சென்ற வாரம் தான் காஷ்மீர் சென்று வந்ததாகவும், குளிர் அதிகம் இருப்பதாகவும் சொன்னார். என் மாமனார், மாமியாரிடம் ஸ்வட்டர் கூட இல்லை. அதன் பிறகு, குல்லாய், கையுறை, காலுறை என்று ஏகப்பட்டது வாங்க வேண்டி இருந்தது. தருவுக்கும் ஒரு ஷூ வாங்க வேண்டி இருந்தது. சரி என்று மதியம் 12, 1 மணி போல் கரோல்பாக் கிளம்பினோம். வீட்டின் வெளியே வந்து நின்றதும், நம்ம ஊர் ஷேர் ஆட்டோ மாதிரி இங்கு ஈ-ரிக்ஷா வருகிறது. ஆளுக்கு பத்து ரூபாய் என்று நாலு நாலு பேராய் ஏறிக் கொண்டோம்.

கரோல்பாக் "மெக்டொனால்ட்ஸில்" இறக்கி விட்டார்கள். போர்டே பார்க்க வேண்டியதில்லை. அங்கு நின்ற கொலு கொலு பெண்களை வைத்தே சொல்லி விடலாம். அது மெக்டோனால்ட்ஸ் என்று!  இறங்கியவுடன் தண்ணீர் தாகம், ஒவ்வொருவரும் ஜூஸை வாங்கி கிளாஸ் கிளாசாய் அடித்தோம். பிறகு தான் கடைக்காரன் ஒரு கிளாஸ் ஐம்பது ரூபாய் என்று சொன்னான். பிரகஸ்பதி. அவனுக்கு தண்டம் அழுது விட்டு தருவுக்கு செருப்பு வாங்க ஒரு கடைக்குள் நுழைந்தோம். அவளைத் தவிர எல்லோருக்கும் செருப்பை பார்த்து விட்டு யானை விலை சொன்னதால் கமுக்காய் இறங்கி வந்தோம். இப்படி கடை கடையாய் ஏறி இறங்கி, முதலில் இந்த பொண்டு பொடிசுகளுக்கு இரண்டு செருப்பு வாங்குவதற்குள் நாக்கு தள்ளி விட்டது. பிறகு, சாக்ஸ். அதற்குள் குழந்தைகளின் கன்னம் வெயிலில் பழுத்து விட்டதால் ஒரு க்ரூப்பை வண்டி ஏற்றி அனுப்பி விட்டோம். ஸ்வட்டர் எங்குமே இல்லை. பிறகு ஒருவர் ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருந்தது. ஸ்வட்டருடன், கொலை செய்யும்போது போடும் கையுறை மூன்றையும் வாங்கிக் கொண்டோம்.

பசி வயிற்றை கிள்ள ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போனதும் நன்றாய் கொட்டிக் கொண்டேன். மிச்ச சொச்ச பேக்கிங்கை முடித்துக் கொண்டு இரவு புறப்படத் தயாரானோம். மொத்தம் பதிமூன்று பேர். பத்து பெரியவர்கள், மூன்று குழந்தைகள். இதில் பதினைந்து லக்கேஜ்கள். பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது. மாமா ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல டாக்சி எல்லாம் புக் செய்தார். இரவு உணவை முடிக்கும்போதும் டாக்சி வரவில்லை. பிறகு விசாரித்ததில், டாக்சி இல்லை, டிரைவர் இல்லை, அனுப்ப முடியாது என்று ஒரே குழப்பம். பிறகு அடித்துப் பிடித்து இன்னொரு டாக்சிக்கரனுக்கு போனை போட்டு அவனை வரச் சொல்லி ஒரு வழியாய் ஸ்டேஷன் போய் சேர்ந்தோம். ஸ்டேஷன் அருகில் இருந்ததால் பிழைத்தோம். நல்ல வேலையாய் அது ஏ சி ரயில். அப்பாடா என்று எங்கள் பெட்டியில் ஏறி, எல்லாம் செட் செய்து உட்கார்ந்தோம். ரயில் உதம்பூரை நோக்கி புறப்பட்டது. அன்றைய நாள் அலுப்புடன் முடிந்தது...

சுற்றுவோம்...
இரண்டு வாரங்கள் விடுமுறைக்கு பின் சனிக்கிழமை காலை தான் சென்னை வந்து சேர்ந்தேன். மே முப்பதாம் தேதி வெள்ளி மாலை, "Off to Delhi for a vacation  — feeling excited" என்று முகநூலில் ஸ்டேட்டஸ் போடும்போது இப்போது தான் காதல் வந்தது போல் வயிற்றில் பட்டாம்பூச்சி எல்லாம் பறந்தது!. அதற்கு காரணம், இதற்கு முன் இத்தனை பெரிய குடும்பப் பயணம் மேற்கொண்டதில்லை. ஒரு வாரம் காஷ்மீர், ஒரு வாரம் டெல்லி, ஆக்ரா. இரண்டு வார பயணம். மாமா டெல்லியில் இருந்ததாலும்,  ஸ்பைஸ் ஜெட்காரன் நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்று ஆஃபர் கொடுத்ததாலும் இந்தப் பயணம் சாத்தியப்பட்டது.

ஏழு இருபதுக்கு கிளம்பிய வானவூர்தி [வான...வூர்தியா?] பத்து, பத்தரைக்கு டெல்லியில் தரை இறங்கியது. வானத்தில் பறக்கும் போது, "டெல்லியில் மணல் புயல் அடிக்கிறது, இறங்க கொஞ்சம் கால தாமதம் ஆகலாம்!" என்று பைலட் சொன்னார். "இது என்னடா நம்ம வரும்போது தான் இப்படி புயல் எல்லாம் கிளம்பணுமா?" என்று நொந்து கொண்டேன். அதிகம் தாமதப்படுத்தாமல் இறக்கி விட்டார். "செக்-இன்" செய்த பைகளுக்கும் எனக்கும் என்றும் ராசி இருந்ததில்லை. எல்லோரும் அவர்கள் பையை எடுத்துக் கொண்டு, ஏர்போர்ட்டை பூட்டும் சமயத்தில் தான் என் பைகள் ஆடி அசைந்து வரும். அதற்குள் பெங்களூரிலிருந்து வந்த என் தம்பி வெளியிலிருந்து பத்து தடவை போன் அடித்து விட்டான். நல்ல வேலையாய் இரண்டு ப்ரீ பெய்ட் டேக்சி புக் செய்திருந்தான். "தம்பியுடையான் டேக்சிக்கு அஞ்சான்!" எல்லா பெட்டி பைகளையும் எடுத்துக் கொண்டு ப்ரீ பெய்ட் டேக்சி வரும் பிளாட்பாரத்தில் நின்றால் ஒரு வண்டியும் நிற்க மாட்டேன் என்கிறது. அருவியில் இருந்து வரும் தண்ணீர் ஓடையாய் மாறி ஓடும் ஒரு இடத்தில் அதிலிருந்து கொஞ்சம் நீரை அள்ளி எடுத்து நாம் குடிக்கும்போது மேலே ஒருவன் ஒன்னுக்கு அடித்துக் கொண்டிருப்பதை பார்ப்போம் அல்லவா? அந்த மாதிரி, நாங்கள் இங்கே பத்து பெட்டியை வைத்து வரிசையில் காத்திருக்க அவனவன் டேக்சி எங்கிருந்து வருகிறதோ அங்கேயே நிறுத்தி ஏறிக் கொண்டிருந்தான். [உவமை வெளங்குதா?] ஆரம்பிச்சிட்டாய்ங்களா? என்று நினைத்துக் கொண்டு நானும் என் தம்பியும் அதே வழியை கடைப்பிடித்து இரண்டு வண்டியை பிடித்தோம்.  இருவர் முகத்திலும் வெற்றிப் புன்னகை.

வண்டியில் ஏறியதும் "லேட் நைட் எக்ஸ்ட்ரா சாப்" என்றார். சரி பாக்கலாம் போங்க , என்றால் "இப்போவே சொல்லுங்க, இல்லைன்னா இறங்கிக்குங்க" என்றார். ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தோம். பெட்டி பைகளை பார்த்த மாமா "ஏதோ இவர்களை நாலு நாள் வந்து தங்கிட்டு போங்க என்று அழைத்தால், இவர்கள் ஒரேடியாய் வந்து விட்டார்கள் போல இருக்கிறதே?!" என்று ஜெர்க் ஆகி விட்டார். "இன்னும் பார்சல் லாரியில வருது மாமா!" என்று சொல்லி இருக்கலாம், எதற்கு முதல் நாளே வம்பு என்று விட்டு விட்டேன்.

அந்த இரவிலும் டெல்லி தக தக என்று கொதித்துக் கொண்டிருந்தது. டெல்லி வெயில் சென்னை மாதிரி வேர்ப்பதில்லை. அடிக்கடி நாவுலரச் செய்கிறது. மாமாவின் வீட்டில் இரண்டு பெட்ரூமில் ஏசி, ஹாலில் ஏர் கூலர் என்று இருந்ததால் தப்பித்தோம். ப்ளான் படி மறுநாள் இரவு காஷ்மீர் கிளம்ப வேண்டும். டெல்லியில் இருந்து உதம்பூருக்கு ரயில், அங்கிருந்து பேக்கேஜ் டூர்காரர்கள் பிக்கப் என்று ஏற்பாடு. நல்ல ஒரு அரட்டைக்கு பின்னர் எல்லோரும் சோர்ந்து உறங்கினோம்.  சுற்றுலாவின் முதல் நாள் இனிதே முடிந்தது...

சுற்றுவோம்...
அலுவலகத்தில் இருந்து வரும்போது கடையில் வாங்க வேண்டிய பொருட்களை வீட்டு அம்மா குறுஞ்செய்தி அனுப்பி விட்டார்கள். வரும் வழியில் நில்க்ரீஸ் சென்றேன். பாப்பாவின் டயபர் [இதை கண்டுபிடித்தவனை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்! என்னா மூளை?] பிஸ்கட் பாக்கெட்டுகள், பழம் என்று வாங்கிக் கொண்டேன். பில் போடுவதற்காக ஒரு கவுண்டரில் எல்லா பொருட்களையும் வைத்தேன். அங்கே நில்க்ரீஸ் பெயர் போட்ட கேரி பேக் இருந்தது. சுரேகா நினைவுக்கு வந்தார். கச்சேரியை ஆரம்பிச்சிர வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டேன்.

பில் போட ஒரு நடுத்தர வயது ஆணும் கவரில் பொருட்களை போட்டுக் கொடுக்க  ஒரு சின்ன பையனும் நின்று கொண்டிருந்தார்கள். "சார் கவர் வேணுமா?" என்று சின்ன பையன் கேட்டான். "காசா?" என்று கேட்டதற்கு ஆமாம் என்று தலை ஆட்டினான். "எவ்வளவு?" என்றேன். "ரெண்டு ரூபாய்!" என்றான். "நான் பத்து ரூபா தர்றேன், ப்ளைன் கவரா கொடுங்க, உங்க கடை பேர் இருக்க கூடாது!" என்றதும் சற்று ஜெர்க் ஆனார்கள். மேலும், "உங்க கடையை விளம்பரப்படுத்த நான் ஏங்க காசு கொடுக்கணும்" என்றேன்? "இல்லை சார், நீங்க பை ஏதாவது கொண்டு வந்துருக்கீங்களா?" என்று நடுத்தர வயது இளைஞன் கேட்டான். "இல்லையே, எப்பவும் கைல ஒரு பையை வச்சுட்டே சுத்திட்டு இருக்க முடியுமா பாஸ்?" என்றேன். இருவரும் நமட்டு சிரிப்பு சிரித்தார்கள். அவர் பில் போட்டுக் கொண்டே இருந்தார். நான் அவரிடம் "இருங்க, காசு இல்லாம கவர் கொடுத்தா வாங்குறேன், இல்லன்னா நான் வேற கடையில வாங்கிக்கிறேன்" என்றேன். கணினியில் எல்லாம் தட்டி விட்டு 426 சார் என்றார். 26 ஆ இல்லை 24 ஆ என்று கேட்டேன். சிரித்தார். "கவர் காசு இல்லைல்ல?" என்றேன். "இல்லை சார்" என்று சிரித்தார். எல்லா பொருளும் கவருக்குள் போட்டு கொடுத்தார்கள். பிரதீப் ஹேப்பி! நன்றி சுரேகா சார். பின்னால் ஒருவர் பொருட்களை வாங்க நின்று கொண்டிருந்தார். அவர் என்ன செய்தாரோ?!

சில நாட்களுக்கு முன் யுட்யுபில் ஒரு வீடியோ பார்த்தேன். அமெரிக்காவில் என்று நினைக்கிறேன், முன் பின் தெரியாத ஒரு இருபது பேரை அழைத்து [கவனிக்க, முன் பின் தெரியாதவர்கள்!] முத்தம் கொடுக்கச் சொல்லி அவர்களின் உணர்வுகளை பதிவு செய்தார்கள்! [எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க!] கம்பீரமான ஆண், அழகிய பெண், வயதான பாட்டி, ஓரினச் சேர்கையாளர்கள் ஆண்கள், பெண்கள் என்று ஒவ்வொரு ஜோடியும் முத்தம் கொடுக்கும் முன்னும், பின்னும் அவர்களின் மன ஓட்டங்களை, முக பாவனைகளை மிக அருமையாய் படம் பிடித்திருந்தார்கள். அதன் வீடியோ இங்கே...



அதை தொடர்ந்து இந்தியாவில் இப்படி ஒன்று நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை [கவனிக்க, கற்பனை மட்டும் தான்!] செய்து ஒரு குறும்படத்தை வடநாட்டினர் வெளியிட்டார்கள். நம் நாட்டில் கலாச்சாரம், கருமாந்திரம் என்று ஆயிரத்து எட்டு விஷயங்கள் இருக்கும்போது மென் உணர்வுகளை எங்கே பதிவு செய்வது? ரணகளமான ஒரு கற்பனை தான் அது! நீங்களே பாருங்கள்...


முதல் வீடியோ பார்த்ததும் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று ரசித்துவிட்டு அப்படியே மறந்து விட்டேன். அடுத்து நம் வடநாட்டினரின் வீடியோவை பார்த்ததும், "அட செமையா இருக்கு? இதே மாதிரி, நம் தமிழ்நாட்டில் நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து ஒரு குறும்படத்தை எடுக்கலாமே!" என்று ஒரு விபரீத ஆசை எழுந்தது...கற்பனை செய்ய செய்ய இன்னும் ரணகளமாய் இருந்தது. துணிந்து   விட்டேன்...

கமல் ஸ்டைலில் சொல்வதென்றால் "மன நிறைவு பெரும் தருவாயில்..."
விஜய் ஸ்டைலில் சொல்வதென்றால் "even, i am w.a.i.t.i.n.g..."




இன்று என் முதல் குறும்படம் "விடியல்", "ஐ" டீவியில் "ஐ" தியேட்டர் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இந்த சேனல் ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆகிறதாம். இப்போதைக்கு அரசு கேபிளில் தான் வருகிறதாம். படத்தை பார்த்து விட்டு பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்கு ஃபோன் செய்து என்னோடு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். [நேயர்கள் தொலைபேசியில் பேசுவார்கள் என்று சத்தியமாய் எனக்குத் தெரியாது!] அதில் ஒருவர் "படம் மிக அருமையாய் இருந்தது, ஆனால் முழுதாய் பார்க்க முடியவில்லை, வீட்டில் கரண்ட் போய் விட்டது!" என்றார்.  க்ளைமேக்ஸ் பார்க்காமல் "விடியல்" படம்  பார்த்தால் எவனோ ஒருவன் ஊர் சுற்றுவதை எடுத்தது போல் தான் இருக்கும். அவருக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை. ஒன்று நிச்சயம் நம் நாட்டில் இனிமேல் க்ளைமேக்ஸ் காட்சியில் ட்விஸ்ட் வைத்து படம் எடுக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்!

அடுத்து பேசியவர் பெயர் "சரவெடி" சாமிநாதன்! படத்தை பாராட்டி பேசினார். இப்படி சிவரஞ்சனி, அம்பத்தூர் திவ்யா, கார்த்திகேயன், தயாநிதி என்று ஐந்து பேர் பேசினார்கள். கணையாழியின் கடைசி பக்கத்தில் சுஜாதா, ரேடியோவில் "நேயர் விருப்பம்" நிகழ்ச்சியில் பாடல்களை விரும்பிக் கேட்பவர்களின் பெயர்களை சொல்வார்கள். அதை உன்னிப்பாய் கவனித்து, சில பெயர்களை குறிப்பிட்டு "இவர்கள் எப்படி இருப்பார்கள்?" என்று எழுதி இருப்பார். அது தான் என் நினைவுக்கு வந்தது! வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி!

எப்படியோ, எதிர்பாராமல் அமைந்த ஒரு புதுமையான அனுபவம். நாளை கலை 10 மணிக்கு மறு ஒளிபரப்பு என்று சொன்னார்கள். வீட்டில் அரசு கேபிள் வைத்திருப்பவர்கள், சேனல் வந்தால், வேறு வேலை எதுவும் இல்லையென்றால் முயற்சி செய்து பாருங்கள். www.interactivetv.tv வழியாகவும் பார்க்கலாம் என்றார்கள். இன்று வீட்டில் உள்ளவர்கள் முயற்சித்து தோல்வி அடைந்தார்கள். நீங்கள் நாளை முயற்சி செய்து பாருங்கள்.

ஹே...எல்லாரும் நல்லா பாருங்க, நான் டீவியில வந்துட்டேன், டீவியில வந்துட்டேன்..நானும் செலிப்ரிட்டி தான்!
சகோதரர்கள் மற்றும் "நண்பிகள்" அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இன்றைய தினத்தில் காலையிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டியோடு  ஒட்டிக் கொண்டு பல சிறப்பு நிகழ்சிகளை பார்த்து நீங்க டயர்ட் ஆகி இருந்தாலும் பரவாயில்லை. பத்தோடு பதினொன்றாய் என் குறும்படத்தையும் பார்த்து விடுங்கள்! என் முதல் குறும்படத்தை பார்த்து விட்டு, "நல்ல முயற்சி, மென்மேலும் தொடருங்கள்!" என்று உங்களில் பலர் ஊக்குவித்திருந்தீர்கள்.  நீங்கள் எதை நினைத்து அப்படி சொன்னீர்களோ, நான் அதை ரொம்ப சீரியசாய் எடுத்துக் கொண்டேன். உங்களுக்குப் பரிசாக [தண்டனையாக?] இதோ என் இரண்டாவது குறும்படம்!

என்னது ரெண்டாவது படமா என்று ஷாக்க் ஆகாதீர்கள். உங்களை மாதிரியே நானும் ஷாக்க் ஆகித் தான் போயிருக்கிறேன். "முன்னேறுவதற்கான முதல் படி, அதற்கான முதல் அடியை எடுத்து வைப்பதில் தான் இருக்கிறது!" என்று சொல்வார்கள் [சொல்லுவாங்கல்ல?] அது எத்தனை உண்மை என்பதை இப்போது நான் புரிந்து கொண்டேன். இங்கே, முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று, எனக்கு குறும்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தாலும், என்னுடைய இரண்டாவது படத்தை நான் இத்தனை சீக்கிரம் வெளியிடுவதற்கு உங்களின் உந்துதல் தான் முதன்மையான காரணம்! [அப்பாடா, பழியை போட்டாச்சு!]

இந்தப் படத்தை பொருத்தவரை, நான் நடிகன் மட்டுமே! ஐ டி யின் அந்தஸ்தினால் கொஞ்சம் பணம் போட்டேன்! [நன்றி ஐ டி] எழுதி, இயக்கியது எல்லாம் என் முதல் குறும்படத்தின் காமெராமேன் பிரசன்னா. என்னுடைய அடுத்த படம் வரக்கூடாது என்று சமூக பொறுப்புடன் நீங்கள் சிந்திப்பவர் என்றால் இவரை பிடியுங்கள். இவரிடம் நிறைய கதை இருக்கிறது. என்னிடம் நிறைய  திறமை இருக்கிறது! அவ்வளவு தான் சொல்லுவேன்.

இந்த படத்தில் நான் நன்றாய் நடித்திருந்தால் என்னை பாராட்டுங்கள்; சொதப்பி இருக்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றினால் இயக்குனரை திட்டுங்கள்! [உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது; உள்ளத்தில் இருக்கும் வார்த்தையை மறைக்கும் கபடம் தெரியாது....]

இந்தப் படம் "விடியல்" போல் இல்லாமல், எல்லோருக்கும் புரியும்படியும், சுவாரஸ்யமாயும் இருக்கும் என நம்புகிறேன். தங்களின் "பூச்செண்டுகளையும்", "செமகாண்டுகளையும்" எதிர்நோக்கி காத்திருக்கும் "காதல் வந்தா கம்முன்னு கெட" குழு!

இனி படம்...

இது சிரிக்க மட்டும் அல்ல; சிந்திக்கவும்!

என் ஃபிளாட்டில் இரண்டு ப்ளாக்குகள். முதல் பிளாக்கில் அந்த இடத்தின் சொந்தக்காரர். அவரின் பெண்டு பிள்ளைகள். பின்னால் பிளாக்கில் என் வீடு. வீடு கட்டும்போது பில்டரிடம் "கார் பார்க் இருக்கிறதா?" என்று கேட்டேன். "உங்ககிட்ட கார் இருக்கா?" என்று அவன் [ஏன் மரியாதை தேய்கிறது என்று போகப் போகத் தெரியும்!] கேட்கவில்லை. "அதனால என்ன சார், நீங்கள் பொது வழியிலேயே நிறுத்திக் கொள்ளலாம், ப்ராப்ளமே இல்லை. என்ன குழந்தைகள் விளையாடும் போது பந்து கார் மேலே படும், பெஸ்ட் உங்கள் வீட்டை கார் பார்கிங்கோடு கட்டி விடுவோம்" என்று உசுப்பேத்தி, என் வீட்டில் கொஞ்சத்தை எடுத்து கார் பார்க் என்று செய்து என் தலையில் நன்றாய் மிளகாய் அரைத்து விட்டான்.  அவன் சொன்ன அந்த பொது வழியில் என் காரை விடுங்கள், என் இரு சக்கர வாகனத்தை உள்ளே கொண்டு வரவே சர்க்கஸ் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. முன்னால் பிளாக்கில் அத்தனை வண்டிகள். அங்கு ஒரு வயசான பாட்டி உண்டு, அதற்கு மட்டும் தான் வண்டி இல்லை!

சரி தொலையட்டும் என்று என் காரை வெளியிலேயே நிறுத்தி விட்டேன். நான் இருக்கும் அம்பேத்கர் சாலை இருக்கிறதே, அந்த அம்பேத்கர் இன்று உயிரோடு இருந்தால், அவர் அந்த சாலையில் ஒரு அரை மணி நேரம் நின்றால் போதும், மூச்சு முட்டி இறந்து விடுவார். சிமெண்ட் ரோடு [இதை ரோடு என்றால் அந்த பாவம் என்னை ஏழேழு ஜென்மத்துக்கும் விடாது]! அத்தனை மண்! தூசி!! குப்பை!!!

என் கார் செகண்ட் ஹெண்ட் கார் தான். இருந்தாலும் அந்த முதல் ஆசாமி அதை தங்கமாய் வைத்திருந்தார். நான் வாங்கும்போது அது புத்தம் புதிதாய் இருந்தது. இன்று அதே காரை "விண்டேஜ்" கார் என்று வகைப்படுத்தி அவரிடமே நல்ல விலைக்கு விற்க முடியும். அப்படி ஒரு அவலமான நிலையில் தூசி, துரும்பு படிந்து கிடக்கிறது. காலையில் துடைத்து மாலையில் வந்து பார்த்தால் ஏதோ பாலைவனத்தில் மணல் புயல் அடித்த மாதிரி ஊரில் உள்ள அத்தனை தூசியும் என் காரின் மேல் தான் கிடக்கிறது. இதில் என் காரை கடந்து செல்லும் பொண்டு பொடுசுகள் இது ஏதோ வரலாற்று சின்னம் என்று கருதி இதில் தங்கள் பெயர்களை எல்லாம் வரைந்து விட்டு போகிறார்கள்! அதே கடுப்புடன் வீட்டுக்குள் வந்தால், முன்னால் பிளாக்கில் இருக்கும் ஒரு மாமி, அவர் ஸ்கூட்டிக்கு கவர் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார்! அடப்பாவிகளா...

சரி என்று நானும் கவர் போட்டேன். அந்த கவர், கார் வாங்கும்போது வாங்கியது. கார் கவர் என்று தான் பெயர், அது என்னமோ நாம் கொஞ்சம் சத்தமாய் தும்மினால் பறந்து விடுகிறது! அதற்கு ஒரு கிளிப் போட்டு, முன்னால் பின்னால் எல்லாம் கயிறு கட்டி கல் வைத்து.....நானோ சாப்ட்வேர், இந்த மாதிரி ஹார்ட்வேர் வேலையெல்லாம் என்னால் செய்ய முடியுமா? முடியல.. அப்புறம் தான் சொன்னார்கள். கார் கவர் ஒரு வருடம் தான் லைஃபாம். சரி என்று புது கார் கவர் வாங்க புறப்பட்டேன். "இந்த லாரிக்கு போடறது மாதிரி நல்ல கனமான தார்பாய் ஏதாவது இருக்கா"ன்னு தான் விசாரிச்சேன். அப்படி எதுவும் சிக்கலை! கார் சம்மந்தப்பட்ட எல்லா சாமானும் வாங்க எக்ஸ்பிரஸ் அவென்யு பக்கத்துல இருக்குற ரோட்டுக்கு போங்க என்று சொன்னார்கள். அங்கு போய் வேறு வழி இல்லாமல் எழுநூற்றி ஐம்பது ரூபாய் போட்டு ஒரு புத்தம் புது கவர் வாங்கினேன். குழந்தைக்கு தீபாவளிக்கு புது சட்டை வாங்கி போட்டு அழகு பார்ப்பது போல் என் காருக்கு கவர் போட்டு அழகு பார்த்தேன். ஜோராய் இருந்தது...

கட் பண்ணா...அடுத்த வாரத்தில் ஒரு காலை நேரம். கார் மீண்டும் அதே தூசி துரும்புடன் மொட்டையாய் நின்று கொண்டிருந்தது. வழக்கம் போல் கவர் காற்றில் பறந்து கீழே விழுந்து விட்டதோ என்று பார்த்தேன். ம்ம்ஹ்ஹூம்! அந்தக் காரில் கவர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தேன். நான் காலையில வரும்போதே கவர் இல்லையே என்றார்! இப்போது எனக்கு சில கேள்விகள்:

1. கை வைத்தால் ஊரையே எழுப்பும்படி அலாரம் அடிக்கும் ஒரு கார் கவர் நம் ஊரில் கிடைக்கிறதா?
2. கார் கவர் தொலைந்து போய் விட்டது என்று போலீஸ் கம்ப்ளைன்ட் செய்ய முடியுமா? அப்படி செய்தால் எழுநூற்றி ஐம்பது ரூபாய் கவருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும்?
3. எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கிறதா?
வழக்கம் போல் அல்லாமல் இன்று காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்துக்கு கிளம்பினேன். இதில் வழக்கம் போல் என்பது பத்தரை மணி. [இதற்கு பெயர் தான் நான் லீனியர் நரேஷன்!] இன்று என்ன அவ்வளவு சீக்கிரம் என்று உங்கள் மனதில் தோன்றி மறைந்தால் இன்று அலுவலகத்தில் ஒரு ட்ரைனிங்! கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும் என்று மேலிடத்து உத்தரவு! வாய் கூட காது வரை இல்லாத அடிமை நான், கேள்வியே கிடையாது! அதோடு மட்டுமல்லாமல் எனக்கும், வழக்கமான சலிப்பான வார நாட்களிலிருந்து ஒரு தற்காலிக விடுதலை கிடைத்தால் பிடிக்கும் என்பதால் இப்படிப் பட்ட ட்ரைனிங்கில் கலந்து கொள்வதில் சந்தோஷமே! ட்ரைனிங் ஒன்பதரை மணிக்கு என்று மெயிலில் இருந்தது. நான் ஒன்பதுக்கு கிளம்பினேன்.

நம் நாட்டில் எங்கு போவதென்றாலும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினால் நல்ல பலன் கிடைக்கும். ஒன்பது மணிக்கு ஜி எஸ் டி சாலையில் அதிக கூட்டமில்லை. யார் இப்போதெல்லாம் அலுவலகத்துக்கு ஒன்பது மணிக்கு கிளம்புகிறார்கள்? மெதுவாய் நிதானமாய் ஹாயாய் வண்டி ஒட்டிக் கொண்டு போனேன். பைக் பார்க்கிங்கில் ஆங்காங்கே ஒரு சில பைக்குகள் மட்டுமே இருந்தது. பக்கத்திலேயே எனக்கு பிடித்த இடத்தில் வண்டியை நிறுத்தேன். மணி ஒன்பது இருபது. இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. நேரத்தோடு ஒரு வேலையை செய்தால் எத்தனை திருப்தி! நிதானமாய் அலுவலகம் நோக்கி நடந்தேன். இப்போதே ட்ரைனிங் ரூமில் சென்று நல்ல இடம் பார்த்து [நல்ல இடம் என்றால் மாப்பிள்ளை பெஞ்சு தான் !] உட்கார்ந்து கொள்ளலாம்!

லிப்டுக்கு அருகில் வந்து நின்றேன். வழக்கமான நேரத்தில் அலுவலகம் வந்தால் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது லிப்டுக்கு காத்திருப்பது வழக்கம். இன்று பட்டனை அழுத்தியதும் இரண்டு லிப்ட்கள் காலியாய் திறந்து கொண்டன. ஒரு மணி நேரம் முன்னால் வந்ததால் இப்படி ஒரு ராஜ உபச்சாரமா? முடிவு செய்து விட்டேன். இனிமேல் ஒன்பது மணிக்குள் அலுவலகத்தில் இருப்பேன்! மனதுக்குள் ஒரு சத்திய பிரமாணமே எடுத்து விட்டேன். நேராய் ஏழாவது மாடி. மணி ஒன்பது இருபத்தைந்து. ட்ரைனிங் நடக்கவிருக்கும் அறையின்  கதவு மூடி இருந்தது. மெதுவாய் திறக்க முயற்சித்தேன் .

அது இன்னும் பூட்டி இருந்தது!


பெயர்: பெய்யென பெய்யும் மழை [அடாத மழை!]
தொடக்கம்: 19 மார்ச் 2004 [சுபயோக சுபதினம்]
வயது: பத்து வருடங்கள்![எம்மாடி!]
பதிவுகள்: 330 [எண்ணிக்கையா முக்கியம்?]
பின் தொடர்பவர்கள்: 54 [ரொம்ப நன்றி!]
வருகை: 68000த்து சொச்சம் [கூகுள்ள பக் இருக்குமோ?]

இந்தப் பாடலை பார்க்கும்போது ஏனோ ஒரு குதூகலம் தொற்றிக் கொள்கிறது. அருமையான இசை. குழந்தைகள் பாடும் பாடலை குழந்தைகளை கொண்டே பாட வைத்தது ஒரு காரணமாய் இருக்கலாம். தமிழ் படங்களில் பெரும்பாலும் ஜானகியை பாட வைத்து கொல்வார்கள்.  மேலும் இந்தப் பாடலில் குழந்தைகள் மிக இயல்பாய் இருக்கிறார்கள். அக்ஷன், கட் சொல்லி நடிக்க வைத்ததை போல் எந்த இடத்திலும் தெரியவில்லை. ஒரு விடுமுறை நாளில் மதிய வேளையில் வீடுகளில் குழந்தைகள் எப்படி விளையாடுமோ அப்படி விளையாடுகின்றன. பாடலை பாருங்கள்.



பார்த்தீர்களா? அந்த பெரிய பெண் குழந்தையை அடையாளம் தெரிகிறதா? "ரங்கீலா ஊர்மிளா தெரியாம நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்கே?" என்று காதல் கோட்டையில் மணிவண்ணன் ஒரு வசனம் பேசுவார். அவருடைய குழந்தை பருவத்தில் வந்த படம் இது. மிஞ்சி போனால் பத்து வயது இருக்கும். அந்த வயதிலேயே ஒரு கதாநாயகிக்கு உரிய உடல்மொழி, நடனத்தில் நேர்த்தி, ஒரு நளினம், முகத்தில் எக்ஸ்ப்ரசன்ஸ் என்று பின்னி எடுத்திக்கிறார். 4:11, 4:15 கணங்களில் ரங்கீலா ஊர்மிளாவின் உடல்மொழியை அப்படியே பார்த்தேன். கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இவ்வளவு பெரிய ஆடையை வளர்ந்த பிறகு கூட இவர் போட்டதில்லை :-) மொத்தத்தில் அருமையான ஒரு பாட்டு!
எனக்கு, என் மனைவிக்கு, தருவுக்கு, மூன்று பேருக்கும் இரண்டு நாளாய் ஜலதோஷம். என் மனைவி நேற்று கண், மூக்கு, வாய் எல்லாம் கழண்டு விழும் ரேஞ்சுக்கு பரிதாபமாய் காட்சி அளித்தாள். இரவு ஒரு ஒன்பது மணி அளவில், வெறுத்து போய், "நீ தருவை  பாத்துக்கோ!!!!!" என்று சொல்லி விட்டு தூங்கப் போய் விட்டாள். போகும்போது  "அவளுக்கு ரசம் சாதம் குடு, அதுல நெய் ஊத்திக் கொடு, அதுல இரண்டு தக்காளி போட்டு பிசைஞ்சி கொடு, அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழிச்சி மிச்ச சாதத்துல பால் ஊத்திக் கொடு என்று ஒரு ஏழெட்டு  "பிட்"டாய் போட்டுப் போனாள். தரு என்னை பார்த்து தெரிந்தோ தெரியாமலோ ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துக் காண்பித்தாள். எனக்கு குபீல் என்றது.

அவளை தூக்கிக் கொண்டு கிச்சனுக்கு வந்தேன். சாதம் போட்டுக் கொள்ள ஒரு தட்டை வைத்துக் கொண்டு, அவளை கீழே நிறுத்தி விட்டு, குக்கர் விசிலை அவளிடம் கொடுத்து விட்டு, குக்கரை திறந்தேன். நான் பாத்திரத்தில் இருந்து சாதத்தை எடுப்பதற்குள், குக்கருக்குள் இருக்கும் மிச்ச சொச்ச தண்ணீரில் கையை வைத்தாள். அதை தடுத்து கையை எடுப்பதற்குள் சோற்றில் கையை வைத்தாள். "கண் இமைக்கும் நேரத்தில்..." என்று முழு வாசகத்தை எழுத ஆகும் நேரத்துக்கும் முன்னே அவள் கை ரசம் சாதத்தில் இருந்தது. ஒரு கையில் தட்டை வைத்துக் கொண்டு இன்னொரு கையில் அவளை ஏந்திக் கொண்டு, அவள் கை என் சட்டையில் படாமல் பேசினில் சென்று கழுவிட்டு ஹாலுக்கு வந்தேன். முதுகு லேசாய் வலித்தது!

தரு சுட்டி, ஆனால் சமத்து. அவள் சாப்பிட வேண்டும் என்றால் டீவியில் இசையருவி ஓட வேண்டும். அல்லது யு ட்யுபில் ரைம்ஸ் ஓட வேண்டும். நான் இசையருவியை தேர்ந்தெடுத்தேன். என் மகள் ஒரு அற்புதமான பிறவி. எல்லா தற்கால குத்துப்பாட்டும் அவளுக்குப் பிடிக்கும். இனிமேல் "ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் பாட்டு வைக்கிறார்கள்" என்று நான் கேட்கமாட்டேன். வீட்டில் குழந்தைகள் சாப்பிடத் தான் என்று நான் நன்றாக புரிந்து கொண்டேன். நிலாவை காட்டி சோறூட்டிய காலம் போய், [சினிமா] நட்சத்திரங்களை காட்டி சோறூட்டும் காலம் வந்து விட்டது.

இசையருவி ஒரு அற்புதமான சானல். குத்துப்பாட்டு, காதல் காதல், இசை அரசர்கள் என்று எந்த நிகழ்ச்சி போட்டாலும், எல்லா நிகழ்ச்சியிலும் "பாக்காத பாக்காத", "கண்டாங்கி கண்டாங்கி", "ஏ பாப்பா, ஏ லூசு பாப்பா மேரேஜ் கலீசுன்னு கஜா சொன்னான்", "என் வீட்டுல நான் இருந்தேனே" இந்த பாட்டுக்களே வரும். அந்த பாட்டு முடியும் வரை தான் தரு அமைதியை இருப்பாள். பெரும்பாலான சமயங்கள் மேல் சொன்ன பாட்டுக்கள் அடுத்து அடுத்து வரும் என்பதால், ஒரு பத்து நிமிடத்துக்குள் என்ன சாப்பாடு ஊட்ட முடிகிறதோ அது தான் அவளின் அந்த வேளை சாப்பாடு!

ஒரு வழியாய் மேல் சொன்ன ஒரு பாடலை காட்டி அவளுக்கு சோறூட்ட ஆரம்பித்தேன். இரண்டு வாய் வாங்கினாள். பிறகு என் மடியில் இருந்து இறங்கி விட்டாள். அவளுக்கு அப்பாவுடன் இருந்தால் விளையாட வேண்டும். ஒரு சுவரோரத்தில் நின்று கொண்டு என்னை துரு துருவென்று பார்த்தாள். அப்படி என்றால், வாப்பா வெளையாடுவோம் என்று அர்த்தம். நான் சீரியசாய் சோறூட்ட போனால் அவள் கெக்கே புக்கே என்று சிரித்துக்கொண்டே கிடந்து ஓடினாள்.  சோற்றுக் கையுடன் ஒரு கையால் அவளை பிடித்தால், "எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ" ரேஞ்சுக்கு பாம்பாய் வளைந்தாள்! கை சுளுக்க அவள் விழாமல் பாதுகாத்து தட்டின் அருகில் கடத்தி வந்தேன். ஒரு வாய் ஊட்டினேன். ரசத்தை அதிகம் ஊற்றி விட்டதால் அது அவள் தேகமெங்கும் கொட்டியது. குழந்தைகளுக்கு ஒரு துளி விழுந்தால் போதும், அதை கையில் எடுத்து, துடைத்து, கழுவி, தேய்த்து அதை பரப்புவது என்றால் அதுகளுக்கு கொள்ளை பிரியம்! அதையே அவளும் செய்தாள். "இரும்மா!", என்று நான் துடைத்து விடுவதற்குள் என் முகத்தில் கொஞ்சம் தேய்த்தாள். இதை தவிர்த்து, அவள் நடக்கும்போது நான் ஊட்டி விட்டதால் தரையெங்கும் கொட்டியது, என் கை அவள் வாய்க்குள் நுழையும் சமயம் அவள் திமிரியதால் அவள் கன்னத்தில் ஒட்டியது, திடீரென்று அவளுக்கு ஒரு ஞானோதயம் வந்து, "ச்சே...இந்த கருமத்தையா சாப்பிடறோம்" என்று அவள் துப்பியது என்று எல்லா வகையிலும் எல்லா இடத்திலும் சாதம் கிடந்தது.

இதன் நடுவே, தரையில் கிடக்கும் தலையணையில் அவளின் தலையை வைக்காமல் தன் முதுகை வைத்து அப்படியே பின்னால் சாய்ந்து அவளின் தலையில் அடிபடாமல் ஃபீல்டிங் செய்து [ஜாண்டி ரோட்சுக்கு எத்தனை குழந்தைகள்?], "அப்பா கொடுக்குற ரசத்துக்கு இதுவே பரவாயில்லை!" என்று அவளே முடிவெடுத்து, அவளின் மூக்கிலிருந்து டைரக்டாய் வாய்க்குள் போவதை தடுத்து, இங்கும் அங்கும் ஓடி ஆடி, அலுத்து, தரையில் கிடக்கும் தலையணை, விளையாட்டு சாமான் ஆகியவற்றில் சிறுநீர் கழித்து, அவளுக்கு ஜட்டி மாற்றி மறுபடியும் அவள் அதில் கால் வைப்பதுற்குள் அதை துடைத்து [கவனிக்க எல்லாம் ஒரு கையில்]....ஸ்வபா....காஜல் அகர்வால் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். டீவியில் "கண்டாங்கி" என்ற ஒரு சொல் தான் காதில் விழுந்தது...ம்ம்ம்ம்ம்ம்!

இத்தனை களேபரங்களுக்கு நடுவில் வெற்றிகரமாய் அவளுக்கு ரசம் ஊட்டி, அடுத்த அரை மணி நேரத்தில் பால் சாதமும் ஊட்டும்போது தான் ஒரு விஷயம் உரைத்தது! என் மனைவி "தரு" முழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முக்கால்வாசி நேரம் அவளிடம் கேட்கும் ஒரே  கேள்வி..."பசிக்குதாம்மா? சாப்பிடறியா!!!!!!!!!!!!!! MOTHER!

அப்போது, டீவியில் "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு" பாட்டு ஓடியது. தரு அசையாமல் அந்த பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள் [அது எப்படி எல்லா பொண்ணுங்களுக்கும் பொண்ணுங்களை திட்ற பாட்டு புடிக்குதுன்னு புரியலை...]! அதில் ஒரு வரி...

மம்மி சொன்ன பொண்ண கட்டினா டார்ச்சர் இல்லைடா - நீயும்
டாவடிச்ச பொண்ண கட்டினா டவுசர் அவுரும்டா...

நான் நினைத்துக் கொண்டேன்....

"மம்மி சொன்ன பொண்ண கட்டினாலும், டாவடிச்ச பொண்ண கட்டினாலும்..... டவுசர் அவுர்றது உறுதி!
நதிகள் நம்மை கடந்து சென்று விட்டன
இன்று நாம் காண்பது, அதன் சுவடுகளை...
                       ---
பரந்த நீல வானம் - அதில்
கண் இமைத்தபடி கடக்கும் மேகங்கள்
எல்லையற்ற வானத்திலும்
வரிசையாய் பறக்கும் பறவைகளின் ஒழுங்கு
கண்ணுக்கெட்டிய தூரம் மலை முகடுகள்
பசுமை போர்த்திய புல்வெளி
தெளிந்த நீர் தளும்பும் கிணறுகள்
அதன் அருகே நீல நிறத்தில் ஒரு குறுங்குளம்
அதில் பூச்சூடிய குட்டி மஞ்சள் நிற வாத்துக்கள்
சிரித்துக் கொண்டே பால் கறக்கும் பசுமாடு
ஓடி விளையாடும் நாய் குட்டி
இவைகளின் மத்தியில் களைப்பே தெரியாத உழவன்...
நம் வாழ்க்கையும் - நம் குழந்தைகளின்
ரைம்ஸ்களை போல் இருக்கலாம்.
                       ---
இருக்க வேண்டிய நேரத்தில்
இல்லாமல் இருந்ததால்
இருக்கக் கூடாத நேரத்தில்
இருந்து தொலைக்க வேண்டி இருக்கிறது



இம்தியாஜ் அலியின் அடுத்த படமான "ஹைவே" கூட வெளி வந்து விட்டது. இப்போது தான் அவரின் "ராக்ஸ்டார்" படத்தை பார்த்தேன். என் வரையில் இது ஒரு படம் என்பதை தாண்டி ஒரு பேரனுபவமாக அமைந்து விட்டது. இம்தியாஜின் கதையும், ரன்பீரின் நடிப்பும், ரஹ்மானின் இசையும், இர்ஷாத் கமீலின்  பாடல் வரிகளும், மோஹித் சவ்ஹானின் குரல் வளமும்...சொல்லிக் கொண்டே போகலாம்! A sheer magic. இதெல்லாம் ரொம்ப "ஓவரா" இருக்கே என்று எனக்கே தோன்றியது! ஆனால், இந்தப் படமும், இந்தப் படத்தின் பாடல்களும் கடந்த ஒரு வாரமாய் என்னை பிடித்து ஆட்டுகின்றன. எனக்கு நினைவு தெரிந்து இந்த மாதிரி பித்து பிடித்து நான் எந்தப் பாடலையும் கேட்டதில்லை. அதுவும் "டை ஹார்ட்" "ராஜா" ரசிகனான நான் ரஹ்மானின் பாடலில் இப்படி கிறங்கி போவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. "உன்மத்த நிலை" என்று சாரு அடிக்கடி சொல்வாரே, அந்த நிலையில் இருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை; இருந்திருந்தால் இந்தப் பாடலை கேட்கும்போது நான் கடவுளுக்கு மிக அருகில் செல்வதாய் உணர்கிறேன் என்று எழுதி இருப்பேன். [நாத்தீகர்கள் இந்த நிலையை எப்படி தான் எழுதுவது?] பாடல் காட்சியை பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பார்த்தாலும் அது தனி ஒரு அனுபவம் என்று தான் சொல்வேன். கண்களை மூடி ஒரு ஹெட்ஃபோன்  போட்டுக் கொண்டு எல்லா விளக்கையும் அனைத்து விட்டு பாடலை கேளுங்கள்.  இதோ பாடல்! [நீங்களும் என் நிலையை அடைந்தீர்கள் என்றால், நாம் இருவரும் நண்பர்களே!]


முதல் சொன்ன பாடலுக்கு இந்தப் பாடல் நேர் எதிர். முதல் பாடல் தன்னை முழுவதும் கடவுளுக்கு அர்ப்பணிப்பதாக, அவருக்கே பூரணமாய் அடிபணிந்த வகையில் அமைந்த பாடல். ஆனால், இந்தப் பாடல், யாருக்கும் அணிபடியாத, தான் நினைப்பது சரி, எவன் என்ன சொன்னால் என்ன என்ற வகையில் அமைந்த பாடல். எல்லோரையும் எப்போதும் உங்களால் உங்களோடு ஒத்துப் போகச் செய்ய முடியாது என்ற உண்மையை அடிப்படையாக கொண்டு அமைந்த பாடல். ஒரு வகையில் இது மிகப் பெரிய தத்துவம் என்றே சொல்ல வேண்டும். இந்த பாடலை நான் அலுவலகத்தில் கேட்கும்போது அங்கேயே எழுந்து ஆடினால் என்ன என்று கூடத் தோன்றியது. அப்படி ஒரு எனர்ஜி பாடலில்...பாடல் முழுவதும் கிடார் இசை பொங்கி வழிகிறது. "ஒரியந்தி" என்ற உலகப் புகழ் பெற்ற ஆஸ்ட்ரேலியன் கிடாரிஸ்ட்டின் கை வண்ணம். ஜாக்சனின் கடைசி நிகழ்ச்சியில் இவர் தான் லீட் க்டாரிஸ்ட் ஆக இருக்க வேண்டியவராம்; விக்கி சொல்கிறது! பட்டையை கிளப்பி இருக்கிறார். இதோ பாடல். பாடலில் ரன்பீரின் நடிப்பை பாருங்கள். a real rockstar!!


பாடலின் ஆங்கில வடிவம். "ஒரு பெயர் தெரியாதவர்" மிக அழகாய் மொழி பெயர்த்திருக்கிறார்!


In this world of yours’ O social beings
The human being is wrong at every step
No matter,considering correct what I do,
You always declare it to be incorrect
If I am wrong, then who is right

Do I need to seek your permission for my life,my choices,my willingness
Does that mean that you all have more right over me than I myself have
Its my right
Give it to me here…

These queues,demonstrating social obedience.These debts,dividing and labelling humans
Why are you suffocating my nature flow of life in them
I am uncivilized,I belong to that street
Where all are immodest and shameless
I feel as if social obedience is the tax I have to pay,just to stay alive
This world is my enemy,this world is alien to me
Burn it into flames
My heart says…Live as you wish,else choose to die

It’s my right
Give it to me here…

O eco-friendly
The saviours of nature
I too am a manifestation of nature [எனக்கு மிகவும் பிடித்த வரி!]
 

With these rules and regulations, these social dos and don’t s
Why do you cut me why do you piece me so inhumanly
Why this propagation of truth
When you can’t even handle the truth
If someone dares to speak up the truth
You begin to teach your social rules n regulations

Your fears.Your love.Your Praises
Keep it with yourself
Keep it all

It’s my right
Give it to me here...
[ஒரு குறிப்பு: நீங்கள் இன்னும் படம் பார்க்கவில்லை என்றால் பார்த்துவிட்டு இதை படியுங்கள். இல்லையென்றால் ஒரு மகா அனுபவத்தை இழந்து விடுவீர்கள் :-)]
 

புகழின் போதை எத்தகையது என்று இன்று தான் உணர்ந்தேன். கிட்டத்தட்ட பத்து வருடமாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். இத்தனை நாள் கிடைக்காத பாராட்டு என் முதல் குறும்படத்திற்காக ஒரே நாளில் எனக்கு கிடைத்திருக்கிறது. அது தான் சினிமாவின் வீச்சு. அதற்குத் தான் ஒவ்வொரு கலைஞனும் சினிமா என்றால் ஆளாய் பறக்கிறான் போலும்.

இந்தப் படத்தின் ஒன் லைன் எனக்குக் கிடைத்து ஒரு ஐந்து வருடங்களாவது இருக்கும். ஏதோ ஒரு ரஜினி படத்தை பார்க்கும்போது "ஒரு கண் தெரியாதவன் ரஜினியை எப்படி அணுகுவான்" என்ற கேள்வி என் மனதில் உதித்தது! "அவனுக்குப் பார்வை வந்ததும், ரஜினியை பார்த்ததும் அவனுடைய கற்பனை உருவத்துக்கும் உண்மை உருவத்துக்கும் எவ்வளவு சம்மந்தம் இருக்கும்?" என்று கற்பனை தொடர்ந்தது...அப்படி தொடங்கி, "சரி பல வருடமாய் பார்வை இல்லாமல் இருந்தவனுக்கு பார்வை கிடைத்தால் அவன் முதல் நாள் எப்படி இருக்கும், அவன் எதையெல்லாம் பார்க்க நினைப்பான்?" என்று யோசிக்கத் தொடங்கினேன். பிறகு வழக்கம்போல் அந்த யோசனை மேலும் வளராமல் அப்படியே தங்கி விட்டது. சென்ற வருடம், எப்படியும் இந்த வருடமாவது ஒரு குறும்படம் எடுத்து விட வேண்டும் என்று நானும் நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தோம். சரி என்று இந்தக் கதையை தூசு தட்டினேன். இந்தப் படத்தின் "திரைக்கதை" இந்த ஒரு தருணத்துக்காகவே காத்திருந்ததை போல அந்த ஒரு இரவில், ஒரு மணி நேரத்தில், என்னை வைத்து தன்னை எழுதிக் கொண்ட பிறகு தான் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது என்று நினைக்கிறேன்!

எனக்கு கதை மிகவும் பிடித்தது. என் நண்பர்களுக்கு சொன்னேன். வழக்கமான லவ், டாஸ்மாக் இல்லாத வித்தியாசமான கதைக்களம் என்பதால் அவர்களுக்கும் பிடித்திருந்தது. சோ, கதை எங்களை உந்தித் தள்ள ஷூட்டிங் கிளம்பிவிட்டோம்! என்ன ஒரு மகத்தான அனுபவம் அது.

THE FILM MAKER: Pain is temporary; Film is forever!

மிகச் சரியான வாசகம். இந்த தம்மாத்துண்டு படத்துக்கே எத்தனை சொதப்பல்கள், எத்தனை வாக்குவாதங்கள், எத்தனை குறிக்கிடல்கள், எத்தனை கேள்விகள், எத்தனை குழப்பங்கள்!! சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றையும் ஒரு வழியாய் கடந்து வந்தோம்.

சினிமா என்னை அழைத்துச் செல்லும் இடங்கள் எனக்கு பிடித்திருக்கிறது. அந்த அனுபவமே அலாதி. படத்தில் வரும் டேப் ரிக்கார்டரை என் வீட்டின் எதிரில் உள்ள பாத்திர வியாபாரியிடம் இரவல் வாங்கினேன். அந்த கண் தெரியாதவர் உபயோகிக்கும் கம்புக்காக அடையார், நுங்கம்பாக்கம் என்று எல்லா கண் தெரியாத பள்ளிகளுக்கும் சென்றேன். கண் தெரியாதவருக்கு கண் வந்தால் அவர்கள் எதை முதலில் பார்க்க விரும்புவார்கள் என்று தெரிந்து கொள்ள பார்வையற்ற ஒருவரை பேட்டி எடுத்தேன். கண் வந்ததும் ஒருவரின் நடை, உடை, பாவனை எப்படி இருக்கும் என்று ஒரு மருத்துவரிடம் விசாரித்தேன். "நீங்கள் ஒன்றை உண்மையாக விரும்பினால் அதை உங்களுக்குப் பெற்றுத் தருவதில் இந்த உலகமே உதவி செய்யும்!" என்பது எத்தனை உண்மை என்று கற்றுக் கொண்டேன்.  உதாரணமாக, முதல் நாள் ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியிடங்களுக்கு சென்று சூட் செய்தோம். கதைப்படி ஒரு பார்வையற்ற பிச்சைக்காரர் வேண்டும். நாங்கள் ரயிலில் ஏறி ஒவ்வொரு ஸ்டேஷனும் தேடினோம். ஒருவரும் தென்படவில்லை. பிறகு தான், அன்று ஞாயிற்றுக் கிழமை அவர்கள் யாரும் அன்று தொழில் செய்ய மாட்டார்கள் என்று பிறர் சொல்லக் கேள்விப்பட்டோம். சரி அடுத்த சனிக்கிழமை எடுத்துக் கொள்ளலாம் என்று வேறு ஷாட்களை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது தான் பார்வை இல்லாத குமார் அங்கு வந்து சேர்ந்தார். ரயில் புறப்படும் நேரம் ரயில் ஏறும் அவரை பார்த்து விட்டு, அவரை அவசர அவசரமாய் கீழே இறக்கி, அவரிடம் விஷயத்தை சொல்லி நாங்கள் அவரை உபயோகப்படுத்திக் கொண்டோம். கொஞ்சம் பணம் கொடுத்து அவரை நல்லபடியாய் அனுப்பி வைத்தோம்.

பிறகு டீ கடையில் இருக்கும் டீ வி! உங்களில் சிலர் அதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் அந்தக் கடையில் டீவியே இல்லை. டீவியுடன் உள்ள டீ கடையை நாங்கள் தேடாத இடமில்லை. எங்கள் கண்ணில் படவேயில்லை. சரி என்று டீவி இருப்பதாய் பாவனை செய்து நடித்து, வீட்டில் வந்து டீவி [அரசு டீவி என்பது முக்கியம்!] ஷாட்ஸ் எடுத்துக் கொண்டு, எடிட்டிங்கில் வெட்டி ஓட்டினோம்!

ஏன் அவன் அந்த துண்டை பார்த்து சிரிக்கிறான்; ஏன் அதை தூக்கி எறிகிறான் என்று சிலர் கேட்டிருந்தார்கள். இத்தனை காலம் பார்வை இல்லாமல் இருந்ததால் அவன் கணக்குப்படி அந்த இடத்தில் வந்து துணியை காயப்போடுவது வழக்கம். இன்று கண் வந்து விட்டதால், இனி தான் எதை வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் தூக்கிப் போடலாம்,  அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று இறுமாந்து போவது தான் அந்த காட்சி. நான் மிகவும் சொதப்பிய ஒரு காட்சி என்றால் இது தான்.

இந்தக் கதையை பொருத்தவரை, பார்வையாளர்கள் மனதில் கேள்விகளை எழுப்பி விட்டு இறுதிக்காட்சியில் அதை தெளிவு படுத்த விரும்பினேன். அதனால் படம் தொடங்கியதிலிருந்து பார்வையாளர்களுக்கு இது கண்/பார்வை சம்மந்தப்பட்ட படம் என்பதை ஆங்காங்கே ஜாடை காட்டிக் கொண்டே இருக்கும்படி காட்சிகள் அமைத்தேன். [ஒரு படம் எடுத்துட்டு என்னா ஆட்டம்!]

1. டைட்டிலில் "விடியல்" லில் உள்ள புள்ளியின் மேல் கண் இருக்கும்.
2. படம் தொடங்கியதும் ரேடியோவில் ஒலிக்கும் பாடல் "அந்தி மழை பொழிகிறது!"
3. கண் கண்ணாடியை போட நினைப்பவன், அதை இன்றாவது விட்டு விட்டுப் போவோம் என்று நினைத்து எடுத்த இடத்தில் வைப்பது.
4. கதவை திறந்து வெளியே போகும்போது, இத்தனை நாள் தனக்குத் துணையாய் இருந்த அந்த கம்பை ஒரு நொடி பார்ப்பது.
5. தன் நினைவிலிருந்து மறைந்தே போன அந்த சூரிய உதயத்தின் அழகை ரசிப்பது.
6. கண்களை மூடி அலைகளை தரிசிப்பது.
7. ரயிலை பார்ப்பது; இந்த உலகத்தையே புதிதாய் பார்ப்பது.
8. சினிமா பார்ப்பது.
9. ரஜினியை குரல் கொண்டு அடையாளம் சொல்வது!
10. பேருந்தில் பயணச்சீட்டை கூர்ந்து கவனிப்பது; காசை தடவிப் பார்ப்பது [இங்கு முக்கால்வாசி பேர் யூகித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!]
11. இறுதியில், இத்தனை காலம் பார்வை இல்லாமல் எளிதாய் வலம் வந்த சாலையில், பார்வை வந்த பிறகு தடுமாறும் அந்தத் தருணம்! ஒரு பார்வை இல்லாதவனின் உதவியுடன் அந்த சாலையை கடந்து கொள்ளும் அந்த நிமிடத்தில் அவன் மனநிலை..[இந்தக் காட்சியின் உன்னதத்தை நான் சரியாய் திரையில் கொண்டு வரவில்லை என்பதை நான் அறிவேன்!]

எப்படியோ முதல் படம் ஒன்று எடுத்தாகிவிட்டது. முதல் அடி ஒன்றை வைத்தாகி  விட்டது. முதல் படம் என்பதால் என் குறைகளை மன்னித்து நிறைகளை மட்டும் கொஞ்சம்  அதீதமாய் சொல்லி பாராட்டி இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நானும் வழக்கமான தமிழ்  சினிமா இயக்குனர்களை போல்  அடுத்த படத்தில் சரக்கு தீர்ந்து ஒரு மொக்கை படம் எடுத்து உங்களிடம்  தர்ம அடி வாங்காமல் இருந்தால் சரி!!
"விடியல்" - என் முதல் குறும்படம். நேற்று தான் இதன் வேலைகள் அனைத்தும் முடிந்தது. இன்று உங்கள் பார்வைக்கு...2014 எனக்கு நன்றாய் விடிந்திருக்கிறது :-)

படத்தை பார்க்கும் "முன் குறிப்புக்கள்":

1. இது என் முதல் முயற்சி. ஒரு மிகச் சில நிறைகளும், பலப் பல குறைகளும் உங்களுக்குத் தெரியலாம். குறையோ நிறையோ, எதுவாயினும் எனக்குச் சொல்லுங்கள். அடுத்த படத்தில் அதை திருத்திக் கொள்கிறேன்! [அடுத்த படம் வேறயா?!]
2. உங்களுக்கு படம் புரியவில்லை என்றால் அது என் குறையே அன்றி உங்கள் குறை அல்ல! [இது எங்களுக்கே தெரியும்!] அதனால் மனம் தளராமல் இரண்டாம் முறை பார்த்து விடுங்கள்!
3. பத்து நிமிட படம் தான். நல்ல ஒரு ஹெட் ஃபோன் இருந்தால் காதில் மாட்டிக் கொண்டு படத்தை பாருங்கள். ["எத்தனை தடவை கூப்பிடறேன், காதுல எதாச்சும் வாங்குறீங்களா?" என்று உங்கள் மனைவி உங்களை திட்டினால் என்னை திட்டாதீர்கள்!]
4. இனி படம்.