அப்படியே வருடத்திற்கு பத்து டூர் அடிக்கவில்லை என்றாலும், எனக்கு பாக்கேஜ் டூர்கள் பிடிப்பதில்லை. அவர்கள் அரைத்த மாவையே அரைப்பார்கள். செக்கு மாடு போல் ஒரே இடத்தை சுற்றிக் கொண்டிருப்பார்கள். என்னை பொருத்தவரை ஒரு வண்டி இருக்க வேண்டும், இஷ்டம் போல் சுற்ற வேண்டும், அப்போது தான் அந்த இடம், அந்த மக்கள், அங்கு உள்ள வாழ்க்கை முறையை சரியாய் அறிய முடியும். கிட்டத்தட்ட ஹிப்பிகள் மாதிரி சுற்றிப் பார்க்க வேண்டும். [இந்த அறிவெல்லாம் கல்யாணத்திற்கு முன் வராது!] ஆனால் அதை குடும்பத்தோடு செய்ய முடியாது. அதனால் பாக்கேஜ் டூர் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது.

நான் வண்டியில் ஏறியதில் இருந்து சன்னியிடம் இதைத் தான் சொன்னேன். "எல்லோரும் போகும் இடங்களுக்கு என்னை கூட்டிப் போகாதே. பொட்டானிக்கல் கார்டன், நிஷாத் கார்டன் என்று பாக்கேஜில் இருந்தது. இந்த பட்டாணி, பொரிகடலை கார்டன் எல்லாம் எங்கள் ஊட்டியிலேயே இருக்கிறது. எனக்கு எந்த "மேன் மேட்" இடங்களும் தேவையில்லை. இங்கு இயற்கையை தான் நான் பார்க்க வேண்டும்!" என்றேன். அவனுக்கு குபீல் என்று இருந்தது, அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

பேக்கேஜ் டூர்களில் இது சாத்தியமில்லை என்று எனக்குத் தெரியும். ஏன் என்றால் அவர்கள் வண்டியை எடுக்கும்போதே எங்கெல்லாம் போக வேண்டும், எத்தனை கிலோ மீட்டர் ஆகும், எத்தனை லிட்டர் டீசல் போட வேண்டும், எவ்வளவு கூலி, லாபம் என்று சகலத்தையும் ஏற்பாடு செய்து கொண்டு தான் வருவார்கள். இருந்தாலும் சில டிரைவர்கள் "கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆகும், நான் கூட்டிப் போகிறேன்!" என்று சொல்லலாம். அதனால் கேட்டுப் பார்த்தேன். சன்னி சரி என்றும் சொல்லவில்லை, முடியாது என்றும் சொல்லவில்லை.

சென்னையில் இருக்கும்போது நான் தினமும் அதிகாலை எட்டு, எட்டரைக்கு துயில் எழுவேன். இந்த மாதிரி வெளியிடங்களுக்கு போனால் ஐந்து, ஆறு மணி! அந்த வெளியூரின் காலையை நான் முதலில் அனுபவிக்க வேண்டும். முதல் நாள் இரவே, ஆறரை மணிக்கு அறைக்கு டீ வரும் என்று சொல்லி இருந்தார்கள். நான் ஆறு மணிக்கு என் மனைவியை கூட்டிக் கொண்டு, காமெராவை தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். என் அம்மாவும் விழித்திருந்ததால் அவர்களையும் அழைத்துக் கொண்டோம். வெளியே செம குளிர். ஒரு பத்து டிகிரி இருக்கும். ரிசார்ட்டுக்கு அருகில் மரங்கள் அடர்ந்த ஒரு மலை. அதை ஒட்டி ஒரு ஒத்தையடிப் பாதை ஒன்று போனது. அதில் நடந்தோம். சில அடிகள் எடுத்து வைத்ததும் வலது புறம் ஒரு பெரிய பனி மலை. கடந்து சிறிது தூரம் சென்றதும், கீழே ஒரு சாலை. அதை ஒட்டி ஒரு தெளிந்த நீரோடை. அதன் சல சல சத்தம், பறவைகளின் இரைச்சல், சுத்தமான காற்று. பார்த்துக் கொண்டே இருந்தோம். நீங்களும் பாருங்கள்...
அன்று மாலை அந்த நீரோடைக்கு அருகில் சென்று அமர்வது என்று முடிவு செய்து கிளம்பினோம். ரிசார்ட்டில் டீ வந்து போயிருந்தது. அங்கு குடிக்க சுடு தண்ணீர் கேட்டாலே கொடுக்க மாட்டான், இதில் டீ எங்கிருந்து கிடைப்பது. சரி என்று அன்றைய சுற்றுலாவுக்காக ரெடியாகத் துவங்கினோம். நானே நம்ப முடியாதபடிக்கு என் ரூமில் கீசர் எல்லாம் இருந்தது. அதில் சூடான நீரும் வந்தது. உடம்பில் குத்துவது குளிரா, கொதிக்கும் நீரா என்று புரியாமல் குளித்து முடித்தேன். ஒவ்வொருவராய் ரெடியாக, ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி என்றார்கள். எங்கள் இளவரசியை எழுப்பி அவளுக்கு நாலு லேயர் ட்ரெஸ் போட்டு பார்த்தால் பொதி மூட்டைக்கு கை கால் முளைத்த மாதிரி இருந்தாள். காலை உணவு "ஆளு பரொத்தா" என்று ஞாபகம். ஒரு கட்டு கட்டி முடிப்பதற்கும் சன்னி வந்து சேர்வதற்கும் சரியாய் இருந்தது.

அன்றைய ப்ரோக்ராம் பஹல்காமை சுற்றிப் பார்ப்பது. பஹல்காம் "valley of shepherds" என்கிறார்கள். இந்த சிறு டவுன் "லிட்டர்" நதிக்கரையில் அமைந்திருக்கிறது. சுற்றிலும் வானுயர்ந்த பனி மலை, பசுமை போர்த்திய புல்வெளி, அதை கருத்தாய் மேயும் செம்மறி ஆடுகள், சில்லென்ற சீதோஷணம், தெளிந்த நீரோடை, சுத்தமான காற்று...வேறு என்ன வேண்டும்? அருமையான இடம்.இந்த ஊரில் ஐந்து முக்கியமான வ்யூ பாய்ண்ட் இருக்கிறது. அதை நம் காரில் சென்று பார்க்க முடியாது. அங்கிருக்கும் லோக்கல் காரை வாடகை  எடுத்துத் தான் சென்று பார்க்க வேண்டும். "சோன்மார்க்", "குல்மார்க்" எல்லா சுற்றுலா தளங்களிலும் இதே கதை தான்! நம் டிரைவர் கருத்தாய் அவர்கள் இருக்கும் இடத்தில் விட்டு விடுவார். அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் ஒதுங்கிக் கொள்வார். நல்ல வேளையாக அரசு நிர்ணயித்த தொகையுடன் வாடகை கார்கள் இருந்தன. ஒரு டவேரா (பத்து பேர் அமரும் வண்டி) வாடகை 1850 ரூபாய். லக்கேஜ்களை சேர்த்தால் ஒரு உருளைக்கிழங்கு லாரி தான் வேண்டும். என்ன செய்வது, உள்ளே எங்களை அமுக்கிக் கொண்டோம். அந்த வண்டி மலை மேல் ஒரு ஒற்றையடிப் பாதை மேல் வளைந்து நெளிந்து சென்றது. இந்த அழகில் எதிரில் வரும் வண்டி. இது போதாதென்று வழியில் இருநூறு, முன்னூறு ஆடுகளை கவலையின்றி மேய்த்துக் கொண்டு டிராபிக் ஜாம் செய்து கொண்டிருந்தார்கள். வழியெங்கும் அழகு கொட்டிக் கிடந்தது. ஆங்காங்கே ஒரு சிறிய வியூ பாய்ண்ட் இருந்தது. "ஹே நிறுத்தப்பா!" என்றால், "இங்கெல்லாம் நிறுத்திக் கொண்டிருந்தால் எல்லா இடத்தையும் பார்க்க முடியாது. வரும்போது பார்க்கலாம்" என்று அவன் வண்டியை விட்டான். சரி செம இடத்துக்குக் கூட்டிப் போகிறான் என்று நினைத்தோம். முதல் இடம் வந்தது. இறங்கியதும் குதிரைகளின் சாணத்தின் வாசம் மூக்கைத் துளைத்தது. சுற்றிப் பனி மலைகள் இருந்தாலும், வரும் வழியில் இருந்த அழகு இங்கு கொஞ்சம் கம்மியாகவே இருந்தது. அங்கிருந்து குதிரையில் செல்லலாம் என்றூம் அதற்கு வாடகை ஐநூறு அறநூறு என்றார்கள். ஆளை விடுங்கள் என்று கொஞ்சம் பெரிய புல் தரையாய் பார்த்து ஒதுங்கிக் கொண்டோம்.

அடுத்து "பேதாப் பள்ளத்தாக்கு". "பேதாப்" என்ற ஹிந்திப் படம் அங்கு எடுத்தார்கள், அதனால் அதற்கு அந்தப் பெயர். அந்த இடம் ரொம்ப காமர்ஷியலைஸ் ஆகி இருந்த மாதிரி எனக்குத் தோன்றியது. அங்கு சிறிது நேரம் கழித்து விட்டு, மெதுவாய் குழந்தைகளுக்கு வேண்டியதை ஊட்டி விட்டு, எங்களுக்கு வேண்டியதை வாயில் போட்டுக் கொண்டு வண்டியில் ஏறினால் அவன் எங்கள் மீது ஏறினான். "என்னடா?" என்றால், "ஒவ்வொரு இடமும் இவ்வளவு நேரம் பார்த்தால் நான் எப்படி அடுத்த சவாரி கூட்டி வருவது, சீக்கிரம் வாருங்கள்!" என்று மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டான். "அடங்கொய்யா, ஏண்டா நீங்க ரெண்டு ட்ரிப் அடிக்கிறதுக்காக நாங்க சீக்கிரம் வர முடியுமா?" என்று கேட்டால், அவன் பேசுவதையே பேசிக் கொண்டிருந்தான். "இது தான் டயம், இதற்குள் வர வேண்டும்!!" என்று சட்டம் பேசினான். குழந்தைகள் இருக்கும்போது அப்படித் தான் ஆகும் என்று எவ்வளவோ சொல்லியும் புலம்பிக் கொண்டே அடுத்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

அது ஒரு சின்ன மலை. அந்த மலையில்  பனி இன்னும் இருந்தது. பனியில்  சென்று நடக்க, அங்கு வாடகைக்கு ஷூ ஒன்று விலை ஐம்பது ரூபாய். பனியில்  பட்டு குளிராமல் இருக்க நீளமான ஜாக்கெட் ஒன்றின் வாடகை நூறு ரூபாய். பனியில் வழுக்காமல் மேலே ஏற ஒரு குச்சி, அதற்கு வாடகை இருபது ரூபாய். உங்களை கைத் தாங்கலாய் கைட் ஒருவன் அந்த மலையின் உச்சி வரை கொண்டு போய் விட ஐநூறு ரூபாய். டிரைவர் வேறு அரை மணியில் வாருங்கள் என்று விரட்டிக் கொண்டிருந்தான். கூட்டத்தில் அரைடஜன் வயதானவர்கள் என்பதால், என் மனைவியும், என் மாமா பையனும் [ரஜினிகாந்த் வீடு போஸ்ட்ல படிச்சீங்களே, அவனே தான்!] சென்றார்கள். மற்றவர்கள் தேவுடு காக்க ஆரம்பித்தோம்.  நான் அமெரிக்காவிலேயே பனிச்சறுக்கு வேண்டிய மட்டும் ஆடி விட்டதால் ஒன்றும் சுவாரஸ்யமாய் இல்லை. தரு என்னை வைத்துக் கொண்டு எனக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்! எல்லோரும் போகாததால் அவன் சொன்ன அரை மணியில் போய் வண்டிக்கு அருகில் நின்றோம். நேராய் கீழே கொண்டு வந்து சேர்த்து விட்டான். அங்கிருந்து சன்னி எங்களை பிக்கப் செய்து கொண்டு ரிசார்ட்டில் கொண்டு சேர்த்தான். அவனிடம் இவர்கள் செய்யும் அநியாயத்தை எல்லாம் புலம்பினேன். அவன், "ஒன்றும் செய்வதற்கில்லை. இங்கு இது தான் நடைமுறை, அவர்கள் சம்பாதிப்பது நான்கு மாதங்கள் தான். ஒன்றும் செய்ய முடியாது!" என்றான். "இதற்குத் தான் எல்லோரும் போகும் இடம் வேண்டாம்" என்று சொல்கிறேன் என்று அவனிடம் மறுபடியும் ஒரு பிட்டு போட்டேன். "நீங்கள் கவலைப்படாதீர்கள், நாளை போகும் வழியெல்லாம் உங்களுக்கு என்ன காட்ட வேண்டுமோ பாருங்கள்!" என்று சொல்லி என்னை குளிர்வித்தான்! அன்று இரவு நன்றாய் சாப்பிட்டு விட்டு, நல்ல குளிரில் வெட்ட வெளியில் எல்லோரும் அமர்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய தினம் அலைந்து திரிந்து ஓய்ந்தது...

சுற்றுவோம்...
2 Responses
  1. இடங்களைப் பற்றி வாசிக்கும்போது இங்கே நம்ம நியூஸியில் இருப்பதைப்போலத்தான். என்ன ஒன்னு..... கூட்டம் இருக்காது.

    எங்கூரில் நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம். இந்தக் கணக்கில் உங்க குழுவே பேரணியாக இருக்கே!!!!

    ஒரு ஊருக்குப் பயணம் போகும்போது,
    அங்கே போய்ச் சேர்ந்து, உள்ளூர் வண்டி ஒன்னு எடுத்துக்கிட்டால் அநேகமா பல இடங்களைப் பார்க்கலாம். பாக்கேஜ் டூர் எனக்கு பிடிக்காது. யூரோப் டூர் இப்படிப்போய் சில இடங்களில் எரிச்சல்தான்:( முக்கியமாக பாரிஸில். அதுவும் மற்ற டூர் கம்பெனி பயணிகளால்:(


  2. ராஜி Says:

    எனக்கும் கூட எல்லோரும் போகும் இடங்களுக்கு போகும்போது இதையா எல்லோரும் சிலாகித்து பேசுறாங்கன்னு ஒரு ஏமாற்றம் மனசுக்குள் தோணும்.