"தரு" பிறந்து நேற்றோடு ஒரு வருடம் முடிந்து விட்டது. அவளின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் நேற்று! வழக்கமான பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. என்னைக் கேட்டால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை போல அலுப்பான ஒரு விஷயம் கிடையாது என்றே சொல்வேன். அதன் செலவு ஒரு புறம் இருக்கட்டும், அந்த நிகழ்ச்சியை நடத்தி முடிப்பதற்குள் இருக்கும் தர்ம சங்கடங்கள் இருக்கிறதே...குடும்பம், நண்பர்கள், உற்றார், உறவினர், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று அனைவரையும் கூப்பிட வேண்டியது, நம் குழந்தைக்கு கச கசவென்று ஒரு ஆடை அணிவித்து அவர்கள் முன்னால் ஒரு ஷோகேஸ் பொம்மை போல நிறுத்தி வைத்து விட வேண்டியது. இத்தனை நாள் தனியாய் தேமேயென்று இருந்த குழந்தை இன்று இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியாகி அழும். அதை சமாதானம் செய்ய, அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஐம்பது பேரும் குழந்தையின் முகத்துக்கு அருகே தங்கள் முகத்தை டைட் க்ளோசப்பில் வைத்துக் கொண்டு ஐநூறு வழிகளை சொல்வார்கள். குழந்தை இன்னும் வீரிட்டு அழும். ஒரு வழியாய் கேக்கை காட்டி, மெழுகுவர்த்தியை காட்டி அதை சமாதானம் செய்து கேக்கை வெட்டச் செய்வோம். "ஹேப்பி பெர்த்டே" பாடுங்கள், பாடுங்கள் என்று கெஞ்சி எல்லோரையும் அபஸ்வரத்தில் பாட வைக்க வேண்டியது. ஒரு வயது குழந்தை, கொஞ்சம் யோசித்து பாருங்கள்! கிலி பிடித்து போயிருக்கும். இதில் போட்டோ எடுத்தோமா, வீடியோ சரியாய் வந்ததா என்று அந்த டென்ஷன் வேறு! ஸ்வபா...
என்னை பொருத்தவரை மேல் சொன்ன அத்தனைக்கும் வித்திடுபவர் முக்கால்வாசி வீட்டு அம்மாவாக தான் இருக்க வேண்டும். கணவர்கள் பெரும்பாலும் சிக்கனமாகவே எல்லாவற்றையும் முடிக்கப் பார்க்கிறார்கள் என்பது என் கணிப்பு! [மகனை/மகளை அரசாங்க பள்ளியில் சேர்க்கலாம் என்று எனக்குத் தெரிந்து ஒரு மனைவியும்/அம்மாவும் சொன்னதில்லை [அவர்களே அரசு பள்ளியில் படித்த பெண்களாய் இருந்தாலும்!]. அதை போல!] குழந்தை பிறந்ததும், பிடிக்கிறதோ இல்லையோ, நாமும் மேல் சொன்னதை எல்லாம் கடந்து தான் போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். நல்ல வேளையாக என் மனைவி அப்படி ஒரு நிலைக்கு என்னை தள்ளவில்லை. என் மீது உள்ள பிரியம் ஒரு பக்கம் என்றாலும், தருவை படுத்த விரும்பாததே முக்கிய காரணம்! எப்படியோ நான் தப்பித்தேன்!
சரி அப்படி என்ன தான் செய்தோம்? முதலில் நிறைய கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். நாங்கள், என் பெற்றோர்கள், மனைவியின் பெற்றோர்கள், என் தம்பி குடும்பத்தினர். [என் மனைவி ஒரே பெண்!] அவ்வளவு தான்! மொத்தம் 8 பேர். அதாவது தரு வுக்கு தெரிந்த முகங்கள் மட்டுமே! வீட்டில் கொண்டாடுவதை விட, ஒரு நல்ல அமைதியான இடத்தில் கொண்டாடலாம் என்று ஒரு விருந்தினர் விடுதி ஏற்பாடு செய்தோம். தக்ஷின் சித்ரா! சென்னையில் [ஈ சி ஆர் ரோட்டில்] இப்படி ஒரு இடம் இருக்கிறதென்று பலருக்குத் தெரியாது. தெரியாதென்றால் தெரிந்து கொள்ளுங்கள். http://www.dakshinachitra.net/ தக்ஷின் சித்ரா ஒரு கலாச்சார மையம். தென் இந்திய பகுதிகளின் பாரம்பரியம், கலை, கைத்தொழில் என்று பலவித விஷயங்களை இங்கு காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இங்கு நான் ஏற்கனவே சில முறை சென்றிருந்தாலும், அங்கு விருந்தினர் விடுதி எல்லாம் இருக்கிறது என்று தெரியாது. எட்டு பேர், நான்கு அறைகள். அருமையாய் இருந்தது. முதல் நாள் இரவு சென்று தங்கி விட்டோம். காலையில் எழுந்து சரியாய் அவள் பிறந்த நேரமான "பதினொன்று எட்டுக்கு" கேக் வெட்டி அவளின் பிறந்தநாளை கொண்டாடினோம். பிறகு தக்ஷின் சித்ராவை சுற்றி பார்த்தோம். பரந்து விரிந்த இடத்தில் தரு அழகாய் நடை பயின்றாள். அவள் அக்காவுடன் விளையாடினாள். அவள் பிஞ்சு விரல்களால் களி மண்ணில் பானை செய்தாள்! ஊஞ்சல் ஆடினாள். மர நிழலில் இளைப்பாறினாள். பிறகு மதியத்திற்கு மேல் அங்கிருந்து திருவிடந்தை கோயில். அங்கிருந்து கோவளம் பீச்! கடல் அலைகளிடம் ஆசி! அவளின் பிறந்த நாள் இனிதே கழிந்தது.
இதை விட எங்களுக்கு திருப்திகரமாய் இருந்தது, இன்று காலை அவளின் பெயரில் அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ஒரு மரம் நட்டது! முதல் பிறந்தநாளுக்கு மகளுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று பல நாளாய் குழம்பிக் கொண்டிருந்தேன். திடீரென்று இந்த யோசனை தோன்றியது. சாலையில் வைத்தால் நம்மால் சரியாய் பராமரிக்க முடியாது, சாக்கடை, சாலைப் பணி என்று தோண்டி விடுவார்கள். வீட்டில் வைக்கும் அளவுக்கு வசதி இல்லை. சரி அருகில் உள்ள பூங்காவில் வைக்கலாம் என்று தோன்றியது. இரு வாரத்துக்கு முன் பஞ்சாயத்து அலுவலகம் சென்று கேட்டேன். நான் எதிர்பார்த்ததை விட ஆர்வமாய் பேசினார்கள். "நீங்கள் தேதி மட்டும் சொல்லுங்க, நல்லா செய்துடலாம்!" என்றதும் என்னால் நம்பவே முடியவில்லை. மரக் கன்றுகளையும் அவர்களே கொடுப்பதாய் சொன்னார்கள். நேற்று எதற்கும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த ஏ. ஈ யை அழைத்தேன். "என்ன சார், நம்ம பேசின படி பண்ண முடியுமா என்று கேட்டேன். பதிலுக்கு அவர், "என்னப்பா இப்படி கேக்குறே? திடீர்னு பேக் எடுக்குறே? [!] கண்டிப்பா பண்ணலாம்பா" என்றார். காலை பதினோரு மணி என்று நேரம் குறித்து சென்றோம். அவர் அவரின் உதவியாளர்கள் இருவரை அனுப்பினார். அவர்களே சென்று புங்கை [நல்ல நிழல் தரும்] மரக் கன்று வாங்கி வந்தார்கள். பள்ளம் தோண்டினார்கள். என் "தரு" வின் கையினால் அந்தத் "தரு" மண்ணில் இறங்கியது. அவளே நீர் வார்த்தாள். பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது.
அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு இனிப்பு டப்பாவை வழங்கி விட்டு "வழக்கம் போல்" ஏதாச்சும் பண்ணனுமா என்று கேட்டதற்கு "அப்புறம் நாங்க பண்ணதுக்கே அர்த்தம் இல்லாமல் போயிடும் சார், ஒன்னும் வேணாம்! நீங்க கொடுத்ததே போதும்" என்று மறுத்து விட்டார்கள். [கலிகாலம்!] இனி என் தருவோடு அந்தத் தருவையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்து விட்டது! என்னை பொருத்தவரை, முதல் பிறந்தாளில் அவளோடு சேர்ந்து ஒரு மரமும் வளர்ந்து பெரிதானால் அதை விட ஒரு சிறந்த பரிசு அவளுக்கோ, இந்த சமூகத்துக்கோ கிடைக்குமா தெரியவில்லை. என்ன சொல்கிறீர்கள்?
Beautiful write-up Pradeep.. Nice idea of planting a tree on Birthday... Keep up the good work.. Even I don't know about Dakshina Chitra's overnight stay plans... May be Next time I have to try that...
அருமை... அருமை... வாழ்த்துக்கள்...
Pradeep.... really grt...
வாழ்த்துகள் முதலில் தருவுக்கு..... பின்னர் தருவின் அப்பாவுக்கு...
தோழர், பிரதீப் மண்ணில் நடும்போது அது செடிதான். வளர்ந்த பின்னரே தரு. ஆகவே, செடியை நட்டீர்கள், வளர்ந்து தருவாவது வரை கண்காணிப்பது இனி உங்கள் பொறுப்பு..... இந்தத் தருவுக்கு க்ளிப் எல்லாம் வாங்க வேண்டியதில்லை.... :)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மனம் நிரம்பிய அருமையான நிகழ்வுகள்..!
good Pradeep..Best Work....Keep it up...Best Wishes to all..spl to Tharu...
பிறந்த நாளுக்கு மரம் நட்டது சூப்பர் ஐடியா..