"ரயில்வே ஆண்டி" என்ற ஒரு கில்மா கதை. அதை தான் பி ஏ பாஸ் என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார்கள். "ஒரு அப்பாவி ஆண் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எப்படி மிகப் பெரிய ரவுடியாகிறான்" என்று தமிழ்பட இயக்குனர்கள் தங்களின் படங்களை பற்றி சொல்வதை பல பேட்டிகளில் கேட்டிருப்போம். அதே போல் தான் இந்தக் கதையும். ஒரே வித்தியாசம் இந்தப் படத்தின் கதாநாயகன் ரவுடிக்கு பதிலாக விபச்சாரனாகிறான் [இந்தப் பதம் சரிதானா?!]

கதாநாயகனின் (முகேஷ்) பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார்கள். அவனுக்கு இரண்டு தங்கைகள். இனி அவர்கள் மூவரையும் யார் பார்த்துக் கொள்வது என்று உறவினர் மத்தியில் ஒரு குழப்பம். முகேஷை தில்லியில் அத்தை வைத்துக் கொள்வதாயும், அவன் தங்கைகளை தாத்தா வைத்துக் கொள்வதாயும் முடிவாகிறது. முகேஷ் பி. ஏ. படித்துக் கொண்டிருக்கிறான். அவன் தலையெடுத்துத் தான் அந்தக் குடும்பத்தை இனி காப்பற்ற வேண்டும்.

தில்லியின் ஒரு ரயில்வே காலனியில் அத்தையின் வீட்டில் முகேஷ் வேறு வழியில்லாமல் ஒண்டிக் கொள்கிறான். அந்த வீட்டில் ஒரு வேலைக்காரனை போல் இருக்கிறான். இயல்பாய் சதுரங்கத்தில் உள்ள ஆர்வத்தின் காரணமாய் முகேஷ் அங்கு சவப்பெட்டி செய்யும் ஒருவனை நட்பாக்கிக் கொள்கிறான். அந்த நண்பனுக்கு மொரீஷியஸ் போக வேண்டும் என்பது கனவு. கையில் காசில்லாததால் கனவை புதைத்து விட்டு, பிறரை புதைக்க சவப்பெட்டி செய்து வாழ்கிறான். ஒரு முறை, அத்தையின் தோழிகள் சிலர் வீட்டுக்கு வருகிறார்கள். முகேஷ் வழக்கம் போல் எல்லோருக்கும் எடுபுடி வேலைகளை செய்கிறான். அதில் ஒரு பெண் சாரிகா. முகேஷை பார்த்ததும், "என் வீட்டுக்கும் வந்து வேலை செய்து கொடு" என்று அவனை கூப்பிடுகிறாள். அத்தையின் வற்புறுத்தலின் பேரில் அவள் வீட்டுக்கு செல்கிறான். அங்கே சாரிகா அவனை வற்புறுத்தி அவனிடம் உறவு கொள்கிறாள். நல்ல உடைகள் வாங்கிக் கொள்ளச் சொல்லி அதற்கு பணமும் தருகிறாள். அதுவே அவர்களிடையே நாளடைவில் பழக்கமாகிறது. புது உடைகளை பார்த்து கேள்வி கேட்கும் அத்தையிடம் டியுஷன் எடுப்பதாக பொய் சொல்கிறான்.

ஒரு நாள் ஊரில் உள்ள தாத்தா இறந்து விடுகிறார். தங்கைகள் மீண்டும் அநாதை ஆகிவிடுகிறார்கள். அத்தை மற்றும் உறவினர்கள் எல்லோரும் அவர்கள் இருவரையும் ஒரு ஹோமில் சேர்த்து விடுகிறார்கள். இதை எல்லாம் அறிந்த சாரிகா, அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒரு நம்பர் கொடுத்து முகேஷை அங்கு போக சொல்கிறாள். அங்கிருக்கும் ஒரு ஆண்டி இவனை வற்புறுத்தி உறவு கொள்கிறாள். அதற்கு பணமும் தருகிறாள். சாரிகாவிடம் முகேஷ், தான் அப்படிப் பட்ட பையன் இல்லை, இப்படி பணம் சம்பாதிக்க விரும்பவில்லை என்று சொல்கிறான்.  பதிலுக்கு சாரிகா, "பி. ஏ. படித்து முடித்ததும் ரயில்வே போர்ட்டில் பெரிய பதவியா உனக்குக் கிடைக்கப் போகிறது? உனக்கு பணம் தேவை, அதற்கு தான் உதவி செய்கிறேன்,  உன் தங்கைகளின் நிலையை நினைத்து பார்"  என்று சொல்லி அவளின் தந்திரத்துக்கு மசிய வைக்கிறாள். ஆண் துணை தேவைப்படும் அவளுக்குத் தெரிந்த எல்லா பெண்களின் நம்பரையும் அவனுக்கு தருகிறாள். வேறு வழி தெரியாமல், பணத்தின் காரணமாக அவனும் அதில் தீவிரமாய் ஈடுபடத் தொடங்குகிறான்.

தங்கைகள் இருக்கும் அந்த ஹோமில், வார்டனும், மற்ற  சில பெண்களும் ஒழுக்கம் கெட்டவர்களாய் இருக்கிறார்கள். அதனால் அவன் தங்கைகளுக்கும் பிரச்சனையாய் இருக்கிறது. தான் சம்பாதிக்கும் பணத்தில் அவர்களுக்கு ஒரு ஃபோன் வாங்கித் தருகிறான். எப்படியாவது அவர்களை ஒரு தனி வீட்டுக்கு குடித்தனம் வைத்து விட வேண்டும் என்று முனைகிறான். அதற்காக தன் நண்பனிடம் சொல்லி ஒரு வீடும் பார்த்து விடுகிறான். அத்தையின் வீட்டில் பணம் இருப்பது பல கேள்விகளை எழுப்பும் என்பதை புரிந்து கொண்டு, சாரிகாவிடம் பணத்தை கொடுத்து வைக்கிறான். அப்போது அவர்கள் உறவு கொள்ளும்போது அவள் கணவன் அவர்களை கையும் களவுமாக பிடித்து விடுகிறான். சாரிகாவின் கணவன் முகேஷின் அத்தையிடம்  இல்லாதது பொல்லாததை சொல்லி, முகேஷை வீட்டில் சேர்க்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும், முகேஷின் அத்தையை ஒரேடியாய் வில்லியாக காட்டாமல் இயல்பான ஒரு கதாப்பாத்திரமாக வடித்ததற்கு ஒரு சபாஷ்! முகேஷ் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறான். நண்பனின் வீட்டில் தஞ்சம் அடைகிறான். சாரிகாவிடம் பணம் மாட்டிக் கொண்டு விட்டதால், தான் முன்பு சென்று வந்த அத்தனை பெண்களுக்கும் வேலைக்காக மீண்டும் ஃபோன் செய்கிறான். எல்லோரும் ஃபோனை துண்டித்து விடுகிறார்கள். சாரிகா எல்லாவற்றையும் தடுத்து விட்டால் என்று புரிகிறது.

எப்படியாவது சாரிகாவிடம் இருக்கும் தன் பணத்தை வாங்கியாக வேண்டும், ஆனால் இத்தனை பிரச்சனைக்குப் பிறகு அங்கு போகவும் முடியாது என்று நினைத்து என்ன செய்வதென்று தெரியாமல், தன் நண்பனை சென்று வாங்கி வரச் சொல்கிறான். போனவன், அவள் "என்னை உள்ளேயே விடவில்லை, பணம் எல்லாம் இல்லை என்று சொல்லி விரட்டி விட்டுவிட்டாள்" என்று சொல்கிறான். ஆத்திரம் கொண்ட முகேஷை அவன் நண்பன் தேற்றுகிறான். தங்கைகள் முகேஷை தங்கள் பிரச்சனை சொல்லி நெருக்குகிறார்கள். அவர்கள் வார்டன் தொல்லை தாங்காமல் தப்பித்து வெளியே வந்து விட்டதாக சொல்கிறார்கள். மறுநாள் ரயில்வே நிலையத்தில் வந்து தங்களை கூட்டிச் செல்லும்படி கெஞ்சுகிறார்கள். ரயில்வே நிலையம் வந்ததும் தனக்காக காத்திருக்கச் சொல்லிவிட்டு அன்று இரவு அதே கட்டடத்தில் விபச்சாரனாய் இருக்கும் ஒருவனின் துணையோடு விபச்சாரத்துக்குச் செல்கிறான். சாலையில் கிராக்கிக்காக காத்திருக்கிறான் [ஆணாய் இருந்தாலும் சரி!]. ஒரு காரில் குடித்து விட்டு வரும் மூன்று ஆண்கள் அவனை வலுக்கட்டாயமாய் தூக்கிச் சென்று வன்புணர்வு செய்து அனுப்பி விடுகிறார்கள்.

மிகவும் நொந்து போன தருவாயில் வேறு வழியே இல்லை என்று நினைத்து மறுநாள்  நேராய் சாரிகாவின் வீட்டுக்கு போகிறான். பூட்டிய வீட்டை திறந்து பணத்தை தேடுகிறான். அப்போது சாரிகா வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வருகிறாள். அவளிடம் பணத்தை கொடுக்கச் சொல்லி கத்தியை காட்டி மிரட்டுகிறான். அவளோ, அவன் நண்பனிடம் கொடுத்து விட்டதாய் சொல்கிறாள். நண்பனின் மேல் மிகுந்த நம்பிக்கை உள்ள முகேஷ் அவள் பொய் சொல்கிறாள் என்று வாக்குவாதம் செய்கிறான். அந்த வாக்குவாதத்தில் அவளின் பிடியில் தன்னை போல் பல இளைஞர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்கிறான். இந்த சமயத்தில் சாரிகாவின் கணவன் வந்து விடுகிறான். அவன் கதவை தட்டிக் கொண்டே இருக்கும்போது, சாரிகா, தன் வயிற்றின் மீது கத்தியை வைத்து மெல்ல அழுத்து என்று சொல்கிறாள். மறுபடியும் ஒரு நாடகம் ஆடுகிறாள் என்று நினைத்த முகேஷ், இந்த முறை நீ மட்டும் தப்பிக்க நான் மாட்ட மாட்டேன் என்று அவள் வயிற்றை குத்தி கிழித்து விடுகிறான். அங்கிருந்து ஓட்டம் பிடித்து நண்பனை பார்க்க செல்கிறான். அவன் அறையை காலி செய்து விட்டு மொரீஷியஸ் போய் விட்டதை தெரிந்து கொள்கிறான். ஒரு பக்கம் போலீஸ் இவனை துரத்துகிறது, மறுபக்கம் தங்கைகள் ரயில்வே நிலையத்தில் இவனுக்காக காத்திருக்கிறார்கள். போலீசிடம் இருந்து தப்பித்து ஓடும்போது ஒரு கட்டடத்தின் மாடியில் மாட்டிக் கொள்கிறான். தங்கைகளின் அழைப்பை துண்டித்து விட்டு அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறான்!!
அதோடு படம் முடிகிறது.

ஒரு கில்மா கதையை என்ன ஒரு அருமையான வாழ்வனுபவமாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்த மாதிரி கதைக்கு மிக அழகான ஒரு மாமியை (ஆண்டி!) தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், அப்படி எல்லாம் இல்லாமல் கதைக்கு பொருத்தமாய் ஷீபாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையான தேர்வு. குறிப்பாக, ஷதாப் கமல் (முகேஷ்), அந்த பாட்டி, அத்தை, முகேஷின் நண்பன்! எல்லோரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அந்த மாதிரி படம் பார்த்த உணர்வே இல்லை. படம் முடியும்போது அது நமக்குள் பல வித கேள்விகளை எழுப்பிச் செல்கிறது. இந்தப் படம் பார்க்கும்போது எனக்குத் தோன்றிய சில எண்ணங்கள் இவை...

விபச்சாரிகளை போல் அவர்கள் ஏன் சமூகத்தில் அவ்வளவு பிரபலமாய் இல்லை? மும்பையை போல், கொல்கத்தாவை போல் ஒரு சிவப்பு விளக்கு பகுதி சென்னையிலும் வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் கொடி பிடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் விபச்சாரன்கள் ஏன் சமூகத்தில் மறைந்து வாழ்கிறார்கள்? விபச்சாரன்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? பொதுவாய் ஆண்களுக்கு பல பெண்களிடம் உறவு கொள்ள ஆசை தான்! அது Genetical Defect. அப்படி இருக்கும்போது அதுவே தொழிலாய் செய்து வருமானமும் வந்தால்? அதோடு பெண்களுக்கு ஆண்களால் வரும் அளவுக்கு பாலியல் துன்பங்கள் வரவும் வாய்ப்பு அதிகமில்லை. ம்ம்ம்....அப்படியும் சொல்ல முடியாது, இதை படித்துப் பாருங்கள். http://meetmerighthere.wordpress.com/2011/01/30/busted/

Jokes apart, படத்திற்கு வருவோம். ஒரு சொற்ப சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு அப்பா திடீரென்று விபத்தில் இறந்து விட்டால், அந்த விபத்து உண்மையில் அவர் குடும்பத்துக்குத் தான் இல்லையா?! பொதுவுடைமை பற்றி பேசும்போது சொல்வார்கள், முதலாளித்துவத்தில், வயதான, நமக்கு உதவி செய்ய முடியாத அம்மாவும் ஒரு சுமை தான் என்று! இந்தக் கதையே எடுத்துக் கொள்ளுங்கள், முகேஷும் அவன் இரு தங்கைகளும் தங்களின் பெற்றோர்களின் மரணத்தால் என்ன என்ன கஷ்டங்கள் அனுபவிக்கவில்லை? ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அந்த பெண்களின் அழைப்பை துண்டித்து விட்டு அவன் விழுந்து சாகிறான். அந்த இடத்தில் அவனின் பெற்றோர்களை போல அவனுக்கும் விடுதலை கிடைத்து விட்டது. ஆனால் அவர்களின் தங்கைகளுக்கு இனி தான் தண்டனை காத்திருக்கிறது. இப்படி நம் நாட்டில் எத்தனை முகேஷ்களும் அவன் தங்கைகளும் இருப்பார்கள்? இத்தனை பெரிய நகரத்தில் ஒரு சக மனிதனின் துயர் துடைக்க ஒருவர் கூட இல்லை என்று நினைக்கும்போது பயமாய் இருக்கிறது. துணை இல்லாதவர்களுக்கு நகரத்தை போன்ற ஒரு நரகம் கிடையாது என்றே நினைக்கிறேன். நம் குடும்பத்தை ஒரு முறை கட்டி அணைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.
4 Responses

  1. நம் குடும்பத்தை ஒரு முறை கட்டி அணைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.


  2. Unknown Says:

    b a பாஸ் படம் ,ரசிகர்களிடம் பாஸ் மார்க் வாங்குமென தோன்றவில்லை !
    உங்கள் பயம் நியாயமானது !


  3. Anonymous Says:

    Oru palaya padathin nyabagam vandadu. Thavamai thavamirundu padam paarthapodu aj kiran kashta paduvadai rombovum yadaarthamaaga eduthirundaargal.. appodu enakku thonriyadu.. raj kiranidam velai paarpavaraga oru character.. avan kudumba innum eppadi irukkum... ippoludellam inda maadiriyamana padathai thavirthu varugiren... jollyaga oru padathai paarthutu maranduradun avvalavu thaann... K.R.S.Balaji