நாலு பெட்டி கேஸ்கள் ஒன்று கூடி பெரிய கேஸ் ஒன்றில் முற்படுகிறார்கள். நான்கு பேரில் ஒருவனுடைய நன்றி கெட்ட பணக்கார மாமாவின் வீட்டில் கன்னம் வைக்கிறார்கள். பிறகு நடந்தது என்ன? இது தான் மூடர் கூடம்.

படத்தின் ஹைலைட்ஸ்!

திரைக்கதை. தமிழ் சினிமா இயக்குனர்கள் எல்லா பேட்டிகளிலும் இது வித்தியாசமான படம் என்று காலங்காலமாய் சொல்லி சொல்லி வித்தியாசமான படம் என்றாலே என்னவென்று தெரியாத அளவுக்கு நம்மை மழுங்கடித்து விட்டார்கள். நவீன் பேட்டியில் இதை வித்தியாசமான படம் என்று சொன்னாரா இல்லையா தெரியவில்லை. என்னை பொருத்தவரை இது தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான படம் தான்!

என்ன வித்தியாசம்?

* காலங்காலமாய் தமிழ் சினிமாவில் இரண்டு கேரக்டர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவர் முகத்தை திருப்பி ஜன்னல் பக்கமோ, கதவின் இடுக்கிலோ நின்று கொண்டால் அங்கு ஃபிளாஷ்பேக் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். [எனக்கு ஒரு சந்தேகம், ஒருவரிடம் பேசும்போது அதுவும் முக்கியமான ஒரு தகவலை சொல்லும்போது நம் முகத்தை வேறு பக்கம் வைத்துக் கொண்டு கேட்பவருக்கு முதுகை காட்டிக் கொண்டு நம் அன்றாட வாழ்வில் இப்படி எப்போதாவது பேசி இருப்போமா? இதை எப்படி சினிமாவில் கொண்டு வந்தார்கள்? யார் இதன் முன்னோடி?] அது இந்தப் படத்தில் இல்லை! "-----ன் முன்கதை" என்று ஒவ்வொரு கதாப்பத்திரத்துக்கும் தெள்ளத்தெளிவாய் பேர் போட்டு தான் ஃபிளாஷ்பேக்கை நவீன் ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி, ஒரு ஃபிளாஷ்பேக் சாப்ளீன் பட ஸ்டைலில், இன்னொன்று கார்டூன் பட ஸ்டைலில் என்று ஒவ்வொரு ஃபிளாஷ்பேக்கும் ஒவ்வொரு விதம். ஒரு நாய்க்கு இவ்வளவு பெரிய பாட்டா என்று ஓவியா அங்கலாய்க்கும் வகையில் ஒரு சூப்பர் பாட்டு ஃபிளாஷ்பேக்! நாய், பொம்மை என்று படத்தின் ஒரு பிரதான கேரக்டரையும் விடவில்லை.

* அதோடு வழக்காமன் காட்சிகளையும் அவர் காட்சிப்படுத்தி இருக்கும் விதம். ஒரு டீ என்று ரெண்டு ரூபாய் காசு அலைபாய்வதில் ஆரம்பித்து, தாய் நாயிடம் இருந்து பால் குடிக்கும் ஒரு குட்டி நாயை பிரித்தெடுப்பது [என்ன ஒரு துயரமான காட்சி அது!], டைட் க்லோசப்ஸ், வித்தியாசமான காமெரா கோணங்கள் என்று படம் நெடுகிலும் அவரின் ஒவ்வொரு ஃபிரேமும் அசத்தல்.
வசனம். மேலோட்டமாய் பார்த்தால் நகைச்சுவை. உள்ளார்ந்து பார்த்தால் அதில் தெறிக்கும் அவரின் புத்திசாலித்தனம், சமூக அக்கறை, வாழ்க்கையின் புரிதல்.

உதாரணம்: கஞ்சா பொட்டலம் வாங்கும் ஒருவன்:

என்ன ஒரு பொட்டலம் நானூறு ரூவாயா? உங்களை எல்லாம் கேக்க ஆளில்லியா?
செண்ராயன்: ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரெண்டாருவா வித்த டீ இன்னைக்கி ஆறு ரூவா. அதை கேக்கவே இங்கே ஆளில்லைங்கும்போது இதெல்லாம் கேக்க எந்த பூ-----வும் தேவையில்லை.

ஓவியா: கூடவே ஒரு ஆள் இருந்தா எப்படி பாத்ரூம் போறது?
நவீன்: அதுக்காக உன்னை ராக்கெட் ஏத்தி நிலாவுக்கா அனுப்ப முடியும்?

சுபிக்ஷா: பீட்சா ஆர்டர் பண்ணலாம்
செண்ராயன்: அது என்ன ஸ்வீட்டா, காரமா?

மத்தவங்க கிட்ட இருந்து எடுக்குறது மட்டும் இல்லை; மத்தவங்களை எடுக்க விடாம தடுக்குறதும் திருட்டு தான்!

 அந்த மாமர சித்தாந்தம் என்று படம் நெடுகிலும் பல நச்!

* செண்ராயன், ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் தமிழ் சினிமாவுக்கு ஒரு கொடை! நல்ல இயக்குனர்கள் கையில் கிடைத்தால், தமிழ் சினிமாவையும் தலை கீழ் நிற்க வைத்து விடுவார்!!

* சுபிக்ஷா தானே அந்த சின்ன ஹீரோயின்? அடடா...என்ன நடிப்பு. அந்த புன்முறுவல் பூக்கும் கண்களும், அந்த சின்ன ஸ்மைலும், தேவதை...

* அதோடு அந்த தின்னிப்பண்டார குழந்தை...என்ன ஒரு உடல்மொழி...அருமை!
அந்தக் குழந்தையிடம் பேசுவதற்கு முன் கொடுக்கப்பட்ட பில்டப் நச்ச்!

* குபேரனின் வாய் படம் முடிந்ததும் அப்படியே மாறி விட்டிருக்குமோ என்று தோன்றுகிறது. அப்படி ஒரு முட்டாள்தனமான [ஐய்யயோ!] உக்கிரம். இறுதியில் அவரின் மூலம் வெளிப்படும் சோகம் சமூகத்தின் பிரதிபலிப்பு.

* கூத்துப்பட்டறை ஆதிராவுக்கு நிறைய வேலை இல்லை, பாஸ்கர் தக்காளி பாத்திரத்துக்கு உகந்த தேர்வு.

* மற்றும் வொயிட், சேட்டு தாதா, டான், தனி திருடன், லோக்கல் தாதா, ஆட்டோ ரவுடி என்று அனைவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாய் செய்திருக்கிறார்கள்.

* இசை. படத்தின் இசை மிக முக்கியமான ஒரு பங்களிப்பு. பாடல்கள், பின்னணி இசை என்று பின்னி பெடலெடுத்து இருக்கிறார் நடராஜ் சங்கரன்.

* டோனியின் கமெரா அந்த மூடர் கூடத்தில் நாமும் ஒருவராய் உணரச் செய்கிறது.

* படத்தின் ஒரே அலுப்பு தரும் விஷயம் நவீனின் ஒரே வித முகபாவங்களும் அவருடைய டயலாக் டெலிவரியும் தான்! மனிதர் வாயையே திறக்க மாட்டேன் என்கிறார். பரவாயில்லை, இப்படி ஒரு படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்து என்று இத்தனை சாதனைகளை அவர் ஒருவரே செய்ததால் அவரின் நடிப்பை மன்னித்து விடலாம்!

* நவீன் மூடர் கூடமாய் இருக்கும் தமிழ் சினிமா உங்களை மாதிரி இயக்குனர்களால் தான் தெளிய வேண்டும். உங்களை சிவப்புக் கம்பளம் விரித்து வாழ்த்தி வரவேற்கிறோம்!
1 Response
  1. Anonymous Says:

    வணக்கம்
    பதிவு அருமை வாழ்த்துக்கள்

    இனியதீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-