வெகு நாட்களுக்குப் பிறகு இன்று ஒரு படத்திற்குச் சென்று டிக்கட் கிடைக்காமல் திரும்பி வந்தேன். சந்தோஷமாய் இருந்தது. க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் "சூது கவ்வும்" பன்னிரண்டே முக்காலுக்கு இருக்கிறது என்று தெரிந்து பனிரெண்டு மணிக்கு கிளம்பினேன். நான் போன போது ஃபுல்! என் கல்லூரிக் காலங்கள் நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம் நோ ஆன்லைன் புக்கிங்! தியேட்டர் சென்று வரிசையில் நின்று தான் டிக்கட் எடுக்க வேண்டும். பெரிய படத்திற்கு கூட்டம் அம்மும்! ஒரு படத்திற்கு சென்று டிக்கட் கிடைக்காமல் பக்கத்து ஸ்க்ரீனில் ஓடும் மொக்கை படத்துக்கு போன அனுபவம் நிறைய உண்டு! பார்க்க வந்த படத்தை பார்க்க முடியாததால் பார்த்த வேறு படத்தை நம்மால் மறக்கவே முடியாது என்று தான் நினைக்கிறேன்! அதிலும் அந்த மற்றொரு படம் முக்கால்வாசி மொக்கையாய் தான் இருக்கும். சில சமயம் பார்க்க வந்த படத்தை விட நல்லதாய் அமைந்து விடுவது உண்டு! உதாரணம், நான், ரோஜாவுக்காக "இந்து" பார்க்கப் போய் டிக்கட் கிடைக்காமல் "கிழக்குச் சீமையிலே" பார்த்தேன். பின்னாளில் டீவியில் "இந்து" பார்க்கும்போது நல்ல வேளை டிக்கட் கிடைக்கவில்லை என்று பட்டது! இன்று டிக்கட் கிடைக்காத போது, அடடா...இந்த ஆன்லைன் காலத்தில் கவுண்டரில் டிக்கட் வாங்கப் போய் டிக்கட் கிடைக்காமல் திரும்பியது வித்தியாசமான அனுபவமே! சரி "வெற்றி" யில் தான் வெற்றி கிட்டவில்லை என்று மடிப்பாக்கம் "குமரனுக்கு" போனேன். அங்கு இரண்டரை மணிக்குத் தான் ஷோ. முதல் ஆளாய் போய் எண்பது ரூபாய் டிக்கட் வாங்கிக் கொண்டேன்!
நான் படத்தின் கதையை சொல்லவில்லை, இருந்தாலும், நீங்கள் படம் பார்த்து விட்டு இந்த பதிவை படித்தால் சரியாய் இருக்கலாம்! யோசித்துக் கொள்ளுங்கள்...
இந்தப் படத்தின் போஸ்டரிலேயே ஒரு எதிர்பார்ப்பு வந்தது. யோசித்துப் பார்த்தால், ஒரு படம், எப்படி இருக்கும் என்பது பாதி அந்தப் படத்தின் போஸ்டரிலேயே தெரிந்து விடுமோ என்று தோன்றுகிறது. உதாரணம்: திருமதி தமிழ்!
படத்தின் ஒன் லைன்: ஒரு அமெச்சூர் கிட்னாப்பெர்ஸ் ஒரு பெரிய கிட்னாப்பில் இறங்கியதால் அவர்களுக்கு என்னவாகிறது என்பது தான் கதை!
விஜய் சேதுபதியை காட்டியதும் தியேட்டரில் விசில் பறக்கிறது. சுந்தரபாண்டியன் படத்திற்குப் போனபோது இடைவேளையில் ஓரமாய் நின்று நண்பர்களுடன் தம்மடித்துக் கொண்டிருந்தார். இன்று!!!........மூன்றே படம்!! [நமக்கு மூன்று படம், அவருக்கு பத்து வருடம்!] சமீபத்தில் வந்த புது முகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர். விஷாலை விட, கருப்பானாலும் கலையா இருக்குறது இவர் தான்னு தோணுது! நடிப்பிலும் மனிதர் பின்னுகிறார். பெரிய ரவுண்ட் வர வாழ்த்துக்கள்.
சிம்ஹா: ஒன்றரை லட்சம் செலவு செய்து தன் அப்பாவே மயங்கி விழும் அளவுக்கு ஒரு காரியத்தை செய்து விட்டு [என்ன காரியம் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!] திருச்சியிலிருந்து சென்னைக்கு கம்பி நீட்டி, எல்லா வம்பிலும் மாட்டி, ரொமான்ஸ் வராமல் அடி வாங்கும் கடைசி சீன் வரை பையன் துரு துரு! கொழுக் மொழுக் என்று அமுல் பேபி மாதிரி இருக்கிறார்.
ரமேஷ் திலக்: காலையில் அலாரம் வைத்து எழுந்து குளித்து முழுகி, தலைவாரி இவர் செய்யும் அந்தக் காரியம் இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் கனவு! சூப்பர். சைக்கோ போலீசிடம் GUN காட்டி அவர் முகத்தில் குத்தும் இடத்தில் மரண கலாய்! மாட்டியவுடன்,அதை நினைத்து நினைத்தே பிறகு இவரை அவர் பின்னி எடுக்கிறார். மிக இயல்பான நடிப்பு!
அசோக்: சாப்ட்வேர் எஞ்சினியர். அதிகம் வேலை இல்லை. கொடுத்ததை சரியாய் செய்திருக்கிறார்.
சஞ்சிதா: என்ன படம் எடுத்தாலும், அது எத்தனை வித்தியாசமாய் இருந்தாலும், இப்படி ஒரு பிளாஸ்டிக் பெண்ணை போட்டுத் தான் எடுக்க வேண்டி இருக்கிறது. படத்தில் அத்தனை பேறும் வெகு லோக்கலாய் இருக்கிறார்கள். இந்த அம்மா மட்டும், ஏதோ "அன்பே வா" பட ஷூட்டிங்கில் இருந்து வந்தது போல் ஃபுல் மேக்கப் போட்டுக் கொண்டு டார்ச்சர் கொடுக்கிறார். படத்திற்கும், கதைக்கும் ஒட்டவேயில்லை. ஆமாம் எதற்கு இந்த காரெக்டர்?
கருணா: இவரின் குறும்படங்களை பார்க்கும்போதே தெரியும். அனாயாசமாய் நடிப்பார். இனிமேல், இந்த அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு காமெடி பண்ணும் காரெக்டரை விட்டு விட்டு வேறு ஏதாவது புதுசாய் செய்ய வேண்டும். அப்போது தான் இவரின் உண்மையான நடிப்பு வெளிப்படும்.
யோக் ஜப்பி: சைக்கோ போலீஸ். படத்தில் ஒரு டயலாக் இல்லை! மனிதரின் பார்வை, உடல்மொழியை பார்த்தாலே, எப்போது யாரை என்கவுண்டர் செய்வாரோ என்று தான் இருக்கிறது. செம ஃபிட்டு!
அருள்தாஸ் [விஜய்யின் அண்ணன்]: நான் அடிமை இல்லை படத்தில் ஒரு அருமையான காரெக்டர் செய்திருந்தார். இதிலும் மிக பிரமாதமாய் நடித்திருக்கிறார். கிளைமேக்சில் இவரின் கோபம் உச்சம்!
படத்தின் இசை மிகப் பெரிய ப்ளஸ். மாமா டவுசர் கழண்டுச்சு, காசு, பணம், துட்டு, மணி [ஆட்டம் கொண்டாட்டம்!] பாடல்கள் எஃப் எம்மில் கேட்கும்போதே பிடித்துப் போனது, செம ரவுசு. எல்லாம் கடந்து போகும் பாடல் ரெட்ரோ ஃபீலில் அருமையாய் இருந்தது. பாடியது கோவை ஜலீல். அருமை...
படத்தின் பெரிய ஹீரோ கதை, வசனம், அதை எழுதி, இயக்கிய இயக்குனர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் பட்டையை கிளப்புகிறது. ஒவ்வொரு ட்விஸ்டும் சீட்டில் நம்மை இன்னும் அழுத்தி உட்கார வைக்கிறது. படத்தில் எனக்கு உருத்தியதே ஒரே விஷயம்...அதனுடைய முடிவு! தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்! இதில் இந்த படத்திற்காக "சூது கவ்வும்" என்ற பகுதியை மட்டும் எடுத்தாண்டிருக்கிறார் இயக்குனர். மனிதர் மீண்டும் தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையை தரவில்லை! படம் பார்க்கும் நாமும், அதன் உறுத்தல் இல்லாமல் சிரிப்பில் மயங்கிக் கிடக்கிறோம். அது தானே இயக்குனர் சாமர்த்தியம்!!
Kilakku seemayile oru koduramana padam... Inda padam nalla irukkumnu namburen
KRS
KRS
Kilakku Seemayile is far better than Indu! enakku pudichathu unakku ennai pudichurukku...vidu vidu!!