மதுரைக்குப் போயிருந்தேன். சென்னையில் இருந்து விட்டு மதுரைக்கு சென்றால் ஏதோ எல்லோரும் ஊரை காலி செய்து விட்டு போய் விட்டது போன்றதொரு உணர்வு. அத்தனை காலியாக இருக்கிறது. இதுவா காலி, எவ்வளவு கூட்டம் பார் என்று மதுரை மக்கள் என் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள்! அவர்களை ஒரு முறை சென்னை வந்து போகச் சொல்லியிருக்கிறேன். அதிகாலையில் பஸ்ஸிலிருந்து தாம்பரத்தில் இறங்கி மின்சார ரயிலில் டிக்கட் எடுக்க வரிசையில் நின்றால் போதும், வந்த வழியே, அப்படியே ஊருக்குக் கிளம்பி விடுவார்கள்! பெங்களூரில் நான் இருந்த போது அலுவலகத்தில் எத்தனை கன்னடக்காரன் இருக்கிறான் என்று எண்ணி (வலை வீசி தேடி) பார்ப்போம்.ஒன்று அல்லது இரண்டு பேர் சிக்குவார்கள்!இன்று அது போல் ஆகிவிட்டது; சென்னையில் பிறந்து வளர்ந்தவனை தேடுவது! மேற்கில் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் வசிப்பவர்கள் எப்படி மும்பையை நோக்கி படையெடுக்கிறார்களோ, அதே போல் தெற்கில் இருப்பவர்கள் சென்னையை நோக்கி படையெடுக்கிறோம். இதனால் கூட்டம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. பேசாமல் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் நுழைய விசா வழங்க வேண்டியது தான்! (இதைச் சொன்னா நம்மளை பைத்தியம்னு சொல்றாங்க!) முதல் கட்டமாக வெளியிலிருந்து வந்தவர்களை வெளியேற்ற வேண்டும். அடியேன் அதில் மாட்டுவேன் என்பதால் சென்னைக்கு வந்து ஐந்து வருடம் ஆகியிருந்தால் அவர் அப்படியே இருக்கலாம் என்று ஒரு அட்ஜஸ்மென்ட்டை செய்து கொள்ளலாம்!
உள்ளபடி சொன்னால் நான் பார்க்க விரும்பும் சென்னை பழைய தமிழ் படங்களிலும், ஜெயகாந்தன் நாவல்களிலும் இருக்கிறது. எந்தப் பழைய படத்தின் அவுட்டோர் காட்சிகளில் சென்னையை பார்க்கும் போதெல்லாம், சென்னை எத்தனை காலியா இருக்கு பாரு என்று என்னையும் அறியாமல் புலம்புவேன். எம்ஜியார் காரோட்டிக் கொண்டே ஏதாவது வயல் வெளியை கடந்தால், யாருக்குத் தெரியும் இது வேளச்சேரியா இருக்கலாம் என்றும் புலம்பியிருக்கிறேன். மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று நாகேஷ் பாடிக் கொண்டே வருவாரே, அந்த மெட்ராஸ்! அதுதான் நான் பார்க்க விரும்பிய சென்னை. அகலமான, விசாலமான சாலைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாய் செல்லும் பேருந்துகள், வாகனங்கள், மாட்டு வண்டிகள்! அந்தக் கூட்டத்திற்கும் ஓட்டத்திற்குமே அவர் அன்று அந்த அலுப்பு காட்டுவார். இன்று மவுண்ட் ரோட்டில் நின்று கொண்டு நாம் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் வேண்டாம், "மெட்" என்று வாய் திறந்தால் போதும் இன்னோவா வந்து இடித்து வீட்டில் உள்ளவர்களை ட்ரைவர் நலம் விசாரிப்பார்! (ஒங்கம்மாகிட்ட சொல்லிட்டு வந்தியா?) ம்ம்ம்...அறுபதில் வாழ வேண்டியவனை 2010ல் நிறுத்தியிருக்கிறது காலம்!

சரி மதுரைக்கு வருகிறேன். மதுரையில் சாலைகள் அகலமாய் தெரிகின்றன. ப்ளாட்பாரங்கள் நன்றாக ஏற்றம் கண்டு விட்டன. சென்னையை கம்பேர் செய்தால் சுற்றுப்புறம் சுத்தமாகவே இருக்கிறது. ஆனால் முன்பு போல் சினிமா போஸ்டர்கள் காணக் கிடைப்பதில்லை. சினிமா ரசிகர்கள் என்றால் அது மதுரையாகத் தான் இருக்க வேண்டும். முன்பு போல் இல்லாமல் மதுரையில் இப்போதெல்லாம் சென்னையில் ரிலீஸ் ஆவதைப் போல் ஒவ்வொரு படமும் 4, 5 தியேட்டர்களில் ஒரு காட்சி, இரு காட்சிகள் என்று வர ஆரம்பித்து விட்டன. என் நினைவுக்குத் தெரிந்து ஒரு படம் இரண்டு தியெட்டர்களுக்கு மேல் ரிலீஸானது "எஜமான்" தான்! அந்தப் படம் தான் முதன் முதலாய் மூன்று தியேட்டர்களில் ரிலீஸானது என்று நினைக்கிறேன்! [மதுரையில் ரஜினி படம் என்ன மொக்கையாக இருந்தாலும் 150 நாட்களுக்கு குறையாமல் ஓடும்] எந்த படமாய் இருந்தாலும் சரி, படம் வந்த அடுத்த வாரத்தில் வெற்றிகரமான இரண்டாவது வாரம் அல்லது பட்டையை கிளப்பும் பத்தாவது நாள் போஸ்டர் ஒட்டி விடுவார்கள். 3 வாரத்தில் படம் படுத்து விட்டால் அதை வேறு தியேட்டரில் ரிலீஸ் செய்து இணைந்த 3வது வாரம் என்று மிரட்டுவார்கள்! அப்படி என்றால் அந்த படம் இன்னும் களத்தில் இருக்கிறது என்று பொருள். இன்று வரை தளபதி படத்தின் பத்தாவது நாள், இருபத்தைந்தாவது நாள், முப்பத்தைந்தாவது நாள் என்று எல்லா நாட்களின் போஸ்டர்களும் எனக்கு நினைவில் இருக்கிறது. (இதை ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேனா என்பது தான் மறந்து விட்டது! ஹிஹி) தமிழ் படத்தை விடுங்கள், கமேண்டோ, ரங்கீலா, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே போன்ற படத்திற்கே 50வது நாள், நூறாவது நாள் போஸ்டர்கள் ஒட்டினார்கள்! ஹம் ஆப்கே ஹைன் கோன் படம் ஹரிதாஸ் படத்தை போல் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது! சில சமயம் ஷகீலா படத்திற்குக் கூட பத்தாவது நாள் போஸ்டர் பார்த்ததாய் ஞாபகம்! இன்றும் படங்களின் போஸ்டர்கள் இருந்தாலும், ஒரு 2வது வார போஸ்டரை கூட காண முடியவில்லை. திருட்டு விசிடி (டிவிடி?), கேபிள் டீவி, யு ட்யுப் என்று வளர்ந்து விட்ட நிலையில் ஒரு படம் இரண்டு வாரம் ஓடி போஸ்டர் ஒட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் ஓவர் தான்!
அப்புறம், திருமலை நாயக்கர் மகாலை நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள் போலிருக்கிறது. அதோ, அந்த மகால்ல தான் ஐஸ்வர்யா ராய் ஆடினார் என்று தான் இன்றைய இளவட்டங்கள் அந்த மகாலை அடையாளம் காட்டுகிறார்கள்! சிம்ரன், மனீஷா கொய்ராலா, ஐஸ்வர்யா, அனுஷ்கா என்று அந்த மகால் பாரம்பரியம் மிக்கதாய் தான் ஆகி விட்டது! ஆனால் என்னை மிகவும் உறுத்திய ஒன்று, அரண்மனை மதில் சுவரில் "இங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது, இலவசக் கழிப்பறை அருகில் உள்ளது" என்று அம்புக்குறியுடன் ஒரு பலகை தொங்குகிறது. அந்த பலகையின் அடியில் ஈரப்பட்டுக் கிடக்கிறது. என்ன தான் இலவசம் என்றாலும் அரண்மனை மதில் சுவற்றில் சிறுநீர் கழிக்கிற பெருமை வருமா என்று அந்த பிரகஸ்பதி நினைத்திருப்பானோ என்னமோ? அதே போல் பெரியார் பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ் நிறுத்தத்தில் அநியாயம் செய்கிறார்கள். அந்த தம்மாத்துண்டு இடத்தில் வெளியூர் போகும் பேருந்தும் நிற்கிறது, உள்ளூர் பேருந்தும் வந்து செல்கிறது. பக்கத்திலேயே கழிவறை இருந்தாலும் வெளியூர் பேருந்து ஒன்றை ஒன்று ஒட்டி நிற்கும் இடத்தில் அந்த பேருந்துகளை மறைவாய் வைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கிறார்கள். அந்த பேருந்தில் ஏற வேண்டியவன் அந்த இடைபட்ட இடத்தில் கால் வைத்துத் தான் ஏற வேண்டியிருக்கிறது. ஆடு மாடுகளுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஐந்து ரூபாயை சிகிரெட்டுக்காக பொத்திக் கொண்டு கொடுக்கும் ஜனம் (ஜடம்!!) சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய் செலவழிக்க மறுக்கிறது!! இப்படி பொறுப்பில்லாமல் பெய்பவர்களை கண்டால் கண்ட இடத்தில் இழுத்து வைத்து அறுக்க வேண்டும். [சிம்ரன் சொல்வது போல் நாக்கை அல்ல!]