இப்போதெல்லாம் அலுவலகத்தில் எப்படி நேரத்தைக் கடத்துவது என்றே தெரியவில்லை. அமெரிக்காவில் ஆன்ஸைட் கோ ஆர்டினேட்டராக இருப்பது அழகான பெண்களின் சகவாசம் மாதிரி! எல்லா வேலையையும் அவங்க தலையில கட்டிலாம்னு நினைக்கும் போது இனிக்கும்; ஆனா நம்ம ஒன்னு கேட்டு அவன் வேற ஏதோ செஞ்சு கொடுத்து வீட்டுக்குப் போய் தூங்கிடுவான்! அப்புறம் நம்ம தாலியை அறுப்பானுங்க! [இங்கிலீஷ் படத்துல தாலி சென்டிமண்ட் இல்லையே!!!] அதை நினைக்கும் போது கதி கலங்கும்! சரி இதுக்கும் அழகான பொண்ணுங்க சகவாசத்துக்கும் என்ன சம்மந்தம்னு கேட்டீங்கன்னா...பைக்ல பாதி ஏறி உங்க மேல பாதி ஏறி கட்டிப் புடிச்சிட்டு வரும்போது இனிக்கத் தான் செய்யும்! ஆனா, தம் அடிக்காதே, உன் ஃப்ரண்ட்ஸே சரியில்லை, இதை வாங்கிக் கொடு அதை வாங்கிக் கொடுன்னு போனை எடுத்து நச்சு நச்சுங்குமே அதை நினைச்சா கேரிங்கா இருக்குல்ல? அதே தான்! உவமை ஓக்கேவா?

சரி விஷயத்துக்கு வர்றேன். அலுவலகத்தில் நேரம் போகவில்லை. எவ்வளவு நேரம் தான் ஜீமெயில், ஆர்குட், தட்ஸ்தமிழ், தமிழ்மணம் கை கொடுக்கும் சொல்லுங்க! [அதோட நீங்க இப்படி வெட்டியா இருக்கும்போது மேயும் வலைதளங்களையும் சொல்லுங்க! என்னோட இலக்கிய ரசனை பத்தி உங்களுக்குத் தெரியாது. தட்ஸ்தமிழ்ல வர்ற சினிமா நியுஸ் ஒன்னு விடாம படிக்கிறவன் நான். அதுவும் ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழே அந்த 2 பேரோட கமெண்ட்ஸ்! சோ, என்னை சாதரணமா எடை போட்றாதீங்க! அந்த மாதிரி உலகத் தரமான வலைதளங்களை மட்டும் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்!!!] சரி கழுதை ஏதாவது நாமளா எழுதிபுடலாம்னு பிழியிறதுக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டு உக்காந்தா இந்த மூளை....ஹிஹி...சரி ரைட்டர்ஸ் ப்ளாக் ஆயிடுச்சுன்னு கூகுள் பஸ்ஸும் போட்டாச்சு! அப்புறம்? சரி வேற வழியில்லாம தமிழ்மணத்தோட கால்ல சாஷ்டாங்கமா விழுந்து ஒவ்வொரு பதிவா படிக்க ஆரம்பிச்சுருக்கேன். முடியலை...முக்காவாசி மொக்கை தான்! ஒன்னு சினிமா, இல்லை புத்தகம், இல்லை யாரோ ஒரு மனுஷன்..எதையோ ஒன்னை விடாம விமர்சனம் பண்ணிட்டே இருக்காங்க..[இந்தப் பதிவையே பாருங்க, நான் இப்போ வலையுலகை விமர்சிக்கிறேன்! நான் சொல்றதை ஒத்துக்குறீங்களா?] புது விஷயங்களை சொல்ற சில பதிவுகள் இருக்கத் தான் செய்யது! அது என்னமோ தெரியலை எதை பத்தியாவது சொல்லிப் புரிய வைக்கிற ஒரு உருப்படியான பதிவுன்னாலே ஸ்கூல்ல லஞ் முடிஞ்சதும் வர்ற ஹிஸ்டரி பீரியட் ஞாபகம் வந்து தொலைஞ்சுடுது. ஒரு வேளை நம்ம வாத்தியார் மறுபடியும் பொறந்து வந்து ஒரு வலைப்பதிவை ஆரம்பிச்சி டிஜிடலுக்கும்/அனலாகுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் பாணியில் உணர்த்தினா தான் படிப்பேன்னு நெனைக்கிறேன்.

சென்ற வாரம் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு ஒரு ட்ரிப் அடித்து வந்தேன். 4 நாட்களில் 40 இடங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஒரு சராசரி இந்திய மனப்பான்மையோடு!! வேலையை விட விடுமுறைகள் அதிக பளுவாகிவிடுகிறது இந்தியர்களுக்கு. யுனிவர்சல் ஸ்டூடியோஸ், டிஸ்னி லேண்ட், சீ வேர்ல்ட் 4 நாட்களில் கவர் பண்ண வேண்டும் என்பது ப்ளான். டிஸ்னி லேண்டிற்கு முழுதாய் இரண்டு நாட்கள் இருந்தாலும் பத்தாது! அத்தனை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் குழந்தைகளுக்குத் தான் என்று தோன்றுகிறது. எத்தனை ராட்டினங்களில் தான் ஏறுவது? அதிலும் அமேரிக்காவில் ராட்டினம் ஒவ்வொன்றும் ராட்டினமாகவா இருக்கிறது. எல்லாம் கொல வெறி பிடித்தவர்களைக் கொண்டு வடிவமைத்திருப்பார்கள் போலும். இங்கு குழந்தைகளும் அதே கொலை வெறியுடன் தான் பிறக்கிறார்கள். அத்தனை பெரிய ரோலர் கோஸ்டரைப் பார்த்தால் கொஞ்சமாவது பயம் வேண்டாம் கண்ணில்? சின்ன புள்ளத்தனமா இல்லையே....அவ்வ்வ்வ்!!

பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக்கவும். [நல்ல படங்கள், அவசியம் க்ளிக்கிப் பார்க்கவும்!]












அதுவுமில்லாமல் சீ வேர்ல்ட் என்னை அவ்வளவாய்க் கவரவில்லை. ஏதோ ஒரு மீன் விற்கும் கடைக்கு சென்ற மாதிரி இருந்தது. சின்ன சின்ன குட்டை மாதிரி கட்டி விட்டு ஷார்க் வகையறாக்களை விட்டிருந்தார்கள்! எல்லா குழந்தைகளும் நட்சத்திர மீனை கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் சாவட்டும் என்று கொண்டு வந்து விட்டிருப்பார்களோ என்னமோ! கொடுமையாய் இருந்தது. ப்ளோரிடாவில் ஒரு வேல் (முருகரோடது இல்லை, திமிங்கலம்) பயிற்ச்சியாளரை இந்த வாரம் கொன்றதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! அந்த மாதிரி ஒரு ஷோ இங்கும் இருக்கிறது. என்ன தான் ஷோ நன்றாக இருந்ததாலும் அந்தப் பிராணிகளை நம் சுயநலத்திற்காக இப்படி படுத்துகிறோமே என்று குற்ற உணர்ச்சியே மேலோங்குகிறது.














சோ, இதையெல்லாம் சொல்லி ஒரு வழியாய் என் குடும்பத்தாரை கன்வீன்ஸ் செய்து 4வது நாள் மலிபு என்ற இடத்துக்குச் சென்றோம். அங்கே ஒரு வெங்கடேஷ பெருமாள் கோவில் இருக்கிறது. நான் கோவிலுக்குக் கூப்பிடுவதை என் மனைவியால் தாங்க முடியவில்லை. [அப்படி என்றால் ராட்டினங்கள் என்னை என்ன பாடு படுத்தி இருக்கும்!!] என்னைப் பொறுத்தவரை விடுமுறை என்பது ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். 3 நாட்கள் ஒவ்வொரு ஷோவுக்கும் ஓடி ஓடி கால்கள் வலுவிழந்து விட்டன. எனக்கு கோவில் ஒரு சாக்கு தான், ஊரைப் பார்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை.












நான் நினைத்ததை விட மலிபு அற்புதமாய் இருந்தது. சுற்றிலும் சிறு சிறு பச்சைப் பசேலென்ற குன்றுகள், ரம்மியமான க்ளைமேட் ஊட்டியை நினைவு படுத்தியது. கோவிலும் அருமையாய் இருந்தது. அதிலும் அங்கு வாழும் நம்மவாக்கள் கோவில் கட்டியதோடு நில்லாமல் அங்கு ஒரு மண்டபம் கட்டி புளியோதரை[$3], தயிர் சாதம்[3$] + பச்சடி, காப்பி[$1], டீ[$1] விற்கிறார்கள். பர்கர் கிங், சப் வே என்று செத்துப் போய் அடங்கிப் போயிருந்த நாக்கு ஏசுநாதரைப் போல் உயிர்த்து எழுந்தது! அந்த மண்டபத்தில் நடராஜர் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தார்! "அது சரி, நீங்க ஒத்தைக்கால்ல நிக்காதீங்க, ஸ்டேஷனுக்கு ஆகாதுல்ல?! என்ற நான் கடவுள் வசனம் ஞாபகம் வந்தது! அந்தக் கோயிலை ஒட்டி ஒரு பெரிய பார்க். பெரிய பெரிய வேன்களோடு ஆங்காங்கே கூடாரம் அமைத்துக் கொண்டு கேம்பிங். வாழப் பிறந்தவர்கள். ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆனால், சுற்றி இருக்கும் மலையில் ஏறுகிறார்கள். மலை மேல் ஒரு லேக்கும் இருக்கிறது. எங்களுக்கு நேரம் இல்லாததால் மலையேற முடியவில்லை. கடைசி நாள் ட்ரிப் மற்ற மூன்று நாட்களை விட அருமையாய் அமைந்தது!! கலிஃபோர்னியாவில் வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். கடல் இருக்கிறது, பச்சைப் பசேலென்ற மலை இருக்கிறது, அருமையான சீதோஷ்ன நிலை!! ஆனால் இவை எல்லாமே மன் ஹேட்டன் பீச்சில் காரை பார்க்கிங் பண்ண ஒவ்வொரு தெருவாக அலையும் போது அடிப்பட்டுப் போகிறது!! (அதிலும் திங்கள் கிழமை மதியம் முன்று மணிக்கு!)

மறுநாள் ஆபிஸ் போனதும் என் மேனேஜர் [அவரும் இந்தியர்] என்னிடம் ஆர் யு டயர்ட்? என்று கேட்டார். எந்த வெள்ளை காரனாவது விடுமுறை கழித்து வரும் ஒருவனிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்பானா? பாம்பின் கால் பாம்பறியும்!

ராமுவும் சோமுவும் நெருங்கிய நண்பர்கள்! திரை கடல் கடந்து திரவியம் தேடும் மென்பொருள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில் இருவரும் வீக் என்ட் எப்படிக் கழிந்தது என்று பேச ஆரம்பித்து...

ராமு: சொல்லு சோமு, எப்படி போச்சு வீக் என்ட்?

சோமு: என்ன புதுசா, வால்மார்ட், இந்தியன் ஸ்டோர்ஸ் போய் தான்! உனக்கு?

ராமு: லைப்ரரியில இருந்து ரெண்டு படம் வாங்கிட்டு வந்தேன். இரண்டு படமும் எந்த த்ரில்லருக்கும் குரைஞ்சது இல்லை! அப்படி இருந்தது.

சோமு: அப்படியா? என்ன படம்?

ராமு: சிக்ஸ் டிக்ரீஸ், ஹோம், அப்புறம் இன்கன்வீனியன்ட் ட்ரூத்! வாழ்ற ஒவ்வொருத்தரும் பாத்தே ஆகணும்!சோமு: என்ன சைக்கோ பாத்தா?

ராமு: அப்படியும் சொல்லலாம், மனுஷங்க எல்லாம் ஒரு விதத்துல பாத்தா சைக்கோ தானே? இந்தப் படங்களைப் பத்தி சொல்லனும்னா, நம்ம சுயநலத்துக்காக நம்ம வாழ்ற பூமியை என்ன பாடு படுத்துறோம்ன்றதை அவ்வளவு துல்லியமா சொல்றாங்க! அதாவது இந்த 3 படமும் பூமி வெப்பமடையிறதைப் பத்தியும், அதனோட விளைவுகளைப் பத்தியும் அவ்வளவு த்ரில்லிங்கா சொல்லுதுப்பா!

சோமு: ஓ! க்ளோபல் வார்மிங்கா?

ராமு: பாத்ததுல இருந்து என் வயிறும் வார்மிங் ஆயிப் போச்சு! பாத்தாலே பயம்மா இருக்கு! இத்தனை கொலைவெறியோடவா நடந்துக்குறோம்னு இருக்கு! மனுஷன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு!

சோமு: அப்படி என்ன தான் சொல்றாங்க?

ராமு: சிக்ஸ் டிக்ரீஸ் படத்துல, பூமியோட வெப்பம் பயங்கர வேகத்துல ஏறிட்டு இருக்கு, இதே வேகத்துல போனா ரொம்ப நாள் தாங்காதுன்னு சொல்லி, ஒவ்வொரு டிக்ரியா ஏறும்போது என்ன என்ன விளைவுகள் வரும்னு விஞ்ஞானிகள் கணிச்சிருக்குறதை பாத்தா பத்து அவதார் ஒன்னா பாக்குற மாதிரி இருக்கு!



சோமு: நீங்க வேற, இந்த விஞ்ஞானிகளுக்கு வேற வேலையில்லை. எதையாவது சொல்லிட்டு இருப்பாங்க, கடைசியில ஒரு சின்ன கேப்பாசிட்டார் தப்பா போட்டதால தப்பு நடந்துருச்சுன்னு பேச்சை மாத்திருவாங்க! அந்த அளவுக்கு இது சீரியஸான விஷயமான்னு எனக்குத் தெரியலை.

ராமு: என்ன சோமு இப்படி சொல்லிட்ட, விஞ்ஞானிகளை அரசியல்வாதிங்க ரேஞ்சுக்கு பேசிட்ட, அவங்ககிட்ட டேட்டா இருக்குப்பா, அவங்க சும்மா ஒன்னும் உளறல...அன்டார்டிக்கால 40 வருஷத்துல 40% பனி உருகிடுச்சாம். இதே வேகத்துல போனா இன்னும் 40% உருகுறதுக்கு 20 வருஷமே போதும்ன்றாங்க!

சோமு: சோ வாட் சே?

ராமு: நமக்கு இனி வேட் ஐ சே!! சூரியன்ல இருந்து வர்ற கதிர்களை இந்த பனி மலைகள் எல்லாம் ஒரு கண்ணாடி மாதிரி நின்னு எதிரொலிச்சி மறுபடியும் பூமிக்கு வெளியே அனுப்பிட்டு இருக்கு. அதனால பூமியோட வெப்பம் மெயின்டைன் ஆகுது. இந்த பனி மலைகள் உருக, உருக, அதோட எதிரொலிக்கிற தன்மை குறைஞ்சு சூரியனோட கதிர்கள் வெளியே போகாம பூமியில தங்கிடும், அதனால பூமியோட வெப்பம் ஜாஸ்தியாகும். பனிமலைகள் உருகுறதால, அதையே சார்ந்து இருக்குற போலார் கரடிகள் அழிஞ்சிடும். அதோட கடல் மட்டம் அதிகமாகி நியுயார்க், பீஜிங், கல்கத்தா, கலிஃபோர்னியா போன்ற பல கடலோர நகரங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடும்! ஒரு பக்கம் பனி மலை உருகுது, நீர் மட்டம் அதிகரிக்குதுன்னு சொல்றாங்க, இன்னொரு பக்கம் இன்னொரு ஐஸ் ஏஜ் ரொம்ப தூரம் இல்லைன்னும் சொல்றாங்க! சோ, டிசைன் டிசைனா அழியிறதுக்கு பூமி ரெடியாட்டு இருக்கு! நான் சொல்றது வெறும் ட்ரைலர் தான்! மெயின் பிக்சர் பாத்தே இன்னும் அசந்து போயிடுவே! இப்போ கூட டைம் இருக்கு, முழிச்சுக்குங்க, இல்லைன்னா உங்க கொள்ளுப் பேரன், பேத்தி எல்லாம் உங்க பரம்பரையே கெட்ட வார்த்தையிலே திட்டுவான்னு சொல்றாங்க!



சோமு: என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் ஒரு சுழற்சி தான்! வாழ்க்கை ஒரு வட்டம்டான்ன மாதிரி பூமி அழியிறதும், உருவாகுறதும் வரலாறு தானே! மனுஷன் இல்லைன்னாலும் பருவநிலை மாற்றங்கள் இருந்திருக்கும், கடல் கொந்தளிச்சிருக்கும், எரிமலை வெடிச்சிருக்கும். இன்னொரு ஐஸ் ஏஜ் வந்திருக்கும்! அப்படி இல்லைன்னா நம்ம டைனோசர்களை ஜுராசிக் பார்க்ல பாத்ததுக்கு பதிலா நாகேஸ்வர ராவ் பார்க்ல பாத்துருக்கலாம்!

ராமு: கண்டிப்பா, ஆனா இவ்வளவு சீக்கிரம் அது நடந்திருக்காது. இத்தனை மாற்றங்களுக்கும் அது இத்தனை வேகமா நடக்குறதுக்கும் நம்ம தான் முழுக்க முழுக்க காரணம்!! அதை மறுக்கவே முடியாது!

சோமு: நான் என்ன சொல்றேன்னா, இதுவும் ஒரு அரசியல் பிரச்சனை தான்! இப்போ ஓப்பன் ஹேகன்ல இதைப் பத்தி பேசினாங்களே, அது ஒன்னும் வேலைக்காவலையே!

ராமு: ஆமாம் ஏன், என்ன ஆச்சு?



சோமு: நீயே சொல்லு, அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் வளர்ற நாடுகளைப் பாத்து நீங்க எல்லாரும் முன்னேறின வரை போதும், உலகம் அழியுது, சுற்றுப்புறத்தை பாதுகாக்கணும், அதனால நீங்க இனிமே தொழிற்சாலைகளை உருவாக்குறதை எல்லாம் கம்மி பண்ணிக்குங்க.. இனிமே நியுக்ளியர் டெஸ்ட் பண்ணாதீங்க, அப்புறம் உலகம் அழிஞ்டும்னா மத்தவனுக்கு கோவம் வருமா இல்லையா? எவனாவது ஒத்துப்பானா? இவன் பூமிக்கு பண்ணாத நாசமா? மொதோ இவங்க திருந்தணும். இவனுங்க உலகம் பூரா கை குலுக்கிட்டே தன்னோட ஊருக்குப் போனவுடனே இன்னொரு நியுக்ளியர் டெஸ்ட் பண்றான். இதுவரைக்கும் அமேரிக்கா 200, 300 தடவை டெஸ்ட் பண்ணியிருப்பான், நம்ம 2, 3 தடவை பண்ணியிருப்போமா? ஹிரோஷிமா நாகாசாகியில போர்ல குண்டு போட்டு பாதிப்படைஞ்சாங்க! ஆனா, இவன் டெஸ்ட் பண்ணதுல அதனோட கதிரியக்கம் தாக்கி எத்தனை பேர் பாதிப்படைஞ்சிருக்காங்க தெரியுமா? அம்மணமா ஓடிச்சாம் எலி; அதுக்கு அண்டர்வேர் குடுத்துச்சாம் புலி!

ராமு: சரியா சொன்னே, புவி வெப்பமடையிறதுக்கு அமேரிக்கர்கள் தான் 30% சதவிகிதக் காரணம்னு புள்ளி விவரம் சொல்லுதே! அம்மாக்கொன்னு, அப்பாக்கொன்னு, புள்ளைக்கொன்னுன்னு பேனா கணக்கா கார் வச்சிருந்தா...முதல்ல அதை இவங்க நிறுத்தனும்! ரோட்ல எவனைப் பாத்தாலும் அவ்வளவு பெரிய கார்ல ஒரே ஒருத்தன் தான் போறான்! நம்ம ஊர்லையே கார் பூல் பண்ணுங்கன்னு நம்ம சொல்லிட்டு இருக்கோம்! அதுவுமில்லாம எனர்ஜியை வேஸ்ட் பண்றதுன்னா அதை இவங்கிட்ட தான் கத்துக்கணும்! ஒரு கடை திறந்திருக்கும் போதும் ஜெகஜோதியா இருக்கு; மூடி இருந்தாலும் அதே மாதிரி தான் இருக்கு! ஆயுத பூஜை இருந்தாலாவது அன்னைக்கு ஒரு நாளாவது எல்லா விளக்கையும் அணைச்சி பொட்டு வைப்பாங்கன்னு சொல்லலாம், அதுவும் இல்லை!! ஊருக்கு உபதேசம், எனக்கு எபதேசம் கதை தான்!

சோமு: மனுஷங்க சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு!! இயற்கையை காக்கனும்னு நாமளே சொல்றோம், ஆனா காட்டுக்குள்ள போய் ஒரு மிருகத்தோட உடம்புல ட்ரான்ஸ்மிட்டரை நம்ம தானே பொருத்துறோம்? அது எப்படி சாப்பிடுது, எப்படித் தூங்குதுன்னு டீவியில பாக்கும்போது நல்லா தான் இருக்கு! ஆனா நம்ம இயற்கையை எங்க டிஸ்டர்ப் பண்ணாம இருக்கோம்? இதோ மார்ஸ் பாட்டுக்கு நிம்மதியா சுத்திட்டு இருக்கு, அங்கே போய் தண்ணியத் தேட்றேன், பெட்ரோலைத் தேட்றேன்னு எதையாவது நோண்ட வேண்டியது! அப்புறம் குத்துதே குடையுதேன்னு சொன்னா? நான் என்ன சொல்றேன்னா, உலகம் பூரா இத்தனை பிரிவினையா இருந்து இந்த பிரச்சனையை எதிர் கொள்ள முடியாது! அத்தனை நாடுகளும் ஒன்னா நின்னு போராடனும்! அது ரொம்ப ரொம்ப கஷ்டம்! நீ சொல்றதெல்லாம் வச்சி பாக்கும்போது டைனோசர் கதி தான் நமக்கும்னு நல்லா தெரியுது!



ராமு: இது வரைக்கும் வெளியே இருந்து நம்மளை அழிக்க யாரும் வர்லை..அதான் நம்மளை நம்மளே அடிச்சிட்டு இருந்தோம்; இப்போ தான் எல்லாரையும் அழிக்க ஒன்னு வந்துருச்சே! இனிமே ஒன்னு சேர்ந்து தான் ஆவனும்! இல்லைன்னா பூமி பொளக்கப் போகுது, எல்லாம் உள்ளே போக வேண்டியது தான்! கரெக்ட் தான்! ஆனா டைனோசர் கதி நமக்கும் ஆச்சுசுன்னா அப்புறம் நமக்கு ஆறு அறிவு இருந்து என்ன பிரயோஜனம் சொல்லு?

சோமு: ஆறாவது அறிவு தானே? நமக்குத் தான் அது ஜாஸ்தியா இருக்கே. நம்ம மக்கள்ட உலகம் அழியுதுடான்னா போதும், உடனே எக்ஸ்ட்ரா ரெண்டு ஆட்டை அடிச்சி சாப்பிடுவான்! சாகுறதுக்கு முன்னாடி அனுபவிச்சிட்டு போவோம்பான்! அந்த சூ மேக்கர் லிவின்னு ஒன்னு வந்ததே, அப்போ உலகம் அழிஞ்சி நம்ம செத்தோமோ இல்லையோ நெறையா ஆடுங்க செத்துச்சு! நம்ம கைல ஒண்ணுமில்லை.

ராமு: அங்கே தான் நம்ம தப்பு பண்றோம். நம்ம கைல தான் எல்லாம் இருக்கு; உலகத் தலைவர்கள் எல்லாம் ஒன்னு கூடி இதைப் பத்தி பேசி முடிவெடுக்குறதுக்குள்ள உலகம ஒரு தடவை அழிஞ்சி அதுவாவே சரியாயிடும்!! அதனால நம்மால இதுக்கு என்ன பண்ண முடியுமோ, அதை செய்யலாம். உதாரணமா வீட்டுக்கு வழக்கமான பல்ப் போடாம சீஃப்எல் பல்ப் போடலாம். பெட்டிக் கடையில போய் பாக்கு வாங்குறதுக்கு வண்டியில போகாம நடந்து போகலாம். அதனால கார்பன் எமிஷன் கம்மி ஆகும். மரத்தை நடுரோமோ இல்லையோ அதை வெட்டாம இருக்கலாம். ஹீட்டரை பொட்டு ரொம்ப சூடா குளிக்காம கொஞ்சமா சூடு பண்ணி குளிக்கலாம். எல்லாமே energy consumption தான். கொஞ்சம் பாத்து பண்ணா போதும். இப்படி நெறைய்ய இருக்கு நம்ம கையில!! இந்த மூணு படத்தையும் பாக்குறதும், அதைப் பத்தி நாலு பேருக்கு சொல்றதுமே நீ அதுக்கான தீர்வுல இறங்கிட்டேனு அர்த்தம்!! ஆன்லைன்ல தானே இருக்கே, ஹோம் படம் யு ட்யுப்ல இருக்கு. பாரு! http://www.youtube.com/watch?v=jqxENMKaeCU அட்டகாசமா எடுத்துருக்கான்! சரி சரி ரொம்ப நேரம் செல்லுல பேசினா க்ளோப் வார்ம் ஆயிடும்! போனை வைப்பா!

சோமு: அது சரி...

புகைப்படைப் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சே! அப்புறம் கிளிக்னு ஒரு வகைப்படுத்தல் எதுக்கு? காசி ஹரி ராம் மாதிரி இருக்குற எனக்குள்ள ஒரு பீசி ஸ்ரீ ராம் ஒளிஞ்சிட்டு இருக்காருன்னு உங்களுக்குத் தெரியனுமா இல்லையா? அதான்!!

கார் வாங்கிட்டு அமெரிக்காவுல லாங் டிரைவ் போகலைன்னா உம்மாச்சி வாயிலையே குத்தாது! அதான், காமெரா கையுமா கெளம்பிட்டேன்!! இருக்கா இல்லையான்னு தெரியாத சாமி சத்தியமா இதெல்லாம் நான் க்ளிக் பண்ணதுங்க!

மாடு இருக்கு; மேடு இருக்கு; லார்டு [கிருஷ்ணர்] எங்கே?



வயலுக்கு நீர் பாய்ச்சுற மெஷின்! எத்தனை கொழாய் பாருங்க!



நம்ம ஊர்ல யானை கூட இத்தத் தண்டியில்லையேப்பா?



இது தான் பாம்பு நதி! புரியிற மாதிரி சொல்லனும்னா SNAKE RIVER!



வண்ண வண்ணக் குழந்தைகள்



வெறும் பாம்பு இல்லை, பச்சை பாம்பு!



வெயிலோடு விளையாடி...



ஷோஷோன் நீர் வீழ்ச்சி, , ட்வின் ஃபால்ஸ் [ஊர் பேருங்க] வானவில் தெரியுதோ?




என்னோட வழக்கமான க்ளிக்



நீல வானம் அதில் எத்தனை மேகம்...






இது தாங்க ஐடாஹோ! அழகா இருக்குல்ல?