இன்று எத்தனை பேர் கூகுளாரின் லோகோவை கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. அமேரிக்காவில் வாழும் தம்மாத்துண்டு குழந்தைகளிலிருந்து 12ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் வரை கடந்த இரண்டு மாதங்களாக அனைவருக்கும் ரவுண்டு கட்டி நேஷனல் டிசைன் மியுசியத்துடன் இணைந்து ஒரு அற்புதமான போட்டி நடத்தி முடித்துள்ளது. அதாவது "நான் விரும்பும் உலகம்" என்ற தலைப்பில் எல்லா குழந்தைகளும் அவரவர் விருப்பம் போல கூகுள் லோகோவை வடிவமைக்க வேண்டியது. தேர்ந்தெடுக்கப்படும் லோகோ ஒரு நாள் முழுதும் கூகுள்.காமை அலங்கரிக்கும். எத்தனை சிறப்பான விஷயம். கூகுளின் லோகோவையும் அவர்கள் அடிக்கடி அதன் முகம், நிறம் மாற்றும் உக்திக்கே பலர் அடிமை. அதில் நானும் ஒருவன். இதில் இப்படி ஒரு போட்டியை எல்லா குழந்தைகளுக்கும், பள்ளிகளுக்கும் வைத்து இத்தனை பொறுப்புடன் திறமைகளை வெளிக்கொணரும் பாங்கை நான் என்ன சொல்வதென்று புரியவில்லை. இந்தப் போட்டியில் வெல்லுபவருக்கான பரிசுகளைப் பாருங்கள்
1. முதல் பரிசு பெறும் குழந்தைக்கு $15,000 படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் பரிசு

2. கூகுள் அலுவலகத்திற்குள் ஒரு பயணம்

3. ஒரு லேப்டாப்

4. வென்ற லோகோவைக் கொண்ட ஒரு டீஸர்ட்

5. இதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தையின் பள்ளிக்கு கம்ப்யுட்டர் லேப் வளர்ச்சிக்காக $25,000 பரிசு.

பார்க்க நமீதாவைப் போல் பிரம்மாண்டமாய் பலவித படங்களைக் காட்டும் பல இணையதளங்களில் உள்ளே சென்றால் கமலா காமேஷ் ரேஞ்சுக்குக் கூட விஷயம் இருக்காது. ஆனால் கூகுள், ஒரு படம், ஒரு உள்ளீட்டு வசதி, ஒரு பொத்தானை வைத்துக் கொண்டு காட்டும் படம் இருக்கிறதே அப்பப்பா.....சமீபத்தில் கூட சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதற்காக தன் அலுவலகத்தைச் சுற்றி உள்ள புற்களை சமன்படுத்த இயந்திரத்தை உபயோகிக்காமல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்! வேலை பாத்தா இங்கே பாக்கணும்!

சினிமாக்காரனுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா? எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா என்று வகை தொகை தெரியாமல் நாம் பல பேரை கேள்வி கேட்டு டார்ச்சர் செய்து [என்ன அரசியல்வாதிகளை விட்டுட்டேனா? இல்லை தெரியாம தான் கேக்குறேன், அவங்களுக்கும் சமூகத்துக்கும் என்ன சார் சம்மந்தம்?] . பணத்தை மட்டுமே பிரதானமாய் நினைத்து வாழும் பல வித நிறுவனங்களுக்கு மத்தியில் கூகுள் போன்ற ஒரு நிறுவனம் இத்தகைய சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பில் ஒரு பங்காவது நம்மில் இருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தப் போட்டி தொடங்கும் போதே இதைப் பற்றி பதிய வேண்டும் என்று நினைத்தேன். பதியமுடியவில்லை. என் சமூக பொறுப்பு எப்படி இருக்கிறது பாருங்கள். இந்த போட்டியின் அழகியல் என்னை மிகவும் கவர்கிறது. இப்படி ஒரு தலைப்பை குழந்தைகளிடம் கொடுத்து தங்களுடைய லோகோவை வடிவமைக்கச் சொல்லி அழகு பார்ப்பது எத்தனை பேருக்கு வரும்? நாங்க தான் நாசமா போயிட்டோம், நீங்களாவது இந்த உலகத்தை காப்பாத்துங்க என்று குழந்தைகளுக்கு இந்த வகையில் ஒரு அறிவிப்பு விடுத்துள்ளது. குழந்தைகளின் உலகம் எத்தனை அழகானது. எத்தனை வண்ணமயமாகவும், பரிசுத்தமாகவும் இருக்கிறது. கூகுளில் இதே பணியில் ஈடுபட்டிருப்பவர்களைக் காட்டிலும் எந்த விதத்திலும் குழந்தைகள் சலைத்தவர்கள் இல்லை என்பதை கீழ் உள்ள படங்கள் பறைசாற்றுகின்றன. எனக்குப் பிடித்த சில படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். கண்டு களியுங்கள்...

வெற்றி பெற்ற படம்


3வது படிக்குது...நானோடேக்னாலஜி அதுலயும் அண்டத்துல...

வாங்கப்பா பீச்சுக்கு என்று ஒரு பிஞ்சுக் குழந்தையின் குரல், ராணுவ ஆடைகளை எங்கே தொங்க விட்டிருக்கிறார் பாருங்கள்!



இந்தப் படம் தப்பு தான், உலகத்தை ஒரு அமைதியான இடத்துக்கு தூக்கிட்டு போகுதாம்...சுத்தி இருக்குற இடமா பிரச்சனை? உள்ளே இருக்குறவங்க தானே பிரச்சனை...ஆனாலும் அருமை...


இன்னும் பாருங்க...            




பூமி உருகுகிறது, அதன்மேல் தெர்மா மீட்டரை வைத்திருக்கிறார். அந்தப் போலார் கரடியை பாருங்கள். எத்தனை பாவமாய் உட்கார்ந்திருக்கிறது.

நம்பிக்கை துளிர் விடுகிறது...

ரணகளம்...






மிச்சத்தை வெண் திரையில் காண்க...

என் முதல் விஞ்ஞானச் சிறுகதை [என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்!] இன்னும் சற்று மெனக்கெட்டு எழுதியிருந்தால் நன்றாய் வந்திருக்கும் என்று தோன்றுகிறது. மத்தபடி நீங்க தான் படிச்சிக் கிழிக்கனும்![என்னைத் தான்!]

முன் குறிப்பு: சுஜாதாவின் வாசனையடிக்கிறதைத் தவிர வேறு ஏதாவது புதுசாய் சொன்னால் தன்னியனாவேன்!

------------------------------------------------------------------------------------------------

சில நாட்களாகவே அவரை பார்க்கிறேன். நான் போகும் இடங்களிலெல்லாம் வந்து என்னையே வெறித்து பார்க்கிறார். ஒரு நாற்பது, ஐம்பது வயது இருக்கும். சாந்தமான முகம். நெற்றியில் விபூதிப் பட்டை. இடுப்பில் பட்டினத்தார் போல் ஒரு வேட்டி. அவ்வளவு தான். இவரை முன் பின் நான் பார்த்ததில்லை. ஏன் என்னை இப்படி பின் தொடர்கிறார் என்று புரியவில்லை. இன்று கேட்டு விடுவது என்று தீர்மானித்தேன். இந்த வரி வரை நான் ஆணா பெண்ணா என்று சொல்லவில்லை. பெண்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒருவர் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் என்றவுடன், ஆண்களுக்கு நான் செம ஃபிகர் போல என்று ஒரு எண்ணம் உருவாகியிருக்கும். அப்படித் தோன்றியிருந்தால் அதை எச்சில் தொட்டு அழித்து விடுங்கள். நான் ஒரு ஆடவன். கடவுளுக்கு மிகவும் பயந்தவன். ஆண்டவன் எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வச்சுருக்கான் என்று தீர்க்கமாய் நம்புகிறவன். போர்டில் முன் பெயர் அழிந்து போன ஒரு அன் கோ. வில் குமாஸ்தாவாய் தேமேயென்று பணிபுரிந்து மாதம் 6,350 ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு கட்டை பிரம்மச்சாரி! சரி ஏன் பின் தொடர்கிறார் என்று கேட்டு விடுகிறேன்.

வணக்கம். நானும் கொஞ்ச நாளா பாத்துட்டே இருக்கேன், நீங்க என்னை பின் தொடர்ந்து வர்ற மாதிரியே இருக்கு. மன்னிக்கனும், நீங்க யார் என்னன்னு எனக்கு தெரியலை. கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

நான் கேட்ட கேள்விக்கு அவர் திருப்பிக் கேட்ட கேள்வி என்னை அதிர வைத்தது. மிகுந்த ஆச்சர்யத்துடன் என்னை பார்த்து....

தம்பி, நான் கேட்கிறேன் என்று தவறாய் நினைக்காதே, நான் உன் பார்வைக்குத் தெரிகிறேனா?

என்னங்க இப்படி கேக்குறீங்க? பின்னாடியே வந்துட்டு இருந்தா கவனிக்காமலா இருப்பாங்க?

நான் உன் முன் நின்றாலும் உன் கண்களுக்குத் தெரிய சாத்தியமில்லயே...நீ முதலில் என்னுடன் வா, தனியாகப் பேசுவதாய் உன்னை யாராவது தவறாக எண்ணக் கூடும். என்று ஒரு சுவருக்குப் பின்னால் கூட்டிக் கொண்டு போனார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலை.

சரி, நான் சொல்வதைப் போல் செய். அதோ வருகிறாரே, அவரிடம் நான் நான் யார் என்று கேள்...

எதுக்குங்க, எனக்கு வேலை இருக்கு. நீங்க ஏன் என் பின்னாடி வர்றீங்கன்னு சொல்லுங்க..

எனக்காக கொஞ்சம் கேளேன் தம்பி.

இந்தாப்பா...இங்கே வா! வந்தான். இவர் யாருன்னு உனக்குத் தெரியுமா?

அவன் என்னை ஒரு மாதிரி பார்த்தான். என்ன காண்டிட் காமெர ப்ரோக்ராமா சார் என்று சுற்றும் முற்றும் பார்த்து சிரித்தான்.

இவர் யாருன்னு சொல்லுப்பா...

ம், இவர் தான் அறிஞர் அண்ணா..போய்யா, சொவத்தைக் காட்டி யாரு யாருன்னு காலங்காத்தால...சே! அவன் போயேவிட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் என்னை பார்த்து சிரித்தார்.

நான் தான் சொன்னேனே, நான் யாருக்கும் தெரியமாட்டேன். உனக்கு எப்படித் தெரிந்தது என்று தான் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது!

ஓ, அப்போ நீங்க தான் கடவுளா? எங்க இப்படி என்றேன் எகத்தாலமாய்...

எல்லாம் உனக்காகத் தான்! போகலாமா என்றவரின் பேச்சை மதிக்காமல், அந்த வழியே செல்லும் ஒரு பெண்ணை கூப்பிட்டு,

இது யாரு தெரியுதா என்று கேட்டேன். எது என்று அவர் கேட்டார், இதோ என்று அவரைக் காட்டினேன். என்ன கிண்டல் பண்றியா செருப்பு பிஞ்சிரும் என்று சொல்லியபடியே அவரும் போய் விட்டார். எனக்கு நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்.

நீ எத்தனை பேரிடம் கேட்டாலும் உனக்கு இத்தகைய பதில் தான் கிடைக்கும். நான் சொல்வதைக் கேள் என்றார் தெளிவாய்.

சற்று உட்கார்ந்தால் தேவலாம் என்று பட்டது. இருவரும் அருகில் இருந்த திண்ணையில் உட்கார்ந்தோம்.

சொல்லுங்க..நீங்க யாரு, ஏன் என் பின்னாடி வர்றீங்க?

உன் காலம் முடியப் போகிறது, உன்னைக் கூட்டிப் போகவே வந்தேன். நான் தான் எமன் என்றார் சாய்ந்து அமர்ந்தவாறே.

எனக்கு சப்த நாடியும் அடங்கிப் போனது.

என்ன? எமனா? உங்க எருமை எங்கே? கதாயுதம் எங்கே? பாசக்கயிறு எங்கே என்று ஏதேதோ உளறினேன்.

அதெல்லாம் நீங்களாய் மனமுவந்து கொடுத்த வேடங்கள். அப்படி நான் இல்லையென்று கேட்டால் நான் என்ன செய்வது?

நீங்க யார் கண்ணுக்கும் தெரியலை, அதை நம்புறேன். ஆனா, உங்களை எமன்னு நான் எப்படி நம்புறது?

மனுஷங்க நீங்க யாரைத் தான் நம்பியிருக்கீங்க? அதோ பார், அங்கு வருபவனை சற்று கூர்ந்து கவனி. அவன் நம் அருகே வந்ததும் துடிதுடித்து விழுவான்.அப்படிச் சொல்லி விட்டு அவர் கண்களை மூடி ஏதோ முனுமுனுக்க ஆரம்பித்தார்.

என்ன ஆச்சர்யம், எங்களின் பக்கம் வரும் வரை செல்ஃபோனில் உற்சாகமாய் பேசி வந்தவன், பக்கம் வந்ததும் துடிதுடித்து விழுந்தான். நடந்து சென்றவர்கள் அவனை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். அவலம் அடங்க சற்று நேரம் ஆனது.

செத்துட்டானா? என்றேன்.

அவன் கதை முடியும் காலம் இன்னும் வரவில்லை. சற்று ஆட்டம் காண்பித்தேன் அவ்வளவு தான். பிழைத்து விடுவான். இப்போதாவது நீ என்னை நம்புகிறாயா?

எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. எனக்கு வயசு 35 தானே, அதுக்குள்ள என்ன என்றேன் வேர்த்து விறுவிறுத்து...

ஏன் பூலோகத்தில் 35 வயதில் யாரும் சாவதில்லையா? உனக்கு அல்பாயுசு என்று எழுதி இருக்கிறதே அப்பா, நான் என்ன செய்வது?

எனக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இதெல்லாம் நிஜம் தானா, நான் இறந்து விடப் போகிறேனா? வாழ்வில் ஒரு சுகமும் அனுபவிக்காமல் இறந்து விடுவேனா? நான் தான் சகல செளக்கியங்களுடன் இருக்கிறேனே..எனக்கு எப்படி மரணம்?

ஐய்யா, நீங்கள் எமன் என்றே ஒத்துக் கொள்கிறேன். நான் அதற்குள் சாகத் தான் வேண்டுமா? இதற்கு வேறு வழியே இல்லையா?

உங்கள் கதைகளில் வருவதைப் போல் என்னிடமிருந்து உன்னை மீட்க சாவித்திரி கூட இல்லையே உன்னிடம்? நான் என்ன செய்வது?

ஐய்யா, அதைத் தான் நானும் சொல்கிறேன். இந்த நாள் வரை, ஒரு கட்ட பிரம்மச்சாரியாய் எந்த சுகங்களையும் அனுபவிக்காமல் வாழ்ந்துட்டேன். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்.

அது முடியாது தம்பி. காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். எல்லாம் விதிப் படி தான் நடக்கும். அதைத் தடுக்க என்னாலும் முடியாது.

இதற்கு வேறு வழியே இல்லையா? தயவு செய்து எனக்காக யோசித்துப் பாருங்கள்.

இதெல்லாம் நான் உன் பார்வைக்குத் தெரிந்ததால் வந்த விணை. எங்கோ எப்படியோ ஒரு கோளாறு நிகழ்ந்திருக்கிறது. அது உன் தவறல்ல. அதை நாங்கள் தான் சரி செய்ய வேண்டும். இத்தனை நாள் உன்னை கண்கானித்ததில் நீயும் எந்த ஒரு லெளகீக சுகங்களை அறியாதவன் என்பதை நானும் புரிந்து கொண்டேன். உன்னால் என்னை பார்க்க முடிகிறது என்பதால் உன் மீது ஒரு இனம் தெரியாத பாசம் வருகிறது. அதனால் உனக்காக மட்டும் இந்தச் செயலை செய்கிறேன். இதை நீ வேறு யாரிடமும் சொல்லி விடக் கூடாது. சொல்லி விட்டால் அந்தக் கணமே உன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும் என்று நீ பல கதைகளில் படித்திருப்பாய்! நான் இந்தக் கோளாறு எப்படி நடந்தது என்று எமலோகம் சென்று பார்த்து விட்டு வருகிறேன். நான் இரண்டு நாளில் திரும்பி வந்து விடுவேன். நீ அதற்குள் உன் வாழ்வை வாழ்ந்து கொள். இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது!

ஐய்யா, மிக்க நன்றி. மிக்க நன்றி...ஆனா ரெண்டு நாள்ல நான் என்னங்க வாழ்றது? கொஞ்சம் நீங்க பொறுத்து வந்தீங்கன்னா, நல்லா இருக்கும்.

அடேய் மானிடா, நான் சொல்வது எமலோகத்தின் இரண்டு நாட்கள். அது பூமியைப் பொறுத்தவரை சில ஆண்டுகளடா...

எனக்கு தெரியலையே...இருந்தாலும் உங்க கருணைக்கு ரொம்ப நன்றி ஐய்யா...ரொம்ப சந்தோஷம்!

அது போகட்டும், இதற்காக நீ எனக்கு என்ன தருவாய்?

நான் உங்களுக்கு என்னங்க தர்றது? நான் ஒரு சாதாரண மனுஷன்! நீங்க வேற..

பூலோகத்தில் பணம் என்னும் பிசாசு இல்லாமல் ஒரு வேலையும் நடக்காதாமே, அந்தப் பிசாசை நான் பார்க்க வேண்டுமே?

இது தான் அந்தப் பிசாசு என்று என் பர்சில் இருந்து 50 ரூபாயை எடுத்துக் காட்டினேன்.

சரி, மறைக்காமல் ஒன்றை சொல். இதைப் போல் உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?

எனக்கு தான் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லையே, வாங்குற சம்பளத்துல மிச்சம் புடிச்சி ஒரு லட்ச ரூவா பேங்க்ல போட்டு வச்சிருக்கேன்...

பலே...அப்படியென்றால் நான் செய்யும் இந்த உதவிக்காக நீ எனக்கு அதில் பாதியை தர வேண்டும். என்ன சொல்கிறாய்?

ஐயய்யோ, அது எதுக்குங்க உங்களுக்கு?

மேலுலகத்தில் அனைவரும் பணத்தைக் காண ஆவலாய் இருக்கிறார்களடா...நானும் எல்லா உலகத்து நாணையங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் அது உதவியாய் இருக்கும்.

அதுக்கு அம்பது ரூபா போதுமே?

அடேய், ஒருவனை அழைத்து வருவதாய் சொல்லி வந்திருக்கிறேன். நீ இல்லாமல் திரும்பிப் போனால் நான் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் இந்தப் பணத்தைக் கொடுத்துத் தானே நான் சரி கட்ட வேண்டும்.

ஒஹோ எமலோகத்திலும் லஞ்சம் வந்து விட்டதா?

அது தான் நீங்கள் வந்து விட்டீர்களே, பின் லஞ்சம் வராதா? வாக்குவாதம் செய்யாமல் பணத்தைக் கொடு! நீ கொடுத்தே ஆக வேண்டும்.

உயிரை விடவா ஐம்பதாயிரம் பெருசு...வாங்க ஏடிஎம் ல எடுத்துக் கொடுக்குறேன்.

அப்பாடா, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு. எமனுக்கே லஞ்சம் கொடுத்து வரலாற்றில் இடம் புடிச்சிட்டோம் என்ற மிதப்பில் நான் ரோட்டை க்ராஸ் செய்யும் போது ஒரு தண்ணி லாரி எல்லா நீரையும் கொட்டிக் கொண்டே என் மேல் அநியாயமாய் ஏறிச் சென்றது. நான் ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருக்கும் போது "டேய், அந்த ஆட்டோவைக் கூப்பிடு" என்று கத்தும் யாரோ ஒருவரின் குரல் மிகவும் பழக்கப்பட்டதாய் இருந்தது.

175 ஆவது பதிவு

மரணம் சம்பவிக்கும் வீடுகள் என்றும் விசித்திரமானவை. அத்தனை காலமும், பத்தோடு பதினொன்றாக அந்தத் தெருவில் இருந்த அந்த வீடு திடீரென ஒரு வரலாற்றுச் சின்னமாய் உயிர்த்தெழுந்து விடுகிறது. முதன் முதலாய் மேடையேற்றப்பட்ட குழந்தையைப் போல் அந்த வீட்டின் மீது அத்தனை பேரின் பார்வையும் பதிந்து விடுகிறது. விடிந்தும் எறியும் அந்த ஜீரோ வாட்ஸ் பல்பும், தெருவில் இறைந்து கிடக்கும் நாற்காலிகளும் அந்த வீட்டின் துக்கத்தை மெளனமாய் பறைசாற்றுகின்றன. இத்தனை நாள் அந்த ஒரு வீடு இருப்பது கூடத் தெரியாமல் அதை கடந்து போனவர்கள், இன்று திடீரென அந்த வீட்டை திரும்பிப் பார்த்தபடியே செல்கிறார்கள். இறந்தவரை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும் ஆவல் அந்த வீட்டைக் கடக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

மரணம் ஒவ்வொரு வீட்டின் வாசல்படியிலும் வசதியாய் அமர்ந்திருக்கிறது. மரணமும் குழந்தையை போல் தான். ஒரு குழந்தை தனக்கு வேண்டியதை தன் வீட்டிலிருந்து எத்தகைய உரிமையோடு எடுத்துக் கொள்கிறதோ, அதே உரிமையுடன் தான் மரணமும் தனக்கு வேண்டியதை எடுத்துச் செல்கிறது. எந்த ஒரு பெற்றோருக்கும் என்றுமே அடங்காத குழந்தையாய் அது இருக்கிறது. மரணத்திற்கு இசைந்தே வாழ்க்கை இயங்குகிறது. மரணம் ஒரு காட்டாறு போல வீறு கொண்டு ஓடுகிறது, வாழ்க்கைக் கரைகள் அதற்கேற்ப வளைந்து நெளிந்து தன்னை உருவாக்கிக் கொள்கின்றன.

மரணத்தின் அதிர்வு இடத்திற்கு இடம் மாறுகிறது. கிராமங்களைப் போல் நகரங்களில் யாரும் ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவதில்லை. கிராமங்களில் ஏற்படும் அதே அதிர்வை ஒரு மரணம் நகரங்களில் ஏற்படுத்தினாலும் அங்கு துக்கங்கள் நாசூக்கானவையாகத் தான் இருக்கின்றன. துக்கம் விசாரிக்க வருபவர் அத்தனை பேருக்கும், மரணம் சம்பவித்த அந்த நிமிடத்தை பற்றி கேட்டுத் தெரிந்த கொள்ள ஆவலாய் இருக்கிறது. அதை தங்கள் மனத்திரையில் ஓட விட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள். "தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணி கொடுன்னாரு" என்று சொல்லும்போதே நம் மனம் அப்போது தான், அப்போது தான் என்று பரபரக்கிறது. நமக்கும் ஒரு நாள் இப்படித் தான் நடக்கும் என்று அப்போது தோன்றுவதேயில்லை. அந்த நொடியை ஒவ்வொருவரும் தமக்குள் அனுபவித்து வெவ்வேறு வர்ணனைகளுடன் அடுத்தவருக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

என்ன சோகம் இருந்தாலும் மரணம் எல்லோருக்கும் ஒரு வித விடுதலை உணர்வை தருகிறது. இறந்தவருக்கு நிரந்தர விடுதலை. மற்றவருக்கு தற்காளிக விடுதலை. அந்த மரணத்தில் பங்கு கொண்ட யாரும் அன்று செய்ய வேண்டிய காரியத்தை செய்யத் தவறியதற்காக தண்டிக்கப்படுவதில்லை. மரணம் அன்று ஒரு நாள் எல்லாவற்றையும் மன்னித்து ஆசிர்வதிக்கிறது. இந்தக் கால ஓட்டத்தின் பிடியிலிருந்து எல்லோரையும் சற்று தளர்த்தி ஆசுவாசப்படுத்துகிறது. சற்று நேரம் அழுது ஓய்ந்ததும் மனது லேசாகிறது. அப்போது தான் பலருக்கு வானத்தையும், நிலவையும், மரங்களின் சலசலப்பையும், குழந்தைகளின் விளையாட்டுக்களையும் பார்க்க முடிகிறது. இறந்தவரின் மூலம் பல விட்டுப் போன உறவுகள் ஒன்று கூடுகின்றன. அன்று தான் எல்லோரிடமும் நிறைய நேரம் இருக்கிறது. அவரைப் பற்றி பேச ஆரம்பித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.

அப்படி மனம் விட்டுப் பேசும் போது, பல விதமான மரணங்களைப் பற்றியும், அதைச் சார்ந்த சம்பவங்களைப் பற்ரியும் தீர ஆலோசிக்கப்படுகிறது. தான் அதில் பங்கு கொள்ளாதவரை மரணம் நேர்ந்த சம்பவங்களைப் பற்றிக் கேட்க எல்லோருக்கும் ஆவல் இருக்கிறது. அதைப் பற்றிப் பேசப் பேச அது வளர்ந்து கொண்டே வருகிறது. வாழ்க்கை எத்தனை விசித்திரமானது, மரணத்தின் முன் அது எத்தனை அற்பமானது என்று நினைக்கத் தோன்றுகிறது. மரணத்திற்கான எல்லா பதில்களும் வாழ்க்கைக்கான கேள்விக்குறிகளாய் நம் மீது குவிகின்றன. மரணத்தைப் பற்றி சிலாகிக்கும் போதும், அதன் நிதர்சனத்தை உணரும் போது, நம்மில் எங்கோ அடி ஆழத்தில் புதைந்து போய் விட்ட மனிதம் ஆனது மெல்ல தலை காட்டுகிறது. அந்த சில நொடிகள் நாம் பிறந்த குழந்தையாய் மாறி விடுகிறோம். அது வெறும் சில நொடிகள் தான். அந்தக் கனவு கலைந்தவுடன் நாம் சராசரியாகி விடுகிறோம். ஒவ்வொரு மரணமும் வாழ்க்கை எப்படி வாழப்பட வேண்டும் என்று செய்தியை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் கண்களை மூடி பயணிக்கிறோம்!