என்ன தலைப்பு பாத்து வந்தீங்களா? ஹிஹி, தெரியுமே...சரி சரி, படிங்க!
நேற்று எனக்கு நிஜமாகவே சனி உச்சத்தில் இருந்திருக்க வேண்டும்! பிரபுதேவா ஏதாவது செய்திருப்பார் என்ற நப்பாசையில் போக்கிரி பார்க்க வேண்டியதாகிவிட்டது. படத்தை விட்டு வரும்போது என் சட்டை முழுதும் ரத்தம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அத்தனை வன்முறை! கமலின் சண்டியருக்கு போர்க்கொடி தூக்கிய கனவான்கள் இப்போது எங்கப்பா ஒளிந்து கொண்டீர்கள்? போக்கிரி, ஆழ்வார், தாமிரபரணி மூன்றும் சாரமாறியாய் போட்டுத் தள்ளும் படங்கள் தான்! அடுத்த வீட்டுப் பையன் மாதிரி இருக்கான்னு சொல்லி சொல்லி, இன்னைக்கு பெரிய அருவாளை கைல வச்சுட்டு நிக்கிறார் விஷால்!
டிக்கட் எடுத்துக் கொண்டு உள்ளே செல்லும்போது நம்ம லிங்குவிடம் [அதாங்க நம்ம பீமா லிங்குசாமி] பேசிக் கொண்டிருந்தேன்! [என்ன கற்றதும் பெற்றதும் சாயல் அடிக்குதா?] என்ன சார் இந்த படம் எல்லாம் பாக்க வந்துருக்கீங்க? இது நான்! ஏன்பா, இந்த படம் நல்லா இருக்காதா? இது அவர்..இல்லை இது மாஸ் படமாச்சே, நீங்க எப்படி? இந்த மாதிரியும் ஒரு படம் எடுக்கனும்ல..அதான்! ஏன் சார், விக்ரம் வைச்சி இப்படி படம் தான் எடுக்குறீங்களா? இல்லை இல்லை..அதற்குள் தியேட்டரின் இருட்டில் கலந்து விட்டோம்!
படத்திற்கு போக்கிரிலு என்று பெயர் வைத்திருக்கலாம்! அப்பட்டமானலு தெலுங்குலு படம்லு!! முடியலலு!!
எனக்கு ஒன்று (அல்ல ஒன்றுக்கு மேல்) புரியவில்லை! இந்தப் படம் ஏன் தெலுங்கில் ஹிட் ஆனது? தெலுங்கில் இப்படி ரத்தக்களறியாய் இதற்கு முன் ஒரு படம் கூட வந்ததில்லையா?
நிற்க
இன்று அது ஏன் தமிழில் இப்படி ஓடுகிறது? தமிழ் மக்களுக்கு என்ன ஆகிவிட்டது? விஜய் என்ன படம் நடித்தாலும் பார்ப்பார்களா? மாஸ் ஹீரொ, மாஸ் ஹீரோ என்று இப்படிப்பட்ட படங்களாய் எடுத்து இன்னும் தமிழ் சினிமாவை பாழ் படுத்தப் போகிறோமா? கலைஞர்களுக்கு கொஞ்சம் கூட சமூக பொறுப்பு இல்லையா? எம்.ஜி.ஆர் என்றொரு மாஸ் ஹீரோ தன் எல்லா படங்களிலும் உதாரண புருஷனாய் வாழ்ந்து காட்டினார்! ரஜினி என்றொரு மாஸ் ஹீரோ தன் ஸ்டைலாலும், மேனரிஸங்களாலும் மக்களை குஷிபடுத்தினார்! விஜய் என்ற மாஸ் ஹீரோ எல்லா படங்களிலும் அரிவாளுடனும், துப்பாக்கியுடனும் எல்லோரையும் போட்டுத் தள்ளுகிறார்! அதிலும் இந்தப் படத்தில் கடைசியில், தான் ஒரு போலிஸ் அதிகாரி என்று வேறு அடையாளம் காட்டிக் கொள்கிறார்! [என்ன வேணா சொல்லுவீங்களா..ஒரு நியாய தர்மம் வேண்டாம்?]
படம் முடியும் தருவாயில் விஜய் துப்பாக்கியால் ஒருவரை துளைத்து கொண்டிருந்தார். தியேட்டரில் மயான அமைதி. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு குழந்தை திடீரென்று சத்தம் போட்டுக் கை கொட்டி தன் விஜய் மாமாவை பார்த்து சிரித்தது! படம் முடிந்தவுடன் அந்தக் குழந்தையின் தந்தையிடம், நான், குழந்தைகளை இந்த மாதிரி படத்துக்கெல்லாம் கூட்டிட்டு வராதீங்க என்றேன்! அவர் ஆமோதித்து தலையில் அடித்துக் கொண்டார்!
வெளியே வரும்போது லிங்குசாமி கண்ணில் படவில்லை. அவர் வேறு இப்படி ஒரு படத்தை எடுத்து தொலைத்து விடப் போகிறார் என்று அடி வயிற்றைக் கலக்குகிறது! உங்கள் யாருக்காவது அவரைத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லி வையுங்கள்!