கிட்டத்தட்ட ஒரு வாரமாய் பேப்பரில் அந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது கண்ணையும் கருத்தையும் உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த விளம்பரமாவது யாதெனில், இன்று மாலை 7:15 க்கு சத்யம் சினிமாவில் லைட்ஸ் ஆன் என்ற நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு இயக்குநர் கே. விஸ்வநாத்தின் அவர்களின் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னைக்கு குடி பெயர்ந்ததே இதற்காகத் தானே..போகாமல் இருந்தால் எப்படி? வழக்கத்திற்கு மாறாய் 6:30 மணிக்கே ஆபிஸில் இருந்து ஜூட் [6:30 மணிக்கு ஆபிஸில் இருந்து கிளம்புவது மனதுக்கு எவ்வளவு உறுத்தலாக இருக்கிறது தெரியுமா?] இந்த மாதிரி நேரத்தில் டைடல் பார்க்கில் இருந்து சத்யம் போவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. வழக்கத்திற்கு மாறாக வெளியே பைக்கிற்கு பதிலாக போலிஸ் ஜீப்பும், பல போலீஸ்காரர்களும் இருந்தார்கள். என் கையிலோ அந்த நிகழ்ச்சிக்கு பாஸ் இல்லை. வெளியே வண்டியை நிறுத்தி விட்டு பாஸ் இருந்தால் வாங்கிக் கொண்டு வண்டியை உள்ளே கொண்டு செல்லலாம் என்று நினைத்தேன். பாஸ் இல்லை என்று சொல்லிவிட்டால் 10 ரூபாய் தண்டம் அழவேண்டும். நிலமை தாறுமாறாக இருந்ததால் எதற்கு வம்பு என்று நேராக வண்டியை உள்ளே கொண்டு போய் விட்டேன், எதற்கு இத்தனை போலீஸ் என்ற கேள்வியுடன்..

கவுண்டரில், ஸ்டூடியோ 5 பாஸ் என்றேன் வழக்கம் போல்...·புல் சார் என்றார் வழக்கம் போல்...இந்த மாதிரி ஏற்கனவே பாஸ் எதுவும் இல்லாமல் நான் பல படங்களை பார்த்திருக்கிறேன், அதனால் தைரியமாக உள்ளே போய் விட்டேன். நல்ல வேளையாக யாரும் பாஸ¤க்காக என்னை வழி மறிக்கவில்லை. கவுண்டரில் ·புல் என்றார், ஆனால் உள்ளே தாரளமாய் இடம் இருந்தது. வராதவர்கள் ஏன் பாஸை மட்டும் அவ்வளவு பொறுப்புடன் வாங்கிச் செல்கிறார்களோ, தெரியவில்லை. பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன், ஒரு வாரத்திற்கு முன் பாஸ் வாங்கிக் கொண்டாராம். முதலில் சத்யம் தியேட்டருக்குப் பக்கத்தில் ஒரு வீடு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்..

இந்தியன் காண்டம்பரரி சினிமா, ஆர்டிஸ்டிக், லிட்ரேச்சர் அப்படி இப்படி என்று ஒன்றும் புரியாத பாஷையில் பேசுகிற கூட்டம். சரி நெல்லுக்கு பாயும் நீர் என்னைப் போன்ற சில புல்லுக்கும் பாய்ந்து விடாதா என்ற ஒரு நப்பாசை. கே. விஸ்வநாத் அவர்களின் சாகர சங்கமம் (சலங்கை ஒலி), ஸ்வாதி முச்யம் (சிப்பிக்குள் முத்து) படங்களைத் தவிர வேறு எந்த படங்களையும் நான் பார்த்ததில்லை. சங்கராபரணம் சிறு வயதில் பார்த்ததாய் ஞாபகம். கே.வி அவர்களுடன் கலந்துரையாட சுஹாசினி மணிரத்னம் வந்திருந்தார்கள். பத்மா சுப்ரமண்யம், கமல்ஹாசன், கே. பாலசந்தர் போன்ற பெருந்தலைகள் கேட்ட கேள்விகளை முதலில் கே. வி அவர்களிடம் சுஹாசினி கேட்டார். பிறகு பார்வையாளர்களை கேட்கச் சொன்னார். ஒருவர் கே.வியை சத்யஜித்ரேயுடன் ஒப்பிட்டு கை தட்டல் பெற்றார். ஒருவர் தான் கேட்ட கேள்வியை விட தன் பெயரை சொல்வதில் மிகுந்த அக்கரை காட்டினார். ஒருவர் தெலுங்கில் நீங்கள் எங்க பாட்டி வீட்ல தான் சங்கராபரணம் ஷ¤ட்டிங் நடத்தினீங்க என்று பெருமிதப்பட்டார். [எனக்கு தெலுங்கு தெரியாது. அதைத் தான் அவர் சொன்னார் என்று நினைக்கிறேன்!] உங்கள் அடுத்த படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார் என்று நான் கேட்க நினைத்தேன். அதிகப்பிரசங்கித்தனமாய் ஆகிவிடும் என்ற காரணத்தால் ஸ்டூடியோ 5 குளிரில் நடுங்கிக் கொண்டே கப்சிப் என்று இருந்து விட்டேன்.

எல்லோரும் செய்வதை நான் செய்வதில்லை. நான் அதிகம் படங்களைப் பார்ப்பதில்லை. அதிகம் டி.வி. பார்ப்பதில்லை. புத்தகம் அறவே படிப்பதில்லை. [பெரிய ஆச்சர்யக்குறி] என் படங்கள் எல்லாம் நான் கவனித்த வாழ்வியல் அனுபவங்கள். ஒரு படத்திற்கான கரு எனக்கு எப்படி கிடைக்கிறது என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ரயிலில் மூன்றாம் வகுப்பு மேல் பெர்த்தில் தூக்கம் வராமல் புரளும் போது ஒரு படத்திற்கான கரு கிடைத்தது, குளிக்கும் போது சில கிடைத்திருக்கிறது, தனியாய் உட்கார்ந்து சற்று அதிகமாக சாப்பிட்டு விட்ட இட்லியை பற்றி யோசிக்கும்போது கிடைத்து விடுகிறது..எனக்கு எப்படிக் கிடைக்கிறது என்று தெரியவில்லை; ஆனால் கிடைத்து விடுகிறது என்றார். இதே போல் தான் மகேந்திரன் தன்னுடைய நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற படத்தின் கரு ஒரு காலை வேளையில் மும்பை கடற்கரையில் ஒரு பெண் ஓடுவதை பார்த்து கிடைத்ததாகச் சொன்னார். கே.வி அவர்கள் அவருடைய பல விதமான பழைய நினைவுகளை தூசி தட்டி எங்களுக்கு ஒரு அருசுவை விருந்து படைத்தார். நிறைவான மாலை எனக்கு..

வெளியே வந்தால் வராந்தாவில் ஏகப்பட்ட கார்கள், இரு பக்கமும் ஒரே கூட்டம். மெஷின் கன்களுடன் பாதுகாப்புப் படையினர். யார் என்று கூட்டத்தில் கேட்டதற்கு தமிழ்நாடு கவர்னர் படம் பார்க்க வந்திருப்பதாகத் தெரிந்தது. மவுண்ட் ரோடில் தொடங்கி கிண்டி ராஜ் பவன் வரை ஆங்காங்கே போலிஸார் நிற்கிறார்கள், இவரின் பாதுகாப்பிற்கு! இவர் படம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு 100 போலிஸார் தேவைப்படுகிறது. அப்படி என்ன படம் வேண்டிக் கிடக்கு இவருக்கு? சரி, அவரும் மனிதர் தானே பார்க்கட்டுமே என்றாலும், கமுக்கமா சத்யம் தியேட்டருக்கு போனோமா, படம் பாத்தோமா, வந்தோமான்னு இல்லாம இதெல்லாம் ஊரெல்லாம் கூட்டி வச்சுகிட்டு? இல்லை தெரியாம தான் கேட்கிறேன்..யாரு அப்பன் வீட்டு சொத்து? என் வரிப் பணம் எல்லாம் இவர் சத்யம் தியேட்டருக்கு படம் பார்க்க போறதுக்கும் வர்றதுக்கும் சரியா போயிடும் போல இருக்கே..

கொசுறு: பெங்களூரில் ஏர்போர்ட் ரோடில் அந்த அரைகுறை மேம்பாலம் காரணமாக அந்த சிக்னலை தாண்ட குறைந்த பட்சம் ஒரு அரை மணி நேரம் ஆகும். ஒரு நாள் அப்துல் கலாம் வருகிறார் என்று எல்லோரையும் ஓரமாக நிறுத்தி வைத்து விட்டார்கள். உங்களுக்கே புரிந்திருக்கும் அதற்குப் பிறகு நான் வீடு போய் சேர எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் என்று..இப்படி எல்லோரையும் நிறுத்தி வைத்து விட்டு அவர் ஜம்மென்று போய் விட்டால், அவருக்கு இந்த இடத்தில் பல வருடங்களாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இன்னும் முடியவில்லை என்ற உண்மை அவருக்கு எப்படித் தெரியும்? நீங்களே சொல்லுங்கள்?

8 Responses
  1. This comment has been removed by a blog administrator.

  2. unna bangalorela irundu chennaikku kootikittu vandadukku enakku oru sinna thanks kooda sollalaye.

    evalavu pandra inga vandu nee,
    kacheri, padathukku poradu,
    anda nungampakkam photo studio....

    -karthic

    10:18 AM


  3. karthic

    ithellam en kanavai nokki naan eduthu vaikkum adigal! kanavukku kaikku vantha vudane paaru..saashtaangama un kaalla vizhunthurren!


  4. பிரதீப்,
    உங்கள் எழுத்துக்களை அவ்வப்போது படிப்பது (அப்பபோ தானே எழுதுகிறீர்), உங்கள் நகைசுவையில் திளைப்பது, உங்களுக்கென்றே ஒரு தனி பாணியை உருவாக்கியது, பெரிய சாதனை தான்.
    தொடருங்கள்.


  5. sivamurugan,

    thanks for your comments. i will try to write often.


  6. This comment has been removed by a blog administrator.

  7. Sam Says:

    நன்றாக எழுதுகிறீர்கள். சத்யம் தியேட்டருக்கு அடுத்து உள்ள அரசு குடியிருப்பில் என் கல்லூரி நண்பன்
    வீடு இருந்தது. இவன் படம் பார்த்து விட்டு உடனே வீட்டுக்குப் போக முடியும் என்று எனக்குத்
    தோன்றும்
    அன்புடன்
    சாம்


  8. கிரி Says:

    //இவர் படம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு 100 போலிஸார் தேவைப்படுகிறது. அப்படி என்ன படம் வேண்டிக் கிடக்கு இவருக்கு//

    :-)))))))