நாள் முழுவதும் அவர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை. காதில் ரகசியம் சொல்வது போல் தான் அவரிடம் எல்லோரும் பேசுவார்கள். இவரும் அப்படித் தான் பதில் சொல்வார். அவருடைய வேலை அப்படி.
அன்று வெள்ளிக்கிழமை. வீடெங்கும் தேடியும் ஒரு குழந்தையையும் காணோம். என்னடி? ஒருத்தரையும் காணோம், வழியிலே போறவாளுக்கு தத்து கொடுத்துட்டியா என்ன? அதனால ஒன்னும் கெட்டுப் போகலை; நீ மாவை அப்படியே போட்டுட்டு வா, 1 குழந்தைக்கு ஏற்பாடு பண்ணி புடலாம் என்றார் நக்கலாய்.
இப்படி பேசிப் பேசியே ஒரு காம்பவுண்ட் பூரா சேத்தா இருக்க வேண்டிய தொகை நம்ம வீட்ல மட்டும் வாழுது. நேத்தைக்கு இப்படித் தான், ஏம்மா இங்கே நீங்க டியுஷன் ஏதுனா சொல்லித் தரேளா? என் புள்ளை படிக்கவே மாட்டேங்கிறான் என்று ஒரு பொம்மனாட்டி கேட்டுட்டா? அடக் கருமமே, நீங்க இந்தத் தெருவுக்குப் புதுசா? இதெல்லாம் நான் பெத்ததுகள்மா என்று சொல்லும்போது எனக்கு வெக்கம் புடுங்கித் தின்றது..உங்களுக்கென்ன? என்றார் சீதா தேவி.
சரி, சரி கோவ்சுக்காதே, எங்கே கொழந்தைகள்?இன்னைக்கு வெள்ளிக்கிழமைன்னா, பக்கத்து வீட்ல ஒலியும் ஒளியும் பார்க்க போயிருப்பா! இப்போ தான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன், உங்களுக்கு பொருக்காதே..பிள்ளைகளா அது? பிசாசுகள் என்னா கத்து கத்துறதுகள்..உங்களுக்கென்ன நீங்க காலையில போனா ராத்திரி தான் வர்றேள், இதுகளை கட்டிண்டு மாரடிக்கிறது நான் தானே? கொழந்தைகள்னா அப்படி தாண்டி இருப்பா..குழந்தைச் சத்தம் இல்லாத வீடு என்ன வீடுன்னேன்? பேசிக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று தன் வேலை ஞாபகம் வந்தது..
மெல்லிய குரலில் ஒருவர்:
சார், சித்திரப் பாவை எங்கே இருக்கு?
2வது கப்போட்ல 3வது ராக்ல இருக்கும் பாருங்கோ! அகிலனோடது எல்லாம் அங்கே தான் இருக்கும்.
யாரோ இரண்டு பேரை பாத்து மிரட்றார், அதுவும் மெல்லிய குரலில்! என்ன இது லைப்ரேரியா இல்லை உங்க வீடா? இப்படி எல்லாம் சத்தம் போடக் கூடாது இங்கே! படிக்கிறதுன்னா இங்கே இருங்கோ இல்லை தயவுசெய்து இடத்தை காலி பண்ணுங்கோ!
அப்பா என்று 8 குழந்தைகளும் ஒரே ராகத்தில், அது அவரைப் பொறுத்தவரை ராகம், நம்மைப் பொருத்தவரை காட்டுக் கத்தல் கத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தன..அவருக்கு காதில் தேன் பாய்ந்தது!