விஜயநகரத்துக்காரர் தன்னுடைய blogல் நான் எழுதிய பொதுவுடைமையை எதிர்த்து ஒரு நல்ல debate ஐ
தொடங்கி இருக்கிறார்! கலகம் பொறந்தாத் தான் நியாயம் பொறக்கும் என்கிற கதையாய்..

எல்லோரும் சந்தோஷமாய் இருக்கலாம் என்ற கொள்கையை பலர் எப்படி எதிர்க்கிறார்கள் என்றே எனக்கு புரியவில்லை! சரி அவருடைய கேள்விக்கு என்னால்
ஆன பதிலை சொல்கிறேன்! அதோடு என்னுடைய இரண்டாவது பகுதியையும் சேர்த்துக் கொள்கிறேன்!

1. நீங்க சொல்றதை நான் ஒத்துக்குறேன். எல்லாத்துக்கும் மனித உழைப்பு தேவை தான். எல்லோரும் ஒரே சமூகமா இருந்து உழைச்சா எல்லாத்துக்கு எல்லாம்
கிடைக்கும்ன்றது தான் என்னோட வாதம்! இப்போ நிறைய நிலம் சொந்தமா வச்சுருக்குறவங்க நிலத்துல பல பேர் கூலிக்கு வேலை செய்றாங்க! ஒன்னுமே
செய்யாம நிலம் வச்சுருக்குறவன் சந்தோஷமா இருக்கான்! நாள் பூரா கடுமையா வேலை பாக்குறவனுக்கு அதிகமா போனா கூலியா ஒரு 10 ரூபா கொடுப்பானா?
இந்த மனுஷன் அந்த நிலத்துக்கு சொந்தக்காரரை விட எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டான்? அவனும் 10 மாசம் தான்..இவனும் 10 மாசம் தான்..

2. ஆரம்பத்துல மனுஷனுக்கு என்னோட குடும்பம்னு ஒன்னும் இல்லை! எல்லோரும் ஒரு கூட்டமா சேர்ந்து வாழ்ந்தாங்க.."வால்கா முதல் கங்கை வரை" படிங்க!
அப்போ எல்லாரும் இஷ்டத்துக்கு sex வச்சுக்கிட்டாங்க! ஒருத்தனுக்கு ஒருத்திங்கிற conceptயே இல்லை..அதனால இவன் என் மகன் இவனுக்கு நம்ம சொத்து
சேக்கனும்ன்ற எண்ணமே இல்லை..கிடைச்சதை வச்சு வாழ்ந்தாங்க! ஆனா நீங்க சொல்றபடி ஒரு கூட்டத்துக்கும் அடுத்த கூட்டத்துக்கும் சண்டை இருக்கத்
தான் செய்தது..யார் வலியவர்கள், யார் யாரை அழிப்பது என்று பார்த்துக் கொண்டே தான் இருந்தார்கள். ஆனால் அன்று இருந்த மனித வர்கம் அல்ல
நாம்..நாகரிகம், கலாச்சாரம் என்ற ரீதியில் நாம் நிறைய முன்னேறி விட்டோம்? அப்படித் தானே?

3. இதை நான் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் ராகுல்ஜி சொல்லும்போது, அன்று ஒரு தச்சனுக்கு தன்னுடைய பொருள்கள் சொந்தமாய் இருந்தன..ஒரு
குயவனுக்கு மண்பாண்டம் செய்ய உதவும் கருவிகள் அவனுக்குச் சொந்தமாய் இருந்தன என்று சொல்லி முடித்து விட்டார்! நீங்கள் சொல்வது போல் அப்போதும்
நிலக்கிழார்கள், ஜமிந்தார்கள் இருக்கத் தான் செய்தார்கள். இதை நான் ஒத்துக் கொள்கிறேன்! ஆனால் இயந்திரங்களால் சுதந்திரத் தொழிலாளர்களின் கை
எப்படிக் கட்டப்பட்டது என்பதை நான் விலக்கி இருக்கிறேன்! முதலாளித்துவத்திற்கு தொழில் வளர்ச்சி ஒன்றே காரணம் என்பதை விட, அதுவும் ஒரு முக்கிய
காரணம் என்று கொள்ளலாம் என்று தான் நினைக்கிறேன்!

4. வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கு மக்கள் தொகையும் ஒரு காரணம் என்று நானே சொல்லி இருக்கிறேனே? மக்கள் தொகையை நீங்கள் கட்டுப்படுத்த
நினைத்தால் நீங்கள் பல மதங்களின் எதிரி ஆக வேண்டி வரும்! மக்களின் பல மூட நம்பிக்கைகளை போக்க வேண்டும்!

5. இதை நான் ஒப்புக்கொள்ளவே முடியாது...இன்றும் அன்றாடத் தேவைகள் கூட இல்லாமல் உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நம் இந்தியாவையே
எடுத்துக் கொள்ளுங்கள். ராகுல்ஜி இந்த நூல் எழுதும் போது 1946 என்று சொன்னேன்..அப்போது அவர் ஏதோ குஜராத்திலோ, பீகாரிலோ [சரியாய் ஞாபகம்
இல்லை] சில கிராமங்களில் வருடத்திற்கு 2 அல்லது 3 மாதங்கள் [அறுவடை சமயங்களில்..]தான் அந்த மக்களுக்கு தினமும் உணவு கிடைப்பதாகச்
சொல்கிறார்! மற்ற ஆண்டுகளில் அவர்கள் பட்டினியாய்த் தான் கிடந்தார்களாம்..இதை இறந்த காலத்தில் நடந்ததாய் எழுத வேண்டியதில்லை என்று நான்
நினைக்கிறேன்! சுதந்திரம் வாங்கி 50 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்றும் இந்தியாவில் பல கிராமங்கள் இப்படித் தான் இருக்கிறது..

6. அதே தான் நானும் சொல்றேன்! மண்ணாசை, உலக சந்தையில் தன்னுடைய நாடு தான் தன்னிகரற்று விளங்க வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் போட்டி
போட்டுக் கொள்கின்றன..ஒரு சமயத்தில் அது உலகப் போராய் முடிகிறது!!

7. நல்லதங்காள் காலத்தில் பொதுவுடைமை இல்லை, அதனால் தான் விபச்சாரம் இருந்திருக்கிறது..கொஞ்சம் யோசியுங்கள், எந்தப் பெண் தன் காம
இச்சைக்காகவா விபச்சாரி ஆகிறாள்? அவளுக்குத் தேவை பணம்..எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் இருக்க இடம் என்று வரும்போது எப்படிப்பா
விபச்சாரம் இருக்கும்?

8. மறுபடியும் மறுபடியும் நீங்க நம்ம நாட்டைப் பத்தியே பேசுறீங்க..பொதுவுடைமையைப் பொறுத்த வரை, உலகமே ஒரு கூட்டுக் குடும்பம்..எல்லொரும்
உழைப்பது, தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை பெறுவது, சந்தோஷமாய் வாழ்வது! எல்லோருக்கும் எல்லாம் சொந்தம்னு சொல்லும்போது எப்படி sir ஊழல்
இருக்கும்?

9. if women becomes financially independent, அப்புறம் எப்படி பெண்ணடிமை இருக்கும்? அவளுக்கும் ஒரு ஆணுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, அதே
அளவு மரியாதை தான் தருவோம் என்று கொள்ளும்போது பெண்ணடிமை என்பது கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து விடாதா? ஆணுக்குப் பெண் சலைத்தவளல்ல
என்று வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் வந்து விடாதா?

முடிவாக, இந்தியாவில் எங்கோ (1946)ல் ஒரு மாபெரும் பூகம்பம் வந்தது. நகரமே சுக்கு நூறானது..அதை மறுபடியும் நிர்மாணிக்க ஒரு தலைமுறை காலம்
ஆகும் என்று அரசு சொன்னது..ஏன்? அந்த நாட்டில் வேலை பார்க்க மக்கள் இல்லையா? தனிமங்கள் இல்லையா? TATA வின் ஒரு பெரிய தொழிற்சாலை
பக்கத்தில் தான் இருந்திருக்கிறது! பிறகு ஏன் இவ்வளவு காலம்? இங்கே அதற்கு முக்கிய காரணம் எல்லா சொத்துக்களும் ஒரு தனி மனிதனுக்கு சொந்தமாய்
இருப்பது. அவனுக்கு லாபம் இல்லையென்றால் அவன் எப்படி மற்றவர்க்கு கொடுப்பான்? அதனால் இவ்வளவு காலம் ஆகும்! இதே பொதுவுடைமை
இருந்திருந்தால், அது பொதுச்சொத்தாய் இருந்திருக்கும், அதிகம் போனால் சில மாதங்களுக்கும் இருந்ததை விட அழகான நகரமாய் மாற்றி இருக்க முடியும்!

முதலாளித்துவக் கொள்கை லாபத்தை மட்டுமே நோக்குகிறது என்பதை மேலே உள்ள உதாரணத்தின் மூலம் உங்களுக்குப் புரிந்திருக்கும்! இதற்கு நம்முடைய
அன்றாட வாழ்விலும் ஒரு உதாரணம் உள்ளது!!

உதாரணத்திற்கு உங்களுடைய அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை! மாதா மாதம் உங்களுக்கு 10,000 செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம்! இப்படி
எத்தனை மாதங்கள் நீங்கள் உங்கள் தாய்க்கு மனமுவந்து செலவு செய்வீர்கள்! ஒரு கட்டத்தில் உங்களுக்கே வெறுப்பு ஏற்படும், இப்படி ஒன்றும் தேறாமல்
செலவு செய்வதற்கு அவர்கள் நிம்மதியாய் போய்ச் சேர்ந்து விடலாம் என்று நிச்சயமாகத் தோன்றும்! அதை நீங்கள் மற்றவரிடம் மறைத்தாலும் உங்கள்
உள்ளத்தில் தோன்றத்தான் செய்யும்! இது உங்கள் தவறல்ல, பணம், லாபம் என்ற அரக்கர்கள் உங்களை அப்படிச் செய்யத் தூண்டுகின்றன! முதலாளித்துவத்தில்
பணம் ஒன்று தான் கடவுளாய் இருக்கிறது! இதே பொதுவுடைமையில் முதியோர்களை அரசே காக்கும்..என்னுடைய பணம், நான் இவ்வளவு செலவழித்தேன் என்ற
பேச்சுக்கே இடம் இருக்காது!

பொதுவுடைமைக் கொள்கை உலகம் அத்தனையும் ஒரு கூட்டுக் குடும்பம் மாற்றி விடுகிறது. இங்கே எனது, உனது என்று இல்லாமல் நமது என்று
மாறிவிடுவதால்..எந்தப் பிரச்சனையுமே இருக்காது என்று நான் சொல்லவில்லை..முதலாளித்துவ சமுதாயத்தை விட பிரச்சனைகள் குறைச்சலாய் தான் இருக்கும்
என்று நம்புகிறேன்!!

சரி எத்தனையோ வெட்டி பேச்சு பேசியாச்சு..கொஞ்சம் உருப்படியா ஏதாவது பேசுவோம்னு நினைக்கிறேன்!

சமீபத்துல ராகுல்ஜியோட பொதுவுடைமை தான் என்ன? படிக்க நேர்ந்தது. 100 பக்கங்கள் கொண்ட புத்தகம் தான்..அதற்குள் எத்தனை விதமான
சிந்தனைகள்! எவ்வளவு ஆழமான கருத்துக்கள்! 1946ல் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார்! ராகுல்ஜி என்பவர் விஞ்ஞானியாக இருந்து பிறகு சமுதாய
ஆராய்ச்சியில் இறங்கி விட்டார் என்று ஞாபகம். அவர் எழுதிய வால்கா முதல் கங்கை வரை படித்தவர்களுக்கு அவரைப் பற்றி நன்றாய் தெரிந்திருக்கும்.
அது ஒரு மனித ஆராய்ச்சி நூல்! வால்கா நதியில் ஆரம்பித்து மனித வாழ்க்கையை சிறுகதைகளாக அற்புதமாய் தந்திருப்பார்!

நிற்க

பொதுவுடைமை தான் என்ன? என்ற புத்தகத்தில் இவர் முதலாளித்துவத்தையும், பொதுவுடைமைக் கொள்கையையும் ஒப்பிட்டு எது சிறந்தது, அது எப்படி என்று
என்னைப் போன்ற பாமரர்களுக்கும் புரியும்படி விளக்கி உள்ளார்!

பொதுவுடைமை தான் என்ன?

இந்த உலகில் எல்லோரும் சமமானவர்கள்! இந்த பூமியில் எல்லோருக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை எல்லாம் தாரளமாய் தான்
இருக்கிறது என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்! அதனால் எல்லோருக்கும் உணவு, உடை, இடம், கல்வி போன்ற அடிப்படை
உரிமைகள் கிடைக்க வேண்டும்..[இதுல நீங்க cable tv எல்லாம் சேக்கக் கூடாது ஆமாம்..]

சொல்வதற்கு எவ்வளவு சுலபமாய் இருக்கிறது..ஆனால் இது நடப்பதென்பது பகலில் அதுவும் சரியாக 12 மணிக்கு காணும் கனவாக மட்டுமே இருக்கிறது என்பது
வருத்தமான் விஷயம் தான்..

முதலாளித்துவம்?

குறைந்த தகுதி உடையவன், பணம் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தன் சொந்த லாபத்திற்காக பிறர் உழைப்பை சுரண்டுவது முதலாளித்துவம்.

முதலாளித்துவம் எங்கே எப்போது தொடங்கியிருக்கும்? மனிதன் வேட்டை ஆடித் திரியும் போது தொடங்கி இருக்க வாய்ப்பில்லை..அப்போது கிடைத்ததை
எல்லோரும் சமமாகவே பகிர்ந்து உண்டார்கள்! பிறகு எங்கே? எப்படி? ஏன்?

என்று நீராவியினால் இயங்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டனவோ அன்று தொடங்கியது முதலாளித்துவம்!! அதுவரையில் ஒரு தச்சனுக்கோ, ஒரு
நெசவாளிக்கோ தன்னுடைய மூலப் பொருட்கள் சொந்தமாய் இருந்தது. அதை வைத்துக் கொண்டு அவனால் முடிந்ததை அவன் உற்பத்தி செய்து நிம்மதியாய்
வாழ்ந்து வந்தான்...இயந்திரங்களைக் கையாள மனிதன் கற்றவுடன் 4 பேர் செய்வதை ஒரே ஒருவன் அதே நேரத்தில் சிறப்பாய் செய்ய முடிந்தது!

உதாரணத்திற்கு

1 மனிதன் 4 மணி நேரத்தில் 12 கெஜம் துணி நெய்தால்தகுதி குறைந்த 1 மனிதன் இயந்திரத்தின் உதவியுடன் அதே 4 மணி நேரத்தில் 24 கெஜம் நெய்து விடுகிறான்!

முதலாளித்துவத்தால் வந்த வினைகள்

1. வேலை இல்லாத் திண்டாட்டம்
2. வறுமை
3. உலக மகா யுத்தங்கள்!
4. விபச்சாரம்
5. ஊழல்
6. பெண்ணடிமை

வேலை இல்லாத் திண்டாட்டம் உங்களுக்கு மேல் சொன்ன உதாரணத்திலிருந்து புரிந்திருக்கும்..4 பேர் செய்யும் வேலையை அவர்களை விட தகுதி குறைந்த
மனிதன் இயந்திரத்தின் உதவியால் அவர்களை விட வேகமாய் செய்து முடித்தான்..3 பேரின் வேலையை இயந்திரம் தன் ராட்சச கரங்களால் பறித்துக்
கொண்டது..

அதன் விளைவாய் வறுமை..பசி, பட்டினி!!!

இயந்திர ஆலைகளை இங்கிலாந்து முதலில் நிறுவியது..அப்போது உலக சந்தை மொத்தமும் அதன் கையில் இருந்தது..இங்கிலாந்தின் வளர்ச்சியைக் கண்ட
மற்ற ஐரோப்ப நாடுகள் மெல்ல தொழிற்சாலைகள் தொடங்க ஆரம்பித்தன..முதலில் உலக சந்தையில் நிறைய பொருள்கள் தேவைப்பட்டதால், தொழிற்சாலைகள்
வளர்ந்து கொண்டே இருந்தன..தொழிற்சாலைகள் பெறுகியதால், உற்பத்தி அதிகரித்தது..நாட்கள் செல்லச் செல்ல சந்தைகளின் தேவை குறையத் தொடங்கியது!
பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன..அங்கே வேலை செய்து கொண்டிருந்த அத்தனை பேருக்கும் பசி, பட்டினி ஒன்றே சொந்தமானது!! இதற்கிடையில்
சந்தைகளுக்காக உலக நாடுகளிடையே பெரிய சண்டைகள் நிலவியது. அது உலக யுத்தத்தில் முடிந்தது..

"முதலாளித்துவம் இந்த உலகில் உள்ளவரை மகாயுத்தம் என்ற கத்தி உலகின் தலையில் எப்போதும் தொங்கிக் கொண்டே தான் இருக்கும்!!"

நாம் திரும்பிப் போக முடியுமா?

சரி இயந்திர வளர்ச்சியால் தான் இத்தனை பிரச்சனை.. நாம் இயந்திரங்களே இல்லாத நம் பழைய உலகிற்கே சென்று விடுவோம், அப்போது ஒரு பிரச்சனையும்
இருக்காது என்று சிலர் கருதுகிறார்கள், அது முடியவே முடியாது! ஏன் முடியாது?

1. மனிதன் என்று 4 கால்களால் நடப்பதை விட்டு 2 கால்களால் நடக்கத் தொடங்கினானோ, அன்றே இயந்திர வளர்ச்சி ஆரம்பித்து விட்டது.
2. இயந்திரங்களை 1, 2 நாட்களிலா கண்டு பிடிக்கிறார்கள்? விஞ்ஞானிகள் தம் வாழ்க்கை முழுதும் அர்ப்பணித்து நமக்கு பல அரிய கண்டுபிடிப்புகளை
தருகிறார்கள்! அதை எப்படி சுலபமாய் உதற முடியும்?
3. சரி அப்படிப் பட்ட அறிவாளிகளைக் கொன்று விடலாமா? அதுவும் முடியாது..அது அஹிம்சைக்கு எதிரானது.
4. சரி அவர்கள் கண்டுபிடிக்கட்டும், யாரும் உபயோகிக்க வேண்டாம், பிறகு அவர்களே வெறுத்து கண்டுபிடிப்பதை நிறுத்தி விடுவார்கள்! இங்கே நன்றாக
சிந்திக்க வேண்டும்..விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை அதிகம் யார் உபயோகிக்கிறார்கள்? முதலாளி வர்க்கத்தினர் தானே?
5. அவர்கள் சொல்வது போல் எல்லாம் துறந்து பழைய காலத்திற்கே செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்..அன்று இருந்த மக்கள் தொகை என்ன? இன்று
உள்ள மக்கள் தொகை என்ன? அது ஒரு பெரிய பிரச்சனையாய் இராதா?

இந்த அனைத்துக் காரணங்களைக் கொண்டு பார்க்கும் போது கற்காலத்திற்கு செல்வது இயலாது என்பது தெளிவாகிறது!

இந்த அனைத்திற்கும் பொதுவுடைமைக் கொள்கை எவ்வாறு வழி காட்டுகிறது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்!!

கும்பகோணம் - கோயில்களுக்குப்
பெயர் பெற்றதாம்!

வீதிக்கு வீதி தெய்வமாம்!

அந்தப் பள்ளிக்கூடத் தெருவில்
கோயில் இல்லையா - அல்லது
தெய்வமே இல்லையா?

பள்ளிக்கூடத்தின் தீ அணைந்து விட்டது - விடாமல்
எரிந்து கொண்டிருக்கிறது
பெற்றோர்களின் வயிறு!

சில நாட்களாய் கருகிய வாசனையையே
சுவாசிப்பதாய் தோன்றுகிறது

அந்தக் கொடிய புகையை
நினைத்தே கண்கள் கலங்குகின்றன

உயிருக்குப் போராடும்
ஓசையே செவிகளில் ஒலிக்கிறது

குழந்தைகளைக் கதறவிட்டு விட்டு
தப்பித்து ஓடும் ஆசிரியர்களே
கண்களுக்குத் தெரிகிறார்கள்

மன்னிப்பது மனிதத் தன்மையாம்!
மன்னிக்கவும்! என்னால் அந்தக் கொடும்
தீயை மன்னிக்கவே முடியாது!

இனி யாரும் என்னிடம் "அக்னி பகவான்"
என்று சொல்லி வராதீர்கள்!

சுஜாதா குமுதத்தில் சின்ன சின்ன சிந்தனைகளில் குட்டிக் கதைகள், ஹைக்கூ, 1 வரிக் கதைகள், 55 வரிக் கதைகள், sudden fiction கதைகள் பற்றி விளக்கி நம்மையும் முயற்சி செய்யச் சொன்னார்...1 வரிக் கதைகளைப் பொறுத்தவரை கொஞ்சம் நான் முயற்சி செய்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நான் sudden fiction கதைகளிலும் என் கால்களை பதித்திருக்கிறேன்..அதன் விளைவு கீழே!

நான் கண் விழிக்கவும், கடிகாரத்தின் குருவி 8 முறை கூவவும் சரியாக இருந்தது. கலைந்த கூந்தலை அள்ளி முடிந்தேன். அவரை விலக்கி என் முந்தானையை எடுத்துக் கொண்டேன், மெல்ல முனங்கினார்..நேத்தும் தூங்க 2 மணி ஆயிடுச்சு, daily இதே கதை தான்..sir க்கு மூடு வந்துட்டா அவ்வளவு தான்...இந்த மனுஷனுக்குத் தான் என் மேல எம்புட்டு பிரியம், எல்லா ஆம்பளங்களும் இப்படியா இருக்காங்க? இவர் தான் office விட்டா வீடு, வீடு விட்டா office னு இருக்காரு..இந்த areaல அந்த மாதிரி பொண்ணுங்களுக்கா குறைச்சல், தலை எடுத்து பாக்க மாட்டாரே..அட இன்னைக்கு சனிக்கிழமையா? அப்போ இன்னைக்கும் இதே கூத்து தான். அப்படி என்னத்தக் கண்டாரோ அவருக்குத் தான் வெளிச்சம்.

ஒரு வழியாய் அவரை எழுப்பி office அனுப்பி வைத்தேன்.."5 மணி, 5 மணி..ரெடியா இரு, ரெடியா இரு..சினிமா போறோம்!" எனக்கு சிரிப்பு தான் வருது. அன்னைக்கு வேலை நல்லா ஓடுச்சி! அவரோட நெனப்பாவே வேலை செஞ்சதாலே அலுப்பே இல்லை..ஒரு வழியாய் 4, 4:30 போல நல்லா ஒரு குளியல் போட்டுகிட்டு [அவருக்கு அவர் வரும்போது குளிச்சி freshஆ இருக்கணும்..ஹிஹி] ஜம்முன்னு ரெடியாகி wait பண்ணிட்டு இருந்தேன்..மணி 5:00 ஆச்சு, காணோம், 6 ஆச்சு காணோம், சரி office ல வேலையா இருப்பாரோன்னு TV ஐ போட்டு உட்கார்ந்தேன்..9 மணி வரை வரவே இல்லை..office போன் போட்டா அவருக்கு பிடிக்காது..சரி வர்றப்ப வரட்டும்னு பேசாம இருந்தேன்..

10 மணி வாக்கில் சொக்கு வந்தான், எக்கோவ், உன் sir க்கு கொஞ்சம் change வேணுமாம், புதுப் பொண்ணு டீனா கிட்ட போயிட்டாரு, பெரியக்கா இந்த பார்ட்டியை அனுப்சுருக்கு..என்று இயந்திரத்தனமாய் சொல்லி விட்டு நகர்ந்தான்..புதுசாய் வந்தவன், சட்டை பொத்தான்களை கழற்றியபடி உள்ளே நுழைந்தான்..

sudden fiction கதையின் இலக்கணமே மொத்த கதையும் கடைசி ஒரு வரியில் தான் இருக்கும்..ஒரு எதிர்பாராத திருப்பம்..அட இதையா சொல்ல வர்றான், எதிர்பார்க்கவே இல்லையேன்னு தோனனும்..

என் கதையில் உங்களுக்கு ஆரம்பத்திலேயே இது தான் என்று புரிந்திருந்தால், என் கதை புட்டுகிச்சின்னு அர்த்தம்..

ழகாகவும் அதே சமயம் ரவாரத்துடன், யல்பாய் ஒரு டுபாட்டுடன், ற்சாகத்துடனும் க்கத்துடனும்,

ழுத்தாணி கொண்டு டு பதித்து, ய்யா என்று கதறுவோரை கருதாது..ரே மனதுடன் office ல் பி அடித்து

ஒளவை பாடிய தமிழை நானும் பாடி...["ஓள" னாலே ஒளவை தானா? அந்தப் பாட்டிய விட்றுங்கப்பா!!]

இதோ இருக்கிறேன் இன்னும் உங்களின் இரக்கத்தின் விளைவாய், என்னுடைய

25 வது பதிவு!!!!!!!!!!

வாழ்த்துங்கள் வளருகிறேன்!
திட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்!!


·துடன் என் இன்றைய பதிவை முடித்துக் கொள்கிறேன்...

காய்ச்சல்! இதைப் பற்றி S. ராமகிருஷ்ணன் தன்னுடைய துணையெழுத்தில் மிக அழகாக எழுதி இருந்தார்! இதை நானும் யோசித்துக் கொண்டிருந்தேன்..ஆனால் அவர் முந்திக் கொண்டார்.

என்னைப் பொறுத்தவரை காய்ச்சல் நம்மை கஷ்டப்படுத்துவதோடு ஒரு சிறு சந்தோஷத்தையும் தரத் தான் செய்கிறது.

குழந்தையாய் இருந்தால் school க்குப் போகத் தேவையில்லை
இளைஞர்கள் college க்குப் போகத் தேவையில்லை [ஆனால் co-ed ல் படிக்கும் மாணவர்களுக்கு இது எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தரும் என்று தெரியவில்லை..ஒரு நாள் கடலை மிஸ் ஆகுதுல்லே?]
குடும்பத் தலைவர்கள் office போகத் தேவையில்லை
குடும்பத் தலைவிகள் சமைக்கத் தேவையில்லை, துணி துவைக்கத் தேவையில்லை, பாத்திரம் கழுவத் தேவையில்லை etc.,[அட பெண்களுக்குத் தான் நிறைய வேலை இருக்கிறது!]

எல்லோருக்கும் rest!

நான் இங்கு என்னுடைய பள்ளிப் பருவத்தில் வந்த காய்ச்சல் நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்! எனக்கு எப்போதாவது தான் காய்ச்சலே வரும்..அதிலும் school க்கு லீவு போடுவது மிகவும் குறைவு. அப்படி எப்போதாவது வரும் போது அம்மா "நீ இன்னைக்கு school க்கு போகாதே, போயி படுத்துக்கோ" என்று சொல்வாள்!. என் தம்பி என்னை பொறாமையாய் பார்ப்பான்! வழக்கமாய் school க்கு 9:30 மணிக்கு கிளம்புவோம். இன்று அவன் மட்டும்..

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்


சிலோன் ரேடியோவில் பாடிக் கொண்டிருக்கும்..அப்பாடா இன்னைக்கு நம்ம school க்கு போக வேண்டியதில்லை..இவன் இப்போ போனா சாயங்காலம் வருவான்! பாவம் என்று நினைப்பேன்! அம்மா அரிசிக் கஞ்சி கொடுப்பாள்..ஆஹா அதை சாப்பிடுவதற்காகவே தினமும் காய்ச்சல் வரலாம்! சாப்ட தட்டை, டம்ளரை அங்கேயே, அப்படியே வச்சுடலாம்..[அன்னைக்கு மட்டும்!]
அப்படியே போர்வை போர்த்திட்டு படுத்தா நம்ம உடம்பு சூடு போர்வை பூரா பரவி கம்முன்னு இருக்கும்.

குக்கர் விசில் போட்டு ஒரு 12 மணிக்கு எழுப்பி விடும்! குழம்பு, ரசம் வாசனை வீடு பூரா பரவி இருக்கும். அம்மா யாரோ பழம் விக்கிற அம்மாகிட்ட கதை அளந்துட்டு இருப்பா! அம்மாக்கு டெய்லி லீவு தான்..ஜாலி, நாள் பூரா கதை அளந்துகிட்டு இருக்காளேன்னு பொறாமையா இருக்கும்..[அவள் ஞாயிற்றுக்கிழமையும் லீவில்லாம சமைக்கனும் என்பதை மறந்து!]

மெல்ல வெளியே எட்டிப் பார்ப்பேன். தெருவில் சூரியனின் ஆதிக்கத்தைத் தவிர வேறு எதுவுமே இருக்காது. ஓஹோ மத்தியானம் 12 மணிக்கு நம்ம தெரு இப்படித் தான் இருக்குமான்னு நினைத்துக் கொள்வேன்!

தூரத்தில் ஒரு பழக்கப் பட்ட குரல்:

ஈயம்பித்தாளைக்குப் பேரிச்சம்பழம் அச்சு வெள்ளம்
நிலக்கடலைப் பருப்பு பட்டானி வேர்க்கடலை
....


இப்படி பாடிக் கொண்டே ஒரு கிழவர் வந்து கொண்டிருப்பார்! சூரியனின் ஆதிக்கத்துடன் அவருடைய ஆதிக்கமும் சேர்ந்து கொள்ளும். அது அந்த 12 மணிக்கு மேலும் அழகு சேர்க்கும். அவர் என்ன தான் சொல்கிறார், என்ன தான் விற்கிறார் என்று எனக்கு ஒன்றும் புரியாது. யாரும் அவரிடம் இது வரை பேரம் செய்து பார்த்ததாய் எனக்கு ஞாபகம் இல்லை.

அதற்குள் அம்மா "டேய் ஏன் டா வெயில்லே நிக்கிற, போயி படு" என்பாள்! அந்த பழம் விக்கிற அம்மா ரொம்ப கரிசனையோடு "ஏன் ராசா காய்ச்சலா? போய் படுத்துக்கோ ராசா" என்பாள். நான் ஒன்றும் பேசாமல் என் கசக்கும் வாயை மறுபடியும் உணர்ந்து பேசாமல் வேடிக்கை பார்ப்பேன்!

அருவா, கத்திக்கு சானை புடிக்கிறது..
அருவா, கத்திக்கு சானை புடிக்கிறது..

பழைய/புதுப் பாத்திரத்துக்கு பேர் வெட்றது..
பழைய/புதுப் பாத்திரத்துக்கு பேர் வெட்றது..

ஐச், ஐச் [அது ice!!]


இப்படி பலர் என்னைக் கடந்து போய் கொண்டிருப்பார்கள். தூரத்தில் மறுபடியும் ஒரு குக்கர் சத்தம் போடும்!! அய்யய்யோ school ல் என்ன நடக்கிறதோ என்று வேண்டாத நினைவும் அடிக்கடி வந்து போகும்! காய்ச்சல் அழுத்தமாய் என்னைத் தள்ளும், கால்கள் சோர்ந்து போகும்..எனக்கு காய்ச்சல் இல்லாத போது எப்படி இருந்தேன் என்று எனக்கு மறந்து போகும்! "டேய் வந்து கஞ்சி
குடிச்சிட்டு படு" என்று அம்மாவின் குரல் அவள் என்னைக் கூப்பிடுகிறாளா இல்லை காய்ச்சலைக் கூப்பிடுகிறாளா என்று எனக்குக் குழப்பம்!!

சாப்பிட்டு படுத்தால், தூக்கத்தில் மதியம் சாப்பிட வந்த அப்பா நெற்றியைத் தொட்டுப் பார்ப்பதை உணர முடியும். இப்போது தான் படுத்த மாதிரி இருக்கும், என் தம்பி school முடிந்து வந்திருப்பான்! சே, நாமும் இன்று லீவு போடாமல் இருந்திருந்தால், இன்னேரம் நாமும் வீட்டுக்கு வந்திருக்கலாமே என்று தோன்றும். நாளைக்கு என்ன என்ன test இருக்கோ, home work
இருக்கோ என்று மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்.

தெருவெங்கும் நண்பர்களின் விளையாட்டு இரைச்சல் கேட்கும் போதும். . .
அம்மா நான் விளையாடப் போறேன் என்று தம்பி ஓடும் போதும். . .

காய்ச்சல் மீது எனக்கு வெறுப்பு வரும்...முதன் முறையாய்!!