நேற்றைய நாளிதழில், மறுபடியும் தீபாவளிக்காக ஒரு சிறப்பு ரயில் விளம்பரம். நாளிதழ் வாங்கியவர்கள் அதில் படித்தார்கள். வாங்காதவர்கள் வாட்ஸ் அப்பில், ஃபேஸ்புக்கில் அந்த செய்தியை படித்தார்கள். நான் இரண்டாவது ரகம். பல வருடம் பசியோடு காத்திருந்த ஒரு விலங்கினை போல் அந்த செய்தியை நான் எதிர் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் மூன்று மாதம் முன்பு தீபாவளிக்காக முன்பதிவு தொடங்கப்பட்ட அந்த நாளை ஒரு போர்வீரனை போல் எதிர்கொண்டு மோசமாய் தோற்றுப் போயிருந்தேன். நான் Available லின்க்கை க்ளிக்கும்போது கொத்து கொத்தாய் இருந்த சீட்டுக்கள், பணம் கட்டி திரும்ப வரும்போது என்னை காத்திருப்பு பட்டியலுக்கு தள்ளிவிட்ட சோகம் நடந்தேறியது அன்று. சரி மூன்று மாதம் இருக்கிறதே, கிடைத்து விடும் என்று தான் நினைத்தேன். அது என்னமோ சென்னையில் உள்ள அத்தனை பேரும் இந்த முறை மதுரையில் தான் தீபாவளி கொண்டாடுவோம் என்று முடிவெடுத்து விட்டதை போல இன்று வரை அந்த காத்திருப்பு பட்டியிலில் ஒரு முன்னேற்றத்தையும் காணோம். சென்னை திரும்பி வருவதற்கான டிக்கட் என் பூர்வ ஜென்ம புண்ணிய பலனால் கிடைத்து விட்டது. மதுரை போவதற்கு தான் வழி இல்லை. ரெட்பஸ்காரன் வேறு எனக்கு பெர்சனலாய் மெயில் போட்டுஎன்ன உங்களை ஆளையே காணோம், இந்தாங்க டிஸ்கவுண்ட்!” என்றெல்லாம் என்னை ஆசை காட்டி அழைத்தான். சரி என்று நம்பி உள்ளே போய் பார்த்தால் ஏன் அவன் டிஸ்கவுண்ட் கொடுக்கிறான் என்று அப்போது தான் புரிந்தது. தீபாவளி என்பதற்காக பஸ் டிக்கட் எல்லாம் ப்ளேன் டிக்கட் விலை ஆகி இருந்தது! “அட போங்கப்பா டட்காலே சரணம்!” என்று நான் பதுங்கி இருந்த போது வந்த செய்தி அது!

சும்மா போகும் ரயிலுக்கே கொத்து கொத்தாய் வந்து விழுவார்கள். தீபாவளிக்கான சிறப்பு ரயில் வேறு, ப்ரீமியம் ரயில் விட்டதற்கே  "பண்டிகை டயத்துல ப்ரீமியம் ரயிலாடா விடறீங்க?" என்று பயங்கர காண்டில் வேறு இருக்கிறார்கள்கேள்வியே கிடையாது நாளைக்கு சட்டை கிழியுது என்று நினைத்துக் கொண்டேன்நேற்று இரவே அதை எதிர்நோக்குவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டேன். நேரத்திற்கு படுக்கைக்குச் சென்று விட்டேன். அப்பா, அம்மாவிடம் டிக்கட் புக் செய்ய காலையில் எழுப்புமாறு சொல்லிவிட்டேன். பத்தாதற்கு மாமனாரிடமும் ஒரு பிட்டு போட்டு வைத்து விட்டோம். எல்லாம் தயார்! காலையில் ஆறு மணியில் இருந்து அலாரம் வைத்து, அதன் தலையில் தட்டி தட்டி, ஒரு வழியாய் ஏழரைக்கு எழுந்தேன்ஒரு ஏழரையை எதிர்நோக்க ஏழரைக்கு எழுவது எத்தனை பொருத்தம்! பல்லை துலக்கி விட்டு, லேப்டாப்பை திறந்தேன்வீட்டில் உள்ள இணையம் மெதுவாய் இருப்பதாய் மனைவி சொன்ன ஞாபகம் வந்தது. என் கம்ப்யுட்டர் மவுஸ் சில நாட்களாய் படு வேகமாய் வேலை செய்கிறது. நான் சிங்கிள் க்ளிக் செய்தால் அது டபுள் க்ளிக் செய்கிறது. நான் டபுள் க்ளிக் செய்தால் அது ட்ருபுள் க்ளிக் செய்கிறது. அதன் க்ளிக் ஸ்பீடை குறித்தும் பார்த்து விட்டேன். அது கண்டுக்கவே இல்லை. வீட்டில் ஒரு மவுஸ் கூட நம்மை மதிக்க மாட்டேன் என்கிறது. எல்லாம் அகராதி புடிச்சுது!

சடாரென்று ஒரு யோசனை! தம்பி உடையான் படைக்கு அஞ்சான் [இது மொத்த வித்தையும் எறக்குன அஞ்சான் இல்லை!]! "என்னையாடா கலாய்கிறீங்க, என் தம்பி ஒருத்தன் இருக்கான்டா!" என்று அவனுக்கு ஃபோனை போட்டேன். பெங்களூர் குளிரில் சுகமாய் தூங்கிக் கொண்டிருந்தான். எந்த பேட் வேர்ட்சும் யூஸ் பண்ணாமல் பரதன் ராமனின் பாதுகையை சுமந்து சென்றதை போல் கடமையே கண்ணாக எழுந்து கொண்டான்! “இப்போ வாங்கடா!” என்று இறுமாந்து அந்த எட்டு மணி ராகு காலத்துக்கு காத்திருந்தேன். அந்த சிறப்பு ரயிலின் நேர் உள்ள SL என்ற லின்க்கில் கையை வைத்துக் காத்திருந்தேன்..பெங்களூரில் என் தம்பி அதே போல் காத்திருந்தான்மணி ஏழு அம்பத்தொம்போது, நான் கிளிக்கே செய்யாமல் என் மவுஸ் க்ளிக் செய்து கொண்டிருந்தது. ராஸ்கல்! பிறகு தான் என் கை நடுக்கம் அது என்று புரிந்தது. மணி எட்டு. பதமாய் க்ளிக்கினேன். “441 Available” என்று சொன்னது. எனக்கு பேராசை இல்லை; இரண்டு டிக்கட் கிடைத்தால் போதும். க்ளிக்கினேன். என் பெயர், என் மனைவி பெயர், என் மகள் பெயர் என்று எல்லாவற்றையும் ஏற்கனவே சேமித்து வைத்த லிஸ்டில் இருந்து காலி டப்பாவில் நிரப்பினேன். சரி பார்த்துக் கொண்டேன். பேங்க்கை தேர்ந்தெடுத்தேன். பணத்தை கட்டினேன். அந்தச் சுட்டி பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பி எங்கு தொடங்கினோமோ அதே இடத்திற்கு வந்து சேர்ந்தது. கண்ணை விரித்து பார்த்தேன். S6 பெட்டியில் முத்து முத்தாக இரண்டு டிக்கட்டுகள் பதிவாகி இருந்தது. அதற்குள் ஜீடாக்கில் டாக்கிய என் தம்பி S9 கோச்சில் இரண்டு டிக்கட்டுகளை பதிவு செய்து விட்டேன் என்று சொன்னான். வேண்டியது இரண்டு, கிடைத்தது நான்கு! என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. உழைப்பு வீண் போகவில்லை என்று பெருமிதம் அடைந்தேன். என் தம்பி ஃபோன் செய்தான். எதை கான்சல் செய்வது என்று யோசித்தோம். "தாம்பரம் ஸ்டேஷனில் S9 முதலில் வருமா இல்லை S6 முதலில் வருமா?" என்று என்  தம்பியை கேட்டேன். அவன் இப்போது பேட் வேர்ட்ஸ் உபயோகிக்கத் தொடங்கினான். அதற்குள் என் மனைவி, "இரண்டையும் கான்சல் செய்து விடாதீர்கள்!" என்று சீரியசாய் அறிவுரை கூறினாள். ["நான் என்னமோ கிறுக்கன் மாதிரியே பேசுறது"] “சரி நீயே கான்சல் செய்!” என்று என் தம்பியிடம் சொல்லிவிட்டு நிமிர்ந்தேன். அப்போது ஒரு யோசனை, வியர்வை சிந்தி ரத்தம் சிந்தி, காப்பி சிந்தி இந்த டிக்கட்டை வாங்கிய பெருமிதத்தில் இப்போது வெயிட்டிங் லிஸ்ட் நம்பர் என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்று அதே ரயிலின் புக்கிங் லிக்கை க்ளிக் செய்தேன்.

128 Available என்றது!

3 Responses
  1. Vanila Says:

    Super-a irukku Pradeep... So oru vazhiyaa Madurai poreenga... Enjoy....


  2. ["நான் என்னமோ கிறுக்கன் மாதிரியே பேசுறது"] - SAME BLOOD


  3. Unknown Says:

    special train-a? ok ok.
    Maduraikku adutha DIWALI (2015) kulla vara mudiyumannu paaruga....hahahah...

    -Elango.S