தமிழ் ஸ்டூடியோ நடத்திய "பாலுமகேந்திரா" குறும்பட விருது வழங்கும் விழா நேற்று கோடம்பாக்கத்தில் BOFTA [Blue Ocean Films Technology & Academy] பள்ளியில் மிகச் சிறப்பாக நடந்தது.  என்னை போன்ற ஒரு சினிமா ஆர்வலனுக்கு பாலுவின் பெயரில் விருது வாங்குவதை விட சிறப்பு ஒன்று இருக்க முடியாது.



இந்த விருது அறிவிக்கப்பட்டதும், "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பிரதீப் குமாரா? என்று ஆர்வம் போங்க, என்னுடைய [என் இயக்கத்தில் உருவான] குறும்படங்களான "விடியல்", "தமிழ் கிஸ்", "பச்சா பையா" ஆகியவைகளை சமர்ப்பித்து விட்டேன். மூணுல ஒன்னாவது தேறாதா என்ற நப்பாசை தான். சமீபத்தில் வெளியிட்ட "Article 39" படமும் தாயாராய் இருந்ததால் அதையும் சமர்ப்பித்தோம். ஆக இந்த போட்டியில் என் படங்கள் மட்டும் நான்கு :-)

எடிட்டர் லெனின் அவர்கள் முதல் சுற்றுக்கான பதினாறு படங்களை தேர்ந்தெடுத்தார். அதில் ஒன்று "Article 39(F)"! சனிக்கிழமையே, முதல் சுற்றுக்கு தேர்வான பதினாறு படங்களில் "Article 39" தேர்வானது குறித்து அலைபேசியில் அழைத்து சொன்னார்கள். ஞாயிற்றுக் கிழமை 1:30 மணிக்கு அந்த பதினாறு படங்களும் சாரு நிவேதிதா, லீனா மணிமேகலை, BOFTA நிறுவனர் தனஞ்செயன், எடிட்டர் லெனின் [ஜூரி] முன்னர் திரையிடப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமை ஒரு மணிக்கே "Article 39" க்ரூ ஆஜர். ஆனால், ஏதோ சூப்பர் ஸ்டாரின் முதல் நாள் ஷோ போல், தியேட்டர் ஃபுல். !. உள்ளே நிற்க இடமில்லை.  படங்கள் இன்னும் திரையிட ஆரம்பிக்கவில்லை. "என்னடா இப்படி ஆகிவிட்டதே! நம் படத்தை திரையில் பார்க்க முடியாமல் போய் விடுமோ? "என்று ஸ்க்ரீனுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது லெனின் அவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அத்தனை கூட்டத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த என் மீது அவரின் கண்கள் நின்றது. ஒரு புன்முறுவல். "எனக்கு அவரை தெரியும், அவருக்கு என்னை தெரியாதே!" என்று நான் முழித்துக் கொண்டே "வணக்கம் சார்" என்றேன், என் அருகில் வந்து என் தோளில் கை வைத்து நின்று "ரொம்ப நல்ல நடிச்சுருக்கே! அருமையா இருந்தது. ஆமா, இத்தனை படமா எடுப்பே? என்றார்!" எனக்கு ஒரு நிமிடம் தலை கால் புரியவில்லை. "ரொம்ப நன்றி சார்" என்று வாயில் வார்த்தை வராமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். எனக்கு என்னமோ அங்கேயே அப்போதே அவார்ட் கிடைத்து விட்டது போல் இருந்தது. அவ்வளவு பெரிய மனிதர், இத்தனை படங்களை பார்த்து விட்டு, என்னை அடையாளம் கண்டு வாழ்த்துகிறார் என்றால், இதை விட வேறு என்ன வேண்டும். புளகாங்கிதம் அடைந்து விட்டேன். அவருக்கு பின்னால் வந்த ஒருவர், கை கொடுத்து, "உங்க எல்லா படத்தையும் பாத்தாரு, ரொம்ப நல்லா பண்ணி இருந்தீங்க" என்றார்.


பிறகு தமிழ் ஸ்டூடியோ அருண் என்னை பார்த்து விட்டு, "படத்துல நடிச்சுருக்கீங்களா? சீக்கிரம் வரச் சொன்னேன்ல?" என்று செல்லமாய் கோபித்துக் கொண்டார். அருண், நான் 1:30 நிகழ்ச்சிக்கு 1 மணிக்கே வந்துருக்கேன் என்றேன். "நிகழ்ச்சி காலையில 10 மணியில இருந்து!" என்று புள்ளி வைத்தார். பிறகு அவர் லெனின் ஐயாவை சாப்பிட அழைத்தார். சாப்பிட கீழே இறங்கியவர் என்னை பார்த்து கையால் "வா" என்று சைகை செய்து கொண்டே முன்னால் போனார். நான் நாய்க்குட்டி மாதிரி அவர் பின்னாலேயே போனேன். அவர் அருகில் என்னை அமர வைத்து மறுபடியும் பாராட்ட ஆரம்பித்தார். "எல்லா படங்களும் பாத்தேன், அதெல்லாம் வேற யாரோ டைரக்ட் பண்ணி இருக்காங்க போல, இது தான் சிறப்பா இருந்தது!" என்றார். அதெல்லாம் ஆரம்ப காலத்துல நானே பண்ணதுங்க, இது பாலாஜி டைரக்ட் பண்ணார் என்று அருகில் இருந்த இயக்குனரை கை கட்டினேன். அவ்வளவு நேரம் அவர் அருகில் இருந்ததையே நான் மறந்து விட்டேன். பாலாஜி மன்னிப்பாராக! பிறகு அவரையும் பாராட்டினார். போட்டிக்கு வந்த 65 குறும்படங்களில் 16 தேர்வு செய்ததாக சொன்னார். "65 படம் எப்படி சார் பாத்தீங்க?" என்றதற்கு, "படம் பாக்க தான் நமக்கு எப்பவுமே புடிக்குமே, கின்னஸ் ரெக்கார்டுக்கே கொடுக்கலாம் அத்தனை குறும்படங்களை பாத்துருக்கேன் என்றார்! பிறகு நல்ல குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பல படங்களை பார்க்க வேண்டும் என்று சொன்னார். அத்தனை பேச்சுக்களிடையிலும் "நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்டார்.

அதோடு விடாமல் உள்ளே சென்று உட்காரும்போது என்னை கையோடு கூட்டி போய் அவர் அருகே அமர்த்திக் கொண்டார். அங்கே மக்கள் நிற்க இடம் இல்லாமல் இருக்கும்போது நான் சொகுசாய் ஒரு சேரில் அமர்ந்து கொண்டது எனக்கே கொஞ்சம் உறுத்தியது. நல்ல வேலையாய் லீனா வந்து விட்டதால், அருண் வந்து விரட்டுவதற்குள், நான் இடத்தை காலி செய்து எழுந்து நின்று கொண்டேன்.

பதினாறு படங்களும் திரையிட்டு முடிந்ததும், மாலை ஆறரை மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி. கார்த்திக் சுப்பாராஜ், மாலன், லீனா, சாரு, லெனின் மற்றும் தனஞ்செயன் எல்லோரும் இந்த நிகழ்வை பற்றியும், குறும்படங்களின் முக்கியத்துவங்கள் பற்றியும், அதன் முன்னேற்றங்களை பற்றியும் எடுத்துரைத்து பேசினார்கள்.

சாரு, லீனா, தாங்கள் பார்த்த பதினாறு குறும்படங்களில் இருந்த குறை நிறைகளை மேலோட்டமாய் எடுத்துரைத்தார்கள். வணிக சினிமா சுற்றி இருக்கும் அத்தனையும் அழித்து வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, குறும்படங்கள் தான் இலக்கியத்துடன் ஒரு நட்பை வளர்த்துக் கொள்கிறது என்பது ஆறுதலாய் இருப்பதாய் லீனா ஒரு கருத்தை முன் வைத்தார். அதோடு குறும்படங்களுக்கே உரிய மெலோட்ராமா, செண்டிமண்ட், க்ளிஷேடாய் இருப்பதையும், இவைகளில் எந்தப் படமும் இன்னும் ஒரு முழுமையான கலை வடிவம் என்று சொல்வதற்குரியதாய் இல்லை என்றும் குறிப்பிட்டார். சாரு, மாற்று சினிமா மேல் தனக்கு உள்ள பயத்தையும், இசையை சரியாய் உபயோகப்படுத்துங்கள், ஐரோப்பிய சினிமாக்களை பாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அடுத்து பேச வந்த லெனின் அவர்கள் தன் அனுபவங்களை ஆக்கப்பூர்வமான மொழியில் ஒரு கொண்டாட்ட மனநிலையில் பேசி எல்லோரையும் அந்த மனநிலைக்கு கொண்டு சென்றார். வகுப்பில் மாணவனை கேள்வி கேட்டு எழுப்பும் ஆசிரியரை போல் தான் படத்தில் பார்த்து அவர் மனதில் பதிந்த உருவங்களை எழுப்பி எல்லோருக்கும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார். எங்கள் குழுவினரை எழுப்பி நல்லதாய் சில வார்த்தைகள் பேசி விட்டு, "அதுக்காக அவங்களை தேர்ந்தேடுதேன்னு நெனைச்சுடாதீங்க!" என்றார்.

எந்தப் படம் வென்றது என்று சொல்லாமல், மேலோட்டமாய் எல்லோரும் நிறை குறைகளை சொல்லிச் சென்றது ஒரு புது அனுபவம். "தேவை இல்லாத இடங்களில் இசையை போட்டு ஏன் கொல்கிறீர்கள்?" என்று சாரு சொல்லும்போது அவர் எந்தப் படத்தை பற்றி பேசுகிறார் என்று தெரியாமல், அதை ரசிப்பதா, இல்லையா என்று ஒரே குழப்பமாய் இருந்தது. அது ஒரு பயங்கரமான த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்தது.

ஒரு வழியாய் அனைவரும் பேசி முடித்து, விருதுக்கான படங்கள் அறிவிக்கப்பட்டது. "கண்காணிப்பின் மரணம்", "ஆயா" ஆகிய படங்கள் முதல் இரண்டு இடத்தையும், "ஞமலி", "Article 39 (F)" சிறப்பு பரிசுகளை வென்றது. எங்களை பொருத்தவரை, பங்கு பெற்றதே முதல் வெற்றி! முதல் சுற்றில் வெற்றி பெற்றது அடுத்த வெற்றி. அதன் பிறகு, லெனின் போன்ற ஒரு ஆளுமை எங்களை அருகில் அமர்த்தி பேசுவது பெரிய வெற்றி. இதற்கு மேல் விருது வேறு கொடுத்தால் அதை போனஸாய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்! "இதோடு எப்படி உங்களை விடுவது?" என்பது போல், சமீபத்தில் கார்த்திக் சில குறும்படங்களை ஒன்றிணைத்து வெளியிட்ட "பெஞ்சு டாக்கீஸ்" படத்தை போல் வெற்றி பெற்ற நான்கு படங்களையும் ஒன்றிணைத்து வெளியிட இருக்கிறார்கள். மிக விரைவில்; வெள்ளித் திரையில் - Article 39 (F)! இப்படித் திணற திணற...:-)







இத்தனை செலவு செய்து, இத்தனை உழைப்பை சேர்த்து, இப்படி ஒரு விருதை வழங்குவதால் தமிழ் ஸ்டூடியோவுக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லை. "நாட்டுக்கு உழைக்கிறேன்!" என்றாலே வீட்டில் திட்டுவார்கள்; தமிழ் ஸ்டூடியோ குழுவினர் "நல்ல சினிமாவுக்கு உழைக்கிறேன், அதற்காக இத்தனை பணத்தை செலவழிக்கிறேன்!" என்று இத்தனை வேலைகளை செய்கிறார்கள் அவர்கள் வீட்டில் எப்படி அவர்களுக்கு சோறு போடுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இதற்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தை க்ளிஷேடாய் போய் விடும் :) அதிலும் அருணிடம் சென்று நன்றி என்று என்ன ஆரம்பித்தாலும் மனிதர் சுட்டு பொசுக்கி விடுவதை போல பார்க்கிறார். எதுக்கு வம்பு?

கடைசியாய் ஒன்று சொல்கிறேன்,

பாலுமகேந்திரா நல்ல படங்களையும், நல்ல மாணவர்களையும் சினிமாவிற்கு விட்டுச் சென்றிருக்கிறார்  - உத்தம கலைஞன்! 
டைட்டிலே வழக்கமான மணிரத்னம் பாணியில், அழுது வடியாமல் இளமை கொப்பளிக்க, ஒரு ரகளையான அனிமேஷனில் ஆரம்பிக்கிறது. Refreshing!

முதல் சீனிலேயே ஹீரோ ஹீரோயின் அறிமுகம். பிறகு வழக்காமான க்ளிஷேடான மணிரத்ன அசட்டு வசனங்கள் [அந்த சர்ச்சில் இருவரும் பேசுவது! ஸ்வபா..] பிரகாஷ் ராஜ் ஒப்பனை அருமை. ஒரு வேளை இது தான் நிஜ பிரகாஷ் ராஜா? யார் இந்த லீலா சாம்சன்? என்ன ஒரு அருமையான பாத்திரம், என்ன ஒரு அற்புதமான நடிப்பு!

துல்கர் முகத்தில் என்னமோ ஒன்று சரி இல்லை, மூக்கா, முழியா தெரியவில்லை. மனிதரை எல்லா பெண்களுக்கும் பிடிக்கிறது. அவர் மாதிரி நான் ஹேர் ஸ்டையில் வைத்துக் கொண்டால், "ஏன்டா தலைய குருவிக் கூடு மாதிரி வச்சுருக்கே?" என்று கேட்பார்கள். அச்சு அசல் அப்படி தான் இருக்கிறது. அவருக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயம். நடிப்பதற்கு பெரிதாய் ஒன்றும் ஸ்கோப் இல்லை. "பெங்களூர் டேஸ்" படத்தில் எப்படி கேர்ஃப்ரீயாய் இருந்தாரோ அதே போல் தான் இதிலும் இருக்கிறார்.

நித்யா அழகாய் இருக்கிறார். கிடைமட்டமாய் [தமிழில் horizontal] வளர்ந்திருக்கிறார். அவருக்கும் துல்கருக்கும் கெமிஸ்ட்ரி செம! ஃபிசிகலாய் எதுனா இருக்குமோ? [கிசு கிசு]. நெருங்கி வரும் ஆதியிடம் "ஆதி, நோ சொல்லு, நோ சொல்லு" என்னும் தாரா பதிலுக்கு ஆதி, "நோ" என்றவுடன், "அப்போ கிட்ட வராதே!"  என்று குதூகலிக்கும் இடம் சோ ஸ்வீட்! பிறகு போர்வை போர்த்திக் கொண்டு துல்கரை அழ வைக்கும் அந்த இண்டர்வல் ப்ளாக், வழிய வழிய காதல் :) மணிரத்னம் என்னமாய் கொஞ்சுகிறார்! மணிரத்தினம், the lover returns!

கதையை பொருத்தவரை Old wine in new bottle. இளமை வழிய வழிய ஒரு காதல், பிரத்தியாரால் அவர்களுக்குள் பிரச்சனை, இளமை கடந்த மற்றொரு காதல் தம்பதிகள், அவர்களிடமிருந்து ஒரு வாழ்க்கை பாடம். சுபம். படத்தின் பெயரை அலைபாயுதே 2 என்று வைத்திருக்கலாம்.

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் காதலர்கள் பற்றிய கதை. கடைசியில் அவர்களும் கல்யாணம் தான் செய்து கொண்டார்கள் என்று ஏன் முடிக்க வேண்டும்? சேர்ந்து வாழ்பவர்கள் காதலில் விழுந்து விட்டால் கல்யாணம் செய்து கொள்ளத் தான் வேணுமா? அவர்கள் விருப்பப்படியே அவன் அமெரிக்க போகட்டும், அவள் பாரீஸ் போகட்டும். திரும்பி வந்து மீண்டும் சேர்ந்து வாழலாமே? இந்த காலத்தில் டச் சில் இருப்பாதா கஷ்டம்? எதற்கு ஒரு கல்யாணம்? தாலி? லைசன்சா? ஒழுங்கா திரும்பி என்கிட்டே வந்துரணும் என்று சொல்ற மாதிரியா, புரியவில்லை. முடிவில் உடன்பாடு இல்லை என்றாலும், படம் எனக்கு பிடித்துத் தான் இருந்தது. அலைபாயுதேவை விட எனக்கு இந்தப் படம் பிடித்தது!

படத்தின் மற்ற பலங்கள், இசை, கலை மற்றும் ஒளிப்பதிவு. என்ன ஒரு இளமை துள்ளும் இசை, அந்த பிரகாஷ் ராஜின் வீடு, அகமதாபாத் ஹோட்டல், நித்யாவின் ஹாஸ்டல் அருமையான ரசனை. நகரத்தில் இருக்கும் எல்லா அசிங்கங்களையும் மறைத்து அதை ஒரு சொர்க்கமாய் காட்ட மணிரத்னம், ஸ்ரீராமால் தான் முடியும் :) மும்பை போக ஆசையாய் இருக்கிறது!

முன்னாலேயே எழுதி இருக்க வேண்டிய பின்குறிப்பு: இந்த விமர்சனத்துக்கு மெளஸ் உபயோகப்படுத்தப்படவில்லை!
உத்தம வில்லன் வந்திருக்கும் இந்த சமயத்தில் என்னுடைய அடுத்த  (ஆறாவது) குறும்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி!

இந்தக் குறும்படத்தின் தலைப்பு வேறு தான். ஆனால், உத்தம வில்லன் பார்த்து, விமர்சனம் எழுதிய கையோடு, இந்த குறும்படத்தை பார்த்தால், "உத்தம வில்லன் - II" சரியான தலைப்பாய் தான் தோன்றுகிறது.

நீங்களே பார்த்து விட்டு முடிவு செய்து கொள்ளுங்கள் :)

வாழ்த்துக்களையும், வசவுகளையும் எதிர்நோக்கி....


கதை இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். அப்போது தான் கமலிடம் உள்ள பிரச்சனைகளை பற்றி ஆராய முடியும். [எதுக்கும், மௌஸ் நகத்தாம...]

மனோரஞ்சன் ஒரு ஸ்டார். தோளுக்கு வளர்ந்த மகன் இருக்கும்போதும், தன் மாமனார் [கே. விஸ்வநாத்] தயாரிப்பில் பல மசாலா படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவன் வாழ்வை புரட்டிப் போடும் இரண்டு செய்திகள் அவனுக்கு கிடைக்கிறது.

ஒன்று, மூளையில் உண்டான கட்டியால் அவன் சீக்கிரமே இறக்கப் போகிறான்.
இரண்டு, அவனுடைய முன்னாள் காதலியின் மூலம் தனக்கு ஒரு மகள் இருப்பது தெரிய வருகிறது.

தன் மகளுடன் சமாதானம் செய்து கொண்டு, சாகும் தருவாயில் தன் குருநாதர் மார்கதரிசியுடன் [பாலசந்தர்] ஒரு நல்ல படத்தில் நடித்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறான். தன் சோகம் தன்னோடு போகட்டும், மக்கள் சிரித்துச் சிரித்து தன் கடைசி படத்தை ரசிக்க வேண்டும் என்று ஒரு காமடி படத்தை பண்ணலாம் என்று தன் குருநாதருக்கு வேண்டுகோள் விடுக்கிறார். அதன்படி உத்தம வில்லன் என்ற ஒரு சாகாவரம் பெற்ற ஒரு கூத்துக் கலைஞன் கதையை படம் எடுக்கிறார்கள்.

உலகத்தில் சாகாவரம் பெற்று வாழ ஒன்று முனிவனாய் இருக்க வேண்டும்; அல்லது, நல்ல ஒரு எழுத்தாளனாய் இருக்க வேண்டும், அல்லது, நல்ல ஒரு கலைஞனாய் இருக்க வேண்டும். நல்ல ஒரு கலைஞனுக்கு  என்றுமே சாவில்லை என்ற செய்தியுடன் படம் முடிகிறது.

படத்தில் +

  • கமலிடம் எப்போதும் இருக்கும், அள்ள அள்ள குறையாத பல்வேறுபட்ட கதைக் களன்கள். சாவு என்றால் என்ன? ஒரு நல்ல கலைஞனை அது என்ன செய்து விடும்? இந்தக் கேள்விகளுக்கு விடையாக, தன்னை நெருங்கி வரும் சாவிடம் செத்துக் கொண்டிருக்கும் ஒரு கலைஞன் சாகாவரம் கொண்ட கதாப்பாத்திரம் ஒன்றை ஏற்று நடிப்பது சாவையே எள்ளி நகையாடுவது போல் தானே? அத்தகைய பரந்துபட்ட விஷயங்களை திரைக்கதையில் லாவகமாய் புகுத்துவது. கமலுக்கு கை வந்த கலை!!
  • கமலுடைய commanding knowledge on various things & his observation skills! இவருக்கு புராணம் தெரிகிறது; சரித்திரம் தெரிகிறது; தெய்யம், கூத்து என்று பல்வேறு கலைகள் பற்றிய அறிவு இருக்கிறது; பல மனிதர்களையும், அவர்களின்  உடல்மொழியும் தெரிகிறது. இவ்வளவு பெரிய நடிகராக ஒரு கூட்டுக்குள் அடைபட்டுக் கொண்டே இத்தனை கதாபாத்திரங்களை எப்படி இவரால் படைக்க முடிகிறது என்று ஆச்சர்யமாய் இருக்கிறது. உதாரணத்திற்கு இந்தப் படத்தில் வரும் தெலுங்குக் குடும்பத்திற்கும் பல்ராம் நாய்டுவுக்கும் துளியும் சம்மந்தமில்லை.
  • ரஜினி லிங்காவில் தன் மகள் வயதில் உள்ள பெண்ணிடம் டூயட் ஆடுவார். கமல் எண்பதுகளில் தன்னுடன் ஆடிய ஊர்வசியை தனக்கு ஜோடியாகவும், தன் தோள் தொடும் உயரத்தில் ஒரு பையனை தன் மகனாகவும்,  பார்வதி மேனனை [கிழங்கு மாதிரி இருக்கிறார், அப்படி நடிக்கிறார்!] தன் மகளாகவும் கதை அமைக்கிறார். அதற்கு ஒரு சபாஷ்! [இதில் ஒரு உள்குத்து என்னவென்றால், ஊர்வசியை ஜோடியாய் போடும்அதே நேரத்தில் பூஜா குமார், ஆன்ட்ரியாவை எப்படி ஆதரிப்பது அது நமக்கு உறுத்தாமல் எப்படி பார்த்துக் கொள்வது என்றும் அவருக்குத் தெரியும். "கள்ளனைய்யா நீர்!"] 
  • என்ன தான் தன்னை முன்னிறுத்தி திரைக்கதை அமைத்தாலும், கதாநாயகனுக்கே உரிய நல்லத்தனத்தால் அவன் தன் முன்னாள் காதலி, தன் மனைவி என்று எல்லோரையும் நேசிக்கிறான் என்று காட்டினாலும், அவனுக்கும் பலவீனங்கள் உண்டு என்பது போல், அவனுக்கு வைத்தியம் செய்யும் அந்த இளம் டாக்டரிடம் ஒரு கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறான் என்று அமைத்த அந்த திரைக்கதையின் நேர்மை :)
  • படத்தின் வசனம். வசனம் என்று தனியாக டைட்டிலில் போட்ட மாதிரி தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாய் கமலின் வசனம் தான் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு மனோ மார்கதரிசியிடம் ஒரு படம் பண்ணித் தரச் சொல்லிக் கேட்கும் இடம்.
  • தன் குருநாதரை இந்தக் கதையில் அழகாய் நுழைத்து, அதில் அவரை அவராகவே இருக்க விட்டது. பிற்காலத்து எம்ஜியார்  படங்களிலும் சரி இப்போதைய ரஜினி படங்களிலும் சரி, படத்தில் வரும் எந்தக் கதாப்பாத்திரமும் அவர்களை "டா" போட்டு கூப்பிட முடியாது. கமலும் அத்தகைய இடத்தில் இருப்பவர் தான். இருந்தாலும், தன்னை ஆரம்ப காலங்களில் அவர் எப்படி கூப்பிட்டாரோ, அப்படியே படத்திலும் அவரை "டேய்", "ராஸ்கல்" என்றெல்லாம் கூப்பிட வைத்தது நல்ல விஷயம். குருவுக்கு தன் சிஷ்யன் எவ்வளவு உயரம் சென்றாலும் அவருக்கு அவன் சிஷ்யன் தானே? அது தானே யதார்த்தம்.
  • நாம் நடிகையர் திலகம் என்று சாவித்ரியை கொண்டாடிவிட்டு, அதற்கு இணையான ஊர்வசிக்கு தமிழில் எப்போதும் அசட்டு கதாப்பாத்திரங்களாய் கொடுத்து வீணடித்துவிட்டோம். புருஷனை விட்டால், எந்த உலக அறிவும் இல்லாத ஒரு வசதியான தெலுங்கு அம்மாவை அப்படியே அச்சு அசலாக கண் முன் நிறுத்துகிறார்.
  • சொக்குவாக வரும் எம் எஸ் பாஸ்கர் மற்றொரு பலம். சிவாஜியின் காலத்தில் எதற்கு அலட்டிக் கொள்ளாமல் நடித்த வீ. கே. ராமசாமியை கண்டுகொள்ளாதது போல், கமல் காலத்தில் எம் எஸ் பாஸ்கர், இளவரசு போன்றவர்களை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது. அத்தனை அற்புதமான நடிகர்கள்.

படத்தில் -


  • கமலிடம் எப்போதும் இருக்கும், அள்ள அள்ள குறையாத பல்வேறுபட்ட கதைக் களன்கள்! தனக்கு தெரிந்ததை எல்லாம் ஒரே படமாய் எடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார். மனோரஞ்சனின் கதையை எடுத்துக் கொள்வோம். சாகப் போகும் ஒரு ஸ்டார். அவன் திரும்பி பார்க்கும் தருணம். சரி செய்ய நினைக்கும் விஷயங்கள். தான் புதிதாய் கண்டெடுத்த மகள், அவர்களுக்கான உறவு, புரிதல் என்று அதை மட்டுமே ஒரு உணர்ச்சிகரமான படமாய் எடுக்க முடியும். இதற்குள் தேவையே இல்லாமல் ஒரு காமெடி கதை என்று ஒரு பீரியட் கதையை நுழைத்து, நிறைய்ய தமிழ் கலந்து, தெய்யத்தையும் , கூத்தையும் கலந்து பியுஷன் என்ற பெயரில் ஒரு கூத்தடித்து...அடடா...
  • வழக்கம் போல படம் பூராவும் வியாபித்து இருப்பது. மற்றவர்களுக்கும் கொஞ்சம் ஸ்கோர் செய்ய விட வேண்டும். நான் பார்த்த வரை, ஊர்வசிக்கு கொஞ்சம் தருகிறார். இருந்தாலும் பத்தவில்லை.
  • அந்த பீரியட் கதை. நான் இதுவரை பார்த்த கமல் படங்களில் இப்படி ஒரு மொக்கையை பார்த்ததில்லை. கமலுக்கா  இப்படி காமடிக்கு பஞ்சம் வந்து விட்டது என்று தோன்றியது. ஒவ்வொரு காட்சியும் பொறுமையை மிகவும் சோதித்தது.
  • பீரியட் கதையின் ஒப்பனை. இன்று குறும்படங்கள் எடுக்கும் சுண்டான்களே முழு நீள படங்களை போல் அவ்வளவு சிரத்தையாய் மெனக்கெட்டு ஒவ்வொன்றாய் பார்த்து பிரமாதமாக அழகாக எடுக்கிறார்கள். பல வருடங்களாக பழம் தின்று கொட்டை போட்ட கமலுக்கு ஒரு நல்ல விக், ஒட்டு மீசை கூடவா கிடைக்கவில்லை? இல்லை, அப்படி இருந்தால் தான் அது பார்ப்பதற்கு காமடியாக இருக்கிறது என்று படக் குழுவினர் நினைத்திருந்தால் எனக்கு அழுகை தான் வருகிறது!!! டைரக்டர் சார், இதையாவது பார்த்திருக்கலாமே?
  • பீரியட் கதையின் கிராபிக்ஸ். படத்தின் ஆரம்பத்தில் "இந்தப் படத்தில் எந்த மிருகத்தையும் துன்புறுத்தவில்லை" என்று போட்டார்கள். அப்போதே நான் யோசித்திருக்க வேண்டும். எலி முதல் புலி வரை எல்லாவற்றையும் கிராபிக்ஸில் வன்கொடுமை செய்து பார்வையாளர்களான நம்மை தான் துன்புறுத்திவிட்டார்கள் !
  • பூஜா குமார். அமெரிக்க வனப்பு. அமச்சூர் நடிப்பு. விலங்கிட்டு பைத்தியமாய் இருப்பவர் நல்ல பாய்கட்/ஸ்பைக் கட் எல்லாம் வைத்து, நல்ல உடை உடுத்தி நல்ல கும்மென்று இருக்கிறார். அவர் என்ன செய்வார் பாவம். ஆட்டையிலேயே  சேர்த்துக் கொள்ள முடியாது.
  • படத்தின் வசனம் பெர்சனலாய் எனக்குப் பிடித்தது. ஆனால் ஜில்லா, வீரம் போன்ற காவியங்களை போற்றி வாழும் நம் தமிழ் மக்களுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர். 

உதாரணத்திற்கு அதே "மனோ மார்கதரிசியிடம் ஒரு படம் பண்ணித் தரச் சொல்லிக் கேட்கும் இடம்."

"உனக்கு நான் எதற்கு படம் பண்ண வேண்டும்?" என்று மார்கதரிசி கேட்கும் இடத்தில் மனோ பேச வேண்டிய வசனம், "எனக்கு மூளையில கட்டி, செத்து போயிடுவேன் சார், கடைசியா உங்களோட ஒரு படம்.!"இந்த மாதிரி ஒரு ரெண்டு வரி தான். ஆனால், கமல் அந்த இடத்தில் இப்படி ஒரு வசனம் வைத்திருக்கிறார்!

"என்னை மாதிரி திமிரான ஆளு சார்.
நாளைக்குகிறது future ல  எங்கேயோ தூரத்துல இருக்குன்னு                                       நெனைக்கிறவன். திடீர்னு எல்லாத்தையும் பொரட்டி போட்ற மாதிரி ஒரு             நியுஸ் வருது. well, actually ரெண்டு news வருது! காதல், பாசம், thank you,                     sorry இதெல்லாம் சொல்றதுக்கே நேரம் இல்லைன்னு புரிய                                         ஆரம்பிக்குது."

கமல் புத்திசாலியாய் இருக்கலாம். எல்லோரும் கமல்கள் இல்லையே!

மற்றபடி ஜிப்ரான் இசையில் "காதலால்", "இரணியன்" பாட்டு மிளிர்கிறது.

என்னை பொறுத்தவரை கமல் பேசாமல் சில காலம், "வேட்டையாடு விளையாடு" மாதிரி பிறர் கதையில் நடிப்பை மட்டும் தரக்கூடிய வேலையை செய்யலாம்! கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கும்!