ராமானுஜன்

"பாரதி", பெரியாருக்குப் பிறகு ஞான ராஜசேகரனின் மற்றுமொரு வாழ்க்கைச் சரித்திரப் பதிவு. இந்த படத்தின் மூலம் ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள முடியாது. மிகவும் சொற்ப பட்ஜெட்டில் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். சில காட்சிகள்/செட்டுகள் அரதப் பழசாய் இருக்கிறது. ஆனால் ஒரு மாமேதையின்  வாழ்க்கை பதிவாய் பார்க்கும்போது இது ஒரு போற்றப்பட வேண்டிய முயற்சி. மனிதர் விடாமல் செய்யும் இப்படிப் பட்ட முயற்சிகளுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்!

கணக்கில் புலி என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ராமனுஜம் தான் கணக்கில் சிங்கம், புலி, கரடி, டைனோசர் எல்லாம்! இவர் கண்டுபிடித்த ஒரு தேற்றத்தை [Theorem] 93 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நம்மால் நிருபிக்கவே முடிந்திருக்கிறது. இவர் பாட்டுக்கு கணக்கை போட்டு, விடையை மட்டும் எழுதிக் கொண்டே போயிருக்கிறார். நம் இளையராஜா காட்சிகளை பார்த்துக் கொண்டே பின்னணி இசைக் குறிப்புக்களை எழுதுவது போல :-) [எனக்கு எப்படி கணக்கு வரும் சொல்லுங்க?]

படத்தில் கூட, ஒரு காட்சியில் அவரே இதை பற்றி சொல்கிறார். "ஒரு கணக்கை பார்த்தவுடன் அதன் விடை தான் எனக்குத் தோன்றுகிறது, அதை உடனே எழுதி விடுகிறேன். பிறகு அந்தக் கணக்கில் எனக்கு சுவாரஸ்யம் அற்றுப் போய் விடுகிறது!" என்று! இதையே இப்படி பார்க்கலாம். ஒரு எழுத்தாளனும் இதையே தான் சொல்கிறான். ஒரு கவிஞனும் அதை தான் சொல்கிறான். ஒரு ஓவியனும் அதை தான் சொல்கிறான். இல்லையா? அப்படி என்றால் அந்தக் கணத்தில் ராமானுஜனும், அவர் போடுவது கணக்கு என்பதெல்லாம் தாண்டி அவர் அங்கு ஒரு மேன்மையான படைப்பாளி ஆகி விடுகிறாரோ என்று தான் தோன்றுகிறது. பாரதியின் கவிதையை நாம் இன்றும் கொண்டாடுகிறோம் [இன்று தான் கொண்டாடுகிறோம்!], ஆனால் அது அவருக்கு சுவாரஸ்யம் அற்ற ஒன்றாய் தான் இருக்க முடியும். அவர் அடுத்த அடுத்த கவிதைகளில் தன் சஞ்சாரத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பார். அதே  போலத் தான் யாரோ கமலிடம், "உங்கள் படத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?" என்றதற்கு "அது இன்னும் நான் எடுக்காத படம்!" என்று தான் சொன்னார்.

இந்தப் படத்தில் ராமனுஜன் சிறுவயதில் இரணிய வதம் நாடகம் பார்ப்பார். நரசிம்மர் வந்து இரணியனின் வயிற்றை குத்திக் கிழிக்கும்போது அவர் மயங்கி விழுந்து விடுவார். எழுப்பிக் கேட்டால், தனக்கு பயமாய் இருந்தது என்பார்.

இதே போல, தன் சிறு வயதில் "அரிச்சந்திரா" நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் "இனிமேல் பொய்யே சொல்லக் கூடாது" என்று முடிவெடுத்தான். அவர் பிற்காலத்தில் காந்தி ஆனார்.

பாஞ்சாலி சபதம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் "தப்பு செய்த புருஷன்களை விட்டு விட்டு ஏன் மற்றவரிடம் ஒப்பாரி வைக்கிறாய்", உன் புருஷனுங்க உன்னை வச்சி ஆடி தோத்த மாதிரி நீயும் அவங்களை வச்சி ஆட வேண்டியது தானே?" என்று கேள்வி எழுப்பினான். அவர் பிற்காலத்தில் பாரதி ஆனார்.

மற்றொரு சமயம் கட்டபொம்மன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் மிகப் பெரிய நடிகன் ஆனான். அவர் சிவாஜி கணேசன். ஒரே சூழ்நிலை, வெவ்வேறு ஆளுமைகள்!

ராமானுஜன் படம் பிடித்தது, பிடிக்கவில்லை என்பதை தாண்டி படத்தை பார்க்கும்போது என்னுள் இத்தகைய கேள்விகளை எழுப்பியது. அதுவே ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

ராமானுஜனின் தாய், தந்தை மிகச் சாதாரண மனிதர்கள். ராமானுஜனின் தம்பி ஒரு சராசரி குழந்தை. திடுதொப்பென்று இவர் மட்டும் எப்படி அந்தக் குடும்பத்தில் இப்படி வந்து பிறந்தார்? இந்த மாதிரி அறிய ஜீவன்கள் எங்கிருந்து, எப்படி, எதனால் பிறக்கிறார்கள்?  கணக்குகளால் பின்னப்பட்ட ஜீனை இவர் எங்கிருந்து பெற்றார்? இதே கதை மேல் சொன்ன பாரதி, காந்தி, சிவாஜிக்கும் பொருந்தும். விடை தெரியா கேள்விகள்!

ஆனால் காந்தியும், சிவாஜியும் ராமானுஜனை போல ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருக்கும் காலத்திலேயே மக்கள் அவர்களின் மேன்மையை கண்டு கொண்டார்கள். பாரதி, புதுமைபித்தன் போன்றோர்கள் பட்ட பாடு! படத்தில் ஒரு வசனம் வருகிறது. ராமனுஜன் தன் மனைவியிடம் பேசுகிறார்.

"என்னை எல்லாரும் ஜீனியஸ்னு சொல்றா; ஆனா இந்த உலகம் ஜீனியசை ஜீனியஸா இருக்க விடறதில்ல. அவனையும் எப்படியாவது சராசரி ஆக்கிடனும்னு இந்த உலகத்துல எல்லாரும் கங்கணம் கட்டிண்டு அலையிறா. கல்யாணம் பண்ணி வைப்பா, குடும்ப கஷ்டத்தை எல்லாம் கொடுத்து பாப்பா, அப்படியும் ஒருத்தன் நான் சராசரி ஆக மாட்டேன்னு அடம் புடிச்சா, அவன் பைத்தியமா அலைய வேண்டியது தான்!"

இது தான் அந்தப் படத்தின் மற்றும் இந்த மாதிரி மாமேதைகளின் வாழ்க்கைச் சாரம் என்று தோன்றுகிறது. அதை நீங்கள் உணர்ந்து கொண்டால் இந்தப் படமும் ஒரு வெற்றிப் படமே!

மீகாமன்

Gripping Screenplay; Awesome Editing; A Sleek Thriller! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இந்தப் படத்தின் திரைக்கதையை பற்றி சொல்ல ஒரு காட்சி போதும்.

ஆர்யா (சிவா) ஒரு அண்டர் கவர் காப். ஒரு ட்ரக் பிசினஸ் செய்யும் கேங்கில் இருக்கிறார். அந்த கேங்கில் குருவும் ஒரு ரவுடி. சிவாவும், குருவும் தண்ணி அடிக்கிறார்கள். அதை அந்த கேங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. போதை தலைக்கு ஏறியதும் இருவருக்கும்  இடையில் வட்டத்தில் குறி பார்த்து சுடும் போட்டி ஒன்று நடக்கிறது. அது அடிக்கடி நடக்கும் போட்டி, அதில் எப்போதுமே சிவா தோற்றுப் போவான் என்று சுற்றி இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

இந்த முறை குரு முதலில் சுடுகிறான். நடு சென்டரில் சுடவில்லை என்றாலும் அதற்கு அடுத்த வட்டத்தில் சுடுகிறான். எல்லோரும் கை தட்டுகிறார்கள். ஒரே ஆரவாரம். இப்போது சிவாவின் முறை. வழக்கமான தமிழ் சினிமா பாணியில் மாஸ் ஹீரோ போல் மூஞ்சியை வைத்துக் கொண்டு சிவா குறி பார்க்கிறான். படம் பார்க்கும் நமக்கும் "இப்போ பாருங்கடா ஆர்யாவோட மாசை!" என்று தோன்றுகிறது.  தோட்டா பறக்கிறது. காமெரா பலகையின் வட்டங்களை க்ளோசப்பில் காட்டுகிறது. ஒரு துளையும் இல்லை. அந்தப் பலகையில் உள்ள எந்த வட்டங்களிலும் குண்டு துளைக்கவில்லை. காமெரா இன்னும் கொஞ்சம் மேலே போகிறது, அந்தப் பலகையின் ஓரத்தில் குண்டு துளைத்திருக்கிறது. அவன் குண்டு வட்டத்துக்குள்ளேயே வரவில்லை. எல்லோரும் கை கொட்டி சிரிக்கிறார்கள். இந்த முறையும் சிவா தோற்று விட்டான்! "வாட்ச்சை கழட்டு" என்று குரு பந்தயப் பரிசை வாங்கிக் கொள்கிறான். எல்லோரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றவுடன், மறுபடியும் சிவா தனியாய் தண்ணி அடிக்கிறான். பிறகு வீட்டுக்குக் கிளம்பும்போது அந்தப் பலகையை பார்க்கிறான். துப்பாக்கியை எடுக்கிறான். குறி பார்க்கிறான். அடுத்து என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? படம் பார்க்காதவர்கள் யூகியுங்கள். நான் பார்த்து மெரசலாயிட்டேன்! மாசாய் நடந்து வருவதற்கும், ஸ்டில் கொடுப்பதற்கும் பின்னால் இப்படி ஒரு திரைக்கதை இருந்தால் தான் கொஞ்சமாவது பார்க்க நன்றாய் இருக்கிறது. காமர்சியலை கட்டிக் கொண்டு அழும் மற்ற தமிழ் சினிமா இயக்குனர்கள் மகிழ் திருமேனியிடம் கற்க நிறைய இருக்கிறது!

0 Responses