"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, கண்டதுண்டா?" என்ற ஒரு பாடல். இந்த பாட்டில் தலைவருக்கு சில எக்ஸ்க்ளூசிவ் க்ளோசப் இருக்கும். மனிதர் அள்ளுவார். அமலாவும் அம்சமாய் இருப்பார். பாடலும் நல்ல பாடல் தான். இதை எல்லாம் மீறி, அந்தப் பாடலை பார்ப்பது மனதுக்கு மிகவும் வருத்தம் தரும் செயல். என்ன நினைத்து வைரமுத்து பாட்டின் பல்லவியில் சேலையை கொண்டு வந்தாரோ, பாட்டில் படாத பாடுபடுவது அமலா தான்!

[டூயட் பாடல்களில் அடிக்கடி ஆடைகள் மாறுவதுண்டு. என் சிறு வயதில் இந்த ஆடை மாற்றம் எப்படி நிகழ்கிறது என்று என் மனதில் கேள்வி எழும். சரி, மரத்தை சுற்றி பாடும்போது மரத்துக்கு பின்னால் மாற்றிக் கொள்வார்கள் போல என்று நானே நினைத்துக் கொண்டு சமாதானம் அடைந்து விட்டேன்! இந்தப் பாடலில் தான் உண்மையில் ஆடை மாற்றுவதை கொஞ்சமாவது காட்டி இருக்கிறார்கள்!]

ரஜினியின் அருகில் அமலா வந்தால் போதும், அவருடைய சேலையை மனிதர் சரேலென்று உருவி விடுகிறார். அதுவும் ஸ்டைலாக! என்ன ஒரு கதாநாயகத்தனம்!! உடனே அமலாவுக்கு இன்னொரு சேலை. மறுபடியும் உருவுகிறார். பாவம் அமலா. இதை படம் எடுக்கும்போது ரஜினிக்கோ, பாரதிராஜவுக்கோ, நடன இயக்குனருக்கோ "வெட்டவெளியில் வைத்து நாம் இப்படி ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துகிறோமே" என்று தோன்றி இருக்காதா? விளையாட்டுக்காகவாவது அமலா ரஜினியிடம், "சார் வைரமுத்து சாரை சட்டை, பேன்ட் வச்சி ஒரு பாட்டு எழுத சொல்லுங்க, அதுல நான் உங்க சட்டை பேண்ட்டை புடிச்சி இழுக்கிறேன்!" என்று சொல்லி இருப்பாரா? குழந்தைகள், பெண்கள் என்று ரஜினியின் படங்களை பார்க்காத ஆள் கிடையாது. இப்படி ஒரு காட்சியை படத்தில் எப்படி வைக்கலாம் என்று ரஜினியும் சரி, பாரதிராஜாவும் சரி, நடன இயக்குனரும் சரி யாருமே சிந்தித்திருக்க மாட்டார்களா? சரி, இது தான் நடன அமைப்பு என்றால், அந்த செயலுக்கு பொருத்தமானவர் படத்தின் வில்லன் தானே? ஒரு வேலை அவர் தான் படத்தில் கதாநாயகியின் அப்பா என்பதால் விட்டுவிட்டார்களா? இதில் கொடுமை என்னவென்றால் இதுவரை இந்தப் பாடலை பார்த்து நமக்கு எதுவுமே உறுத்தாது தான்!. அப்படி என்றால் தமிழ் சினிமா எவ்வளவு தூரம் நம்மை அழுக்காக்கி இருக்கிறது?

சமீபத்தில் பார்த்த சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் "ஆண்மை" பற்றியது. ஒரு குடும்பத்தில் ஆண் என்பவன் எப்படி இருக்க வேண்டும், இப்போது எப்படி இருக்கிறான் போன்றவைகளை அலசினார்கள்.  அதில் ஒரு பகுதியில் ஆண்வர்க்கம் நிறைந்த சினிமாவில் பெண்களை எப்படி காண்பிக்கிறார்கள் என்று அலசினார்கள். பெண்களை போகப் பொருளாய் காட்டுவது, ஐட்டம் டான்ஸ், பாடல் வரிகளில் தந்தூரி சிக்கன், லெக்பீஸ், நாட்டுக்கட்டை என்றெல்லாம் வருவதை சொல்லி ஷாருக், சல்மான், அக்ஷய் என்று எல்லா ஹீரோக்களின் சில படங்களின் வீடியோ கிளிப்ஸ்களை காட்டினார்கள். அதில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆமீர்கானையும் விட்டுவைக்கவில்லை. "என் படமும் இதில் இருக்கிறது, அப்போது தெரியவில்லை, ஆனால் இப்போது அதை நினைத்து வெக்கப்படுகிறேன்" என்று சொன்னார். சினிமா போன்ற மீடியாவில் எதை காண்பிக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தான் உணர்வதாக சொன்னார்.

எனக்கு வருத்தம் என்னவென்றால் மிகச் சில நடிகைகளை தவிர மற்றவர்கள் இவ்வாறான காட்சிகளுக்கு கேள்வி எழுப்புவதே இல்லை! பழம்பெரும் நடிகை பானுமதியை பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். ஞாபகத்தில் இருப்பது வரை சொல்கிறேன். ஏதோ ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி! எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை இட்டு நம்பியாரிடம் இருந்து பானுமதியை காப்பாற்ற வேண்டும். ஒரு டேக், இரண்டு டேக், மூன்று டேக் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அலுத்துப் போன பானுமதி எம்ஜிஆரிடம், "மிஸ்டர். ராமச்சந்திரன், நீங்க ரெண்டு பேரும் கத்திச்சண்டை போட்டுட்டே இருக்கீங்க. ஆனா என்னை இன்னும் காப்பாத்த மாட்டேங்கிறீங்க. பேசாம அந்த கத்தியை என்கிட்டே கொடுங்க. நானே என்னை காப்பாத்திக்கிறேன்!" என்றாராம். நம் தமிழ் சினிமாவுக்கு சில பானுமதிக்கள் வேண்டும்.

சமீபத்தில் கமல் நடித்த சத்யா பார்த்தேன். உலக நாயகன் என்ற எந்த வித உபத்திரவமும் மனதில் கொள்ளாமல் மிக அருமையாய் நடித்திருக்கிறார். நாயகனுக்குப் பிறகு வந்த படம் என்று நினைக்கிறேன். சத்யா, எழுபதுகளில் பிரபலமாய் இருந்த திரைக்கதை ஆசிரியர்களான சலீம் ஜாவேத் ஜோடியின் ஜாவேத்தின் திரைக்கதையில் வந்த அர்ஜுன் என்ற ஹிந்தி படத்தின் தழுவல். என்னை பொருத்தவரை ஒரிஜினலை போல் எப்போதும் ரீமேக்குகள் இருப்பதில்லை. [தில்லு முள்ளு ஒரு விதி விலக்கு என்று நினைத்திருந்தேன்; இப்போது சத்யாவையும் சேர்த்துக் கொண்டேன்] ஹிந்தியில் சன்னி தியோல் நடித்திருக்கிறார். தமிழ் தான் முதலில் பார்த்து இருந்ததால் அது பிடித்திருந்தது. சரி ஹிந்தியை பார்ப்போம் என்று பார்த்தேன். கால் படத்தை தாண்ட முடியவில்லை. சன்னி தியோல் இந்த மாதிரி கோபக்கார இளைஞன் [அமிதாப்புக்குப் பிறகு] பாத்திரத்தை சரியாய் செய்பவர் தான். இருந்தாலும் கமல் இதில் ஜொலித்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

வழக்கமான ஒரு மசாலா படம் தான் என்றாலும், சில நல்ல காட்சிகளால், கச்சிதமான வசனங்களால் [வசனம்:அனந்து], கமலின் அருமையான நடிப்பால் [சொல்லப்போனால் படத்தில் நடித்த அனைவரும் நன்றாகவே நடித்திருந்தார்கள்!] பல இடங்களில் சத்யா மிளிர்கிறது. முதலில் கமலின் உருவம். கையில் வராத அளவுக்கு முடி முளைத்த மொட்டை தலை, கூர்மையான கண்கள், அவருடைய செவ்வுதடுகளை மட்டும் கொஞ்சமாய் காட்டும் அடர்த்தியான அவர் தாடி, காலர் இல்லாத சட்டை, பழுப்பான ஜீன்ஸ் என்று தான் உருவத்தில் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கிறார். எனக்கு என்னமோ தசாவதாரம் படத்தின் மேக்கப்பை விட இது தான் பிடித்தது!

இந்தப் படத்திலும் கேட்பாரே இல்லாத அழகான கதாநாயகி, யாரையும் அடித்து துவம்சம் செய்து விடும் ஹீரோயிசம் என்று சினிமாத்தனங்கள் இருந்தாலும் சில நல்ல காட்சிகளுக்காக மன்னிக்கலாம். உதாரணமாய்...

சத்யா ஒரு ஆள் அரவமற்ற ரெஸ்டாரன்ட்டில் தான் தங்கையை அவள் காதலனுடன் பார்க்கிறான். இப்படி ஒரு காட்சியே தமிழ் சினிமாவுக்கு அப்போது புதுசு தான். வழக்கமான தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு ஒன்றுக்கு இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள். ஆனால் அவன் தங்கை என்று வந்து விட்டால், மற்ற ஆடவரை ஏறெடுத்து பார்க்காத எட்டு முழ புடவை/தாவணி சுற்றிக் கொண்டு, குணவதியாக, குடும்ப குத்து விளக்காக தான் இருப்பார். அப்படியே தப்பித் தவறி காதலித்தாலும், அவன் ஒரு கல்லூளிமங்கனாய் இருப்பான். கதாநாயகன் தங்கையை அவனிடமிருந்து காப்பாற்றுவான், அல்லது அவனை திருத்துவான். இப்படி எதுவுமே இல்லாமல் காதலுடன் வெளியே சுற்றும் தங்கையை கதாநாயகன் கண்டு கொள்வதை போன்ற ஒரு காட்சியை பார்க்கும்போது ஆனந்தமாய் தான் இருந்தது. [இதே போன்று ஒரு காட்சி பாஷா படத்திலும் வருகிறது. இரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள்! ரஜினி பெண்ணிய விஷயத்தில் எத்தனை பின்தங்கி இருக்கிறார் என்று புரியும்; சுவாரஸ்யமாய் இருக்கும்]


அவர்கள் இருவரும் ஒரு ஃ பேமிலி ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்கையின் குரலை கேட்ட சத்யா சடாலென்று உள்ளே நுழைகிறான். அவனை அங்கு எதிர்பார்க்காத இருவரும் நிலை தடுமாறி போகிறார்கள். நிலைமையை சமாளிக்க தங்கை, சத்யாவுக்கு அவரை அறிமுகப்படுத்துகிறாள். அவர் ஒரு இன்ஸ்பெக்டர் என்றும், அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் சொல்கிறாள். சத்யா இன்ஸ்பெக்டரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறான். "ஏன்யா, இன்ஸ்பெக்டர் தானே நீ? அது என்னய்யா ஃபேமிலி ரூம்ல ஒழிஞ்சுட்டு லவ் பண்ற?" என்ன ஒரு கேள்வி பாருங்கள்! சத்யாவுக்கு அவர்கள் ஒழிந்து கொண்டு காதலிப்பது தான் பிடிக்கவில்லை :) பிறகு அவனை தீர்க்கமாய் பார்த்துக் கொண்டே சத்யா அவரிடம் "மை சிஸ்டர், ஆர் யு சீரியஸ்?" என்கிறான். அவரும் அசடு வழிந்து கொண்டே "ஆமா, ரொம்ப சீரியஸா ரெண்டு பேரும்" என்று மென்னு முழுங்கும்போதே, அவரிடம் தான் கையை நீட்டி "ஐ அம் சத்யா" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அண்ணன் சம்மதித்து விட்டான் என்று துருதுருப்பில் "அதெல்லாம் நான் ஏற்கனவே" என்று வாயெடுக்கும் தங்கையை பொய் கோபத்துடன் "நீ சும்மா இரு" என்று சொல்லி அவள் அடங்கியதும் அவளை பார்த்து சிரிக்கிறான். பதிலுக்கு அவளும் சிரிக்கிறாள். இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று அந்த காதலன் முழிப்பதை உணர்ந்த சத்யா அவரின் தோளை தட்டிக் கொடுத்து "சிரிக்கலாம்" என்கிறான்.  என்ன ஒரு அருமையான காட்சி. கவிதையாய் இருக்கிறது. இதை விட எதார்த்தமாய் அந்த ஒரு தருணத்தை அணுக முடியுமா என்று தெரியவில்லை. ஒரு பாசக்கார, கோபக்கார அண்ணனாக கமலின் நடிப்பு உச்சம்.

பிறகு இன்னொரு காட்சியில் சத்யாவின் நண்பர்கள் கதாநாயகியை அவனுடன் சேர்த்து வைத்து கேலி பேசுவார்கள். அவளை வீட்டுக்கு விடும்போது சத்யா "சாரிங்க, பசங்க கொஞ்சம் அசிங்கமா பேசிட்டாங்க, நீங்க ஒன்னும் தப்பா நெனச்சுக்காதீங்க!" என்கிறான். பதிலுக்கு மலையாளத் தமிழில் அவள், "ஏன் நல்லா தானே பேசினாங்க" என்று புரியாமல் கேட்க, "இல்லைங்க, ரெண்டாவது நாள் தான் சந்திக்கிறோம், அதுக்குள்ளே அண்ணின்னு எல்லாம் பேசக்கூடாது இல்லையா.." அவள் "அப்போ பத்து நாள் கழிச்சி பேசலாமா?" அதற்கு சத்யா "அது கொஞ்சம் கெளரவமா இருக்காது?!" என்று அவளிடமே கேட்டு அவள் சிரிக்கும்போது அவளுக்கும் இஷ்டம் தான் என்று உணர்ந்து "இன்னும் எட்டு நாள் இருக்கு" என்கிறான்! கிளாஸ்!!

அதே போல் தான் தந்தையை மரியாதை குறைவாய் நடத்து முதலாளியை துவம்சம் செய்யும் காட்சி. கமல் மிக அனாயாசமாய் நடித்திருப்பார். செம அடி வாங்கிய பிறகு, அந்த முதலாளி, "அய்யோ அவருக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்காருன்னு தெரியாம போச்சுங்க,  ரெண்டு பொண்ணுங்க இருக்குன்னு தெரியும்" என்று சொல்லிவிட்டு, மேலும் அடி விழுகும் என்று சுதாரித்துக் கொண்டு "அய்யோ தங்கச்சி மாதிரிங்க நீங்க என் அண்ணன் மாதிரிங்க என்று அவர் அழுவது செம...அதற்கு சத்யா சொல்லும் பதில் "இதை முன்னாடியே ஒத்துட்டு இருந்தா இவ்வளவு பெயிண்ட் செலவு இல்லைல்ல?" தூள்! அவரை அடித்து ஷெல்பில் தொங்கவிட்டு அவர் முகத்தில் பெயிண்ட் பூசிக் கொண்டே சத்யா தான் யார் என்று சொல்லும் விதம் பிரமாதம். ஒரு கட்டத்தில் அவர் அடி தாங்க முடியாமல், "சார் வேற எதுனா ஒடச்சுட்டு போறதா இருந்தா போறீங்களா, என்னால முடியலை" என்று கூறுவார். அதற்கு சத்யா சலிப்புடன், "என்னாலயும் முடியலையா! உத்தரவு குடுய்யா" என்று கிளம்புவான், செம மாஸ் சீன்!

இந்தப் படத்தின் ஒரு முக்கியமான சிறப்பு அம்சம், கிட்டிக்கு எஸ் பி பியின் குரல்! அடடா..அந்த ஒரு வில்லத்தனமான பாத்திரத்துக்கு, தேன் தடவி பேசுறார் என்று சொல்வோமே, அத்தனை பொருத்தம். அவரிடம் சத்யா வந்து சேர்ந்தவுடன் அவரின் அன்பில் திக்கு முக்காடிப் போயிருப்பான். அப்போது அவர் "வேற ஏதாவது வேணுமா சத்யா? பணம் ஏதாவது?" கேட்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் சத்யா தடுமாறிக் கொண்டே, "என் தங்கச்சி டவ்ரி, ஒரு இருபது.." என்று சொன்னவுடன் அவர் தான் உதவியாளரிடம் பணம் கேட்க திரும்புவார். அதற்குள் சத்யா ஏது இருபது ரூபாயை எடுத்து கொடுத்து விடப் போகிறாரோ என்று பயந்து, "சார், சார், இருபது...ஆயிரம் சார்" என்று சொல்லும்போது ஒரு சாமானியனுக்கு இருபது ஆயிரம் என்பது எவ்வளவு பெரிய தொகை என்று தான் நடிப்பின் மூலம் சொல்லாமல் சொல்லி இருப்பார் கமல். கையில் பணம் வாங்கிக் கொண்டு நன்றியோடு அழும் சத்யாவை பார்த்து, முதலில் அந்தப் பணத்தை கடனாக தரவில்லை என்று சொன்னவர், "சரி, இது கடன் தான், சத்யாவுக்கு நான் கொடுத்த கடன், இதை திருப்பித் தாங்க திருப்பித் தாங்கன்னு டெய்லி உங்களை தொந்தரவு பண்ண போறேன்; போதுமா? என்னப்பா நீங்க?" எஸ் பி பியின் குரல் அப்படி நடித்திருக்கும்.

பிறகு தன் தங்கையின் புகுந்த வீட்டில் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கும் இடத்தில் கமல் அதகளப்படுத்தி இருப்பார். பணத்தை இறைத்து விட்டு, அந்த முதுகெலும்பில்லாத மாப்பிள்ளையை மிரட்டும் போதும் சரி, பிறகு அவரின் குணம் அறிந்து அவரை பார்த்து பரிதாபப்படும்போதும் சரி, தனிக்குடித்தனம் போங்கள் என்று தைரியம் கொடுக்கும்போதும் சரி, பிறகு தங்கையின் நல்ல குணத்தை பார்த்து பெருமிதப்படும் போதும் சரி! கமல்; கமல்; கமல்!! சான்சே இல்லை...தங்கையை பார்த்துக் கொண்டே அவள் சொல்வதும் சரி தான் என்று தோன்றி, ஒரு "பாஸ்" விட்டு அந்த மாப்பிள்ளையிடம் கை கொடுத்துவிட்டு "பாத்துக்குங்க!" என்று சொல்லி புறப்படுவார். அப்பா...அத்தனையும் தேர்ந்த நடிப்பின் நுணுக்கங்கள்...

இப்படி படம் முழுதும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் தான். வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் பாருங்கள்.

"உன் பேர் என்னடா?"
"சத்யா டா!"