நண்பனுடன் திருவான்மியூர் பீச்சுக்கு சென்றிருந்தேன். மாலை ஒரு ஐந்து மணி இருக்கும். நல்ல இதமான வெயில். நல்ல கடல் காற்று. உலகத்தையே புரட்டிப் போடுவது போல் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று ஒரு பெரிய ஆமை கடற்கரையில் கிடப்பதை பார்த்தேன். மண்ணில் செய்ததோ என்ற சந்தேகம் நீங்கி உண்மையான ஆமை தான் என்று தெளிவு பெற்று உலகம் பாதி புரண்ட நிலையில் விட்டு விட்டு அருகில் சென்றோம். ஆம்! உண்மையான ஆமை தான். இறந்து கரை ஒதுங்கி இருந்தது. வயது ஒரு நூறாண்டு இருக்கலாம்; எடை ஒரு இருநூறு முன்னூறு கிலோ இருக்கலாம்! கண்களில் உப்பு சேர்ந்து, பொத்துப் போய், வாய் திறந்து கிடந்தது.  சமூகக் கடமையாய் என் ஃபோனில் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன். பிறகு தள்ளி அமர்ந்து உலகத்தை புரட்டிப் போட ஆரம்பித்தோம்.

அதோடு அந்த ஆமையை சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தோம். என்ன ஒரு வாழ்வாங்கு வாழ்க்கை வாழ்ந்திருக்கும். இத்தனை பெரிய கடலில் ஒரு குட்டியாய் பிறந்து, எல்லா ஆபத்திலும் தப்பித்து, இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்து....உலகெங்கும் சுற்றியதோ, அல்லது வங்காள விரிகுடாவிலேயே தங்கி இருந்ததோ...எங்கு பிறந்தததோ, கடைசியில் திருவான்மியூர் பீச்சில் வந்து கரை ஒதுங்கி இருக்கிறது!

போகிற வருகிற எல்லோரும் நின்று கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தார்கள். என்னை போலவே எல்லோரும் தங்கள் மொபைல் ஃபோனில் ஃபோட்டோ எடுத்தார்கள். என் நண்பன் சொன்னான்: "அதற்கு இன்று முகப்புத்தகத்தில் சரியான அஞ்சலி கிடைத்து விடும்!" அப்போது ஒரு கணவன் தன் குழந்தையுடன் ஆமை அருகில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுக்க மனைவி அதை மொபைல் ஃபோனில் க்ளிக்கினாள்! அடுத்து வந்த ஒருவன் அந்த ஆமையின் ஓட்டின் மேல் கால் வைத்து போஸ் கொடுத்தான். இன்னொருவன், காலால் அதன் ஓட்டை தட்டி விட்டுக் கொண்டே சென்றான். இதற்கு மேலும் அந்தக் காட்சிகளை காணச் சகிக்காமல் எழுந்து கொண்டோம்!

- கட் -

நேற்று தருவை அழைத்துக் கொண்டு கிண்டி குழந்தைகள் பூங்கா சென்றிருந்தேன். நம் மக்கள் கூண்டுக்கு அருகில் நின்று கொண்டு, புள்ளி மானுக்கு பாப்கார்ன் வழங்கிக் கொண்டிருந்தார்கள். விலங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று நிர்வாகம் ஆங்காங்கே போர்டும் வைத்திருக்கிறது. அதையும் மீறி!  கொஞ்சம் கூட civic sense இல்லாத மக்கள் நம் மக்கள்! கட்டுப்பாடு என்று ஒன்று இருந்தால், அதை மீறி விட்டுத் தான் மறு வேலை பார்க்கிறார்கள். அங்கு வேலை பார்க்கும் ஊழியரிடம் நான் புகார் செய்தேன். அதற்கு அவர், "என்னங்க பண்றது, அதுங்களுக்கு சாப்பாடு பத்தலை, அதுங்களும் கொடுக்குறதை எல்லாம் சாப்புடுது. ரெக்கார்ட் படி, பதினெட்டு மான் தான். ஆனா, இங்கே முப்பது இருக்கு. சாப்பாடு பதினெட்டுக்கு தான் கொடுக்குறாங்க. எண்ணிக்கையை சரி பண்ணிக்குங்கன்னு நாங்களும் பல தடவை சொல்லிட்டோம். இதெல்லாம் யாரு கேக்குறா?" என்றார். எனக்கு துக்கம் பீறிட்டது.

மெயிண்டனன்ஸ் படு மோசம். எல்லா கூண்டுகளும் நாற்றம் எடுக்கிறது. விலங்குகளின் கண்களில் ஜீவனே இல்லை. பசி மயக்கத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? உயர உயர பறக்க வேண்டிய பறவைகளை கூட்டி வந்து ஒரு தண்ணீர் தொட்டி கட்டி அடைத்து வைத்திருக்கிறார்கள். பார்க்க பாவமாய் இருக்கிறது. எதற்கு இந்த மாதிரி பூங்காக்கள் என்ற கேள்வி எழுகிறது. வெளிநாடுகளில் இப்படி தோன்றியதில்லை. நம் நாட்டில் நடத்தும் லட்சணம் அப்படி! ஒரு பெரிய கூண்டில் ஒரே ஒரு குரங்கு மட்டும் பாவமாய் இருக்கிறது. இன்னொரு கூண்டில் வேறு வகையான குரங்கு கூட்டம் இருக்கிறது. அதன் பின்னால் எல்லாம் சிவப்பாய் ஏதோ நோய் வந்தது போல் இருக்கிறது. அதன் அருகில் நின்று நம் மக்கள் போஸ் கொடுக்கிறார்கள். மனைவி மக்களின் முன்னால் தங்கள் வீரத்தை பறை சாற்றுகிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில் ஒருவரின் முடியை பிடித்து ஒரு குரங்கு இழுத்து விட்டது. அதன் கண்களில் பயங்கர வெறி! "கூண்டுலே அடைபட்டு கெடக்குதுல்ல, அப்படித் தான் இருக்கும்!" என்று அவர்களே சமாதானம் வேறு செய்து கொள்கிறார்கள். வாத்துகளின் மூக்கைச் சுற்றி கொப்பளம் மாதிரி இருக்கிறது. அது வயதானால் வருவதா அல்லது ஏதேனும் நோயா தெரியவில்லை. அதன் கூண்டில் தண்ணீர் கூட இல்லை. அவைகள் கிடந்து கத்துகின்றன. நம் மக்கள் அதோடு சேர்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே உற்சாக குரல் கொடுக்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுகிறார்கள். எனக்கு அழுகை வரும் போல் இருந்தது. தரு பறவைகளையும், விலங்குகளையும் பார்த்து ரசித்தாளோ என்னமோ, நம் நாட்டில் இந்த மாதிரி இடங்களுக்கு சென்றால் எனக்கு ஒரு வித மன அழுத்தமே மிஞ்சுகிறது!
5 Responses
  1. bandhu Says:

    இப்படியெல்லாம் கொடுமை செய்வதற்கு பேசாமல் இது போன்ற 'பூங்கா'க்களை மூடி விடலாம்! இவற்றையெல்லாம் பார்த்து குழந்தைகள் என்ன கற்று கொள்ளப் போகிறார்கள்?


  2. வெகு ஜன மக்களின் மனோ நிலையை
    மிகச் சரியாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    நானும் தங்க்கள் மனோபாவம் கொண்டவன் என்பதால்
    கூடுமானவரையில் இதுபோன்ற இடங்களைத்
    தவிர்த்துவிடுவேன்
    விழ்ப்புணர்வூட்டிப் போகும் அருமையான
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


  3. உண்மைதான்:( நம்மூரில் மனுசனாப் பிறப்பது பாவம். மற்ற விலங்கு பறவைகளா பிறத்தல் மகாபாவம்:(

    எல்லாத்தையும் தானே தின்னணுமாம். அப்படி ஒரு ஊழல்:(


  4. வேதனையாகத்தான் இருக்கிறது நண்பரே


  5. Unknown Says:

    பசுவை தெய்வமாய் மதிப்பதாக கூறிக் கொள்ளும் அரசியல்வாதியே மாட்டுத் தீவன ஊழல் செய்யும் காலம் ...உயிரியல் பூங்காவா ?உயிரை எடுக்கும் பூங்காவா ?